என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாக்காளர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சான்றிதழ் வழங்கினார்.
இளம் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும்
இளம் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும் என வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறினார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின விழா இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் மூத்த வாக்காளர்கள் கவுரவிக்கப்பட்டனர். மேலும் புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை பாராட்டுச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.
தேசிய வாக்காளர் தினத்தையொட்டி நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ மாணவி களுக்கு பரிசு கோப்பை சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-
இந்திய தேர்தல் ஆணையம் தோற்றுவித்த நாளான ஜனவரி 25-ம் ஆண்டுதோறும் தேசிய வாக்காளர் தினமாக நாம் அனைவரும் கொண்டாடி வருகின்றோம்.
மக்களாட்சியின் மையமாக இருப்பதுதான் தேர்தலும், வாக்களிக்கும் உரிமையும். இந்தியாவிலுள்ள இளம் வாக்காளர்களை ஊக்கப்படுத்துவதற்காக தேசிய வாக்காளர் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
வாக்களிப்பதை பொதுமக்களாகிய ஒவ்வொரு குடிமக்களும் தலையாய கடமையாகக் கருத வேண்டும்.
சாதி, இனம், மதம் ஆகிய வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற அனைவரும் வாக்களிக்க தகுதியுடைவர்கள் ஆவர்.
வாக்காளர் அனைவருக்கும் வண்ண வாக்காளர் அடையாள அட்டை ஒன்று இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படுகின்றது.
முதலில் வாக்குச்சீட்டு முறை அமலில் இருந்தது. அப்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை 2, 3 நாட்கள் நடைபெற்றது. தற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் நடைமுறையில் உள்ளது.
இதனால் மாலைக்குள் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன.சிறந்த தேசமாக மாற்ற இளம் வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பயிற்சி கலெக்டர் ஐஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, வேலூர் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Next Story






