என் மலர்
வேலூர்
வேலூரில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
வேலூர்:
வேலூர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் கோவையை சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த வளாகத் தேர்வில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையை சேர்ந்த 92 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு தேர்வு நடந்தது. இதில் 46 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
வேலூர் மாவட்டத்தில் உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
குடியாத்தம் தாழையாத்தம்பஜார் பச்சையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தாழையாத்தம் பஜார் கவுண்டன்யா மகாநதி ஆற்றங்கரை பச்சையம்மன் கோவில் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தோம்.நாங்கள் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம்.
தற்போது எங்கள் வீடுகளை ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துவிட்டார்கள். இதனால் எங்களுக்கு வீடு இல்லை. வாடகை வீடுகளில் தவித்து வருகிறோம்.
எனவே எங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி வாழ்வதற்கு வழிவகை செய்ய வேண்டும் இவ்வாறு கூறியுள்ளனர்.
தேசிய உழவர் கூட்டமைப்பு சார்பில் அளித்த மனுவில் வேலூர் மாவட்டம் முழுவதும் உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. யூரியா ரூ.600 டி.ஏ.பி. 1800 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர்.
அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதியில் உரம் யூரியா ரூ.500 முதல் ரூ.700 வரை அதிகமாக விற்பனை செய்கிறார்கள்.
இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.உரம் விலை உயர்வை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனர்.
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் ரூ.4 லட்சத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கிராம மக்களின் பயன்பாட்டிற்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.பி.துளசிராமுடு தலைமை தாங்கினார்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிட்டிபத்மநாபன், வக்கீல் டி.ஜி.பிரபாகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் பிரகாசம், ஊராட்சி மன்ற துணை தலைவர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மூத்த வழக்கறிஞர் டி.எம். விஜயராகவலு கலந்து கொண்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் முன்னாள் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தி.மு.க.வில் இணைந்தார்.
குடியாத்தம்:
குடியாத்தம் அடுத்த சேம்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேலூர் எம்.பி. கதிர்ஆனந்த் முன்னிலையில் குடியாத்தம் முன்னாள் ஒன்றிய அதிமுக செயலாளர் வக்கீல் எஸ்.கோதண்டன் திமுகவில் இணைந்தார்.
வக்கீல் எஸ்.கோதண்டன் 11 ஆண்டுகள் குடியாத்தம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் கடன் தொல்லையால் பிஸ்கட் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்:
வேலூர் கொசப்பேட்டை லால்சிங் கும்மந்தான் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 30). பிஸ்கட் வியாபாரி.இவரது மனைவி சொர்ணமால்யா. கார்த்திகேயன் சொர்ணமால்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பிஸ்கட் சரிவர விற்பனையாகவில்லை. இதனால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது.
கார்த்திகேயன் நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களிடம் ரூ.20 லட்சம் கடன் வாங்கியுள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பித் தருமாறு கார்த்திகேயனுக்கு நெருக்கடி கொடுத்தனர்.
பணத்தை திருப்பி தர முடியாததால் விரக்தியில் இருந்த கார்த்திகேயன் நேற்று வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தூங்கினார்.
இதனைக்கண்ட அவரது மனைவி சொர்ணமால்யா கதறி துடித்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கார்த்திகேயனை மீட்டு வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு கார்த்திகேயனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா ? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம் பரதராமி அருகே தீக்காயம் அடைந்த அச்சக ஊழியர் இறப்பு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கலவகுண்டா கி நேரு நகரைச் சேர்ந்தவர் துரை பாபு வயது 40,இவர் திருப்பதியில் காலண்டர் வியாபாரம் செய்து வந்தார் மேலும் அச்சத்திலும் வேலை செய்து வந்துள்ளார்.
துரைபாபு குடியாத்தம் அடுத்த பரதராமி வீ.டி.பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாமுண்டீஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு துரைபாபு தனது மாமியார் வீடான வீ.டி.பாளையத்திற்கு வந்து தங்கி இருந்தபோது தனது மனைவியின் தங்கையுடன் பேசிய அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த வாலிபரை கண்டித்துள்ளார்.
அப்போது ஏற்பட்ட தகராறில் துரைபாபுவிற்கு சரமாரியாக கத்தி குத்து விழுந்தது பின்னர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இந்த சம்பவம் தொடர்பாக 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி இரவு தனது மாமியார் வீடான வீ.டி.பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது யாரோ சிலர் பின்பக்கமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து விட்டதாக கூறி தீக்காயங்களுடன் அலறி உள்ளார்.
அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையிலும் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக திருப்பதியில் உள்ள ரூயா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி மேற்பார்வையில் பரதராமி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டு இறந்துள்ள துரைபாபுவை முன்விரோதம் காரணமாக யாராவது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து விட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் 9-ந்தேதி ஏலம்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர்கள் மற்றும் 3 சக்கர வாகனங்கள் வரும் 9-ந்தேதி காலை 9 மணி முதல் வேலூர் மாவட்ட ஆயுதப்படை நேதாஜி மைதானத்தில் பொது ஏலம் நடைபெறுகிறது.
மேலும் , வாகனத்தை ஏலம் எடுக்க பார்வையிடுவோர் 100 ரூபாய் நுழைவு கட்டணம் செலுத்திய பின் ஏலம் கேட்க அனுமதிக்கப்படுவர்.
மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஏல தொகையுடன் பைக்குகளுக்கு 12 சதவீதமும், 4 சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும்.
மேலும் குற்ற வழக்குகளில் சம்பந்தப் பட்ட வாகனங்கள் அனைத்துக்கும் 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து செலுத்த வேண்டும். இதற்கான ரசீது வழங்கப்படும் .
ஏலம் எடுத்த வாகனத்துக்கு உண்டான ரசீதே அந்த வாகனத் தின் உரிமை ஆவணமாகும் என எஸ்பி ராஜேஷ் கண்ணன் தெரிவித்துள்ளார்.
10 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் தொரப்பாடியை சேர்ந்த 36 வயது ஆண் ஒருவருக்கு 10 வயதில் மகள் உள்ளார்.
கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். தாய் வீட்டில் மனைவி வசித்து வருகிறார். சிறுமி தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி பூப்பெய்தினார். சிறுமியை பார்க்க வந்த அவரது பாட்டி ஆண்களிடம் பழக கூடாது, ஆண்கள் தொட்டு பேச அனுமதிக்க கூடாது என அறிவுரை வழங்கினார்.
அப்போது சிறுமி தன்னுடைய தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக பாட்டியிடம் தெரிவித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பாட்டி தன்னுடைய மகளுக்கு இந்த தகவலை கூறினார்.
இதுகுறித்து அவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஷாகின் போக்சோவில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சிறுமியின் தந்தையை தேடி வருகின்றார்.
தந்தையே பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சத்துவாச்சாரி மந்தைவெளியில் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடை பொதுமக்கள் போராட்டத்தால் மூடப்பட்டது
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி 2--வது மண்டலத்துக்கு உட்பட்ட மந்தைவெளி தெரு வழியாக பாலாற்றுக்கு செல்ல வழி உள்ளது.
இந்த பகுதியில் நேற்று புதிதாக டாஸ்மாக் மதுபான கடை திறக்கப்பட்டது. இதனால் அருகில் உள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்த மதுபான கடையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.
பள்ளி மாணவர்கள் நலன் கருதியும் சுற்றியுள்ள 1500 குடும்பங்கள் நலன் கருதியும் மதுபானக்கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
புதிதாக திறக்கப்பட்ட மதுபானக்கடைகள் ஆற்றைக் கடந்து காங்கேயநல்லூர் பிரம்மபுரம் பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் பெரிதும் சிரமப்படுவார்கள்.
இதனால் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வலியுறுத்தி அதே பகுதியைச் சேர்ந்த பெண்கள் மதுபான கடையை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கருணாகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களை சமாதானம் செய்தனர். மேலும் அந்த கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
இதையடுத்து அந்த கடை தற்காலிகமாக மூடப்பட்டது. பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
போலீசாருக்கு ஒழுக்கம் மிக முக்கியம் என டி.ஐ.ஜி பேசினார்.
வேலூர்:
வேலூர் சரக காவல்துறை சார்பில் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு காக்கி பூக்களின் திருவிழா இன்று நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜேஷ் கண்ணன் (வேலூர்), தீபா சத்யன் (ராணிப்பேட்டை), பாலகிருஷ்ணன் (திருப்பத்தூர்), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர்.
பெண் போலீசாருக்கு டி.ஐ.ஜி மரக்கன்றுகள் வழங்கி பேசியதாவது:-
போலீசாருக்கு ஒழுக்கம் மிக முக்கியம்.ஒழுக்கமாக இருந்தால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
போலீசார் எப்போதும் கலர் புல்லாக இருக்க வேண்டும். தங்கள் பணியை திறம்பட செய்ய வேண்டும். இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் கலந்து கொண்டனர்.
மேலும் பெண் போலீசார் பாடலுக்கு ஏற்றவாறு நடனமாடினர். அவருடன் இணைந்து டி.ஐ.ஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் ஆகியோரும் உற்சாகமாக நடனமாடி அசத்தினர்.
காட்பாடி அருகே பஸ்சில் கடத்தி வந்த 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
வேலூர்:
காட்பாடியில் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தமிழகத்துக்கு கடத்தி வரப்படுகின்றன. இதை தடுக்க அடிக்கடி ஆந்திர எல்லையோரம் உள்ள சோதனைச் சாவடிகளில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டி.எஸ்.பி.இளங்கோவன் தலைமையில் காட்பாடி கிறிஸ்டியான் பேட்டை சோதனைச் சாவடியில் வாகனங்களை மறித்து சோதனையிட்டனர்.
ஆந்திராவில் இருந்து வந்த பஸ்களிலும் சோதனை நடத்தினர்.அப்போது சித்தூரை சேர்ந்த கஜபதி (வயது 50) என்பவர் 5 கிலோ கஞ்சா பஸ்சில் கடத்தி வந்தார். அவரை கைது செய்தனர்.
மேலும் அவர் கடத்தி வந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். எங்கிருந்து யாருக்கு கஞ்சா கடத்தி வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் குடிசை வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
வேலூர்:
வேலூர் பள்ளிபாளையம் கே.கே. நகரை சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டின் அருகே உள்ள குடிசை வீடு ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீட்டில் அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி கோர்ட்டு ஊழியர்கள் மற்றும் போலீசார் இன்று குடிசை வீட்டை அகற்ற சென்றனர். அவர்களிடம் வீட்டின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் உட்பட பலர் வேலூர் பெங்களூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
வீட்டை இடித்து அப்புறப்படுத்த கூடாது என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






