search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா சிகிச்சை மையங்களுக்காக 200 படுக்கைகளை ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா வழங்கிய காட்சி.
    X
    கொரோனா சிகிச்சை மையங்களுக்காக 200 படுக்கைகளை ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா வழங்கிய காட்சி.

    கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 200 படுக்கைகள்

    கொரோனா சிகிச்சை மையங்களுக்கு 200 படுக்கைகளை கலெக்டரிடம் சக்தி அம்மா வழங்கினார்.
    வேலூர்:

    வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சார்பில் அரசின் கொரோனா சிகிச்சை மையங்களுக்காக ரூ.6 லட்சம் மதிப்பில் 200 படுக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை வேலூர் கலெக்டரிடம் ஸ்ரீசக்திஅம்மா வழங்கினார்.

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. ஒருபுறம் கொரோனா பரவலைத் தடுத்திட இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

    மறுபுறம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

    அதனடிப்படையில், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 1,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 

    இதுதவிர, தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி, விஐடி பல்கலைக்கழகம் உள்பட 4 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த கொரோனா சிகிச்சை மையங்களுக்காக ஸ்ரீபுரம் நாராயணி பீடம் அறக்கட்டளை சார்பில் ரூ.6 லட்சம் மதிப்பில் 200 படுக்கைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவற்றை கலெக்டர் குமாரவேல் பாண்டியனிடம் ஸ்ரீசக்திஅம்மா வழங்கினார்.

    இதேபோல், வேலூரிலுள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சிறார்களுக்கு தையல் பயிற்சி அளித்திட 10 தையல் எந்திரங்களும் வழங்கப்பட்டன. 

    அவற்றை கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் உமாமகேஷ்வரி பெற்றுக் கொண்டார்.

    அப்போது, நாராயணி பீடத்தின் மேலாளர் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    Next Story
    ×