என் மலர்tooltip icon

    வேலூர்

    ஓடுதள பணிகள் முடிந்ததும் வேலூர் விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று கதிர்ஆனந்த் எம்.பி. கூறினார்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் சுரங்கப் பாதையை கதிர் ஆனந்த் எம்.பி இன்று திறந்து வைத்தார்.அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

    இதற்கு முன்னாடி இருந்தவர்கள் பூமி பூஜை மட்டும் செய்தார்கள். ஆனால் பணிகளை செய்யவில்லை. நான் தேர்தல் நேரத்தில் இந்த பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கப்படும் என வாக்குறுதி அளித்தேன். 

    அதன்படி சுரங்கப்பாதை பணிகள் முடிக்கப்பட்டு இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
    மத்திய அரசிடமிருந்து மக்களுக்காக திட்டங்களை பெறுவதில் தி.மு.க. எப்போதும் முனைப்புடன் செயல்படும்.

    குடியாத்தம் புறவழிச்சாலை அமைக்க ரூ.221 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும். கந்தநேரி வெட்டுவானம் பகுதியில் மேம்பாலம் அமைக்கப்படும்.

    ஆம்பூர் ராஜீவ் காந்தி சிலை அருகே பைபாஸ் சாலையில் மேம்பாலம் அமைக்க மண் பரிசோதனை நடைபெற்றுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்.

    வேலூர் விமான நிலையத்திற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது. ஓடுதளம் அமைக்க கூடுதலாக இடம் தேவைப்படுகிறது. இதற்கான நில அபகரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிரீன் சர்க்கிளில் அகலம் குறைக்கப்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் நெரிசலுக்கு தீர்வு காணப்படும்.

    வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரி அருகே மேம்பாலம் அமைக்க பாராளுமன்றத்தில் வலியுறுத்துவேன். காட்பாடி ரெயில்வே பாலத்தில் சாலை மோசமடைந் துள்ளது. 

    விரைவில் மாற்று வழி ஏற்பாடு செய்து அந்த பாலம் சீரமைக்கப்படும். கூடுதலாக ஒரு ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியை சிறந்த தொகுதியாக மாற்றி காட்டுவேன். இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூரில் நடந்த குடியரசு தினவிழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
    வேலூர்:

    குடியரசு தினத்தையொட்டி இன்று காலை வேலூர் கோட்டை கொத்தளத்தில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 

    தொடர்ந்து கோட்டை முன்பு உள்ள காந்தி சிலைக்கு அவர் மாலை அணிவித்தார்.

    அதன்பிறகு நேதாஜி மைதானத்தில் நடந்த குடியரசு தின விழாவில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 170 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    விழாவில் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, டி.ஐ.ஜி. ஆனி விஜயா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், உதவி கலெக்டர் விஷ்ணு பிரியா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கொரோனா காரணமாக விழா எளிதாக நிறைவு பெற்றது. இந்த விழாவில் பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை.

    குடியாத்தத்தில் ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பகுதியில் நூற்றுக்கணக்கான ஆட்டோக்கள் உள்ளன இந்த ஆட்டோக்களை ஒழுங்குபடுத்தி ஆட்டோ டிரைவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு மற்றும் விதிமுறைகள் குறித்தும் கொரோனா விழிப்புணர்வு குறித்து ஆலோசனை மற்றும் கூட்டங்கள் நடத்துமாறு வேலூர் சரக போலீஸ் துணைத் தலைவர் ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் உத்தரவின்பேரில் நேற்று குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் நிலைய வளாகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் குடியாத்தம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா, டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் கலந்துகொண்டு ஆட்டோ டிரைவர்கள் கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விரிவாக பேசினார்கள்.

    அப்போது ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயம் சீருடை அணிய வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட அளவில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணங்களை மட்டுமே பயணிகளிடம் வாங்கவேண்டும், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என தெரிவித்தனர். 

    சந்தேகப்படும்படியான பொருட்களை கொண்டு சென்றாலோ, சந்தேகப்படும்படியான மர்ம நபர்கள் குறித்து உடனடியாக போலீசாருக்கு தெரிவிப்பது. 

    மேலும் கொரோனா தொற்று காலம் என்பதால் ஆட்டோ ஓட்டுனர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் பயணிகளும் முகக்கவசம் அணிய வலியுறுத்தவேண்டும் சமூக இடைவெளி பின்பற்றி நோய் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது.

    இந்த கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். 

    முடிவில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் நன்றி கூறினார்.
    சிறைத் துறை அலுவலகத்தில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்படடுள்ள நிலையில் வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் வசூல் வேட்டையா? என அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்த தாகவும். வெளியாட்கள் ஜெயிலுக்குள் சென்று வந்ததாகவும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது. அதன்பேரில் விசாரணை நடத்த கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முக சுந்தரத்திற்கு உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.

    தொடர்ந்து நேற்று 2-வது நாளாக சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஜெயிலுக்குள் சம்பந்தம் இல்லாமல் வெளி ஆட்கள் யாராவது உள்ளே வந்தார்களா? குடியிருப்பு ஒதுக்கீட்டில் அதிகாரிகள் தலையீடு மற்றும் பாரபட்சம் உள்ளதா? முறைகேடுகள் ஏதேனும் நடந்துள்ளதா? என விசாரணை நடத்தினார்.
    பிறகு ஜெயிலுக்கு சென்று அங்கு பணியில் இருந்த சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஜெயிலில் பணியாற்றும் 70 பேரிடம் விசாரணை நடத்தினார். ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் எழுதி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் ஜெயிலுக்கு சென்று அங்கு கைதிகளுக்கு வழங்கப்படும் தொழிற் பயிற்சிகளை பார்வையிட்டார். அப்போது வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் உடனிருந்தார்.

    ஆண்கள் ஜெயிலுக்கு எதிரே சிறைத்துறைக்கு சொந்தமான கவாத்து மைதானம் உள்ளது. இதன் அருகே உதவி ஜெயிலர் களின் அலுவலக அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையை வெளி நபர் ஒருவர் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மற்றும் குழுவினர் அந்த அறையை சோதனையிட்டனர். அங்கு கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் இருந்தது. அதனைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த உத்தர விட்டனர்.

    ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    பணம் கைப்பற்றப்பட்ட அறையை பயன்படுத்தியது யார்? பணம் எப்படி வந்தது. முறைகேடாக வசூலிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணை அடிப்படையில் வேலூர் ஜெயிலில் விரைவில் பெரிய அளவில் மாற்றங்கள், இடமாற்றங்கள் இருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    குடியாத்தத்தில் வீடுகளை அகற்றி மாற்று இடம் வழங்காததை கண்டித்து பா.ஜ.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் மாவட்ட நெசவாளர் பிரிவு சார்பில் கீழ்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நெசவாளர் பிரிவு வேலூர் மாவட்ட தலைவர் என்.ராஜசெல்வேந்திரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கே.சண்முகராஜ், மாநில நெசவாளர் பிரிவு தலைவர் கே.எஸ்.பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் நெசவு மற்றும் பின்னலாடை தொழிலுக்கு தேவையான நூல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்தும்.

    நீர்நிலை ஆக்கிரமிப்பில் கட்டியுள்ள வீடுகளை அகற்றும் தமிழக அரசை கால அவகாசம் கேட்டும் மற்றும் மாற்று இடம் வழங்காததை கண்டித்தும்.

    வீடு இழந்த மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்ட பவுனம் மாள் குடும்பத்திற்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.

    நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, குடியாத்தம் பகுதியில் புறவழிச்சாலை விரைவாக அமைக்க வேண்டும்.

    மற்ற மாநிலங்களை விட இருமடங்காக இருக்கும் கட்டுமான பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

    கடந்த 3 மாதகாலமாக குடிநீர் தட்டுப்பாடு உள்ள குடியாத்தம் மக்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் விரைவாக வழங்க போர்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.சில மாதங்களுக்கு முன்பு ஜெயிலில் பல்வேறு முறைகேடுகள் நடந்த தாகவும். வெளியாட்கள் ஜெயிலுக்குள் சென்று வந்ததாகவும் சிறைத்துறை ஏ.டி.ஜி.பி அலுவலகத்திற்கு புகார் சென்றது.அதன்பேரில் விசாரணை நடத்த கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி.சண்முக சுந்தரத்திற்கு உத்தரவிடப்பட்டது.

    இந்த நிலையில் வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. அலுவலகத்தில் கோவை சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் நேற்று முன்தினம் முதற்கட்ட விசாரணையை தொடங்கினார்.

    தொடர்ந்து நேற்று 2-வது நாளாக சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தினார். அப்போது ஜெயிலுக்குள் சம்பந்தம் இல்லாமல் வெளி ஆட்கள் யாராவது உள்ளே வந்தார்களா? குடியிருப்பு ஒதுக்கீட்டில் அதிகாரிகள் தலையீடு மற்றும் பாரபட்சம் உள்ளதா? முறைகேடுகள் ஏதேனும் நடந்துள்ளதா? என விசாரணை நடத்தினார்.

    பிறகு ஜெயிலுக்கு சென்று அங்கு பணியில் இருந்த சிறைக் காவலர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    ஜெயிலில் பணியாற்றும் 70 பேரிடம் விசாரணை நடத்தினார்.ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் எழுதி வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் ஜெயிலுக்கு சென்று அங்கு கைதிகளுக்கு வழங்கப்படும் தொழிற் பயிற்சிகளை பார்வையிட்டார்.அப்போது வேலூர் சிறைத்துறை டி.ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் உடனிருந்தார்.

    ஆண்கள் ஜெயிலுக்கு எதிரே சிறைத்துறைக்கு சொந்தமான கவாத்து மைதானம் உள்ளது. இதன் அருகே உதவி ஜெயிலர்களின் அலுவலக அறைகள் உள்ளன. அதில் ஒரு அறையை வெளிநபர் ஒருவர் பயன்படுத்தியதாக புகார் தெரிவித்தனர்.

    தொடர்ந்து டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் மற்றும் குழுவினர் அந்த அறையை சோதனையிட்டனர். அங்கு கட்டுக்கட்டாக ரூ.3 லட்சம் இருந்தது. அதனைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இந்த பணத்திற்கு யாரும் உரிமை கோரவில்லை.

    இதனைத் தொடர்ந்து அந்த பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த உத்தர விட்டனர்.

    ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக சிறைத்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் தனி நபர் மூலம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    பணம் கைப்பற்றப்பட்ட அறையை பயன்படுத்தியது யார்? பணம் எப்படி வந்தது. முறைகேடாக வசூலிக்கப்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விசாரணை அடிப்படையில் வேலூர் ஜெயிலில் விரைவில் பெரிய அளவில் மாற்றங்கள், இடமாற்றங்கள் இருக்கலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பச்சகுப்பம் பாலாற்றில் சீரமைப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு வேலூரில் ஒருவாரத்திற்குள் காவிரி குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர்:

    பாலாற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் பதிக்கப் பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்ட குழாய்கள் அடித்துச் செல்லப்பட்டு சேதமடைந்தன. இதனால் ஆம்பூரிலிருந்து வேலூருக்கு கூட்டுக் குடிநீர் விநியோகம் தடைபட்டது. 

    சேதமடைந்த குடிநீர் குழாய்களை சீரமைக்கும் பணிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வருகிறது.

    மாதனூர் பாலாற்றில் வெள்ளநீர் திருப்பி விடப்பட்டு, இந்தப் பணி மேற்கொள்ளபட் டது. மாதனூரில் சுமார் 580 மீட்டர் நீளத்துக்கு சேதமடைந்த குழாய்கள் சுமார் 50 நாள்களில் 5 பொக்லைன், அதிக சக்தி கொண்ட வெல்டிங் எந்திரங்கள், கிரேன் ஆகியவற்றை பயன்படுத்தி முழுவதுமாக சீரமைத்தனர்.

    இதனை தொடர்ந்து பச்சகுப்பம் பாலாற்றில் குழாய்கள் சீரமைப்பு பணிகள் தொடங்கியது.ஆற்றில் அதிக வெள்ளம் செல்வதால் தண்ணீரை திசை திருப்பி குழாய்களை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 

    பச்சகுப்பம் பாலாற்றில் நடந்து வரும் பணிகள் நிறைவடைந்து விட்டால் அங்கிருந்து குடியாத்தம் பகுதிக்கு காவிரி குடிநீர் எளிதில் சேர்ந்துவிடும்.

    இந்தப் பணிகள் முடிவடைந்ததும் பொய்கை பகுதி பாலாற்றில் குழாய் களை சீரமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    அதற்குப்பிறகுதான் காவிரி குடிநீர் சோதனை ஓட்டம் நடத்தப்படும். இன்னும் ஒரு வாரத்தில் வேலூர் மாநகராட்சி பகுதியில் காவிரி குடிநீர் சப்ளை செய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.
    கே.வி.குப்பம் மாடு விடும் விழாவில் காளை முட்டி படுகாயமடைந்த முதியவர் பலியானார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் கிராமத்தில் கடந்த 21-ந்தேதி மாடுவிடும் விழா நடந்தது. 

    இதில் அணைக்கட்டு அடுத்த மருதவல்லிபாளையத்தை சேர்ந்த வெங்கடேசன் (வயது 62) என்பவர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். 

    அப்போது சீறிப்பாய்ந்து வந்த ஒரு காளை பார்வையாளர்கள் பகுதிக்குள் பாய்ந்தது. அங்கிருந்த வெங்கடேசனை முட்டித்தள்ளியது.

    இதில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்த அவரை உடனடியாக பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். இதுதொடர்பாக கே.வி.குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வேலூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மாடு விடும் விழாவில் பலியானவர்கள் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர் மாவட்டத்தில் இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 55,800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

    52,800 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,158 பேர் பலியானார்கள். தற்போது 1,842 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று 164 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று 278 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    வேலூர் மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது. தற்போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. 

    மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 96 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    மாடுவிடும் விழாவில் இன்ஸ்பெக்டர் சட்டையை பிடித்து ரகளை செய்து கைதான ராணுவ வீரர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை கிராமத்தில் நேற்று மாடு விடும் திருவிழா நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் மாடு விடும் விழா நடத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தற்காலிகமாக தடை விதித்திருந்தார்.

    நேற்று காலை 11 மணி வரை மாடு விடும் விழா நடத்த தடை உத்தரவு இருந்தது.

    இருந்தபோதிலும் கம்மவான்பேட்டையில் மாடு விடும் விழா நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்து வந்தனர்.தடையை மீறி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது.

    நேற்று காலையிலேயே கம்மவான்பேட்டை கிராமத்திற்கு காளைகளை கொண்டு வர விடாமல் வேலூர் தாலுகா போலீசார் தடுத்து நிறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    கம்மவான்பேட்டை கிராமத்தை ஒட்டி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலவழகன் மற்றும் போலீசார் பல்வேறு இடங்களில் வழி மடக்கி திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தனர்.

    காட்பாடி அடுத்த காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மோகன் ராஜ் (வயது 35). என்பவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். 

    அவர் கம்மவான்பேட்டைக்கு காளைகளுடன் சென்றதாக கூறப்படுகிறது. அவரை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது மோகன்ராஜ் இன்ஸ்பெக்டரின் சட்டையை பிடித்து இழுத்து தகராறில் ஈடுபட்டார்.

    இந்த நிகழ்வு அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் நிலவழகனை அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக ராணுவ வீரர் மோகன்ராஜை வேலூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    காலை 11 மணிக்கு பிறகு மாடு விடும் விழா நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.

    இதில் சீறிப்பாய்ந்து காளைகள் சென்றன. இதனை ஏராளமான பொதுமக்கள் வீதியிலும் வீட்டு மாடியில் நின்று வேடிக்கை பார்த்தனர். இந்த மாடு விடும் விழாவில் சூப்பர்ஸ்டார் முத்து என்ற காளைக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது.

    கொரோனா விதிமுறைகளை மீறியதாக விழாக் குழுவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி 2,250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டடுள்ளனர்.
    வேலூர்:

    நாடு முழுவதும் கொரோனா பரவல் அச்சத்தால் நாளை குடியரசு தின விழாவை பாதுகாப்பான நடைமுறைகளுடன் கொண்டாட நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    வேலூர், ராணிப்பேட்டை திருப்பத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் விழாக்களில் கலெக்டர்கள் கொடியேற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கி எளிமையான முறையில் கொண்டாட உள்ளனர்.

    மேலும், குடியரசு தினத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னேற் பாடுகளை போலீசார் செய்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தில் ஆந்திர மாநில எல்லையை இணைக் கும் பொன்னை, கிறிஸ்டியான் பேட்டை, பரதராமி, சைனகுண்டா உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தி உள்ளனர். 

    இந்த சோதனை சாவடிகளில் ஆந்திராவிலிருந்து வரும் வாகனங்களை சோதனைக்கு பிறகே அனுமதிக்கின்றனர். 
    மாவட்டத்தின் முக்கிய நகர சந்திப்புகளில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனத் தணிக்கை மேற்கொள்ளவும், லாட்ஜ் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.  

    மாவட்டம் முழுவதும் சுமார் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகளை அமைத்து வாகன தணிக்கை செய்யப் படுகிறது. 

    பாதுகாப்பு பணியில் 600 போலீசார் ஈடுபட்டுள்ளனர். இன்று இரவு முதல் 27-ந் தேதி அதிகாலை 4 மணி வரை தீவிர சோதனை நடைபெற உள்ளது.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியரசு தினத்தையொட்டி 650 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

    வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி அருகே உள்ள ஆந்திர, கர்நாடக எல்லையில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
    இளம் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். 

    இதில் மூத்த வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவி களுக்கு பரிசு கோப்பை சான்றிதழ் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவித்த நாளான ஜனவரி 25-ம் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக நாம் அனைவரும் கொண்டாடி வருகின்றோம். 

    மக்களாட்சியின் மையமாக இருப்பதுதான் தேர்தலும், வாக்களிக்கும் உரிமையும். இந்தியாவிலுள்ள இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    வாக்களிப்பதை பொதுமக்களாகிய ஒவ்வொரு குடிமக்களும் தலையாய கடமையாகக் கருத வேண்டும். 

    சாதி, இனம், மதம் ஆகிய வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க தகுதியுடைவர்கள் ஆவர்.

    வாக்காளர் அனைவருக்கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஒன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.

    முதலில் வாக்குச்சீட்டு முறை அமலில் இருந்தது. அப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2, 3 நாட்கள் நடைபெற்றது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நடைமுறையில் உள்ளது. 

    இதனால் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.சிறந்த தேசமாக மாற்ற இளம் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
    ×