என் மலர்tooltip icon

    வேலூர்

    சத்துவாச்சாரி, தொரப்பாடியில் நாளை மின் தடை ரத்து என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணை மின் நிலையங்களில், அத்தி யாவசிய பராமரிப்பு பணிகள் நாளை 29-ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. 

    இதன் காரணமாக, சத்துவாச்சாரி பேஸ் 1 முதல் 5 வரை, அன்பு நகர், ஸ்ரீராம் நகர், டபுள் ரோடு, வள்ளலார், ரங்காபுரம், அலமேலுமங்காபுரம், சைதாப்பேட்டை, எல்ஐசி காலனி, காகிதப்பட்டறை, கலெக்டர் அலுவலகம், ஆவின், கோர்ட், இபி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள், சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, பென்னாத்தூர், ஆவாரம்பாளையம், அரியூர், தொரப்பாடி, சிறை குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், அண்ணா நகர், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், குப்பம், விருபாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம், இடையம்பட்டி, சாஸ்திரி நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவித்தனர்.

    இந்த மின்தடை தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களுக்காக மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டதாக மின்வாரிய செயற்பொறி யாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
    பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேலூர் மாநகராட்சியில் 12 பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் பென்னாத்தூர், திருவலம், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் ஆகிய பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    ஆவணம் இன்றி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
    வேலூர் மாநகராட்சியில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதில் உதவி கலெக்டர் தரத்தில் ஒரு அதிகாரி மற்றும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் ஒரு பெண் போலீசார் ஒரு கேமரா மேன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    இந்த குழுவினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மாநகராட்சி பகுதிகளில் சோதனையில் ஈடுபடுகின்றனர்.

    ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    இதேபோல குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சி மற்றும் 4 பேரூராட்சிகளிலும் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சோதனை, வாக்கு எண்ணிக்கை நடக்கும் வரை, அமலில் இருக்கும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு இன்று காலை பலத்த பாதுகாப்புடன் முருகனை போலீசார் அழைத்து சென்றனர்.
    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அவரது மனைவி நளினி பெண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது பரோலில் வெளியே வந்துள்ள நளினி காட்பாடி பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முருகனுக்கு கடந்த சில நாட்களாக பல் வலி ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டுமென அவர் சிறைத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு பலத்த பாதுகாப்புடன் முருகனை அழைத்து சென்றனர். அங்கு முருகனுக்கு பல் வலிக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.

    கடந்த சில வருடங்களாக முருகன் காவி உடையில் வெளியே வந்தார். ஆனால் இன்று வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார். சிகிச்சைக்கு பிறகு முருகன் மீண்டும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
    வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் மற்றும் ஒடுகத்தூர், பள்ளிகொண்டா, திருவலம், பென்னாத்தூர் ஆகிய பேரூராட்சிகளுக்கு வருகிற 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

    இந்தப் பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. நாளை வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. வேலூர் மாநகராட்சியில் 6 இடங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்து வருகின்றனர்.

    காட்பாடி 1-வது மண்டல அலுவலகம், புதிய பஸ் நிலையம் அருகே புதிதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கார் நிறுத்தும் வளாகம், சத்துவாச்சாரி 2-வது மண்டல அலுவலகம், வேலூர் பழைய மாநகராட்சியில் இயங்கிவரும் 3-வது மண்டல அலுவலகம், வேலூர் மாநகராட்சி அலுவலகம் தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 6 இடங்களில் வேட்புமனுத் பெற ஏற்பாடு செய்தள்ளனர். இதற்காக 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாநகராட்சியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ள. நிர்வாக வசதிக்காகவும் கூட்டம் அதிக அளவில் வருவதை தடுக்கவும் 10 வார்டுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.அவர்களிடம் அந்தந்த பகுதி வார்டுகளில் போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.

    மனு தாக்கல் செய்ய வருகிற 4-ந் தேதி கடைசி நாள். 5-ந் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 7-ந் தேதி போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறலாம்.22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.மார்ச் மாதம் 2-ந் தேதி வார்டு கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நடைபெறும். 

    அதற்கு பிறகு மார்ச் 4-ந் தேதி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுக்க மறைமுகத் தேர்தல்கள் நடைபெற உள்ளது.
    வேலூர் ஜெயில் குடியிருப்பில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் மொட்டைக் கடிதங்கள் மூலம் என்னை சிக்க வைக்க முயற்சி செய்வதாக ஜெயில் சூப்பிரண்டு குற்றம் சாட்டியுள்ளார்.
    வேலூர்:

    வேலூர் ஜெயிலில் 700-க்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

    ஜெயில் சூப்பிரண்டாக ருக்மணி பிரியதர்ஷினி கடந்த ஓராண்டுக்கு மேலாக உள்ளார். இவர் பதவிக்கு வந்த பிறகு சிறை விதிகளுக்கு மாறாக பல செயல்பாடுகள் நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

    இந்த புகார்களின் அடிப்படையில், கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம், வேலூர் ஜெயிலில் விசாரணை நடத்தினார்.

    இதன் ஒரு பகுதியாக சிறைக்காவலர் குடியிருப்பு வளாகத்தில் பூட்டியிருந்த உதவி சிறை அலுவலர் குடியிருப்பு ஒன்றில் திடீர் சோதனை செய்தனர். அப்போது, ஒரு பெட்டியில் இருந்த ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்தனர். அந்த பணம் வேலூர் சரக டி.ஐ.ஜி. வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    இந்த விசாரணையில் அதிர்ச்சிகரமான மேலும் பல புகார்கள் வந்துள்ளன. இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விரைவில் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் விதிமீறல்கள் நடந்ததா வெளியாட்கள் மூலம் வசூல் வேட்டை நடத்தப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து ஜெயில் சூப்பிரண்டு ருக்மணி பிரியதர்ஷினி கூறியதாவது:-

    Ôஇந்த பிரச்சினையில் தவறான குற்றச்சாட்டுகளை முன்வைத்து என்னை சிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். கடலூர் ஜெயிலில் இருந்து நிர்வாக அலுவலர் ஒருவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு வேலூர் மத்திய சிறைக்கு அயல்பணியாக மாற்றப்பட்டார். 

    சென்னையை சேர்ந்த அவர் மாற்றுத்திறனாளி என்பதால் அடிக்கடி சென்னை சென்று வந்தார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் சென்னை செல்ல முடியாத நிலை இருந்ததால் தான் தங்குவதற்கு ஒரு குடியிருப்பு வழங்க வேண்டும் என்று கோரினார். அவருக்கு உதவி சிறை அலுவலர் குடியிருப்பு ஒதுக்கப்பட்டது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மீண்டும் அவர் கடலூர் ஜெயிலுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார். 

    அந்த அறையை இதுவரை அவர் ஒப்படைக்கவில்லை.தற்போது, அந்த அறையில் இருந்துதான் ரூ.3 லட்சத்தை பறிமுதல் செய்துள்ளதாக கூறியுள்ளனர். 

    மேலும், அந்த நிர்வாக அலுவலர் நேற்று எனது செல்போனுக்கு தொடர்பு கொண்டு வேலூரில் உள்ள தனது குடியிருப்பில் சோதனை நடைபெற்றதாகவும் அங்குள்ள பெட்டி மற்றும் சில பாத்திரங்களை தன் வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரினார். பெட்டியில் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமான பணம் இருப்பதாக கூறினார். 

    இதுகுறித்து மனுவாக எழுதிக்கொடுக்கும்படி தெரிவித்துள்ளேன். இந்த ஆடியோ உரையாடலை விசாரணையின் போது சமர்ப்பிப்பேன்.

    என் நிர்வாகத்தில் தவறு நடக்க விடமாட்டேன்.தவறு செய்தவர்களைத் விடவே மாட்டேன். இதனால் என் மீது தவறாக மொட்டை கடிதம் அனுப்பி உள்ளனர். இதன்மூலம் என்னை சிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். என் நேர்மை என்னை காப்பாற்றும்.

    கடவுள் அருளால் என் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூபிப்பேன் என்றார்.
    குடிக்க பணம் தர மறுத்து தள்ளிவிட்டதால் தொழிலாளியை கொன்றேன் என கைதான வாலிபர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் ஒல்டுடவுன் எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனிவாசன் (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார்.
     
    இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். சீனிவாசன் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள பெட்டிக் கடைக்கு நடந்து சென்றார். 

    அங்குள்ள மரத்தின் அருகே அதே பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சீனிவாசன் (45) என்பவர் குடிபோதையில் இருந்தார்.

    அப்போது ஏற்பட்ட தகராறில் முருகேசன் மகன் சீனிவாசன் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் டீக்கடை தொழிலாளி சீனிவாசனின் மார்பு பகுதியில் பலமாக குத்தினார். படுகாயம் அடைந்த அவரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய சீனிவாசனை கைது செய்தனர்.

    நேற்று போதையில் இருந்ததால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. போதை தெளிந்த பிறகு அவரிடம் விசாரணையை தொடங்கினர். அப்போது டீக்கடை தொழிலாளி சீனிவாசனிடம் குடிக்க பணம் கேட்டேன்.அவர் தர மறுத்தார். 

    மேலும் என்னை கீழே தள்ளிவிட்டார். ஆத்திரமடைந்த நான் மாங்காய் வெட்டுவதற்காக வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை குத்தினேன் என கூறியுள்ளார். தொடர்ந்து சீனிவாசனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    குடியாத்தத்தில் முதியவரை ஏமாற்றி பணம் பறித்து கொண்டு ஓடிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அடுத்த சேத்துவண்டை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது 75) நாடகாசிரியர் இவரது மனைவி பல வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். ஜெகன்நாதன் தனியாக வசித்து வருகிறார். 

    அவர் சிறுக சிறுக சேர்த்த பணம் ரூ.9,500 மற்றும் சில்லரை நோட்டுக்கள் என 10 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக ஒரு பையில் வைத்துக்கொண்டு சுற்றி வந்துள்ளார்.

    குடியாத்தத்தில் உள்ள அம்மா உணவகத்தில் தினந்தோறும் சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.

    நேற்று காலையில் ஜெகன்நாதன் அம்மா உணவகத்திற்கு சாப்பிட வந்தார். அங்கு சாப்பிடும்போது பக்கத்தில் ஒரு பெண் அவரிடம் பேச்சு கொடுத்தபடியே இருந்துள்ளார். அதன் பின்னர் கைகழுவ வெளியே வந்த ஜெகன்நாதன் அங்கே இருந்த டேபிள் மீது பையை வைத்துவிட்டு கைகழுவி யுள்ளார். 

    அந்த சமயம் பார்த்து அருகே இருந்த பெண் பையை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிட்டார். அதற்குள் அந்த பெண் அங்கிருந்து ஓடிவிட்டார். இதனால் ஜெகன்நாதன் பணம் பறிபோய்விட்டதே என்று கண்ணீர் விட்டு அழுது புலம்பினார். 

    அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் முதியவரை அழைத்துக்கொண்டு குடியாத்தம் போலீஸ் நிலையத்திற்கு சென்று  புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து டவுன் போலீசார் அம்மா உணவகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர் அண்ணா சாலையில் கொலையான தொழிலாளி பிணத்துடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் கொசப்பேட்டை எஸ்.எஸ்.கே.மானியம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் மகன் சீனிவாசன் (வயது 40). இவர் அந்த பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். 

    நேற்று குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இவரை அதே பகுதியை சேர்ந்த மற்றொரு சீனிவாசன் கத்தியால் குத்தி கொலை செய்தார்.
    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    இந்த நிலையில் இன்று காலை எஸ்.எஸ்.கே. மானியம் தெருவைச் சேர்ந்த பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் தெற்கு போலீஸ் நிலையம் அருகே அண்ணா சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். 

    போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் கொலை செய்யப்பட்ட சீனிவாசனின் உடல் ஆம்புலன்சில் அந்த வழியாக கொண்டு வரப்பட்டது. அதனை பொதுமக்கள் மடக்கினர். 

    ஆம்புலன்சிலிருந்து சீனிவாசன் உடலைக் இறக்கி சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் பிணத்தை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

    மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். எஸ்.எஸ். கே.மானியம் தெருவில் கஞ்சா மது விற்பனை அமோகமாக நடக்கிறது. 

    இதனை போலீசார் கண்டு கொள்வதே இல்லை. 24 மணி நேரமும் எது கேட்டாலும் அங்கு கிடைக்கும். தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனால் அடிக்கடி கொலை சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. 
    கஞ்சா, மது போதையில் தெருவில் நின்று அட்டகாசம் செய்கின்றனர்.

    இதனைத் தட்டிக் கேட்டால் பாட்டில் மற்றும் கத்தியால் வெட்டி தாக்குகின்றனர். அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். இதுபோன்ற அசம்பாவிதங்களை தடுக்கவும் முறையான பாதுகாப்பு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

    எஸ்.எஸ்.கே. மானியம் தெருவில் கஞ்சா மது உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    அந்த பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
    தேர்தல் விதிமீறல் நடந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று காலை தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் தலைமையில் நடந்தது. இதில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு தேர்தல் பணிகள் ஒதுக்கப்பட்டது.

    கூட்டத்தில் கமிஷனர் அசோக்குமார் பேசியதாவது:-

    தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் சரியாக பணியாற்ற வேண்டும். மனுக்கள் பெறுபோதும், பரிசீலனையின் போதும் முறையாக பணியாற்ற வேண்டும். மனு தாக்கல் செய்ய அதிகளவில் நபர்கள் வந்தால் அவர்களுக்கு டோக்கன் வழங்கி அதன் அடிப்படையில் மனுக்களைப் பெற வேண்டும்.எந்த வித தடையின்றி மனுக்களை பெற வேண்டும்.

    மனுக்கள் பரிசீலனையின்போது தேர்தல் விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். தேர்தல் விதிமுறைகளை அனைவரும் முழுமையாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    தேர்தல் ஆணைய விதிகளின்படி பணி செய்தால் சிறு தவறு இல்லாமல் தேர்தல் நடத்த முடியும். வேட்புமனு சரிபார்ப்பு பணி நடைபெறும் அன்று மாலை ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுதாரர்களின் பெயர் பட்டியலை அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் ஒட்டப்படவேண்டும். தினந்தோறும் பெறப்படும் மனுக்கள் குறித்த விவரங்களை தேர்தல் ஆணைய ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் போது முறையான பட்டியலை தயாரித்துக்கொள்ள வேண்டும்.

    மாநகராட்சிப் பகுதியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது.இதனால் தேர்தல் விதி மீறல் சம்பந்தமான புகார்கள் வந்த உடனேயே அதற்கு தீர்வு காண வேண்டும். அனைத்து அதிகாரிகள் தேர்தல் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டால் வேலூர் மாநகராட்சி முன்மாதிரியாகக் திகழும். மாநகராட்சி பகுதியில் தேர்தல் விதி மீறல்கள் குறித்து குழுக்கள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

    வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கு 437 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் வாக்குச்சாவடிகளில் ஆய்வு செய்து கூடுதல் வசதிகளும் செய்யப்பட உள்ளது.

    வாக்கு பதிவுக்கு தேவையான வாக்குப்பதிவு எந்திரங்கள் தயாராக உள்ளது. மாநகராட்சி தேர்தலில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர் அவர்களுக்கு தேர்தல் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் ஜோஸ் ஆலுக்காசில் கொள்ளையடித்த வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் தோட்டப் பாளையம் காட்பாடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கடந்த மாதம் சுவரில் துளையிட்டு 16 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

    இந்த வழக்கில் பள்ளிகொண்டா அருகே உள்ள குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த டீக்கா ராமன் (வயது 23). என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டது.

    கைதான டீக்கா ராமன் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் பரிந்துரை செய்தார். 

    இதனையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. வேலூர் ஜெயிலில் உள்ள அவரிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்து கைது செய்யப்பட்டதற்கான ஆணை வழங்கப்பட்டது.

    வேலூர் பலவன்சாத்து குப்பத்தை சேர்ந்தவர் ஜாபர்கான் (26) மேல் விஷாரத்தை சேர்ந்த அப்சல் பாஷா (29) ஆகியோர் தொடர்ந்து குட்கா கடத்தியதாக குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

    இதேபோல குடியாத்தம் தரணாம்பேட்டையை சேர்ந்த சங்கர்லால் (24) என்பவரும் குட்கா கடத்தலில் ஈடுபட்டதாக குண்டர்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
    8 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சுரங்க நடைபாதையை சுத்தமாக வைத்திருக்க பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    சத்துவாச்சாரி கெங்கை அம்மன் கோவில் அருகே திறக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதை 5.8 மீட்டர் அகலம் 25 மீட்டர் நீளத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. 

    சுரங்கப் பாதை முழுவதும் டைல்ஸ் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நவீன மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
    சுரங்கப்பாதையில் அசம்பாவிதங்களைத் தடுக்க கண்காணிப்பு 8 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    இதன் மூலம் போலீசார் 24 மணி நேரமும் சுரங்கப் பாதையில் கண்காணிக்க முடியும். சுரங்கப்பாதையில் எந்த நேரத்திலும் மழை தண்ணீர் தேங்காத வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    பொதுமக்கள் சுரங்கப்பாதையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். எச்சில் துப்பக் கூடாது. சுரங்கப் பாதையில் நடந்து செல்லும்போது புகைபிடிக்கக் கூடாது. என்ற வாசகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் சுரங்கப்பாதையை தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் பராமரிப்பார்கள். வருங்காலத்தில் மாநகராட்சி மூலம் பராமரிக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
    வேலூர் சத்துவாச்சாரியில் ரூ.1.80 கோடியில் கட்டப்பட்ட சுரங்கப்பாதை இன்று திறக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் கெங்கை யம்மன் கோவில் பகுதியில் இருந்து எதிரே உள்ள ஆர்.டி.ஓ. அலுவலக சாலைக்கு செல்லும் பொதுமக்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது விபத்துகளில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.

    இதை தவிர்க்க சத்துவாச்சாரி பகுதியில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப் பட்டது. 

    இதைத்தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், சத்துவாச்சாரி பகுதியில் ரூ.1.80 கோடி மதிப்பில் சுரங்கப்பாதை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் தொடங்கி நடந்து வந்தது. இந்த நிலையில் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு இன்று திறப்பு விழா நடந்தது. 

    கதிர் ஆனந்த் எம்.பி.சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி சுரங்கப் பாதையை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கமிஷனர் அசோக்குமார், 2-வது மண்டல இளநிலை பொறியாளர் மதிவாணன், சுகாதார அலுவலர் சிவக்குமார், டாக்டர் வி.எஸ்.விஜய், வள்ளலார் ஆர். பி.ரமேஷ் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    ×