என் மலர்
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சார்பில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அதன் தலைவர் காசிநாதன் தலைமை தாங்கினார். பரசுராமன், பழனி, முரளி உள்பட 20&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு சுழற்சிமுறை பணியிடமாறுதல் கொள்கையை உருவாக்கி அமலாக்க வேண்டும். முறைகேடாக வழங்கப்பட்ட பணியிட மாறுதல் ஆணையை ரத்து செய்ய வேண்டும்.
கொரோனா காலத்தில் ஏற்பட்ட செலவின தொகை முழுமையாக வழங்கிட வேண்டும். ஐகோர்ட்டு உத்தரவை மேல்முறையீடு செய்யாமல் சட்ட திருத்தம் செய்யாமலும் மதுக்கூடங்களை மூடிவிட வேண்டும்.
டாஸ்மாக் கடை நிர்வாகத்தில் தலையிடும் மதுகூட உரிமையாளர்களின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
வேலூரில் இரவில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டுள்ள பைக்குகள் திருடு போவதால் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் சுற்றியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் வீடுகள் முன்பு நிறுத்தப்பட்டுள்ள பைக்கை திருடுவது மற்றும் பெட்ரோல் திருடுவது அடிக்கடி அரங்கேறி வருகிறது.
வேலூர் சத்துவாச்சாரி, காட்பாடி கொணவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பைக் திருட்டு அதிகளவில் நடக்கிறது. இரவு நேரங்களில் மர்ம கும்பல் நோட்டமிட்டு வீடு மற்றும் கடைகளின் முன்பு நிறுத்தி வைத்திருக்கும் பைக்குகளை லாவகமாக திருடி செல்கின்றனர்.
இந்தத் திருட்டில் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் ஈடுபடுகின்றனர். இதுமட்டுமின்றி வீடுகளை நோட்டமிட்டு கொள்ளை அடிப்பது, நடந்து செல்பவர்களிடம் வழிப்பறி செய்வது, மிரட்டி பணம் பறிப்பது போன்ற பல்வேறு குற்றச்செயல்களில் சிறுவர்கள் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்க போலீசார் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் இரவில் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர் ரேசன் கடைகளில் முறைகேடு நடந்தால் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரி பேசினார்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினவிழா இன்று நடந்தது.
வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் வரவேற்று பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி கலந்து கொண்டு நுகர்வோர் தின போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். மேலும் நுகர்வோர் விழிப்புணர்வு கையேட்டை வெளியிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
பொருட்கள் வாங்கும்போது வியாபாரம் மூலம் ஏமாற்றப்படுகிறோம். இதனை தடுக்க நுகர்வோர் அமைப்பு தொடங்கப்பட்டது. நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கடந்த 2019-ம் ஆண்டு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் தரம் சரியில்லை என்றால் அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். விலையை உயர்த்தி விற்பனை செய்வது, எடையை குறைத்து தருவது, பொருட்களில் கலப்படம் செய்வது என பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகின்றனர்.
இதனை கண்காணிக்க அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பல்வேறு துறைகளில் பொதுமக்கள் சேவை சரியாக இல்லையெனில் புகார் அளிக்கலாம்.இது தொடர்பாக பள்ளி அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை முறையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் வியாபாரத்தில் ஏமாற்றப்படுவதை தடுக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் வியாபார நிறுவனங்களில் பொது மக்கள் ஏமாற்ற பட்டாலோ அல்லது ரேஷன் கடைகளில் ஏதாவது முறைகேடு நடந்தால் பொதுமக்கள் 9952314993,9445000184 என்ற எண்களில் புகார் அளிக்கலாம்.
அல்லது குறுந்தகவல் அனுப்பலாம் அதன்பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வழங்கல் அலுவலர் காமராஜ் கூறினார்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நடந்த மகளிர் தின விழாவில் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கண்ணீர் விட்டு அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலர் எம்.மாறன்பாபு தலைமை தாங்கினார். டாக்டர்கள் டி.ஆர்.அருளரசி, ஆர்.ஹேமலதா, மாலதி செல்வம் உள்ளிட்டோர் மருத்துவத் துறையில் பெண்களுக்கான சிகிச்சை முறைகளும் பெண்களுக்கான மருத்துவ வசதிகள் குறித்து பேசினர்.
நகர்மன்ற உறுப்பினர் எம்.சுமதி, மருந்து ஆய்வாளர் மகாலட்சுமி, இன்னர்வீல் சங்க நிர்வாகி விஜயலட்சுமிராமமூர்த்தி, பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு சுவாதி, திருவள்ளுவர் தொடக் கப்பள்ளி தலைமையாசிரியர் மலர்கொடி ஆகியோர் பெண்களின் பெருமைகள் குறித்து விரிவாக பேசினர்.
குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயிற்சி முடித்த மருந்தாளு னர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அப்போது அமலுவிஜயன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என கூறும் போது திடீரென தேம்பித் தேம்பி அழுதார்.
அப்போது அவர் எனக்கு 2 மகள்கள் மூத்த மகள் பிறந்தபோது 3 நாட்கள் அழுது கொண்டே இருந்தேன் பெண்ணாய் பிறந்தபோது எவ்வளவு துன்பம் அனுபவித்த தனக்கும் ஒரு பெண் பிறந்து விட்டாலே என கண்ணீர் விட்டேன்.
பல வகையிலும் எனக்கு துணையாக எனது தாயார் இருந்தார். சில மாதங்களுக்கு முன் என் தாயார் மறைந்துவிட்டார். தாயார் மறைந்தாலும் தாயார் ஸ்தானத்திலிருந்து அனைத்து சேவைகளும் எனது மகள்கள் செய்கின்றனர் என்பதை பெருமையுடன் கூறிக் கொள்கிறேன்.
பெண்ணாக பிறந்தால் துயரங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனாலும் பெண்கள் இல்லாத துறையே இல்லை. அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள் என பேசினார். எம்.எல்.ஏ. நிகழ்ச்சியில் அழுத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் மருத்துவர்கள், செவிலியர்கள், பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் மருந்தாளுநர் டி.ரவி நன்றி கூறினார்.
வேலூரில் புகார் வாங்காமல் அலைக்கழித்த பெண் போலீஸ் ஏட்டு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
வேலூர்:
வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் சசி. இவர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் புகாரை முறையாக வாங்காமல் அலைக்கழித்தாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வேலூரை சேர்ந்த ஒருவர் அவரது 10 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாய் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தார். அவரிடம் புகாரை வாங்காமல் ஏட்டு சசி அலைக் கழித்தார்.
உயரதிகாரிகளின் தலையீட்டுக்கு பிறகு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது செய்யப்பட்டார்.
புகார் மனுவை வாங்காமல் அலைக்கழித்த பெண் போலீஸ் ஏட்டு மீது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் விசாரணை நடத்தினார். அதில் ஏட்டு சசி புகார் கொடுக்க வருபவர்களை தொடர்ந்து அலைக்கழித்தது தெரியவந்தது.
இதையடுத்து ஏட்டு சசியை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் உத்தரவிட்டார்.
வேலூர்-வாலாஜாவில் ரெயிலில் அடிபட்டு 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
வேலூர்:
வேலூர் கண்டோன் மெண்ட் பென்னாத்தூர் ரெயில் நிலையத்திற்கு இடையே நேற்று சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார்.
அவர் யார் என்பது தெரியவில்லை. தண்டவாளத்தை குறுக்கே கடந்தபோது திருப்பதி மார்க்கமாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு தலையின் பின்புறம் மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார்.
இறந்தவர் வெள்ளை நிற வேட்டியும், வெள்ளை நிற சட்டையும் அணிந்திருந்தார். இதேபோல் வாலாஜா - முகுந்தராயபுரம் ரெயில் நிலையத்திற்கு இடையே நேற்று சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரெயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்தார்.
காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா உத்தரவின் பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முரளி மனோகரன் மற்றும் போலீசார் 2 பேரின் உடல்களை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இவர்கள் பற்றிய தகவல் தெரிந்தால் காட்பாடி ரெயில்வே போலீஸ் நிலைய தொலைபேசி எண் 9498101961 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.
குடியாத்தத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
குடியாத்தம்:
குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 426 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு வட்டார அளவில் 2 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கும் முகாம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமிற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ். சாந்தி தலைமை தாங்கினார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கதிரவன், சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் கே.எஸ்.யுவராஜ் வரவேற்றார்.
2 நாள் பயிற்சி முகாமை குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ. சத்யானந்தம் தொடங்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சக்திதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வேலூர் நேதாஜி மைதானத்தில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் பைக் ஆட்டோ கார் உள்ளிட்ட 369 வாகனங்கள் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டது.வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களிடம் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
ஏ.டி.எஸ்.பி.சுந்தரமூர்த்தி மேற்பார்வையில் வாகனங்கள் ஏலம் நடந்தது.
மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து வசூலித்தனர்.
மேலும் வழக்குகளில் சம்மந்தப் பட்டுள்ள வாகனங்கள் அனைத்திற்கும் ரசீது வழங்கினர். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் என போலீசார் தெரிவித்தனர்.
வேலூர் பேக்கரி பெண் ஊழியரிடம் செயின் பறித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர்:
வேலூர் அருகே உள்ள அரியூர் தென்றல் நகரை சேர்ந்தவர் சுலோச்சனா (வயது 52). வேலூர் காட்பாடி ரோட்டில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
இவர் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டிற்கு சென்றார். வீட்டு உரிமையாளரிடம் வாடகை கொடுத்து விட்டு தென்றல் நகரில் உள்ள தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள்2 பேர் முகத்தில் கைக்குட்டை கட்டியபடி பைக்கில் பின்தொடர்ந்து வந்தனர்.
திடீரென அவர்கள் சுலோச்சனா அணிந்திருந்த 2.50 பவுன் தங்க செயினை பறித்தனர். இதனால் திடுக்கிட்ட சுலோச்சனா கத்தி கூச்சலிட்டார்.
அதற்குள் மர்ம நபர்கள் அணைக்கட்டு சாலை வழியாக தப்பி சென்று விட்டனர். இது குறித்து சுலோச்சனா அரியூர் போலீசில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து செயின் பறித்து சென்ற வாலிபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள பெண்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
மோர்தானா அணை அருகே சுற்றும் ஒற்றை யானையால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் வனச் சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இருப்பினும் அந்த யானைகள் கூட்டம் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக எல்லையோரம் உள்ள வனப்பகுதிக்குள் அருகே உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.
இருப்பினும் வனத்துறையினர் விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகள் கூட்டத்தை அடர்ந்த ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.
நேற்று விடியற்காலை 2 யானைகள் தனகொடண்டபல்லி கிராமத்தில் உள்ள வெங்கடேசன், சின்னப்பன், சீனிவாசன் உள்ளிட்டோர் விளை நிலங்களுக்குள் புகுந்து ஏராளமான நெற்பயிரையும் மா மரங்களை சேதப்படுத்தியது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு தலைமையில் வனவர் மாசிலாமணி உள்ளிட்ட வனத்துறையினர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி யடித்தனர்.
குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது. அதன் சற்று தொலைவில் காவல்துறையின் சோதனை சாவடி உள்ளது. இதன் அருகே யானைகள் வந்து பிளிறியபடி இருந்தது. இதனால் சோதனை சாவடியில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர்.
மேலும் கிராமத்திற்கு அருகே யானைகள் முகாமிட்டு தொடர்ந்து பிளிறியபடி இருந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
கடந்த சில தினங்களாக மாலை 6 மணி முதலே ஒற்றை யானை ஒன்று மோர்தானா கிராமத்திற்கு செல்லும் சாலையில் மூங்கில் புதர் அருகே முகாமிட்டு சுற்றி வருவதாகவும் சாலையின் குறுக்கே பல நிமிடங்கள் நின்று பிளிறியபடி இருக்கிறது. இதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே வனத்துறையினர் மோர்தானா கிராமத்திற்குச் செல்லும் வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லுமாறும் தனியாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
பைக் விபத்தில் வாலிபர் இறந்ததை தொடர்ந்து பரதராமி ஆரம்பசுகாதார நிலையத்தில் கூடுதல் டாக்டர்களை நியமிக்க கோரி அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி பெருமாள் பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் இவரது மகன் பார்த்திபன் (வயது 23).
நேற்று மாலையில் பார்த்திபன் மோட்டார் சைக்கிளில் பரதராமி அடுத்த பெருமாள் பள்ளி இந்திரா நகர் அருகே வந்துகொண்டிருந்தார்.
அப்போது பிளஸ்&2 மாணவர் ஒருவர் எதிரே பைக்கில் வந்துள்ளார். எதிர்பாராதவிதமாக 2 பைக்குகளும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது. இதில் பார்த்திபன் படுகாயமடைந்தார். பிளஸ்&2 மாணவரும் காயமடைந்தார்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து ஆம்புலன்சுக்கு போன் செய்துள்ளனர். நேரம் ஆகியும் ஆம்புலன்ஸ் வராததால் உடனடியாக பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆட்டோவில் கொண்டு வந்தனர்.
அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் இல்லை அங்கிருந்த செவிலியர்கள் பரிசோதனை செய்தபோது பார்த்திபன் இறந்துவிட்டதாக கூறி உள்ளனர்.
இதனையடுத்து பார்த்திபனின் உறவினர்கள், கிராம பொதுமக்கள் ஆகியோர் பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மதியத்திற்கு மேல் டாக்டர் இருப்பதில்லை என்றும் எல்லைப்பகுதியில் உள்ள பரதராமி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டக்டர்கள் வேண்டும் எனவும் உடனடியாக மருத்துவர்களை நியமிக்க வலியுறுத்தி பரதராமி மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி, சப்&இன்ஸ்பெக்டர் கோபால கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் விமல் குமார், கிராம நிர்வாக அலுவலர் சசிக்குமார் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுசம்பந்தமாக உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று கூடுதலாக டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதனையடுத்து குடியாத்தம்- சித்தூர் சாலையில் பரதராமி பகுதியில் நடைபெற்ற சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பரதராமி சுற்றுப்புற கிராம பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் சிகிச்சைபெற பரதராமி ஆரம்ப சுகாதார நிலையம் மட்டுமே உள்ளது. அதனை தவிர்த்து கல்லப்பாடியில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அதனைத் தவிர்த்து மருத்துவத்திற்கு குடியாத்தம் நகருக்கு வரும் அவலநிலை உள்ளது.
இதனால் பரதராமியிலிருந்து குடியாத்தித்திற்கு வர வாகன வசதிகள் மிகவும் குறைவு 2 சக்கர வாகனத்தில் வர குறைந்தபட்சம் சுமார் 45 நிமிடம் ஆகும். உடனடியாக கூடுதல் டாக்டர்களை நியமித்தது விபத்து நடந்த பகுதிக்கு உடனடியாக ஆம்புலன்ஸ் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
விபத்து தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வள்ளிமலையில் அரசு கல்லூரி, காட்பாடி தொகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்க இடம் தேர்வு செய்ய அமைச்சர் துரைமுருகன் நேரில் ஆய்வு செய்தார்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட வள்ளிமலை சுப்ரமணியசாமி கோவில் மலை அடிவாரத்தில் அரசுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் அரசு கலைக்கல்லூரி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த இடத்தை அமைச்சர் துரைமுருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அந்த உள்ள அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடங்களை ஆய்வு செய்தார்.
இந்த பகுதியில் கல்லூரி அமைக்க போதுமான இடம் உள்ளதா என அமைச்சர் துரைமுருகன் ஆலோசனை நடத்தினார். இதனைத்தொடர்ந்து மகிமண்டலம் ஊராட்சி குண்டலூர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டார்.
தாதிரெட்டி பள்ளியில் 250 ஏக்கரில் கனிமவள தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறுகையில்:-
வேலூர் மாவட்டத்தில் 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைய உள்ளன. இதில் காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 10 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்ய போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.






