என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 26 மாணவ, மாணவிகள் உக்ரைன் நாட்டில் தவிப்பு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 26 மாணவ, மாணவிகள் உக்ரைன் நாட்டில் தவித்து வருகின்றனர்.
வேலூர்:
உக்ரைன் ரஷியா இடையே கடும்போர் நடந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் கீவ் உள்ளிட்ட நகரங்களில் இந்திய மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர்.
இந்திய மாணவர்கள் தாய் நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.இதற்காக இந்திய தூதரகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் தகவல்களைப் பெற்று அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களை தாய் நாட்டுக்கு அழைத்து வருகிறது.
வேலூர் மாணவி தீபா உள்பட 40 பேர் நேற்று முன்தினம் கார்கிவ் அருகிலுள்ள போல்டோவாவில் இருந்து ஹங்கேரி அழைத்து வரப்பட்டு அங்கிருந்து டெல்லிக்கு அழைத்து வர ஏற்பாடு செய்தனர். நேற்று அவர்களை விமானத்தில் அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்கள் இன்று நாடு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அங்கிருந்து விமானங்கள் எதுவும் புறப்படவில்லை. வேலூர் மாணவி தீபா உள்ளிட்ட 40 பேர் அங்கு காத்துக் கிடக்கின்றனர். அவர்களை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது இதனால் அவர்கள் நாடு திரும்ப இன்னும் 2 நாட்கள் வரை ஆகலாம் என தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 மாணவர்கள், திருப்பத்தூர் மாவட்டத்தில் 7 பேர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 3 பேர் என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 26 மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் தவித்து வருவது தெரியவந்துள்ளது.
அவர்களிடம் தொடர்ந்து செல்போன் மூலம் பேசி வருகின்றனர். அவர்கள் மாவட்ட நிர்வாகத்தின் கண்காணிப்பில் உள்ளனர்.
வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story






