என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்
சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு
சத்துவாச்சாரியில் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் மனு அளித்தனர்.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.
வேலூர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த பெண்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
வேலூர் சத்துவாச்சாரி குறிஞ்சி நகர் நேதாஜி நகர் ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் திரண்டு போராடினோம் ஆனாலும் கடை மூடப்படாமல் அதே இடத்தில் உள்ளது.
குடியிருப்புக்கு மிக அருகில் திறக்கப்பட்டுள்ள இந்த கடையால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அந்த வழியாக பள்ளி கல்லூரி மாணவிகள் காட்பாடிக்கு சென்று வருகின்றனர்.அவர்களுக்கும் இடையூறு ஏற்படும். இதனால் டாஸ்மாக் கடையை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்; சதுப்பேரி ஏரி கால்வாய் ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக அந்த பகுதியில் வீடுகளை இடித்து வருகின்றனர். இதுவரை 30&க்கும் மேற்பட்ட வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து அந்த பகுதியில் வீடுகளை இடிக்கும் பணி நடந்து வருகிறது.
அங்குள்ள பொதுமக்கள் அனைவரும் ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். கூலித்தொழிலாளர்கள். வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
வேலூர் மாவட்ட ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் திரண்டு வந்து மனு அளித்தனர். அதில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகிறோம்.
கடந்த 2 ஆண்டுகளாக எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வில்லை. ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் எங்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும் என கூறியிருந்தனர்.
Next Story






