என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எரிந்த நிலையில் வாலிபர் பிணமாக மீட்பு
    X
    எரிந்த நிலையில் வாலிபர் பிணமாக மீட்பு

    குடியாத்தம் அருகே எரிந்த நிலையில் வாலிபர் பிணமாக மீட்பு

    குடியாத்தம் அருகே வாலிபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மூத்த மகன் அசோக் (வயது 32) பி.சி.ஏ. படித்துள்ளார். பல இடங்களில் வேலைக்கு சென்று வந்துள்ளார்.

    கடைசியாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இவருக்கும் ஆம்பூர் அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் 1½ ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    வாலிபர் அசோக் சரிவர வேலைக்கு செல்வதில்லை, ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளில் எப்போதும் மூழ்கி இருப்பார். பல இடங்களில் கடன் வாங்கி விளையாடியுள்ளார்.

    மேலும் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி உள்ளார். இதனால் மனைவி கோபித்து கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அசோக் நேற்று மனைவியை அழைத்து வர செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

    வீட்டின் மாடியில் தனியாக வசித்து வரும் அசோக்கிற்கு அவரது பெற்றோர் நேற்று இரவு உணவு கொடுத்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் அசோக்கின் வீட்டிற்கு பின்புறம் எரியும் வாடை வந்துள்ளது அக்கம் பக்கத்தினர் போய் பார்த்தபோது அசோக் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார்.

    இடுப்புக்கு கீழே முழுவதும் எரிந்து கால்கள் துண்டாகி உள்ளன.இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், குணசேகரன், பெருமாள் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கருகிய நிலையில் இருந்த அசோக்கின் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசோக்கின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் அசோக் ஆன்லைன் ரம்மியில் பல ஆயிரம் இழந்ததாலும், மனைவி வாழாமல் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாலும் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு யாராவது கொலை செய்து எரித்து விட்டார்களா? என்ற பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×