என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
    வேலூர்:

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது.
    வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்த வந்த கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. இன்று 161 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் இதுவரை 55,619 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதில் 52,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் இது வரை 1,154 பேர் உயிரிழந்துள்ளனர். அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போதைய நிலவரப்படி 1,943 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் கடந்த சில நாட்களாக அதிகரித்து காணப்பட்ட கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

    ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கடந்த 2 நாட்களாக கொரோனா குறைந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 52,359 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 49,054 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 782 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது நிலவரப்படி 2,523 பேர் சிகிச்சை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு 750 - ஆக இருந்த தினசரி பாதிப்பு தற்போது கணிசமாக குறைந் துள்ளதால் பொதுமக்கள்  மகிழ்ச்சியடைந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் 2,398 பேர் - வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 370 பேருக்கு கொரோனா உறுதியாகி யுள்ளது. இதில், 234 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போதைய நிலவரப் படி அரசு தனியார் மருத்துவமனைகள், சித்தா சிறப்பு சிகிச்சை மையத்தில் 1,977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா தொற்று சற்று குறைந்துள்ளதால் சுகாதாரத்துறையினர் நிம்மதியடைந்துள்ளனர்.

    இருப்பினும் நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் பின் பற்ற வேண்டும். பொது இடங் களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும். தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ள காய்ச்சல் அறிகுறி இருந்தால் சிகிச்சை உடனடியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
    விவசாயிகள் மகசூலை அதிகரிக்க மண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் மகேந்திரபிரதாப் தீட்சித், குடியாத்தம் வேளாண்மை உதவி இயக்குநர் உமா சங்கர், குடியாத்தம் மேல்ஆலத்தூர் மண் பரிசோதனை நிலைய மூத்த வேளாண்மை அலுவலர் விக்னேஸ்வரி உள்ளிட்டோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

    வேலூர் மாவட்ட விவசாயிகள் மண் மற்றும் பாசன நீர் பரிசோதனை செய்து, அதன் பரிந்துரைப்படி பயிர் மற்றும் உர அளவை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.ஆய்வு செய்யப்பட்ட மண்மாதிரிகளுக்கு மண் வள அட்டை தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    மண்ணில் பயிர்களுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் சரியான அளவிலும் பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலையிலும் இருத்தல் வேண்டும். இதற்கு பிரதான மானது மண் பரிசோதனை. அவ்வாறு மண் பரிசோதனை செய்து வழங்கப்படும் மண் வள அட்டையில் மண்னின் தன்மை, சுண்ணாம்பு நிலை உப்பின் நிலை, கார அமில நிலை, அங்கக் கரிம நிலை, தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துகள் போன்ற 16 வகை சத்துக்களின் நிலையை ஆராய்து அறிந்து மண் வள் அட்டை வழங்கப்படுகிறது.

    மண் அதிக காரஅமில நிலை, உவர் நிலை இல்லாமல் நல்ல வடிகால் வசதியுடன் இருக்கும் மண்ணே வளமான மண்ணாகும். எனினும் தொடர் சாகுபடியாலும் உணவு உற்பத்திச் சுமையினாலும் வீரிய இரகப் பயிர்களினாலும் மண் மாசடைந்து மண்ணிலிருந்து சத்துக்கள் உறிஞ்சப்படுகிறது. இதனால் சத்துக்களின் அளவு குறைந்து விடுகிறது. 

    இந்நிலை நாளடைவில் இராசயன உரங்களை அதிக அளவில் இடும் நிலை ஏற்பட்டு மண்ணின் தன்மை குன்றி, நிர்ணயிக்கப்பட்ட மகசூல் கிடைக்காத நிலை ஏற்படுகிறது.

    மேலும் பயிர்களுக்கு நு£ண்ணூட்டச் சத்துகளான தாமிரம், துத்தநாகம், இரும்பு, போரான் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்கள் தேவைபடும் அளவு குறைவாக இருந்தாலும், அவற்றால் ஏற்படும் மகசூல் இழப்பு பிரதானமாக இருக்கும். இக் குறைபாட்டின் அளவு மண் பரிசேதனை மூலமே தெரியவரும்.வேலூர் மாவட்ட விவசாயிகள், குடியாத்தம் வட்டாரத்தில் மேலாலத்தூரில் உள்ள மண் பரிசேதனை நிலையத்தில் தங்கள் ஆய்வு முடிவுகளை மண் வள மண் மாதிரிகளை கொடுத்து அட்டை மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

    மண் அட்டையில் குறிப்பீட்டுள்ள மண்ணில் உள்ள தழை, மணி, சாம்பல் வள மற்றும் நுண்ணூட்டச் சத்துகளின் அளவை அறிந்து பயிர்களுக்கு தேவையான அளவே உரமிட்டு மகசூலை அதிகரிப்பதுடன் மண் வளமும் மேம்படுத்தலாம். மேலும் தேவைக்கேற்ப உரமிடுவதால் உரச் செலவையும் மிச்சப் படுத்தலாம். 

    இவ்வாறு ஒவ்வொரு மண் அல்லது பாசன நீர் மாதிரிக்கு ரூ.20 பகுப்பாய்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    வேலூர் சேண்பாக்கத்தில் விபத்தில் முதியவர் பலியானார்.
    வேலூர்:

    காட்பாடி விருதம்பட்டை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 67). ராணிப்பேட்டையில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் ஆய்வக பொறுப்பாளராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று முன்தினம் சேண்பாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். 

    சேண்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நீச்சல்குளம் எதிரே வந்த போது அவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் பலத்த காயமடைந்த அன்பழகனை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு பரிதாபமாக இறந்தார். 

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூரில் நிதி வழங்கியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவில்லை என வியாபாரிகள் புகார் மனு அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஞானவேலு தலைமையில் வியாபாரிகள் இன்று கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 

    அதில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான கூட்டம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. அதில் வணிக பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது.

    வேலூர் கலெக்டர் மற்றும் வணிகர்கள் நிதி சேர்த்து கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும் என தெரிவித்தனர். அதனடிப்படையில் வணிகர் சங்கம் சார்பாக ரூ.4 லட்சம் வழங்கப்பட்டது. 

    அதில் வேலூர் ரெடிமேடு வணிகர் சங்கம் சார்பில் பி.எஸ்.எஸ்.கோவில் தெருவில் கண்காணிப்பு கேமரா அமைக்க ரூ.2 லட்சத்திற்கான வரைவோலை வழங்கப்பட்டது.

    இதுவரை பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. இந்த பகுதி முக்கியமான வணிகப் பகுதி ஆகும். இந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா அமைத்து தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    இளைஞரணி செயலாளர் அருண்பிரசாத், மற்றும் அனைத்து ஜவுளி ரெடிமேட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் சுபாஷ் ஜெயின், வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.
    கம்மவான்பேட்டையில் மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.
    வேலூர்:

    கம்மவான்பேட்டையில் இன்று நடந்த மாடு விடும் விழாவில் காளைகள் சீறிப்பாய்ந்து ஓடியது.

    வேலூர் அருகே உள்ள கம்மவான்பேட்டையில் இன்று காலை மாடு விடும் விழா நடந்தது.

    முதல் காளையாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது. இதைத் தொடர்ந்து வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தடுப்புகள் வழியாக காளைகள் சீறிப் பாய்ந்து ஓடின. 

    90-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்று ஓடியது.  இந்த மாடு விடும் விழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
     
    வீட்டு மாடியில் நின்று கொண்டு காளைகள் ஓடியதை பார்த்து ரசித்தனர். சிறப்பாக ஓடிய காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
    வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் மீண்டும் மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளுடன் காளை விடும் விழா நடத்த மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாடு விடும் விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். 

    இதில் ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு உறுப்பினர் எஸ்.கே. மிட்டல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். அவர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் நடந்த மாடு விடும் விழாக்களில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டது.இதனால் மாவட்ட நிர்வாகம் மாடு விடும் விழா நடத்த தற்காலிகமாக தடை விதித்தது. இதனை பாராட்டுகிறேன்.

    மாவட்ட நிர்வாகம் மட்டுமின்றி விழாக்குழுவினர், காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் மாடு விடும் விழாவில் கலந்து கொள்ளும் பொது மக்கள் தாங்களாக முன்வந்து கட்டுப்பாடுகளுடன் நடந்துகொள்ளவேண்டும்.

    மாடு விடும் விழாக்களில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் காயம் அடைந்து வருவதாக செய்திகள் வருகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்.

    ஜாலியாக மாடு விடும் விழா காண வருகிறீர்கள். ஆனால் ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டு சோகமாக செல்லும் நிலை உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் கவலை அளிக்கிறது.

    வேலூர் மாவட்டத்தில் மீண்டும் கட்டுப்பாடுகளுடன் கொரோனா விதிகளை கடைபிடித்து மாடு விடும் விழாக்கள் நடத்த அனுமதி வழங்கப்படுகிறது.

    மீண்டும் விதிமீறல்கள் ஏற்பட்டால் உச்சநீதிமன்ற உதவியுடன் 2 ஆண்டுகளில் இதுபோன்ற மாடு விடும் விழாக்கள் நடத்த முற்றிலும் தடை விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    குடியரசு தின பாதுகாப்பையொட்டி காட்பாடி ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட உள்ளனர். 

    குடியரசு தினத்தில் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடங்கள், ரெயில், பஸ் நிலையங்கள், கோவில்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    காட்பாடி ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளன. அனைத்து ரெயில்களில் போலீசார் சோதனை நடத்தினர்.

    மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் மெட்டல் டிடக்டர் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். பயணிகள் கொண்டு வரும் உடமைகளையும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.

    தொடர்ந்து 3 நாட்கள் இந்த சோதனை நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
    கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 200 படுக்கைகளை கலெக்டரிடம் சக்தி அம்மா வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் அரசின் கொரோனா சிகிச்சை மையங்களுக்காக ரூ.6 லட்சம் மதிப்பில் 200 படுக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை வேலூர் கலெக்டரிடம் ஸ்ரீசக்திஅம்மா வழங்கினார்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் கொரோனா பரவலைத் தடுத்திட இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    மறுபுறம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 

    இதுதவிர, தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, விஐடி பல்கலைக்கழகம் உள்பட 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கொரோனா சிகிச்சை மையங்களுக்காக ஸ்ரீபுரம் நாராயணி பீடம் அறக்கட்டளை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பில் 200 படுக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் ஸ்ரீசக்திஅம்மா வழங்கினார்.

    இதேபோல், வேலூரிலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு தையல் பயிற்சி அளித்திட 10 தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன. 

    அவற்றை கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் உமாமகேஷ்வரி பெற்றுக் கொண்டார்.

    அப்போது, நாராயணி பீடத்தின் மேலாளர் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 251 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

     இதுவரை 55,396 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 52,281 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,152 பேர் பலியானார்கள். தற்போது 1,963 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 251 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 100 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று 235  பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். 

    தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தம் செய்ய கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் மாடு விடும் விழாக்களில் விதிமுறைகள் மீறப்படுவதாக புகார்கள் வந்துள்ள நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கோட்டாட்சியர்களுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த விசாரணை அறிக்கைகளை பரிசீலனை செய்து மறுஉத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை மாவட்டத்தில் மாடு விடும் விழாக்கள் நடத்த தற்காலிகமாக தடை விதித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    தைப்பொங்கலை யொட்டி வேலூர் மாவட்டத்திலுள்ள 120 கிராமங்களில் எருது விடும் விழாக்கள் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. 

    கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ள இந்த எருது விடும் விழாக்கள் கடந்த 15-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன.

    எனினும் கிராமப்புறங்களில் நடைபெறும் இந்த மாடு விடும் விழாக்களில் மாவட்ட நிர்வாகம் அனுமதித்த அளவை மீறி ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பதும், அளவுக்கு அதிகமான எருதுகள் அவிழ்த்து விடப்படுவதும் நடைபெற்று வந்தன.

    இதன்காரணமாக பேர்ணாம்பட்டு அருகே கள்ளச்சேரி கிராமத்தில் 13 வயது சிறுவன், வேலூர் வட்டம் கீழ்அரசம்பட்டு கிராமத்தில் 60 வயது முதியவர், லத்தேரி அருகே பனமடங்கி கிராமத்தில் 13 வயது சிறுமி ஆகியோர் எருது விடும் விழாக்களில் மாடு முட்டி உயிரிழந்தனர். 

    தவிர, இதுவரை 15 இடங்களில் நடைபெற்ற மாடு விடும் விழாக்களில் நூற்றுக்கணக்கானோர் காயமும் அடைந்துள்ளனர்.
    இத்தகைய விதிமுறை மீறல்களை தடுத்திட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எருது விடும் விழாக்கள் நடத்துவதற்கு கடந்த திங்கள்கிழமை புதிய நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டிருந்தார். 

    அதன்படி, அனுமதிக்கப்பட்ட கிராமங்களில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே மாடு விடும் விழா நடத்தப்பட வேண்டும், வேறு கிராமங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் காளைகளை அனுமதிக்கக் கூடாது. 

    அந்தந்த கிராமத்தில் நடைபெறும் விழாவில் அந்தந்த கிராம மக்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும். அளவுக்கதிகமான எண்ணிக்கையில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும், நிபந்தனைகள் மீறப்பட்டால் எருதுவிடும் விழாக்கள் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    எனினும், மாவட்டத்தில் மாடு விடும் விழாக்களில் விதிமுறை மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

    அதனடிப்படையில், கடந்த 15-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (ஜன. 22) வரை நடைபெற்ற மாடு விடும் விழாக்கள் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்திட சம்பந்தப்பட்ட கோட்டாட்சியர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்று அதன் சாராம்சங்களை பரிசீலனை செய்து மறுஉத்தரவுகள் பிறப்பிக்கப்படும் வரை வேலூர் மாவட்டத்தில் எருது விடும் விழாக்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
    வேலூரில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடியது. இதனால் ரெயில் நிலையத்திலிருந்து ஆட்டோ கார்கள் இயக்கப்படவில்லை.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நேற்று இரவு 10 மணி முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இன்று முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் வேலூர் மாநகர பகுதியில் பால் மெடிக்கல் ஆஸ்பத்திரிகள் தவிர வேறு எதுவும் திறக்கப்படவில்லை. 

    வேலூர் அண்ணா சாலை, காட்பாடி ரோடு, ஆற்காடு ரோடு, ஆரணி ரோடு உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. காட்பாடி காந்திநகர் மற்றும் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை, விஐடி சாலை பகுதிகளும் வெறிச்சோடி காணப்பட்டன.

    மாவட்டத்தின் புறநகர் பகுதியான குடியாத்தம், பேரணாம்பட்டு, ஒடுகத்தூர், அணைக்கட்டு, கே. வி குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. வாகனங்கள் எதுவும் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    வேலூர் மாவட்டத்தில் ஊரடங்கை கண்காணிக்க மாநில, மாவட்ட எல்லைகள் உட்பட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    ஆந்திர மாநில எல்லைகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து ஆஸ்பத்திரிக்கு வருவபவர்கள் தவிர மற்றவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை
    வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் கோழி ஆடு உள்ளிட்ட இறைச்சிகள் ரகசியமாக விற்பனை செய்யப்பட்டன. இதனை அசைவ பிரியர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

    ரெயிலில் வரும் பயணிகளுக்கு வசதியாக ஆட்டோ மற்றும் கார் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது அதன்படி காட்பாடி ரெயில் நிலையத்திலிருந்து பயணிகள் வசதிக்காக ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் இயக்கப்பட்டன.

    ஆந்திரவிலிருந்து வரும் வாகனங்கள் மாநில எல்லையான காட்பாடி கிறிஸ்டியான் பேட்டையில் தடுத்து நிறுத்தப்பட்டது.  இதனால் வாகனங்களில் வந்தவர்கள் அவதிப்பட்டனர்.
     
    எல்லையிலிருந்து காட்பாடி வரை பயணிகள் சிலர் நடந்து வந்தனர்.
    காட்பாடியில் பேனர்களை அகற்றக்கோரி போராட்டம் செய்த அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர்:

    வேலூர் காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் மற்றும் ஆக்சிலியம் கல்லூரி சாலையில் பல்வேறு இடங்களில் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த டிஜிட்டல் பேனர்கள் போக்குவரத்திற்கு இடையூறாகவும், விபத்து ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினர். இதையடுத்து அ.தி.மு.க மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு தலைமையில் அ.தி.மு.கவினர் பேனர்களை அகற்றக்கோரி ஆக்சிலியம் கல்லூரி சாலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள் நாராயணன், ஜனார்த்தனன், குப்புசாமி, பேரவை ரவி, அணி செயலாளர்கள் ராக்கேஷ், அமர்நாத், சரவணன், தனசேகரன் பி.எஸ். பழனி மற்றும் வட்ட செயலாளர்கள் உட்பட அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

    இதுதொடர்பாக விருதம்பட்டு போலீசார் அனுமதி இன்றியும் கொரோனா விதிகளை மீறி கூடியதாக அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு உள்பட அ.தி.மு.க.வினர் 50 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    ×