என் மலர்tooltip icon

    வேலூர்

    குடியாத்தம் அருகே வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மூத்த மகன் அசோக் (வயது 32) பி.சி.ஏ. படித்துள்ளார். பல இடங்களில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    கடைசியாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இவருக்கும் ஆம்பூர் அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    வாலிபர் அசோக் சரிவர வேலைக்கு செல்வதில்லை, ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் எப்போதும் மூழ்கி இருப்பார். பல இடங்களில் கடன் வாங்கி விளையாடியுள்ளார்.

    மேலும் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி உள்ளார். இதனால் மனைவி கோபித்து கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அசோக் நேற்று மனைவியை அழைத்து வர செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

    வீட்டின் மாடியில் தனியாக வசித்து வரும் அசோக்கிற்கு அவரது பெற்றோர் நேற்று இரவு உணவு கொடுத்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் அசோக்கின் வீட்டிற்கு பின்புறம் எரியும் வாடை வந்துள்ளது அக்கம் பக்கத்தினர் போய் பார்த்தபோது அசோக் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இடுப்புக்கு கீழே முழுவதும் எரிந்து கால்கள் துண்டாகி உள்ளன.இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், குணசேகரன், பெருமாள் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கருகிய நிலையில் இருந்த அசோக்கின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசோக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் அசோக் ஆன்லைன் ரம்மியில் பல ஆயிரம் இழந்ததாலும், மனைவி வாழாமல் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாலும் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்து எரித்து விட்டார்களா? என்ற பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டுவருதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் சேனூர்அடுத்த ஜி.என்.நகர் பகுதியில் பகுதி நேர ரேசன் கடை மற்றும் கோடாவாரி பள்ளியில் புதிய ரேசன் கடை திறப்பு விழா நேற்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    கதிர் ஆனந்த் எம்.பி., துணை மேயர் சுனில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வரவேற்றுப் பேசினார்.

    அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ரேசன் கடைகளை திறந்து வைத்தார்.

    தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்ற திட்டம் வருகிற 6 மாத காலத்துக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    காட்பாடி அடுத்த வள்ளிமலையில் அரசு கலைக்கல்லூரி கொண்டுவர வேண்டுமென அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வள்ளிமலையில் அடுத்த ஒரு மாத காலத்துக்குள் அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    காட்பாடி தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் விரைவில் செய்து கொடுப்பேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து பயிர்கடன் பயனாளூகளுக்கு ரூ.4.45 லட்சம் கடன் தொகையும், 13 சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தொகையை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திருகுண அய்யப்பதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இதையும் படியுங்கள்... சென்னையில் ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு

    வேலூரில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை பவனி நடைபெற்றது.
    வேலூர்:

    தவக்காலத்தையொட்டி கிறிஸ்தவர்கள் இன்று குருத்தோலை பவனி சென்றனர்.

    வேலூர் விண்ணரசி தேவாலயம், சி.எஸ்.ஐ. மத்திய தேவாலயம், ஓல்டு டவுன் ஆரோக்கிய மாதா ஆலயம், சத்துவாச்சாரி சூசையப்பர் ஆலயம், காட்பாடி நற்கருணை ஆண்டவர் ஆலயம், காந்திநகர் இருதய ஆண்டவர் ஆலயம், சேண்பாக்கம் சூசையப்பர் ஆலயம், பாகாயம் குழந்தை இயேசு போன்ற ஆலயங்களில் இன்று காலை 8 மணிக்கு குருத்தோலை பவனி நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக பாடல்கள் பாடி  கிறிஸ்தவர் குருத்தோலைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர்.

    வேலூர் அடுத்த சாய்நாதபுரம் அன்பு இல்லத்தில் குருத்தோலை பவனி சென்றனர்.  
    குடியாத்தம் அருகே 2-வது நாளாக காட்டு யானைகள் அட்டகாசம் செய்து வருவதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த காட்டு யானைகளை வனத்துறையினர் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் ஆந்திர மாநில வனப் பகுதிக்குள் விரட்டினர். 

    அந்த யானைகள் கூட்டம் பல குழுக்களாகப் பிரிந்து தமிழக எல்லையோரம் உள்ள வனப்பகுதிக்குள் அருகே உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.  வனத்துறையினர் விவசாயிகள், கிராம மக்கள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்தும், மேளங்கள் அடித்தும் யானைகள் கூட்டத்தை அடர்ந்த ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.

    கூட்டத்தை விட்டு பிரிந்த 2 யானைகள் கடந்த சில தினங்களாக குடியாத்தம் அடுத்த மோர்தானா, சைன குண்டா, ஆம்பூராம்பட்டி, கொட்டமிட்டா, தனகொண்டபல்லி, மோடி குப்பம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது நேற்று விடியற்காலை மோர்தனா செல்லும் சாலையில் வனப்பகுதியை ஒட்டியுள்ள பாலகிருஷ்ணன், கண்ணையன் ஆகியோரின் மாந்தோப்புக்குள் யானைகள் புகுந்து ஏராளமான மாமரங்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணன்பாபு தலைமையில் வனவர் முருகன் உள்ளிட்ட வனத் துறையினர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் உதவியுடன் பட்டாசுகள் வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

    குடியாத்தம் அடுத்த சைனகுண்டா பகுதியில் வனத்துறை சோதனை சாவடி உள்ளது அதன் சற்று தொலைவில் காவல்துறையின் சோதனை சாவடி உள்ளது இதன் அருகே யானைகள் வந்து பிளிறியபடி இருந்தது இதனால் சோதனை சாவடியில் இருந்தவர்கள் அச்சமடைந்தனர் மேலும் கிராமத்திற்கு அருகே யானைகள் முகாமிட்டு தொடர்ந்து பிளிறியபடி இருந்ததால் கிராம மக்கள் அச்சமடைந்தனர். இன்று 2&வது நாளாக யானை அட்டகாசம் செய்தன.

    குடியாத்தம் அடுத்த சைனகுண்டாவிலிருந்து மோர்தானா கிராமத்திற்கு சுமார் 9 கிலோ மீட்டர் வனப்பகுதி வழியாக செல்ல வேண்டும் இரவு நேரங்களில் யானைகள் கூட்டம் வனப்பகுதியில் சாலையை கடந்து செல்லும் சில நேரங்களில் சிறுத்தைகளும் கடந்து செல்லும்.

    கடந்த சில தினங்களாக மாலை வேலையில் 2 யானைகள் மோர்தானா கிராமத்திற்கு செல்லும் சாலையில் மூங்கில் புதர் அருகே முகாமிட்டு சுற்றி வருகின்றன. சாலையின் குறுக்கே பல நிமிடங்கள் நின்று பிளிறியபடி இருப்பதாகவும் இதனால் அந்த கிராமத்திற்கு செல்லும் கிராம மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

    இதனிடையே வனத்துறையினர் மோர்தானா கிராமத்திற்குச் செல்லும் வனப்பகுதியில் உள்ள சாலை வழியாக செல்லும் போது கிராம மக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். தனியாக செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
    வேலூர் பழைய பஸ் நிலையத்தில் பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் படுகாயம் அடைந்தார்.
    வேலூர்:

     வேலூர் கருகம்பத்தூரைச் சேர்ந்தவர் தீபக் (வயது 15). இவர் விருபாட்சிபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். 

    தீபக் நேற்று மாலை 5 மணிக்கு பள்ளி நேரம் முடிந்து, வீட்டுக்குச் செல்ல விருபாட்சிபுரத்தில் இருந்து வேலூர் பழைய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் வந்தார். 

    பஸ் நிலையத்தில் பசுமாத்தூரில் இருந்து வந்த பஸ்சில், அவர் ஏற முயற்சி செய்தபோது நிலைத் தடுமாறி கீழே விழுந்தார். இதில் பஸ்சின் பின் சக்கரத்தில் சிக்கிய தீபக் படுகாயமடைந்தார். 

    அருகில் இருந்தவர்கள் தீபக்கை மீட்டு ‘108’ ஆம் புலன்ஸ்சில் ஏற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    தொடர்ந்து, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் தனியார் மருத்து வமனைக்கு மாற்றப்பட்டார்.  இதுகுறித்து போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.
    ஆந்திராவிலிருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டனர்.
    குடியாத்தம்:

    ஆந்திர மாநிலத்தில் இருந்து குடியாத்தம் சைனகுண்டா செக்போஸ்ட் வழியாக கஞ்சா கடத்தல் நடைபெறுவதாக வந்த புகார்களின் பேரில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தீவிர சோதனை நடத்த உத்தரவிட்டார்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற்பார்வையில் நேற்று மதியம் குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், ஏட்டுகள் லட்சுமி மஞ்சுநாத் உள்ளிட்ட போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து தமிழ்நாடு நோக்கி வந்த தனியார் பஸ்சை நிறுத்தி பயணிகள் உடைமைகளை சோதனை செய்தனர்.

    பஸ்சில் பயணம் செய்த பயணியிடம் இருந்த ஒரு பையில் சுமார் 300 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்த பயணியை குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். 

    இதில் கஞ்சா கடத்தி வந்தது குடியாத்தம் செதுக்கரை ஜீவாநகரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவரின் மகன் தினகரன் (வயது 20) என தெரியவந்தது குடியாத்தம் நகரில் சிறுசிறு பொட்டலங்களாக கஞ்சா விற்பனை செய்ய கொண்டு செல்வது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தினகரனை கைது செய்தனர்.
    சத்துவாச்சாரியில் மின்தடை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி மற்றும் தொரப்பாடி துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கும் பொருட்டு, பருவகால ஆய்வு மற்றும் அத்தியாவசிய மின்பாதை பராமரிப்பு பணிக்காக கடந்த 4&ந் தேதி முதல் வரும் 25-ந் தேதி வரை காலை 7 முதல் 10 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள திட்ட மிடப்பட்டு இருந்தது.

    இந்நிலையில், நாளை (11-ந்தேதி) முதல் இந்த பணிகள் தவிர்க்க இயலாத காரணத்தால், மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது என உதவி செயற்பொறியாளர் முருகன் அறிவித்துள்ளார்.
    வேலூர் உள்பட 4 மாவட்டங்களில் 99 போலீஸ் நிலையம், அலுவலகம், குடியிருப்புகளில் மாஸ் கிளீனிங் மாதந்தோறும் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    வேலூர்:

    தமிழகம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் போலீஸ் அலுவலகம் போலீசார் குடியிருப்புகளில் மாதந்தோறும் 2&வது சனிக்கிழமைகளில் மாஸ் கிளீனிங் செய்ய டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் இன்று போலீசார் ஒட்டுமொத்த துப்புரவு பணியை மேற்கொண்டனர்.

    அனைத்து போலீஸ் நிலையம் ஆயுதப்படை குடியிருப்புகளில் போலீசார் ஒட்டுமொத்த துப்புரவு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் நிலைய வளாகம் மற்றும் பதிவேடுகள் போன்றவை சுத்தம் செய்யப்பட்டது.

    வேலூர் சரக டி.ஐ.ஜி.ஆனி விஜயா போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் இன்று வேலூர் போலீஸ் நிலையம் மற்றும் ஆயுதக் குடியிருப்பில் நடந்த ஒட்டுமொத்த துப்புறவு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் 99 போலீஸ் நிலையம் மற்றும் அலுவலகங்கள் போலீஸ் குடியிருப்புகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணி செய்யப்பட்டதாக டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்தார்.

    வேலூர் மாவட்டத்தில் 23 போலீஸ் நிலையம், 3 அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், 4 போக்குவரத்து காவல் நிலையம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், 700 வீடுகளைக் கொண்ட ஆயுதப்படை குடியிருப்பு மற்றும் போலீஸ் நிலையங்களை ஒட்டி உள்ள குடியிருப்புகளில் இன்று ஒட்டுமொத்த மாஸ் கிளீனிங் செய்யப்பட்டது.

    போலீஸ் நிலையங்களில் உள்பகுதி மற்றும் வளாகங்களில் சுத்தம் செய்யப்பட்டுள்ளது. போலீஸ் நிலையங்களில 900 &க்கும் மேற்பட்ட பைக் மற்றும் 4 சக்கர வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வாகனங்கள் போலீஸ் நிலையங்களில் தேங்கிக் கிடக்கின்றன.இதில் உரிமை கோரும் வாகனங்கள் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் கிடக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதன் மூலம் போலீஸ் நிலையங்களில் அதிகளவில் இடம் கிடைக்கும். புகார் கொடுக்க வரும் பொதுமக்கள் வாகனங்களை நிறுத்தவும் வசதியாக இருக்கும்.

    இந்த ஒட்டுமொத்த பணி மாதந்தோறும் 2-வது சனிக்கிழமை களில் தொடர்ந்து செய்யப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தெரிவித்தார்.
    வேலூர் கொணவட்டத்தில் பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
    வேலூர்:

    வாணியம்பாடியை சேர்ந்தவர் முனீர். இவர் வேலூர் கொணவட்டம் பொன்னியம்மன் கோவில் தெருவில் பழைய பிளாஸ்டிக் குடோன் வைத்துள்ளார். இதில் பிளாஸ்டிக் கழிவுகளை பவுடராக தயாரித்து அதனை ஏற்றுமதி செய்து வந்தார்.

    இதற்கு பயன்படுத்தப்படும் அரவை எந்திரங்கள் இந்த குடோனில் உள்ளன. அரவை செய்வதற்காக ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகளை அங்கு குவித்து வைத்திருந்தனர். இன்று அதிகாலை 2 மணிக்கு திடீரென பிளாஸ்டிக் கழிவுகளில் தீப்பற்றி எரிய தொடங்கியது.

    காட்டுத்தீ போல குடோன் முழுவதும் பரவியது. இதனால் அங்கு புகைமண்டலம் எழுந்தது. இதனைக் கண்ட பொதுமக்கள் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

    பிளாஸ்டிக் கழிவுகள் காட்டுத் தீ போல கொழுந்து விட்டு எரியத் தொடங்கியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இதனைத் தொடர்ந்து காட்பாடியில் இருந்து கூடுதலாக ஒரு தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    தீ விபத்தால் அந்த பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவு நச்சுப் புகை எழுந்தது.பொது மக்கள் கடும் அவதி அடைந்தனர். 2 மணியிலிருந்து காலை 8 மணி வரை 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இந்த விபத்தில் குடோனில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் எந்திரங்கள் உள்பட ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வில்லை. இது குறித்து விசாரித்து வருகின்றனர்.
    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் டிரைவரை ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதால் அரசு பஸ்களை நிறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    வேலூர்:

    திருவண்ணாமலை மாவட்டம் வண்ணாங்குளம் அருகே உள்ள பெரிய அய்யம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 49). அரசு பஸ் டிரைவர். இவர் இன்று காலை சென்னை அம்பத்தூரில் இருந்து வேலூர் வந்த அரசு பஸ்சை ஓட்டி வந்தார்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே நுழைவு வாயிலில் அதிகளவில் பஸ்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தன. அப்போது டிரைவர் செல்வம் பஸ்சில் ஹாரன் அடித்தார்.

    பஸ் நிலையத்திற்கு வெளியே உள்ள ஓட்டலில் பணியில் இருந்த 2 தொழிலாளர்கள் ஹாரன் அடிக்கக் கூடாது என ஆபாச வார்த்தைகளால் திட்டினர்.

    வாகன நெரிசல் அதிகமாக உள்ளது கண்டிப்பாக ஹாரன் அடித்தால்தான் வழி கிடைக்கும் என கூறி டிரைவர் செல்வம் ஹாரன் அடித்தார்.

    இதனால் அவரிடம் தகராறு செய்த ஓட்டல் ஊழியர்கள் இருவரும் ஆவேசம் அடைந்தனர்.அவர்கள் ஆபாசமாக திட்டிக்கொண்டே பஸ்சின் பின்னால் வந்தனர். அதற்குள் பஸ் நிலையத்திற்குள் பஸ் சென்றது.

    டிரைவர் செல்வம் கீழே இறங்கினார். பின் தொடர்ந்து சென்ற ஓட்டல் ஊழியர்கள் இருவரும் செல்வத்தை சரமாரியாக தாக்கினர். கையில் இருந்த சாவியால் தாக்கியதில் டிரைவர் செல்வம் தலையில் பலத்த அடிபட்டு ரத்தம் கொட்டியது. இதனை கண்டு டிரைவர் கண்டக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    அங்கிருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை தடுப்பதற்காக மற்ற அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் வேகமாக சென்றனர். 

    இதனை கண்டதும் ஓட்டல் ஊழியர்கள் இருவரும் பஸ் நிலையத்தில் இருந்து வேகமாக வெளியே ஓடிவந்தனர். ஓட்டலை பூட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அரசு பஸ் டிரைவரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அதுவரை பஸ்களை இயக்க மாட்டோம் எனக் கூறி அனைத்து அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்கள் பஸ் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால் பஸ் நிலையத்தில் இருந்து எந்த ஒரு பஸ்சும் வெளியே இயக்கப்படாமல் இருந்தது.

    அதே நேரத்தில் காட்பாடியில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு டவுன் பஸ்களும் செல்லியம்மன் கோவில் முன்பு நிறுத்தப்பட்டது.

    காட்பாடியில் இருந்து வேலூருக்கு எந்தவித வாகனமும் வரமுடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பாலாறு பழைய பாலத்தில் இருந்து காட்பாடி வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    சம்பவ இடத்திற்கு வேலூர் வடக்கு மற்றும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் அரசு பஸ் டிரைவர் கண்டக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போக்குவரத்து அலுவலர்களும் அங்கு வந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். டிரைவர் செல்வத்தை வேண்டுமென்றே வம்புக்கு இழுத்து தாக்கியுள்ளனர். 

    இதனால் எங்களது உயிருக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. உடனடியாக டிரைவரை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும். அதுவரை வாகனங்களை இயக்க மாட்டோம் டிரைவர் கண்டக்டர்கள் தெரிவித்தனர்.

    பஸ்நிலையத்தில் பயணிகள் கடும் அவதியடைந்தனர். டிரைவரை தாக்கியவர்கள் கைது செய்யப் படுவார்கள் உடனடியாக பஸ்களை இயக்க வேண்டும் என போலீசார் உறுதி அளித்தனர்.

    45 நிமிட பேச்சு வார்த்தைக்கு பிறகு டிரைவர்கள் கண்டக்டர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கினர். ஓட்டல் ஊழியர்கள் தாக்கியதில் காயமடைந்த டிரைவர் செல்வம் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து புதிய பஸ் நிலையம் பகுதியில் போக்குவரத்து சீரானது.

    டிரைவரை தாக்கி விட்டு தப்பி ஓடிய  தொழிலாளர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இன்று வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு சரியான நேரத்தில் பஸ்கள் இயக்க வேண்டும் ஊராட்சி குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    வேலூர்:

    வேலூர் மாவட்ட ஊராட்சி குழு அலுவலகத்தில் கல்வி போக்குவரத்து நிலைக் குழு கூட்டம் இன்று நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு தலைமை தாங்கினார். இதில் கல்வி குழுவைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் வேலூர் கல்வியில் பின்தங்கிய மாவட்டம் தற்போது கொஞ்சம் முன்னேறி வருகிறது. இட மாறுதல் காரணமாக வேலூர் மாவட்டத்தில் கிராம பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது.

    இன்னும் 10 நாட்கள் மட்டுமே பொதுத்தேர்வு நடத்த கால அவகாசம் உள்ளது. எனவே மீதமுள்ள நாட்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கிராம புறங்களில் உள்ள பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு பாடம் நடத்த வழிவகை செய்ய வேண்டும்.

    பள்ளி அங்கன்வாடி மையங்களில் மாவட்ட கவுன்சிலர்கள் ஆய்வு நடத்த வேண்டும். கட்டிட வசதி அடிப்படை வசதிகள் இல்லை என்றால் அது குறித்து மாவட்ட ஊராட்சிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    இதன் மூலம் அடிப்படை வசதிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராம பகுதிகளில் டவுன் பஸ்கள் பல நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் அந்த பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக பள்ளிக்கு சரியான நேரத்தில் செல்லவும் பள்ளி முடிந்ததும் சரியான நேரத்தில் மாணவர்கள் வீட்டிற்கு செல்லும் வகையில் பஸ் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தினர்.

    மாவட்ட ஊராட்சி செயலாளர் சரண்யா தேவி, சூப்பிரண்டு ரமேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    சமூக வலைதளங்களில் மாணவிகள் போட்டோ வெளியிடக்கூடாது என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீஅபிராமி பெண்கள் கலை மற்றும் அயறிவியல் கல்லூரியில் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான மாபெரும் விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஆர்.எஸ்.வெற்றிவேல் தலைமை தாங்கினார். கல்லூரி பொருளாளர் கே. முருகவேல் அனைவரையும் வரவேற்றார்.

    ஏ.டி.எஸ்.பி.சுந்தரமூர்த்தி குடியாத்தம் டி.எஸ்.பி. ராமமூர்த்தி சைபர்கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மாலதி, கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பெருகிவரும் இணையவழி குற்றங்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அவற்றிலிருந்து கவனமுடன் இருக்க போதுமான வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டது.

    ஆன்லைன் விளையாட்டுக்கள், சமூக வலைதளங்-களில் நடைபெறும் குற்றங்கள், ஆன்லைன் முதலீடுகள், போலியான ஆப்களில் பெரும் கடன்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் எந்தவித காரணத்தை கொண்டும் அவர்களது போட்டோவை பதிவிட வேண்டாம்.
    அப்படி பதிவு செய்யப்படும் போட்டோக்களை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. மேலும் இன்ஸ்டாகிராம் ஆன்லைன் மூலம் புடவைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வேண்டாம்.

    இதன் மூலம் மோசடி நடைபெற வாய்ப்பு உள்ளது. முடிந்த அளவு நேரில் சென்று பொருட்களை வாங்கி கொள்ளுங்கள். பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக புகார் அளிக்க வேண்டும்.

    புகார் தருபவர்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பாலியல் தொந்தரவு அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
    மாணவ மாணவிகள் காவல் உதவி அப்ளிகேஷன் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதில் 60 வகையான பயன்பாடு உள்ளது. இதன் மூலம் சிறு குற்றங்களில் இருந்து தப்பிக்க முடியும் என்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் 1930 உதவி எண், காவலன் செயலி, காவல் உதவி செயலி குறித்து விளக்கமளித்து அவர்களுக்கு சைபர் கிரைம் சம்பந்தமான துண்டு பிரசுரங்கள் வழங்கி அறிவுரைகள் வழங்கப்பட்டன.
    ×