என் மலர்
உள்ளூர் செய்திகள்

முல்லை பெரியாறு அணை
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுக்க கூடாது - ஜி.கே.வாசன்
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக உரிமையை விட்டு கொடுக்க கூடாது என வேலூரில் ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
வேலூர்:
முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழத்தின் உரிமையை விட்டு கொடுக்க கூடாது என்று வேலூரில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வேலூர் சத்துவாச்சாரியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் வளர்ச்சிக்கான பணியில் வெளிப்படை தன்மையுடன் செயல்பட வேண்டும். வாக்களித்த வார்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வகையில் பணி அமைய வேண்டும்.
உக்ரைன் நாட்டின் சிக்கியுள்ள இந்தியவாழ் மக்கள் மற்றும் மருத்துவ மாணவர்களை மீட்கும் பணியை மத்திய அரசு சிறப்பாக செய்து வருகிறது. அங்குள்ள மற்ற அனைவரையும் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் மீட்க வேண்டும்.
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மிக மிக அவசியமான ஒன்றாகும். எந்தநாட்டின் மீதும் போர் தொடுக்க கூடாது என்பதுதான் இந்திய நாட்டின் விருப்பமாகும்.
தி.மு.க. ஆட்சியில் ஏராளமான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதனை எதிர்ப்பார்த்த மக்கள் ஏமாற்றத்துடன் இருக்கிறார்கள். ஆட்சி, அதிகாரம், பண பலத்தால் தி.மு.க. நகர்ப்புற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இது மக்களின் தீர்ப்பு என்றாலும் கூட, அவர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பவர்களாக தி.மு.க. செயல்பட வேண்டும்.
வேலூர் பாலாற்றில் குப்பைகள் கொட்டுவதையும், அவற்றை மறைமுகமாக எரிப்பதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். பாதாள சாக்கடைநீர் பாலாற்றில் கலப்பதை தடுக்க வேண்டும்.
மேலும் பாதாள சாக்கடை திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிறைவேற்றப்படும் என்பதை மக்களுக்கு மாநகராட்சி உறுதியளிக்க வேண்டும். வேலூர் கிருபானந்தவாரியார் சாலையில் காணப்படும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காட்பாடி ரெயில்வே மேம்பால சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தமிழக அரசு விவசாயிகளின் நலனை அக்கறையை கருத்தில் கொண்டு கிராமப்புற பகுதிகளில் கூடுதலாக நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியோடு செயல்பட வேண்டும். தமிழகத்தின் உரிமையை விட்டு கொடுக்க கூடாது. தி.மு.க. கூட்டணியில் கம்யூனிஸ்டு கட்சிகள் இருப்பதால் இந்த விவகாரத்தில் அரசு சுணக்கமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் உள்ளது.
தி.மு.க. அரசு காழ்ப்புணர்ச்சி அரசியலில் ஈடுபடுவது ஏற்புடையது அல்ல. ஆளும், எதிர்கட்சியை சேர்ந்தவர்கள் என்று யாராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் உரிய விசாரணை மேற்கொண்டு, சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும். ஆனால் எதிர்கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது விரும்பத்தக்கது அல்ல.
பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது. அதனால் தான் அவரின் தலைமையில் 2 முறை தொடர்ந்து பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் படித்த ஏராளமான இளைஞர்கள் வேலைக்காக காத்திருக்கிறார்கள். எனவே அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பது குறித்து கருத்து கூற விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






