என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூரில் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சிநகர் மந்தைவெளியில் பாலாற்றங்-கரையை ஒட்டி குடியிருப்பு பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.

    இந்த கடைக்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த வாரம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    அப்போது கடையை திறக்க கோரி அவர்களுக்கு போட்டியாக ஆண்கள் சிலர் போராட்டத்தில் இறங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கடந்த திங்கட்கிழமை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனர். அதற்கு பிறகும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் கடையை திறந்து வைத்துள்ளனர்.

    இந்தநிலையில் இன்று காலை மாதர் சங்க மாநில துணைத்-தலைவர் சங்கரி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று மதுக்கடை திறக்கப்படவில்லை. 

    மேலும் சாமினா பந்தல் போட முயற்சி செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு வந்து பந்தல் போடுவதை தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    கடையை நிரந்தரமாக மூடுவோம் என அதிகாரிகள் உறுதி அளிக்கும் வரையில் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாதர் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரி கூறுகையில்;

    சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டது.

    கடந்த 7-ந் தேதி முதல் மீண்டும் கடையை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த வழியாக காட்பாடிக்கு கல்லூரி பள்ளிகளுக்கு மாணவிகள் மற்றும் பெண்கள் செல்கின்றனர். அவர்களைப் பார்த்து குடி போதையில் இருப்பவர்கள் கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.

    நேற்று மாணவிகள் வந்த போது சிலர் மது போதையில் தண்ணி தொட்டி தேடி வந்த குட்டிகளே வாங்க என்று பாட்டுப் பாடி ஈவ்டீசிங் செய்துள்ளனர். 

    இந்த இடத்தில் டாஸ்மாக் கடை தொடர்ந்தால் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த மதுகடையை உடனடியாக மூடவேண்டும் என்றார்.
    ரோப் கார் சோதனை ஓட்டம் நாளை (வியாழக்கிழமை) தமிழ் புத்தாண்டையொட்டி தொடங்கப்படுகிறது. இதற்காக ரோப் கார்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் பெருமாள் கோவில் (திருக்கடிகை) 108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இந்த கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார்.

    மலை மீது 1,305 படிகளை கடந்து சென்று அமிர்தவள்ளி தாயார் சமேத லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்ய முடியும். செங்குத்தான மலை மீது படிகள் அமைக்கப்பட்டுள்ளதால் வயதானவர்கள் சாமி தரிசனம் செய்ய சிரமப்பட்டு வருகின்றனர்.

    டோலி மூலம் தொழிலாளர்கள் பக்தர்களை சுமந்து செல்ல வசதி இருந்தாலும், ரோப் கார் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

    இதற்காக, கடந்த 2014-ம் ஆண்டு ரூ.9.50 கோடி மதிப்பில் ரோப் கார் அமைக்கும் பணி தொடங்கியது. இந்த பணிகள் நிறைவு பெற்றது.

    ரோப் கார் சோதனை ஓட்டம் நாளை (வியாழக்கிழமை) தமிழ் புத்தாண்டையொட்டி தொடங்கப்படுகிறது. இதற்காக ரோப் கார்கள் தயார் நிலையில் உள்ளன. இதில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

    சோதனை ஓட்டம் முடிந்த பிறகு தமிழக முதல்- அமைச்சர் ஒப்புதலுடன் விரைவில் முறைப்படி ரோப் கார் ஓடத் தொடங்க உள்ளது.

    மொத்தம் 4 பெட்டிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் 4 பேர் பயணம் செய்ய முடியும். அடிவாரத்தில் இருந்து 4 நிமிடத்தில் மலை உச்சிக்கு இந்த ரோப் கார் சென்றுவிடும்.

    இதனால் வயதானவர்கள் குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் இனி லட்சுமி நரசிம்மரை தரிசனம் செய்து திரும்பலாம்.

    சென்னைக்கு மிக அருகில் உள்ள சோளிங்கர் நரசிம்மர் சாமி கோவில் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் மாற வாய்ப்புள்ளது.

    மேலும் அங்கு ரூ.11 கோடி மதிப்பில் பக்தர்கள் தங்கும் அறைகள் கழிவறை வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    சோளிங்கரில் நாளை ரோப் கார் சோதனை ஓட்டம் நடைபெறுவதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அறிவியல் கண்காட்சியில் 242 படைப்புகளை காட்சி படுத்திய மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.
    வேலூர்:

    வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்கள் சார்பில் அறிவியல் கண்காட்சி இன்று முதல் 2 நாட்கள் நடக்கிறது. இதில் 242 படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் இந்த அறிவியல் கண்காட்சியில் தங்களது படைப்புகளை வைத்துள்ளனர்.

    அவர்களுடைய சிந்தனைகள் செயல்திறனை காட்சிபடுத்தி உள்ளனர். ஒரு சில மாணவ. மாணவிகள் படைப்புகள் மிக அருமையாக இருந்தது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாணவர்கள் படைப்புகளை பொதுமக்கள் மத்தியில் காட்சி படுத்தி அவற்றை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

    இன்று முதல் 2 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்களும் வந்து பார்க்கலாம். இந்த கண்காட்சியில் கலந்து கொண்டுள்ள மாணவ மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். 

    இதில் சிறந்த படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு 21 பேருக்கு பரிசு சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூரில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளிநாட்டவர்கள் விவரங்களை பதிவு கட்டாயம் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் மற்றும் போலீசார் ஆலோசனை கூட்டம் நடந்தது. 

    இதில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    வேலூர் மாநகர பகுதியில் உள்ள லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் வந்து தங்குகின்றனர். தங்க வரும் வெளிநாட்டவர்கள் குறித்த முழு விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.உறவினர்கள் நண்பர்கள் என கூறிக்கொண்டு விவரம் பதிவு செய்யாமல் யாரையும் தங்க அனுமதிக்க கூடாது.

    அவ்வாறு பதிவு செய்த விவரங்களை போலீசாரிடம் அளிக்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

    லாட்ஜ் மற்றும் தங்கும் விடுதிகளில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். வெளிப்புறம் மற்றும் உள்புறம் கேமராக்கள் பொருத்துவதன் மூலம் பொதுமக்கள் மற்றும் விடுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் தங்கும் விடுதி உரிமையாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
    குடியாத்தத்தில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்கம் சிஐடியு, குடியாத்தம் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க கிளை ஆகியவை இணைந்து குடியாத்தம் தாலுகா ஒலக்காசி ஊராட்சி பகுதியில் மணல் குவாரி தமிழக அரசு சார்பில் தொடங்கிட கேட்டு ஆர்ப்பாட்டம் நேற்று குடியாத்தம் நீர்வள ஆதார துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாட்டுவண்டி தொழிலாளர் சங்க தலைவர் எஸ்.பங்குமூர்த்தி தலைமை தாங்கினார், மாட்டு வண்டி தொழிலாளர் சங்க செயலாளர் டி.விஜயன், மாட்டுவண்டி தொழிலாளர் சங்க பொருளாளர் எம்.அசோகன், நிர்வாகிகள் சங்கர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

    வேலூர் மாவட்ட பொது தொழிலாளர் சங்க செயலாளர் ஏ.குப்பு போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன் போராட்டத்தை முடித்து வைத்தார். 

    இந்த போராட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பி.காத்தவராயன், மாவட்ட துணை செயலாளர் சி.சரவணன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் கே.சாமிநாதன், மரம் ஏறும் தொழிலாளர் சங்க தலைவர் பி.குணசேகரன், பீடி சங்க பொருளாளர் எஸ்.சிலம்பரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இந்த கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் வாழ்வா தாரம் பாதிக்கப்பட்டுள்ள மாட்டுவண்டி தொழிலாளர்களுக்கு குடியாத்தம் ஒலக்காசி ஊராட்சி சித்தாத்தூர் பகுதியில் அரசு மணல் குவாரி தெடங்கிட வேண்டும்.

    குடியாத்தம் பகுதியில் மணல் குவாரி தொடங்கினால் ஆயிரத்-திற்கும் மேற்பட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வு மேம்படவும் ஆயிரக்கணக்கான ஏழை எளிய சாதாரண மக்கள் குறைந்த விலையில் மணல் பெறலாம்.

    கட்டுமான தொழிலாளர்-கள், மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வு மேம்பட குவாரி தொடங்கிட கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    மேல்பாடி போலீஸ் நிலையம் அருகில் தீக்குளித்த வாலிபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த குகையநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சரத் (வயது 25). இவர் நேற்று மாலை திடீரென மேல்பாடி போலீஸ் அருகே உடலில் பெட்ரோலை ஊற்றிக் தீ குளித்தார்.

    இதனை கண்ட பொது மக்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். பின்னர் 108 ஆம்புலன்சு மூலம் சிகிச்சைக்-காக அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவக்-கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சரத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தீக்குளித்த சரத் கூறுகையில், போலீசார் எனது வீட்டுக்கு வந்து அவதூராக பேசுகின்றனர்.

    நான் நெல் அறுக்கும் எந்திரம் வைத்துள்ளேன். அதை ஓட்டிச்செல்லும் போது நிறுத்துகின்றனர். இதனால் எனக்கு அசிங்கமாக உள்ளது என கூறினார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-

    மேல்பாடி போலீஸ் நிலையம் அருகே தீக் குளித்த சரத் என்ற வாலிபர் மது-போதையில் இருந்துள்ளார்.

    மேலும் சரத் மற்றும் அவரது தம்பி சஞ்சய் ஆகிய இருவர் கடந்த 2019-ம் ஆண்டு 17 வயது பள்ளி மாணவியை கடத்தியுள்ளனர். இது தொடர்பாக இருவர் மீதும் கடத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மேலும் இவர்கள் மீது மணல் கடத்தல் போன்ற வழக்குகளும் உள்ளது. போக்சோ வழக்கில் இருவரும் கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்து வந்துள்ளனர்.

    இதனால் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சரத்தின் வீட்டுக்கு சென்று கோர்ட்டில் ஆஜராகும் படி கூறினார். இதை திசை திருப்பவே மதுபோதையில் வந்து தீ குறித்துள்ளார். 
    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் வனப்பகுதியில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க 7 இடங்களில் தண்ணீர் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    வேலூர்:

    வேலு£ர் வனசரகத்துக்கு உட்பட்டு அணைக்கட்டு, லத்தேரி, சோழவரம், டெல், சேனூர், பனமடங்கி உட்பட பல பகுதிகள் உள்ளது. இந்த காட்டுப்பகுதிகளில் மான்கள், நரி, காட்டுப்பன்றிகள், பாம்பு, முயல், காட்டெருமை உட்பட பலவகையான விலங்குகள், பறவை வகைகள் உள்ளது. அங்குள்ள உணவுகள் மற்றும் நீரோடைகள், மற்றும் குட்டைகளில் உள்ள நீரை பருகி தாகம் தீர்த்து வருகின்றன.

    கோடை காலங்களில் காடுகளில் உள்ள நீரோடைகள், குட்டைகளில் நீர் வற்றினால், தாகம் தீர்க்க வனவிலங்குகள் தண்ணீர் உள்ள இடங்களுக்கு நகர்கின்றது. சில சமயங்களில் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளிலும் நுழைந்து விடுகிறது. 

    அந்த வகையில் வேலூர் வனசரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறையினர் சார்பில் வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளில் வராமல் இருக்கவும், அவைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய செயற்கை குட்டைகள் அமைத்து டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. 

    அதன்படி, இந்தாண்டும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வனவிலங்குகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வனத்துறைக்கு சொந்தமான காட்பாடி, சோழவரம் உட்பட 7 இடங்களில் செயற்கை குட்டைகள் அமைக்கப் பட்டுள்ளது. 

    3 நாட்களுக்கு ஒருமுறை டிராக்டர் மூலம் 5ஆயிரம் லிட்டர் தண்ணீர் இந்த தொட்டிகளில் வனத்துறை சார்பில் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் யானைகள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வராமல் இருக்க Ôயானை நீர்பள்ளம்Õ வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்: ஆந்திராவில் இருந்து காட்டு வழியாக யானைகள் கூட்டமாகவோ, ஒற்றை-யானையாக அவ்வப்போது குடியாத்தம், காட்பாடி சுற்றுவட்டாரத்தில், காடுகளுக்கு அருகே உள்ள குடியிருப்பு விவசாய நிலத்தை நோக்கி உணவு தேடி வந்து விடுகிறது. 

    அந்த வகையில் கோடையில் வெயில் காரணமாக தண்ணீர் தேடி யானைகள் வராமல் இருக்க, அவைகள் வந்து செல்லும் காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் (பனமடங்கி காப்புகாடு) 10 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழத்தில் 10ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட Ôயானை நீர் பள்ளம்Õ அமைக்கப்பட்டுள்ளது. 

    இதேபோல், குடியாத்தம் பரதராமி பகுதியிலும் யானை நீர் பள்ளம் உள்ளது. இதில், தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது. 

    இதன் மூலம் தண்ணீர்தேடி கோடைக்காலத்தில் யானைகள் காடுகளை விட்டு, குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதை தவிர்க்க முடியும். மற்ற வன உயிரினங்களின் நீர் தேவையை பூர்த்தி செய்யவும் வனத்துறை சார்பில் செயற்கை குட்டைகள் அமைத்து அதில் தண்ணீர் நிரப்பி பராமரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    கோடை வெயிலை சமாளிக்க அமிர்தி பூங்காவில் வன விலங்குகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    வேலூர்:

    அமிர்தி வன விலங்குப் பூங்காவில் மான்கள், கீரிப்பிள்ளைகள், நரிகள், குரங்குகள், சிவப்பு தலை கிளிகள், காதல் பறவைகள், ஆமைகள், மயில்கள், முதலைகள், காட்டுப் பூனைகள், கழுகுகள், வாத்துகள், புறாக்கள், காட்டுக் கிளிகள், முயல்கள், மலைப்பாம்புகள் முதலியன உள்ளன.

    கோடை வெப்பநிலை அதிகரிப்பால் அனைத்து விலங்குகளுக்கும் அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதனால் வெப்ப நாட்களில் விலங்குகளை பராமரிப் பதற்கு முன்னதாகவே திட்டமிடப் பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வனவற்றுக்கான தனித்துவமான மற்றும் புதுமையான கோடைகால மேலாண்மைத் திட்டத்தைப் பின்பற்றி வருகின்றனர்.

    அனைத்து விலங்கு களுக்கும் போதுமான நிழல் மற்றும் தண்ணீர் வழங்கப்படுகிறது. நேரடி சூரிய ஒளி ஊடுருவலைத் தடுக்க தேவையான இடங்களில் நிழல் வலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல் பறவைகளின் கூட்டுகளுக்கு மேல் மற்றும் பக்கவாட்டில் கோணிப் பைகள் கட்டப்பட்டு, பகலின் வெப்பமான நேரங்களில் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. மாமிச உண்ணிகளுக்கு உறைந்த இறைச்சியும், குரங்குகள் மற்றும் பறவைகளுக்கு பழங்களும் வழங்கப் படுகின்றது.

    விலங்குகள் பறவைகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளில் அடிக்கடி தண்ணீர் தெளித்து வருகின்றனர். பூங்கா பகுதி முழுவதும் வெயிலின் தாக்கம் ஏற்படாமல் தண்ணீர் அடிக்கும் வகையில் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து வருகின்றனர்.

    அமிர்தி வனப்பகுதியில் கோடைகாலங்களில் விலங்குகள் தாகம் தீர்க்க அங்குள்ள குட்டையில் வனத்துறையினர் தண்ணீரை தேக்கி வைப்பது வழக்கம்.

    இந்த ஆண்டு அமிர்தி வனப்பகுதியில் உள்ள ஆற்றில் ஊற்றுத் தண்ணீர் ஏராளமான இடங்களில் பெருகிக் கிடக்கின்றன.இதனால் வனப்பகுதியில் தண்ணீர் தேக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    நேற்று விடுமுறை நாளையொட்டி அமிர்திப் பூங்காவில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருந்தது. இனி வரும் கோடை காலங்களில் பூங்காவிற்கு சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகை தருவார்கள் என்பதால் கூடுதல் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
    வேலூர் லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் லாங்கு பஜாரில் நேதாஜி மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் அதிகளவு நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர். இதனால் தினந்தோறும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பலர் வாகனங்களை லாங்கு பஜாரில் நிறுத்தி விட்டு செல்கின்றனர்.

    பஜார் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை லாங்கு பஜார் மார்க்கெட் பகுதியில் போலீசார் ஆக்கிரமிப்பு அகற்றினர். பஜாரில் வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டி மற்றும் தரை கடைகளை அப்புறபடுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.

    இதனால் வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து கடைகளை அப்புறப்படுத்தினர்.

    கடைகளின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் எந்தவித காரணத்தைக் கொண்டும் நடைபாதையை ஆக்கிரமிக்க கூடாது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுத்தனர்.

    ஆக்கிரமிப்பு அகற்றிய பிறகு லாங்கு பஜார் பொதுமக்கள் வந்து செல்ல மிக எளிதாக இருந்தது. ஆனால் மார்க்கெட்டுக்கு வருபவர்கள் வண்டியை நிறுத்த இடமில்லாமல் திணறினர்.

    லாங்கு பஜாரில் ஆக்கிரமிப்பு கடைகள் வைக்க அனுமதிக்கக் கூடாது. மார்க்கெட் பகுதிக்கு வரும் பொதுமக்கள் வசதிக்காக பிரத்தியேகமாக வாகன நிறுத்துமிடம் அமைத்துக் கொடுத்தால் அந்த பகுதியில் நிரந்தரமாக நெரிசலை தடுக்க முடியும். 

    லாங்கு பஜாரில் அவ்வப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதும் மீண்டும் அந்த இடத்தில் கடைகள் அமைப்பதும் வழக்கமான ஒன்று தான். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு விழாவை முன்னிட்டு பால் கம்பம் நடப்பட்டது.
    குடியாத்தம்:

     வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கை யம்மன் கோவில் சிரசு திருவிழாவை முன்னிட்டு கோவிலில் பால் கம்பம் நடும் விழா இன்று காலை நடைபெற்றது.

    நிகழ்ச்சியை யொட்டி மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து பால் கம்பத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து பால் கம்பம் நடப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு பால் ஊற்றினர்.

    இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகர மன்றத் தலைவர் எஸ் சவுந் தரராஜன், துணைத் தலைவர் பூங்கொடி மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் தேவகி கார்த்திகேயன், ஆட்டோ மோகன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, ஊர் நாட்டாமை ஆர்.ஜி.சம்பத், தர்மகத்தா கே. பிச்சாண்டி, திருப்பணி குழு தலைவர் ஆர்.ஜி.எஸ்.கார்த்திகேயன் உள்பட முன்னாள் அறங்காவலர்கள், ஆலய திருப்பணி கமிட்டியினர், கோபாலபுரம் பொது மக்கள், விழாக்கு ழுவினர், இளைஞர் அணியினர் செய் திருந்தனர்.

    கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா--வின் முக்கிய நிகழ்வாக வருகிற 30&ந் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், மே மாதம் 14&ந் தேதி தேர் திருவிழாவும், 15-ந் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழாவும் நடை-பெறுகிறது.
    சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.

    வேலூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் நேதாஜி நகர் ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு போராடினோம் ஆனாலும் கடை மூடப்படாமல் அதே இடத்தில் உள்ளது.

    குடியிருப்புக்கு மிக அருகில் திறக்கப்பட்டுள்ள இந்த கடையால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    அந்த வழியாக பள்ளி கல்லூரி மாணவிகள் காட்பாடிக்கு சென்று வருகின்றனர்.அவர்களுக்கும் இடையூறு ஏற்படும். இதனால் டாஸ்மாக் கடையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

    வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்; சதுப்பேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அந்த பகுதியில் வீடுகளை இடித்து வருகின்றனர். இதுவரை 30&க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த பகுதியில் வீடுகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது.

    அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கூலித்தொழிலாளர்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

    வேலூர் மாவட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம்.

    கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வில்லை. ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
    குடியாத்தம் அருகே எரிந்த நிலையில் வாலிபர் பிணமாக மீட்கப்பட்டார்.
    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கூட நகரம் கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மூத்த மகன் அசோக் (வயது 32) பி.சி.ஏ. படித்துள்ளார். பல இடங்களில் வேலைக்கு சென்று வந்துள்ளார். 

    கடைசியாக ஓசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தார். கடந்த சில தினங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இவருக்கும் ஆம்பூர் அடுத்த வளையாம்பட்டு பகுதியைச் சேர்ந்த ரேவதி என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    வாலிபர் அசோக் சரிவர வேலைக்கு செல்வதில்லை, ஆன்லைனில் ரம்மி உள்ளிட்ட விளையாட் டுகளில் எப்போதும் மூழ்கி இருப்பார் இதனால் பல இடங்களில் கடன் வாங்கி விளையாடியுள்ளார். 

    மேலும் மனைவியின் நகைகளையும் அடகு வைத்து ஆன்லைன் விளையாட்டுகள் விளையாடி உள்ளார். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு ஒரு மாதத்திற்கு முன்பு அவரது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அசோக் நேற்று மனைவியை அழைத்து வர செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் நேற்று மாலை மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

    வீட்டின் மாடியில் தனியாக வசித்து வரும் அசோக்கிற்கு அவர்கள் பெற்றோர்கள் நேற்று இரவு உணவு கொடுத்தார். 

    இந் நிலையில் இன்று அதிகாலையில் அசோக்கின் வீட்டிற்கு பின்புறம் எரியும் வாடை வந்துள்ளது அக்கம்பக்கத்தினர் போய் பார்த்தபோது அசோக் எரிந்த நிலையில் இறந்து கிடந்தார் இடுப்புக்கு கீழே முழுவதும் எரிந்து கால்கள் எரிந்து துண்டாகி உள்ளன.இதுகுறித்து உடனடியாக குடியாத்தம் தாலுகா போலீசாருக்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்-பெக்டர்கள் சிவச்சந்திரன், குணசேகரன், பெருமாள் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    கருகிய நிலையில் இருந்த அசோக்கின் சடலத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அசோக்கின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    வாலிபர் அசோக் ஆன்லைன் ரம்மியில் பல ஆயிரம் இழந்ததாலும், மனைவி வாழாமல் தாய் வீட்டிற்கு சென்று விட்டதாலும் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாராவது கொலை செய்து எரித்து விட்டார்களா என்ற பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. 

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    ×