என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக்கோரி ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற்றுகை
வேலூரில் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டம்
வேலூரில் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சிநகர் மந்தைவெளியில் பாலாற்றங்-கரையை ஒட்டி குடியிருப்பு பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்த கடைக்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கடந்த வாரம் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடையை திறக்க கோரி அவர்களுக்கு போட்டியாக ஆண்கள் சிலர் போராட்டத்தில் இறங்கினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த திங்கட்கிழமை வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் சத்துவாச்சாரி பகுதியை சேர்ந்த பெண்கள் டாஸ்மாக் கடையை மூடக் கோரி மனு அளித்தனர். அதற்கு பிறகும் அதிகாரிகள் எந்த விதமான நடவடிக்கை எடுக்காமல் கடையை திறந்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று காலை மாதர் சங்க மாநில துணைத்-தலைவர் சங்கரி தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் டாஸ்மாக் கடை முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இன்று மதுக்கடை திறக்கப்படவில்லை.
மேலும் சாமினா பந்தல் போட முயற்சி செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த சத்துவாச்சாரி போலீசார் அங்கு வந்து பந்தல் போடுவதை தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கடையை நிரந்தரமாக மூடுவோம் என அதிகாரிகள் உறுதி அளிக்கும் வரையில் இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் என அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக மாதர் சங்க மாநில துணைத்தலைவர் சங்கரி கூறுகையில்;
சத்துவாச்சாரி குறிஞ்சி நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் கடை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போது எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் கடை மூடப்பட்டது.
கடந்த 7-ந் தேதி முதல் மீண்டும் கடையை திறந்து வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த வழியாக காட்பாடிக்கு கல்லூரி பள்ளிகளுக்கு மாணவிகள் மற்றும் பெண்கள் செல்கின்றனர். அவர்களைப் பார்த்து குடி போதையில் இருப்பவர்கள் கேலி கிண்டல் செய்ய ஆரம்பித்துவிட்டனர்.
நேற்று மாணவிகள் வந்த போது சிலர் மது போதையில் தண்ணி தொட்டி தேடி வந்த குட்டிகளே வாங்க என்று பாட்டுப் பாடி ஈவ்டீசிங் செய்துள்ளனர்.
இந்த இடத்தில் டாஸ்மாக் கடை தொடர்ந்தால் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இந்த மதுகடையை உடனடியாக மூடவேண்டும் என்றார்.
Next Story






