என் மலர்tooltip icon

    வேலூர்

    சுமால் லோன் ஆப் மூலம் கடன் பெற வேண்டாம் என வேலூர் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர்:

    ஆன்லைன் மூலம் நடைபெறும் பணம் பறிமுதல் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    சுமால் லோன் ஆப் மூலம் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டுமென வலியுறுத்தினர்.

    சுமால் லோன் ஆப் களில் கடன் பெற வேண்டும் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். அப்படி நீங்கள் அந்த சுமால் லோன் ஆப் மூலம் கடன் பெற்றால், பெரும் விளைவை எதிர்கொள்ள நேரிடும்.

    சுமால் லோன் ஆப்களில் பான்கார்டு, வங்கிக் கணக்கு விவரம் மற்றும் உங்களது புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யச் சொல்லும்.

    அந்த ஆப்- ல் உள்ள விதிமுறைகளை உறுதி செய்யச்சொல்லும்.
    பின்பு செல்போன் எண்ணை எடுத்து கொள்ளும். நாம் எப்போதும் மற்ற ஆப்-ல் அனுமதி கேட்பது போல இருக்கும் என்று எண்ணி உறுதிசெய்து லோன் வாங்கிவிடுவோம். 

    நாம் வாங்கிய கடனுக்கு மிக அதிகபட்சமான வட்டியை கட்ட சொல்லி மிரட்டுவார்கள். 

    அப்படி நாம் கட்டா விட்டால் நம் செல்போனில் பதிவு செய்துள்ள மற்ற எண்களுக்கு அனைவருக்கும் தகாத வார்த்தைகளிள் குறுந்தகவல் அனுப்பியும் மற்றும் நம் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அதனை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என்று நம்மை மிரட்டுவார்கள். 

    நாம் அதற்கு பயந்து அவர்கள் கூறிய வட்டியையும், அசலையும் செலுத்திவிட்ட பின்னரும் மீண்டும் பணத்தை அவர்களே நமது வங்கிக் கணக்கில் செலுத்தி அதற்கான வட்டியையும், அசலையும் நம்மை கட்ட சொல்லி மிரட்டுவார்கள். 

    எனவே இதுப்போன்ற சுமால் ஆப் லோன்களை இணையத்திலிருந்து பதிவிறக்கத்தை தவிர்த்திடுங்கள் என வேலூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள கத்தாழம்பட்டு அண்ணா நகரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 33).ஆட்டோ டிரைவர். இவரது மனைவி இந்துமதி (32) தம்பதிக்கு கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 

    சந்தோஷ் குமார் வரதட்சணை கேட்டு தகராறு செய்தார். இதனால் இந்துமதி கணவரை பிரிந்து விரிஞ்சிபுரம் அருகே உள்ள கம்மவார்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்தநிலையில் சந்தோஷ்குமார் இந்துமதிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார். அந்த பெண்ணுக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. இதனை அறிந்த இந்துமதி அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயாவிடம் புகார் மனு அளித்தார்.

    இதுகுறித்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மகளிர் போலீசாருக்கு டி.ஐ.ஜி. ஆனி விஜயா உத்தரவிட்டார்.

    அதன்பேரில் வேலூர் அனைத்து மகளிர் போலீசார் சந்தோஷ் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து வேலூர் டி.ஐ.ஜி. அலுவலகத்தில் புகார் அளிக்கலாம். 82201 66100 என்ற செல்போன் எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

     மேலும் இந்த எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் மனுக்களை அனுப்பலாம்.அதன்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்துள்ளார்.
    வேலூர் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட பா.ஜ.க.வில் வேட்பாளர் தேர்வு இன்று நடந்தது.
    வேலூர்:

    தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவித்ததை அடுத்து பல்வேறு அரசியல் கட்சியினர் தேர்தலில் போட்டியிட உள்ளவர்களிடம் நேர்காணல் நடத்தி வருகிறது. 

    இந்த நிலையில் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களிடம் இன்று நேர்காணல் நடந்தது. 

    பா.ஜ.க மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் தசரதன், மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாவட்ட பொது செயலாளர் எஸ் எல் பாபு ஆகியோர் தேர்தலில் போட்டியிட விருப்பம் உள்ள பா.ஜ.கவினரிடம் நேர்காணல் நடத்தினார்.
     
    அப்போது நேர்காணலில் கலந்து கொண்டவர்களிடம் மக்கள் மத்தியில் உங்களின் செல்வாக்கு என்ன? கொரோனா காலகட்டத்தில் நீங்கள் வசிக்கும் பகுதியில் பொதுமக்களுக்கு சேவை செய்வீர்களா? தேர்தலில் போட்டியிட்டால் எவ்வளவு செலவு செய்வீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டனர்.  

    நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சிப் பிரிவு வெங்கடேசன், ஊடகப்பிரிவு ஆனந்தன் உட்பட திரளான பாஜகவினர் கலந்து கொண்டனர்.
    பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க வேலூர் மாநகர எல்லை பகுதிகளில் தேர்தல் பறக்கும்படையினர் தீவிர சோதனை நடத்தினர்.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி குடியாத்தம், பேரணாம்பட்டு நகராட்சிகள் பென்னாத்தூர், திருவலம், பள்ளிகொண்டா, ஒடுகத்தூர் ஆகிய பேரூராட்சியில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    ஆவணம் இன்றி பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர் மாநகராட்சியில் 12 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுவினர் நேற்று முதல் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மாநகராட்சி பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டள்ளனர். 

    வேலூர் மாநகராட்சி எல்லை பகுதி, க்ரீன் சர்க்கிள், சாலை சந்திப்புகளில் இன்று பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
    ஆவணம் இன்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    வியாபாரிகள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணத்துடன் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
    பரோலில் வந்துள்ள பேரறிவாளனுக்கு முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்பந்தமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    ஜோலார்பேட்டை:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

    சிறுநீரகத் தொற்று மற்றும் வயிறு சம்பந்தமான பாதிப்புகள் காரணமாக அவருக்கு பரோல் கேட்டு அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த மே மாதம் தமிழக முதல்-அமைச்சருக்கு மனு அனுப்பினார்.

    அதன் அடிப்படையில் கடந்த மே மாதம் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது. இதனையடுத்து சென்னை புழல் சிறையில் இருந்த பேரறிவாளன் திருப்பத்தூர் மாவட்டம் பழைய ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    அவரது தாயார் அற்புதம்மாள் ஒவ்வொரு மாதமும் பரோல் காலம் முடியும் தருவாயில் மீண்டும் பரோல் நீட்டிக்க கோரி தமிழக அரசுக்கு மனு அளித்தார். இதனால் 8-வது மாதமாக பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்பட்டு வீட்டிலேயே உள்ளார்.

    அவரது வீட்டில் ஜோலார்பேட்டை போலீசார் பதிவேட்டில் கையெழுத்து வாங்கி வருகின்றனர்.

    டாக்டர்களின் ஆலோசனைப்படி கிருஷ்ணகிரி, விழுப்புரம், வேலூர், தருமபுரி, உள்ளிட்ட பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பேரறிவாளன் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார்.

    வேலூர் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமாறன் தலைமையில் தனிப்பிரிவு ஏட்டு திருக்குமரன் மற்றும் போலீசார் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் பேரறிவாளனை சென்னை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    முகப்பேரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரக தொற்று மற்றும் வயிறு சம்பந்தமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று மாலை வீடு திரும்புவார் என போலீசார் தெரிவித்தனர்.





    அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் சீட் வழங்கப்பட உள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் பென்னாத்தூர் அருகே உள்ள கணேசபுரத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்.இவரது மனைவி வித்யா இருவரும் கல்குவாரியில் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    இவர்களின் மகள் சத்யா (வயது 17). மாற்றுத்திறனாளியான இவர் பென்னாத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். குடும்ப வறுமை காரணமாக பள்ளிப் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் சிலர் மாணவி சத்யாவின் பெற்றோரைச் சந்தித்து பேசினர். மாணவியின் பள்ளி படிப்பு செலவை தாங்களே ஏற்றுக்கொள்வதாக கூறி சத்யாவை மேற்கொண்டு படிக்க வைக்க சம்மதம் பெற்றனர்.

    தொடர்ந்து நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவி 600-க்கு 532 மதிப்பெண்கள் பெற்றார். இதையடுத்து நீட் தேர்வில் பங்கேற்று 720-க்கு119 மதிப்பெண் பெற்று மருத்துவ படிப்பில் சேருவதற்கான தகுதி பெற்றார்.

    அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு தமிழக அரசின் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புகளில் சீட் வழங்கப்பட உள்ளது.

    இந்த நிலையில் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது. இதில் விளையாட்டு வீரர்கள் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் பங்கேற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் நேற்று நடந்தது.

    இதில் அரசு பள்ளி மாணவி சத்யாவுக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்புக்கான சீட் வழங்கப்பட்டது.

    கடந்த ஆண்டு வேலூர் மாவட்டத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் 17 பேர் எம்.பி.பி.எஸ், 3 பேர் பி.டி.எஸ். படிப்பு படித்து வருகின்றனர்.

    இந்த ஒதுக்கீட்டில் மாவட்டத்தில் இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த முதல் மாணவியாக மாற்றுத்திறனாளி பிரிவை சேர்ந்த முதல் மாணவியாக சத்யா விளங்குகிறார். இது குறித்து பென்னாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் உமாதேவன் கூறுகையில்:-

    மாணவி சத்யா மிகவும் நன்றாக படிக்கக் கூடியவர்.ஆனால் அவரின் பெற்றோர் கூலி தொழிலாளி என்பதால் பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை இருந்தது. தொடர்ந்து மாணவியின் பெற்றோரிடம் பேசிய ஆசிரியர்கள் மாணவியின் படிப்பைத் தொடர்வதற்கு உதவி செய்தனர்.

    மேலும் நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவி சத்யா தனியாக பயிற்சி மையங்களில் பயிற்சி எதுவும் பெறவில்லை.ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் புத்தகங்கள் உதவியுடன் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பிற்கு தேர்வாகி உள்ளார். இந்த பள்ளியில் படித்து மருத்துவ படிப்பில் சேர்ந்த முதல் மாணவி என்ற பெருமைக்கு உரியவராக சத்யா விளங்குகிறார்.

    இவர் பள்ளியில் படிக்கும் மற்ற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு முன்னுதாரணமாகவும் உத்வேகத்தை ஏற்படுத்தும் சக்தியாக விளங்குகிறார் என்றார்.
    எருதுவிடும் விழாவில் காயமடைந்த காளைக்கு தாடையில் ஆபரேஷன் செய்து வேலூர் கால்நடை டாக்டர்கள் அசத்தினர்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் பூசிமலைக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் காளை ஒன்றை வளர்த்து வருகிறார். 

    கடந்த 24&ந் தேதி வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியில் நடைபெற்ற எருது விழாவில் பங்கேற்ற அந்த காளை கீழே விழுந்தது.இதில் அதன் கீழ் தாடை கிழிந்து எலும்பு முறிவு ஏற்பட்டது.

    காளைக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதற்காக அதன் உரிமையாளர் விஜயகுமார் அன்றைய தினமே வேலூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அப்போது காளையை பரிசோதித்த டாக்டர்கள் காளைக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர்.

    கால்நடை டாக்டர் ஜோசப்ராஜ் தலைமையிலான டாகடர்கள் ரவிசங்கர், அரேஷ், சுப்பிரமணி ஆகியோர் கொண்ட குழுவினர் காளைக்கு மயக்க மருந்து அளித்து சுமார் 4 மணி நேர அறுவை சிகிச்சை செய்தனர். 30 தையல் போடப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த காளை நேற்று அனுப்பி வைக்கப்பட்டது.

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு காளை நன்றாக உணவு எடுத்துக் கொள்வதாகவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
    குடியாத்தத்தில் வீட்டு மனை பட்டாகளுக்கான உரிய இடங்களை காட்டுமாறு தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் பிச்சனூர் ஆர்.எஸ்.நகர், முனிசிபல் லைன், ஆசிரியர்காலனி ராமலிங்கம் நகர் ஆகிய பகுதியில் வசித்து வந்த பட்டியல் இன ஏழை எளிய மக்கள் வீட்டுமனை வழங்கக்கோரி குடியாத்தம் ஆதிதிராவிட நலத்துறை தனி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    அந்த மனுக்கள் மீது விசாரணை நடத்தி கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தகுதியான நபர்கள் 232 பேருக்கு குடியாத்தம் தாலுகா கொண்ட சமுத்திரம் ஊராட்சி காந்திநகர் கல்லேரி பகுதியில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    வீட்டுமனை பட்டா பெற்ற பெரும்பாலோனோர் ஏழைக் கூலித் தொழிலாளிகள் அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பகுதியில் குடிசைகள் அமைக்கலாம் என சில தினங்களுக்கு முன்பு அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தபோது சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டு இருந்துள்ளதாகவும் நில உரிமையாளர் இங்கே ஏதும் வீட்டுமனை பட்டா வழங்க வில்லை என கூறியுள்ளதாக கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வீட்டுமனை பெற்ற 232  பட்டியல் இன ஏழை எளிய தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியின் வேலூர் மாவட்ட செயலாளர் பி.மேகநாதன், ஒன்றிய குழு உறுப்பினர் குட்டிவெங்கடேசன் உள்ளிட்டோர் வீட்டு மனை பட்டா பெற்ற பொதுமக்களுடன் நேற்று குடியாத்தம் தாலுகா அலுவலகம் வந்து குடியாத்தம் தாசில்தார் லலிதாவிடம் நான்காண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டாவை அளந்து பயனாளிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் அந்த இடத்தை வேறு நபர் உரிமை கொண்டாடுவதாகவும் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். 

    மனுக்களை பெற்றுக்கொண்ட தாசில்தார் லலிதா இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் மூலம் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் பார்வையாளர்களை நியமித்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்விவரம் வருமாறு:-
    வேலூர் மாநகராட்சியில் 1-வது மண்டலத்துக்கு சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) அஜய்சீனிவாசன் (செல்போன் எண்-98942 40948),  2-வது மண்டலத்துக்கு கால்நடைபராமரிப்பு துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் (94450 01131), 3-வது மண்டலத்துக்கு வேலூர் உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா (94450 00417), 4-வது மண்டலத்துக்கு வேளாண் இணை இயக்குனர் மகேந்திர பிரதாப் தீட்சித் (80720 05079) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல, பேரணாம்பட்டு நகராட்சிக்கு சிறப்பு துணை கலெக்டர் (முத்திரை) ராமகிருஷ்ணன் (88705 05566), குடியாத்தம் நகராட்சிக்கு உதவி கலெக்டர் (கலால்) வெங்கட்ராமன் (94448 38637), பென்னாத்தூர் பேரூராட்சிக்கு கலெக்டரின் நேர்முகஉதவியாளர் (வளர்ச்சி) புருஷோத்குமார் (74026 06575), பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) செந்தில்வேல் (98424 67215), ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் (99523 14993), திருவலம் பேரூராட்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பேபிஇந்திரா (94454 77828) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மேலும் தேர்தல் தொடர்பான புகார்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கட்டுப்பாட்டு அறை எண்ணான 18004254464-ஐ தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக குறைந்து வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதுவரை 56,318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53,573 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 1,159 பேர் பலியானார்கள். தற்போது 1,586 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    இன்று 77 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சி பகுதியில் மட்டும் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 400-க்கு மேல் இருந்தது. படிப்படியாக குறைந்து வந்த பாதிப்பு இன்று அதிரடியாக 100-க்கு கீழ் குறைந்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் நேற்று 247 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.பாதிக்கப்பட்டவர்களில் 80 சதவீதத்திற்கு மேற்பட்டோர் வீடுகளிலேயே சிகிச்சை பெற்று வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் புறநகர் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளில் தொற்று பரவல் குறைந்துள்ளது. 

    தற்போது குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மாவட்டத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 96 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    வேலூர் மாநகராட்சியில் இன்று யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. தேர்தல் அலுவலகங்களில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வேலூர் மாநகராட்சியில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 208 ஆண்களும், 2 லட்சத்து 15 ஆயிரத்து 1 பெண்களும், 46 திருநங்கைகளும் என மொத்தம் 4 லட்சத்து 14 ஆயிரத்து 255 வாக்காளர்கள் உள்ளனர். 437 வாக்குச்சாவடிகள் உள்ளது.

    மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தும் அலுவலராக மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

    60 வார்டுகள் கொண்ட மாநகராட்சிக்கு 6 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தலா 10 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தாராபடவேட்டில் உள்ள 1-வது மண்டல அலுவலகம், மாநகர சுகாதார நல அலுவலகம், சத்துவாச்சாரியில் உள்ள 2-வது மண்டல அலுவலகம், மாநராட்சி 3-வது மண்டல அலுவலகம், மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகம், 4-வது மண்டல அலுவலகத்திலும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    இன்று முதல் மனுத்தாக்கல் 4-ந்தேதி வரை நடக்கிறது.

    இதனையொட்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் முன்பாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    முதல் நாளான இன்று மதியம் வரை வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. 

    தேர்தலில் போட்டியிட ஆர்வம் உள்ள சுயேட்சை மற்றும் அரசியல் கட்சியினர் இன்று உதவி தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் மனு தாக்கல் செய்வதற்கான விண்ணப்ப படிவங்களை வாங்கி சென்றனர்.
    ஆஸ்பத்திரி காவலர் செல்போனை பறித்ததால் வேலூரில் நடுரோட்டில் அமர்ந்து தொழிலாளி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
    வேலூர்:

    வேலூர் ஆர்.என். பாளையம் அப்துல்காதர் தெருவை சேர்ந்தவர் கவுஸ்ஷெரிப் (வயது42). பஞ்சர் கடை நடத்தி வருகிறார். 

    இவருடைய தாயாரை சிகிச்சைக்காக இன்று வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள சிஎம்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். ஆஸ்பத்திரியில் கூட்டம் அதிகமாக இருந்தது. 

    அப்போது வரிசையில் நின்று கொண்டிருந்த கவுஸ்செரீப் விரைவாக மருத்துவ படிவம் பெற முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அங்கிருந்த ஆஸ்பத்திரி காவலர் அவரை தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை கவுஸ்செரீப் அவரது செல்போனில் படம் பிடித்தார். 

    அப்போது ஆஸ்பத்திரி காவலர் ஒருவர் கவுஸ்செரீப் வைத்திருந்த செல்போனை பறித்தார்.

    இதனை கண்டித்து கவுஸ்செரீப் ஆஸ்பத்திரி முன்பு ஆற்காடு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது
    வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். 

    மேலும் கவுஸ்செரீப்பை கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். தனியார் ஆஸ்பத்திரியில் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

    இந்த சம்பவம் தொடர்பாக தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதனால் இன்று காலை ஆற்காடு சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    ×