என் மலர்
வேலூர்
வேலூர் மாவட்டத்தில் 4.30 லட்சம் பேருக்கு குடற்புழு மாத்திரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
வேலூர்:
மத்திய அரசின் தேசிய ஊரக சுகாதாரத்துறை சார்பில் ஆண்டு தோறும் தேசிய குடற்புழு ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் 1 முதல் 5 வயது குழந்தைகளுக்கும், அரசு மற்றும் அரசு நிதியுதவி, தனியார் பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 19 வயதுள்ள அனைவருக்கும் மற்றும் 20 வயது முதல் 30 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கும் குடற்புழு நீக்க மாத்திரை அல்பெண்டசோல் வழங்கப்படும்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணி வருகிற திங்கட்கிழமை தொடங்குகிறது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு முழுமையாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர் சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ரூ.3.91 கோடி நில இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.
வேலூர்:
வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. இதில் விபத்து இழப்பீடு, நில இழப்பீடு வழக்குகள் என 11 கோர்ட்டுகளில் 6 ஆயிரம் வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான வசந்தா லீலா தலைமை தாங்கினார்.
ஆற்காடு அடுத்த காவனூரை சேர்ந்த இளவழகன் ஆட்டோ மோதி காயம் அடைந்தார். அவருக்கு இழப்பீடு தொகையாக ரூ.4 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி வசந்த லீலா வழங்கினார்.
இதேபோல் திருப்பத்தூர் மாவட்டம் பாச்சல் அருகே போலீஸ் குடியிருப்பு அமைப்பதற்கும், ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கும் சுமார் 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.
நிலத்தின் உரிமையாளர் களுக்கு உரிய தொகை வழங்கவில்லை என 100-க்கும் மேற்பட்டோர் மேல்முறையீடு வழக்கில் ரூ.3.91 கோடி இழப்பீட்டுத் தொகை இன்று வழங்கப்பட்டது.
குடியாத்தத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினரின் கணவர் பெரியார் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மேல்ஆலத்தூரை சேர்ந்தவர் மைனுத்தின் (வயது 37). இவர் குடியாத்தம் சித்தூர் கேட் பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவரது மனைவி ரேஷ்மா கூடநகரம் ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.
கூடநகரம் ஊராட்சி 8&வது வார்டு பகுதியில் குடிநீர் பிரச்சினைக்காக மைனுத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவரிடம் மனு அளித்ததாகவும் அது சம்பந்தமாக பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்து விசாரணை நடைபெற்று உள்ளது.
மைனுத்தின் இன்று காலை குடியாத்தம் அர்ஜுன முதலி தெருவில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குடிநீர் பிரச்சினைக்காக மனு அளித்து போராடும் தன்னை மிரட்டுவதாகவும் உரிய நடவடிக்கை இல்லை எனக் கூறினார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் யுவராஜ், அரசியல் கட்சி பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அவர் போராட்டத்தை கைவிட மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து போலீசார் மைனுத்தினை குண்டுக்கட்டாக போலீஸ் வாகனத்தில் ஏற்றி குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அப்போதும் அவர் தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி வற்புறுத்தி வந்தார்.
இதனையடுத்து குடியாத்தம் நகராட்சி முன்னாள் நகரமன்ற உறுப்பினர் இஸ்மாயில், வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி, இன்ஸ்பெக்டர் லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் குமரன் உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மருத்துவக் கல்லூரி முதல்வர் பேசினார்.
வேலூர்:
உலக கண் நீர்அழுத்த நோய் விழிப்புணர்வு வார விழா வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது.
கல்லூரி முதல்வர்செல்வி தொடக்கி வைத்து பேசியதாவது:-
கண் நீர் அழுத்த நோய் பல வகைப்படும். இவற்றில் திறந்த கோண வகை கண் அழுத்த நோய், குறுகிய கோண வகை கண் அழுத்த நோய் ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை கண்ணில் சுரக்கும் நீர் வெளியேறும் பாதையில் சல்லடை போன்ற அமைப்பில் இருக்கும். இந்த சல்லடையில் அடைப்பு ஏற்பட்டால் உருவாவது குறுகிய கோண வகை கண் அழுத்த நோயாகும்.
திறந்த கோண வகை கண் அழுத்த நோயில் இந்த சல்லடை சுருங்கி காணப்படும். இந்த வகையில் முன்அறிகுறிகள் ஏதுமின்றி பார்வையிழப்பு ஏற்படும். இவற்றால் கண்அழுத்தம் அதிகமாகி கண்பார்வை நரம்புக்கான ரத்த ஓட்டம் குறுகி மெதுவாக பார்வை இழப்பை ஏற்படுத்தும்.
இந்தியாவில் நூறு பேருக்கு இருவர் கண்நீர் அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். பரம்பரையாக கண் நீர் அழுத்த நோயால் இருக்கும் குடும்பத்தினர், 40 வயதை கடந்தவர்கள், கண்ணில் அடிபட்டவர்கள், நீண்ட நாள்களாக கண்ணுக்கு மருந்து உபயோகிப்பவர்கள், சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை கண் நீர்அழுத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.
கண் நீர் அழுத்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய தேவையான ஓசிடி, கண் நரம்பியல் ஊடு கதிர்வீச்சு சாதனங்கள் வேலூர் அரசு மருத்துவமனையிலேயே உள்ளன. இந்த சிகிச்சை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் அனைவருக்கும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் ரதிதிலகம், துணை முதல்வர் கவுரிவெலிங்கட்லா, குடியிருப்பு மருத்துவ அலுவலர் சி.இன்பராஜ், துறைத் தலைவர் அசோக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனா.
அலமேலு மங்காபுரத்தில் பூங்கா நிலத்தை பொதுமக்கள் மீட்டனர்.
வேலூர்:
வேலூர் அலமேலு மங்காபுரம் எம்.ஜி.பி. நகர் குடியிருப்பு பகுதியில் 86 சென்ட் பூங்கா நிலம் உள்ளது.இதனை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட ஏற்பாடு செய்துள்ளார்.
இதனை அறிந்த அப்பகுதி மக்கள் இன்று காலை பூங்கா நிலத்தில் ஆக்கிரமித்து கொட்டப்பட்டிருந்த மணலை பொக்லைன் எந்திரம் வரவழைத்து அகற்றினர்.
இந்த இடம் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்டது. நீண்ட நாட்களாக தனியார் ஒருவர் ஆக்கிரமித்து வருகிறார்.
தொடர்ந்து ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து பூங்கா நிலத்தை மீட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வருகிற 22-ந் தேதி தமிழகம் முழுவதும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது.
வேலூர்:
இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிமாநில அலுவலகத்தில் நடந்தது.
தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி 22-ந்தேதி மாநிலம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப் பின் சார்பில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்திட தீர்மானிக்கப்பட்டது.
வேலூர் சர்வீஸ் சாலையில் லாரியில் இருந்த கலவை எந்திரம் கழன்று ஆட்டோ மீது விழுந்ததில் 2 பேர் காயமடைந்தனர்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் நோக்கி சிமெண்ட் ஜல்லி கலவை எந்திரம் பொருத்தப்பட்ட லாரி ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் வந்தது.
சென்னை சில்க்ஸ் ஜவுளி கடை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலையில் லாரி வேகமாக இறங்கியது.
அப்போது லாரியில் பொருத்தப்பட்டிருந்த ஜல்லி கலவை எந்திரம் தனியாக கழன்று சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்த ஆட்டோவின் மீது விழுந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ முழுவதும் நொறுங்கியது. ஆட்டோவில் இருந்த பயணி ஒருவரும், ஆட்டோ டிரைவரும் காயமடைந்தனர். வேலூர் வடக்கு போலீசார் அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்தால் சத்துவாச்சாரியில் இருந்து வேலூர் புதிய பஸ் நிலையம் செல்லும் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. லாரியில் இருந்து கழன்று விழுந்த எந்திரம் மற்றும் ஆட்டோவை அங்கிருந்து அப்புறப்படுத்திய பிறகு போக்குவரத்து சீரானது.
சத்துவாச்சாரி பகுதியில் சர்வீஸ் சாலையில் இருபுறமும் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். எதிர்த்திசையில் அதிக வாகனங்கள் வருவதால் விபத்துகள் ஏற்படுகிறது.
அதுபோன்ற விபத்துக்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் Ôஸ்மார்ட் சிட்டிÕ திட்டத்தில் ரூ.1000 கோடியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இவற்றில் ஸ்மார்ட் சாலைகள் அமைத்தல், புதிய பஸ் நிலைய கட்டுமானப் பணி, அங்கன்வாடி மையங்கள், பாதாள சாக்கடை திட்டம், நவீன வாகன நிறுத்துமிடம், 140 அரசு கட்டிடங்களில் சோலார் தகடுகள் பொருத்துதல், சூரியஒளியில் மின்சாரம் தயாரித்தல், கோட்டையை அழகு படுத்துதல் உள்ளிட்டவை முக்கியமானவைகளாகும்.
10 ஆண்டுகளுக்கு மேலாக நடக்கும் பாதாள சாக்கடை பணிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகளால் மக்கள் படாத பாடுபட்டு வருகின்றனர்.
பள்ளம் தோண்டிய சில தெருக்களில் இன்னும் பணிகள் முடிவடையாமல் உள்ளது. மேலும் சில தெருக்களில் பணிகள் முடிந்து சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் அனைத்து தெருக்களிலும் நடைபாதைகள் அமைக்கப்பட்டு இரும்பு கம்பிகள் வைத்துள்ளனர். இதனால் 20 அடி அகலத்திற்கு இருந்த தெருக்கள் 10 அடி அடியாக சுருங்கிப் போய் உள்ளன.
பொதுமக்கள் சாலை வசதிக்காக பயன்படுத்திய பல தெருக்களும் சுருங்கி சின்னதாக காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
வேலூர் மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் தெருக்களில் பொதுமக்கள் வீடுகளின் முன்பு மரங்களை நட்டு வளர்த்து வந்தனர். தற்போது ஸ்மார்ட் சிட்டி பணிகள் காரணமாக வீடுகள் முன்பு நடை பாதைகள் அமைக்கப்பட்டு செங்கற்கள் பதித்துள்ளனர்.
இதனால் மரங்கள் வளர்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதனடியே ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் கமிஷனர் அசோக் குமார் பேசியதாவது:-
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நடக்கும் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குடிநீர் குழாய், பாதாள சாக்கடை பணிகள் முடிந்த இடங்களில் இன்னும் சாலை பணிகள் தொடங்கப்படாமலும், ஒரு சில இடத்தில் முடிக்கப்படாமலும் உள்ளது.
எனவே, தொடங்கப்பட்ட இடத்தில் சாலை பணிகளை வேகமாக முடிக்க வேண்டும். அதே போல், அவை தரமானதாக இருக்க வேண்டும்.
வீட்டின் நுழை வாயில் மட்டத்தைவிட சாலையின் மட்டம் உயரமாக இருக்கக் கூடாது. பழைய சாலையை பெயர்த்து எடுத்து புதிய சாலை அமைக்க வேண்டும்.
60 வார்டுகளில் உள்ள 4 ஆயிரத்து 502 கிலோமீட்டர் சாலைகளில், 685 கிலோமீட்டர் தூரத்துக்கு பணிகள் முடித்திருக்க வேண்டும். ஆனால் 200 கிலோ மீட்டர் தான் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை எப்போதுதான் முடிப்பீர்கள்Õ என்ற கேள்விதான் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளது. இதற்கு இறுதி வடிவம் கிடைத்தால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்.
கிருபானந்த வாரியார் சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரை அகற்றி மீண்டும் நகர பஸ் சேவையை தொடங்க வேண்டும்.
ஓட்டேரி பூங்காவுடன் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களை பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
வேலூரில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது.
வேலூர்
தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வெயிலின் கொடுமை வேலூரில் தான் அதிகமாக இருக்கும். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
கடந்த ஆண்டு மார்ச் 30-ந் தேதி 106.3 டிகிரியை தொட்டது. தொடர்ந்து 110 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது.
இந்த ஆண்டு கனமழை காரணமாக மாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரிகள் நிரம்பி உள்ளன.
பாலாற்றில் நீர் வரத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டைவிட வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதத்தில் குறைவாக காணப்பட்டது.
ஆனால் மார்ச் மாதம் 1-ந் தேதி 95.9 டிகிரி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. அதற்குப் பிறகு சில நாட்கள் மந்தமாக காணப்பட்டது.
இந்த வாரத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 8-ந் தேதி 94.6 டிகிரி, 9-ந் தேதி 97.3 டிகிரி நேற்று 97.5 டிகிரியை தொட்டுள்ளது.
இதனால் பகல் நேரங்களில் சாலையில் மக்கள் நடமாடவே முடியாத அளவுக்கு சுட்டெரிக்க தொடங்கியுள்ளது.கண் எரிச்சலும் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் வெயில் 100 டிகிரியை தாண்டி விடும் அந்த அளவுக்கு வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் வேலூர் நகர சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.
இதனால் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் வற்ற தொடங்கி விட்டன. வேலூர் மலைக்காடுகளில் வளர்ந்திருந்த செடி, கொடிகள் வாடி வதங்கி கருகியது. நடந்து சென்ற பாதசாரிகள் குடைகளை பிடித்துக் கொண்டு சென்றனர்.
பலர் தாகத்தை தணிக்க குளிர்பான கடைகளுக்கும், பழக்கடைகளுக்கும் படையெடுத்தனர். இதனால் அங்கு வியாபாரம் களைகட்டியது. இதுதவிர தர்பூசணி, வெள்ளரிக்காய் விற்பனையும் அமோகமாக நடக்கிறது.
வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் கோடைகால நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.எனவே தேவையில்லாமல் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
இனி வரும் நாட்களில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
பி.வி.சி.குழாய்கள் வாங்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு.
வேலூர்:
வேலூர் கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒருகிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர்) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு தாட்கோ மூலம் பி.வி.சி.குழாய் வாங்குவதற்கு ஒரு நபருக்கு ரூ.15000 மானியமும் மற்றும் மின் மோட்டார் வாங்குவதற்கு ரூ.10000 மானியமும் வழங்கப்படும்.
மேற்கண்ட திட்டங்களில் பயன்பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும், விவசாயத்தை தொழிலாக கொண்டவராக இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும், சாதி சான்றிதழ், குடும்ப அட்டை, இருப்பிட சான்று, பட்டா, சிட்டா, அடங்கல், புலப்பட வரைபடம், அங்கீகரிக் கப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட விலைப்புள்ளி ஆகிய ஆவணகளுடன் http://application.tahdco.com என்ற இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தாட்கோ மூலம் நிலம் வாங்கும் திட்டம், நிலம் மேம்பாட்டு திட்டம், துரித மின் இணைப்பு திட்டத்தில் பயனடைந்தவர்களும் மற்றும் விண்ணப்பித்து நிலுவையில் உள்ளவர்களும் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கும் இத்திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் விபரங்களுக்கு “ மாவட்ட மேலாளர், தாட்கோ, நெ.153 / 1, கோவிந்தராஜ் தெரு, ஆதிதிராவிடர் மாணவர் விடுதி வளாகம், ஓட்டேரி, வேலூர் 632 002. செல்: 9445029483 தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேலூரில் போலீசார் பறிமுதல் செய்த வாகனங்கள் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் பைக், கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதில் பைக், ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் நேற்று வேலூர் நேதாஜி மைதானத்தில் ஏலம் விடப்பட்டன. வாகனத்தை ஏலம் எடுக்க வந்தவர்களிடம் ரூ.100 நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டு பின்னர் அவர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மதுவிலக்கு வழக்கில் சம்பந்தப்பட்ட வாகனங் களுக்கு ஏலத்தொகையுடன் இருசக்கர வாகனங்களுக்கு 12 சதவீதம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு 18 சதவீதம் விற்பனை வரியும் சேர்த்து வசூலித்தனர்.
மேலும் வழக்குகளில் சம்மந்தப் பட்டுள்ள வாகனங்கள் அனைத்திற்கும் ரசீது வழங்கினர். ஏலம் எடுத்த வாகனத்திற்குண்டான ரசீதே அவ்வாகனத்தின் உரிமை ஆவணம் என போலீசார் தெரிவித்தனர்.
மொத்தம் 369 வாகனங்கள் ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
வேலூரில் நடிகர் சூர்யா படம் வெளியான தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர்:
நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான ஜெய் பீம் திரைப்படத்திற்கு பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் பா.ம.க.வினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து இன்று வெளியான Õஎதற்கும் துணிந்தவன்Õ படத்தை வெளியிட கூடாது என்று பா.ம.க. சார்பில் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வேலூரில் இன்று நடிகர் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 8 தியேட்டர்களில் வெளியானது. தியேட்டர்களில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.
தியேட்டர்களுக்கு வந்தவர்களை கண்காணித்து உள்ளே அனுப்பி வைத்தனர். தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.






