என் மலர்tooltip icon

    வேலூர்

    நலத்திட்ட உதவிகள் பெற மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் முகாம் நேற்று நடந்தது. 

    மாற்றுத்திறனாளி நல அலுவலர் சரவணகுமார் தலைமை தாங்கினார். முதன்மை கல்வி அலுவலர் உஷா முன்னிலை வகித்தார். வாலாஜா தாசில்தார் ஆனந்தன் வரவேற்றார். இந்த முகாமில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பார்வையிட்டு ஆய்வு செய்து கூறியதாவது:-

    ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று மாற்றுத்திறனாளிகளுக்கான முகாம் நடைபெற்று வந்தன. முகாமில் பெறப்பட்ட விண்ணப்பங்களின் மீது அன்றைய தினமே மருத்துவச் சான்றின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு மாநில மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டைகள், வீடு கட்ட ஆணைகள், தமிழ்நாடு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அடையாள அட்டைகள், பென்ஷன் போன்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

    மத்திய அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் பெற்றிட தேசிய அடையாள அட்டை மிகவும் முக்கியமானது. இந்த அட்டை தொலைந்து விட்டால் கூட இதனை எளிய முறையில் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்டத் திலுள்ள 18 குறு வட்டங்களில் தேசிய அடையாள அட்டை முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

    மாற்றுத்திறனாளிகள் இந்த முகாமில் வரவில்லை என்றாலும் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடமும் வழங்கலாம். அவர்கள் மூலமாக விண்ணப்பங்கள் தாசில்தார் அலுவலகத்தில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

    மருத்துவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் உங்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
    வேலூர் மாநகரில் 6 மேம்பாலங்களில் மாவட்டத்தின் பெருமை அரசின் திட்டங்களை பறைசாற்றும் ஓவியங்கள் வரையபடுகிறது.
    வேலூர்:

    சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இடையிலான முக்கிய நகரமாக வேலூர் நகரம் இருந்து வருகிறது. 

    வேலூர் மாநகரின் வழியாக தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளதால் அலுமேலுமங்காபுரம், வள்ளலார், சத்துவாச்சாரி, கலெக்டர் அலுவலகம், கிரீன் சர்க்கிள், ரெயில்வே மேம்பாலம், மற்றும் சிறிய மேம்பாலம், சேண்பாக்கம் மற்றும் கொணவட்டம் மேம்பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.

    இந்த மேம்பால பக்கவாட்டு சுவர்களில் எப்போதும் விளம்பர போஸ்டர்கள், அரசியல் கட்சியினரின் பிறந்த நாள், நினைவு நாள் போஸ்டரை அச்சிட்டு வருகின்றனர். அவ்வப்போது போஸ்டர் களை அகற்றினாலும் மீண்டும் அங்கு போஸ்டர் ஒட்டுவது நடந்து கொண்டிருக்கிறது. 

    இதற்கு மாற்று தீர்வாக 6 முக்கிய மேம்பாலங்களின் பக்கவாட்டு சுவர்களில் அழகிய ஓவியங்களை வரைந்து அழகுபடுத்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

    இதற்கான முதல் கட்ட ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் சமீபத்தில் நடைபெற்றது. இதில், பங்கேற்ற அரசு துறைகளின் அதிகாரிகள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் பெயின்ட் நிறுவனத்துடன் இணைந்து ஓவியங்களாக வரைய ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

    இது தொடர்பாக அதிகாரிகள் கூறும்போது, கலெக்டரின் புதிய முயற்சியால் வேலூர் நகரம் புதுப்பொலிவு பெறும். மாவட்டத்தின் பெருமையையும் அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாக சென்றடையவும், யார் மனதையும் புன்படுத்தாத வகையில் இந்த ஓவியங்கள் வரைய வேண்டும் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

    இதற்கான கருத்துருக்களையும் புகைப் படங்களையும் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்படும் பணிகள் தொடங்கும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    வேலூரில் எல்.ஐ.சி. ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    மாவட்ட தலைவர் பழனிராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் தேவராஜ் வரவேற்று பேசினார். பொதுச் செயலாளர் ராமன் அறிமுக உரையாற்றினார். 

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தயாநிதி மாவட்ட செயலாளர் பரசுராமன் கோட்டத் தலைவர் சத்தியமூர்த்தி கோட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் பேசினர். 

    எல்.ஐ.சி. பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கண்டித்து எல்.ஐ.சி. ஊழியர்கள் கோஷமிட்டனர்.
    வேலூர் ஜெயிலில் டி.எஸ்.பி.மனோகரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் இன்று காலை அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் ஜெயில் மற்றும் பெண்கள் தனிச்சிறை உள்ளது. இங்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் உள்பட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    ஜெயிலுக்குள் கைதிகள் கஞ்சா, செல்போன், புகையிலை பொருட்கள், ஆயுதங்கள் போன்றவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கைதிகள் பலர் தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். கடந்த காலங்களில் ஏராளமான செல்போன், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளியே இருந்து ஜெயிலுக்குள் கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் வீசப்படும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில் டி.எஸ்.பி.மனோகரன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் இன்று காலை வேலூர் ஜெயிலில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. 60 பேர் கொண்ட போலீசார் ஆண்கள் ஜெயிலில் காலை 5.30 மணி முதல் சோதனை நடத்தினர். அப்போது 2 மோப்ப நாய்கள் உதவியுடன் கைதிகளின் அறை, கழிவறை பகுதிகள், சமையலறை என வளாகம் முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். 3 மணி நேரம் இந்த சோதனை நடந்தது.

    இதேபோல பெண்கள் ஜெயிலிலும் சோதனை நடத்தினர். 2 ஜெயில்களிலும் நடந்த இந்த அதிரடி சோதனையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் எதுவும் சிக்கவில்லை என போலீசார் தெரிவித்தனர். ஜெயிலில் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    பேரணாம்பட்டு நகரசபையை தலைவராக திமுகவேட்பாளர் பிரேமா வெற்றிவேல் தேர்வு செய்யப்பட்டார்.
    பேரணாம்பட்டு:

    பேரணாம்பட்டு நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இதில் திமுக - 14, காங்கிரஸ் 1, மனித நேய மக்கள் கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - 1 சுயேட்சைகள் - 4 வார்டுகளில் வெற்றிபெற்றனர்.

    இதனைத் தொடர்ந்து இன்று காலை பேரணாம்பட்டு நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது. 

    தேர்தலில் திமுக சார்பில் நகரமன்ற தலைவர் பதவிக்கு பிரேமா வெற்றிவேல், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் தன்வீரா பேகம் ஆகியோர் போட்டியிட்டனர். திமுக சார்பில் போட்டியிட்ட பிரேமா வெற்றிவேல் 17 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்வீரா 4 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
    லாரி அதிபரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் டவுன் புதுப்பேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்பவர் பிரபு சொந்தமாக லாரி வைத்துள்ளார். இவரது மனைவி ஸ்ரீலட்சுமி (வயது 37) இவர்களுக்கு ரூபேஷ் (12), தன்ஷிகாவை (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

    கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தெரிந்தவர்கள் உறவினர்கள் என பலருக்கு வட்டிக்கு பணம் கொடுத்துள்ளனர். பல லட்ச ரூபாய் வட்டிக்கு பணம் கொடுத்த நிலையில் அதற்கான வட்டி பலர் திருப்பித் தராமல் உள்ளனர். சிலர் வாங்கிய பணத்தையும் தராமல் உள்ளனர்.  

    லட்சுமி பணத்தை கொடுத்தவர்களிடம்   திருப்பி கேட்டுள்ளார். பலமுறை கேட்டும் பணம் திருப்பித் தரவில்லை இந்நிலையில் பணத்தை கேட்டு அவர்களிடம் தொடர்ந்து வற்புறுத்தி உள்ளார். அப்போது பணம் வாங்கியவர்கள் லட்சுமியை அவதூறாக பேசியதால் மன உளைச்சலுக்கு ஆளானார். 

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த லட்சுமி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக வெளியூர் சென்றிருந்த அவரது கணவர் பிரபுவிற்கு தகவல் தெரிவித்தனர் இதனை தொடர்ந்து விரைந்து வந்த பிரபு இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்&இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    போலீசார் தற்கொலை செய்து கொண்ட அறையில் சோதனை செய்த போது லட்சுமி தெலுங்கில் நான்கு பக்க கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில் அவர்களிடம் பல லட்ச ரூபாய் கடன் பெற்றவர்கள் பெயர்களை எழுதி வைத்துள்ளார். மேலும் கடனை திருப்பி கேட்டபோது அவர்கள் பணத்தை திருப்பித் தராமல் அவதூறாகப் பேசியது குறித்தும் அதில் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும் தற்கொலைக்கு அவர்கள் தான் காரணம் எனவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் எழுதி இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தெலுங்கில் எழுதிய கடிதத்தை கைப்பற்றி அதனை தமிழ் மொழியாக்கம் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல லட்ச ரூபாய் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்களுக்கு வட்டிக்குக் கொடுத்து விட்டு பணத்தை திருப்பி கேட்ட போது அவதூறாகப் பேசியதால் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுக்க கூடாது என வேலூரில் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
    வேலூர்:

    முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை விட்டு கொடுக்க கூடாது என்று வேலூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேலூர் சத்துவாச்சாரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வளர்ச்சிக்கான பணியில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். வாக்களித்த வார்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பணி அமைய வேண்டும். 

    உக்ரைன் நாட்டின் சிக்கியுள்ள இந்தியவாழ் மக்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. அங்குள்ள மற்ற அனைவரையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீட்க வேண்டும். 

    வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மிக மிக அவசியமான ஒன்றாகும். எந்தநாட்டின் மீதும் போர் தொடுக்க கூடாது என்பதுதான் இந்திய நாட்டின் விருப்பமாகும்.

    தி.மு.க. ஆட்சியில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதனை எதிர்ப்பார்த்த மக்கள் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள். ஆட்சி, அதிகாரம், பண பலத்தால் தி.மு.க. நகர்ப்புற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது மக்களின் தீர்ப்பு என்றாலும் கூட, அவர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்களாக தி.மு.க. செயல்பட வேண்டும்.

    வேலூர் பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதையும், அவற்றை மறைமுகமாக எரிப்பதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். பாதாள சாக்கடைநீர் பாலாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். 

    மேலும் பாதாள சாக்கடை திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்பதை மக்களுக்கு மாநகராட்சி உறுதியளிக்க வேண்டும். வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தமிழக அரசு விவசாயிகளின் நலனை அக்கறையை கருத்தில் கொண்டு கிராமப்புற பகுதிகளில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியோடு செயல்பட வேண்டும். தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க கூடாது. தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இருப்பதால் இந்த விவகாரத்தில் அரசு சுணக்கமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது.

    தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சி அரசியலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. ஆளும், எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் என்று யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஆனால் எதிர்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது விரும்பத்தக்கது அல்ல.

    பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் தான் அவரின் தலைமையில் 2 முறை தொடர்ந்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் படித்த ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
    குடியாத்தத்தில் நகர மன்ற தலைவராக சவுந்தரராஜன் தேர்வு செய்யப்பட்டார்.
    குடியாத்தம்:

    குடியாத் தத்தில் 60 வார்டுகள் உள்ளன. தி.மு.க., அ.தி.மு.க. நகர மன்ற தலைவருக்கு போட்டி நிலவியது. இதில் தி.மு.க. நகர பொறுப் பாளர் எஸ் சவுந்தரராஜன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

    அதிமுக சார்பில் ராணி பாஸ்கர் 11 ஓட்டுகள் பெற்றார். அதிலும் ஒரு ஓட்டு செல்லாததானது.
    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் தேர்தல் நடந்த கூட்டத்திற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி மேயர் தேர்தல் இன்று நடந்தது.

    இதில் கவுன்சிலர்கள் 48 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 7 பேர் முழுமையாக புறக்கணித்தனர். தி.மு.க.வை சேர்ந்த புஷ்பலதா வன்னிய ராஜா 7-வது வார்டில் போட்டியின்றி வெற்றி பெற்றார்.

    இவர் இன்று மேயர் தேர்தல் நடந்தபோது கூட்டத்திற்கு வரவில்லை.

    வேலூர் மேயர் பதவியை பெற புஷ்பலதா கடும் முயற்சி மேற்கொண்டார்.ஆனால் அவருக்கு மேயர் சீட் வழங்கவில்லை.

    நேற்று புஷ்பலதா அவரது கணவர் வன்னியராஜா இருவரும் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்தனர்.

    அப்போது கட்சியில் பல ஆண்டுகளாக உழைத்து வருகிறோம். எங்களுக்கு ஏன் மேயர் பதவி தரவில்லை என கேள்வி எழுப்பினர். இந்த சம்பவம் வேலூர் தி.மு.க.வினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து புஷ்ப லதாவின் கணவர் வன்னிய ராஜா கூறுகையில்:-

    வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மேயர் தேர்தல் நடந்த கூட்டத்திற்கு அனைத்து கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களுக்கு மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் மேயராக அறிவிக்கப்பட்ட சுஜாதா ஆகியோரிடம் இருந்து எந்தவித அழைப்பும் வரவில்லை. அதனால் புஷ்பலதா கூட்டத்தை புறக்கணித்தார் என்றார்.

    இதேபோல தி.மு.க.வை சேர்ந்த 2-வது வார்டு கவுன்சிலர் விமலா இன்று நடந்த மேயர் தேர்தல் நடந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. மேயர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.

    மேயர் தேர்தலை தி.மு.க கவுன்சிலர்கள் புறக்கணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேயர், துணை மேயர் தேர்தலையொட்டி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள்ளது.

    தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஓரிடத்திலும், அ.தி.மு.க.7, சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் பா.ம.க., பா.ஜ.க.தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

    சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கான தேர்தல் நடந்தது. மாநகராட்சி அலுவலகத்திற்குள் கவுன்சிலர்கள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டது.48 கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.

    கூட்டம் ஆரம்பித்ததும் மேயர்பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து மாநகராட்சி கமி‌ஷனர் அசோக்குமார் அறிவித்தார். இதனைத்தொடர்ந்து மேயர் பதவிக்கு தி.மு.க.வை சேர்ந்த சுஜாதா மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் மேயராக சுஜாதா போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது.

    மேயர், துணை மேயர் தேர்தலையொட்டி வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

    வேலூர் மாநகராட்சியில் நாளை மேயர், துணை மேயர் போட்டியின்றி தேர்ந்தெடுக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 44 வார்டுகளில் தி.மு.க. வெற்றிபெற்று தனிப் பெரும்பான் மையுடன் கைப்பற்றியுள்ளது. 

    தி.மு.க.கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஓரிடத்திலும், அ.தி.மு.க.7, சுயேச்சை வேட்பாளர்கள் 6 இடங்களிலும் பா.ம.க., பா.ஜ.க.தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர். மாநகராட்சி அலுவலகம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. மேயர் மற்றும் துணை மேயர் அறைகள் தயார் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் சுயேச்சையாக நின்று வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் 3 பேர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 6-வது வார்டில் சுயேட்சையாக நின்று வெற்றி பெற்ற சீனிவாசன் தி.மு.க.வில் இணைந்தார்.

    இதேபோல 19-வது வார்டில் வெற்றிபெற்ற சுயேச்சை வேட்பாளர் மாலதி 48&வது வார்டில் வெற்றிபெற்ற சுயேச்சை கவுன்சிலர் கோகிலா ஆகியோர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

    இதன்மூலம் வேலூர் மாநகராட்சியில் தி.மு.க.வின் பலம் 48 ஆக உயர்ந்துள்ளது. நாளை காலை 9.30 மணிக்கு மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. கூட்டம் ஆரம்பித்ததும் மேயர்பதவி பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பார். இதனைத்தொடர்ந்து மேயர் வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்வார்.

    தி.மு.க. தனிப்பெரும் பான்மையுடன் உள்ளதால் திமுக வேட்பாளர்  போட்டியின்றி தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.

    நாளை மேயர் பதவிக் கான தேர்தல் நடைபெற உள்ளதால் வேலூர் மாநகராட்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    கூட்டரங்கில் மாநகராட்சி கமிஷனர் தவிர வேறு யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. கவுன்சிலர்கள் எந்தவிதமான எலக்ட்ரானிக் பொருட்களும் கையில் வைத்திருக்கக் கூடாது. இதனை தொடர்ந்து மதியம் 2.30 மணிக்கு துணை மேயர் பதவிக்கான தேர்தல் நடக்கிறது. மேயர் பதவிக்கான தேர்தல் போலவே துணை மேயர் பதவிக்கான தேர்தலும் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.
    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 26 மாணவ, மாணவிகள் உக்ரைன் நாட்டில் தவித்து வருகின்றனர்.
    வேலூர்:

    உக்ரைன் ரஷியா இடையே கடும்போர் நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் கீவ் உள்ளிட்ட நகரங்களில் இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர்.

    இந்திய மாணவர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்காக இந்திய தூதரகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல்களைப் பெற்று அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வருகிறது.

    வேலூர் மாணவி தீபா உள்பட 40 பேர் நேற்று முன்தினம் கார்கிவ் அருகிலுள்ள போல்டோவாவில் இருந்து ஹங்கேரி அழைத்து வரப்பட்டு அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நேற்று அவர்களை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் இன்று நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் அங்கிருந்து விமானங்கள் எதுவும் புறப்படவில்லை. வேலூர் மாணவி தீபா உள்ளிட்ட 40 பேர் அங்கு காத்துக் கிடக்கின்றனர். அவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது இதனால் அவர்கள் நாடு திரும்ப இன்னும் 2 நாட்கள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளனர்.

    வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேர் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 26 மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் தவித்து வருவது தெரியவந்துள்ளது.

    அவர்களிடம் தொடர்ந்து செல்போன் மூலம் பேசி வருகின்றனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளனர்.

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
    ×