என் மலர்tooltip icon

    வேலூர்

    • போலீசாருடன் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.
    • போதையில் கத்தியால் குத்த வருவதாக புகார்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள சின்னப் பாலம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி சுபாஷினி. தம்பதிக்கு பெண் குழந்தைகள் உள்ளனர். வேல்முருகன் குடிபோதையில் மனைவி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.

    இது தொடர்பாக புகார் மனு கொடுக்க இன்று காலை சுபாஷினி வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். மனு கொடுப்பதற்காக காயிதேமில்லத் அரங்கு அருகே உள்ள கவுண்டரில் பொதுமக்களுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அவரது கணவர் வேல்முருகன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.

    மனு கொடுக்கும் இடத்தில் சுபாஷினி நிற்பதை கண்ட அவர் கடும் ஆத்திரமடைந்தார். சுபாஷினியை கையால் பிடித்து இழுத்து மனு கொடுக்க விடாமல் தடுத்தார்.

    அப்போது சுபாஷினி கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கிருந்த போலீசார் வேல்முருகனை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் அவர் எனது மனைவியை நான் அழைத்துச் செல்கிறேன் உங்களுக்கு என்ன என கேள்வி எழுப்பினார். சத்தம் கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு வாங்கிக்கொண்டிருந்த அதிகாரிகளும் வெளியே வந்தனர்.

    தொடர்ந்து வேல்முருகன் அவரது மனைவியை இழுத்து செல்ல முயன்றார். அப்போது போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். இதில் அவர்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வேல்முருகனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இது குறித்து சுபாஷினி கூறுகையில்:-

    ஓய்வு பெற்ற ராணுவ வீரரான வேல்முருகனுக்கும் எனக்கும் திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது. அவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறு செய்கிறார். போதையில் கத்தியால் குத்த வருகிறார். மேலும் வீட்டில் அமர்ந்து நண்பர்களுடன் மது குடிக்கிறார்.இதனால் அவரிடம் இருந்து என்னை காப்பாற்ற வேண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • மர்ம நபர்கள் பணம் கேட்டு மிரட்டல்.
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் குமார் அவரது வீட்டை ஒட்டியே நகை அடகு கடை வைத்துள்ளார்.

    இன்று காலை அவரது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்து சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மகேஷ்குமாரிடம் மர்ம நபர்கள் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அவர் பணம் தர மறுத்ததால் அவரது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குறைதீர்வு கூட்டம் இன்று நடந்தது.
    • குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் இன்று நடந்தது. இதில் ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணைச்செயலாளர் நிஜாமுத்தீன் அஸ்லம் தலைமையில் மாவட்ட பொருளாளர் கலீல், துணை அமைப்பாளர் நமீம், இஸ்மாயில் ஆகியோர் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கைக்குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலக வாசலில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் சத்துவாச்சாரி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.வேலூர் அடுத்த அரியூரில் வக்பு வாரிய நிர்வாகத்தில் உள்ள பள்ளிவாசலுக்கு சொந்தமாக பல ஏக்கர் நிலங்கள் உள்ளது. அந்த பகுதியில் ஏழை எளிய மக்களுக்கு குடியிருக்க வீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கூறினர். பின்னர் அவர்கள் இது சம்மந்தமாக கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    பேச்சுவார்த்தைக்கு பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் கலெக்டர் அலுவலக வாசலில் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது.

    • போலீசார் ரோந்து சென்றபோது சிக்கினார்
    • பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் குடியாத்தம் அடுத்த சின்னாலபல்லி பகுதியில் கள்ளச்சாராய சோதனைக்காக ரோந்து சென்றனர்.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றை வைத்துக் கொண்டு வேகமாக வந்த வாலிபரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த வாலிபர் குடியாத்தம் அடுத்த மூங்கப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாதன் மகன் சுரேஷ் வயது 29 என்றும் பால் கறக்கும் தொழிலாளி என்றும் தெரியவந்தது.

    மேலும் அவரது அவர் கொண்டுவந்த மூட்டையை சோதனை செய்தபோது அதில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் சுரேஷ் மற்றும் செம்மரக்கட்டைகள், மோட்டார் சைக்கிளை குடியாத்தம் வனச்சரக அலுவலர் சரவணபாபுவிடம் ஒப்படைத்தார்.

    இதனையடுத்து குடியாத்தம் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்தனர் மேலும் அவர் கொண்டு வந்த 8 கிலோ எடையுள்ள செம்மர கட்டைகளையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    இந்த செம்மரக் கட்டைகளை சுரேஷ் எங்கிருந்து கொண்டு வந்தார். எங்கே கொண்டு சென்று கொண்டிருந்தார் என்ற பல்வேறு கோணங்களில் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரம்மபுரம் சஞ்சீவிபுரத்தில் நரிக்குறவர் குடியிருப்பில் உள்ளவர்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.
    • மலைக்குறவர்கள் பிரிவில் சேர்க்க வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடி அடுத்த பிரம்மபுரம் சஞ்சீவி புரத்தில் நரிக்குறவர் குடியிருப்பில் உள்ளவர்களிடம் குறைகேட்பு நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    அப்போது அவர்கள் நாங்கள் மலைக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள். எங்களை நரிக்குறவர் பிரிவில் சேர்த்து உள்ளனர். எனவே எங்களை மலைக்குறவர் பிரிவில் சேர்க்க வேண்டும். அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரவேண்டும் என அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்:-

    இப்பகுதியில் சாலை குடிநீர் கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரைவில் நிறைவேற்றி தரப்படும்.

    கடந்த 10 ஆண்டுகளாக எதிர்க்கட்சி எம்எல்ஏவாக இருந்ததால் உங்களுடைய அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர முடியவில்லை. தற்போது ஆளுங்கட்சியாக உள்ளதால் உங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றித் தரப்படும் எனத் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கதிர் ஆனந்த் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மாநகராட்சி துணை மேயர் சுனில்குமார், காட்பாடி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
    • ஆம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வருகிற 29,30-ந்தேதிகளில் நடைபெற உள்ளது.

    இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 28-ந்தேதி இரவு 7 மணியளவில் ஆம்பூருக்கு வருகிறார்.

    தொடா்ந்து, அவா் 29-ந் தேதி காலை 11 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

    பின்னர் வேலூர் வருகிறார். மதியம் 12.30 மணிக்கு விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பஸ் நிலையத்தைத் திறந்து வைக்கிறார். மாலை 4 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.

    30-ந் தேதி காலை ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்து அங்கும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். பின்னா், சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறாா்.

    இந்த விழாக்களில் அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசுத் துறை உயரதிகாரிகள் பங்கேற்கின்றனா். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையொட்டி விழா நடைபெறும் இடங்களில் மீண்டும் பணிகள் நடந்து வருகிறது. ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் பகுதிகளில் தீவிர சுகாதாரப் பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளும் நடந்து வருகிறது.

    முதல்-அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதல்வர் வருகையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து அவர் உத்தரவிட்டார்.

    முதல்-அமைச்சர் வருகை உறுதியானதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

    • போதை பொருட்களால் தனி மனிதனின் சிந்தனை ஆற்றல் குறைகிறது.
    • 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    வேலூர்:

    சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி வேலூர் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு சார்பில் கோட்டை காந்தி சிலை முன்பாக இருந்து விழிப்புணர்வு ஊர்வலம் இன்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.

    வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெள்ளை புறாக்களை பறக்க விட்டு கொடியசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.ஊர்வலத்தில் போலீசார், போலீஸ் பயிற்சி பள்ளி மாணவிகள், என்சிசி மாணவர்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி மக்கான், அண்ணா சாலை வழியாகச் சென்று நேதாஜி மைதானத்தில் முடிவடைந்தது.

    இதில் எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார் கார்த்திகேயன் மேயர் சுஜாதா ஆனந்தகுமார் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் போதை பொருள் தடுப்பு குறித்து நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் பேச்சு போட்டி உள்ளிட்டவைகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சான்றுகளை வழங்கி பேசியதாவது:-

    மது மற்றும் போதை பொருட்களால் தனி மனிதனின் சிந்தனை ஆற்றல் குறைகிறது. மேலும் அவர் அந்த போதைக்கு அடிமையாகி பொருளாதாரத்தை இழக்கிறார். இதனால் சமுதாயத்திற்கும் பாதிப்பு.மேலும் சுற்றுசூழலுக்கும் கேடு ஏற்படுகிறது.ஆகவே யாரும் போதை பொருட்களுக்கு அடிமையாக கூடாது என்பதை விளக்கி கூறி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று பேசினார்.

    • 11 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம்.
    • ரூ.1.92 கோடி இழப்பீடு.

    வேலூர்:

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 11 கோர்ட்டுகளில் மக்கள் நீதிமன்றம் இன்று நடந்தது. இதில் விபத்து இழப்பீடு நில ஆர்ஜிதம் மற்றும் வங்கி கடன் உள்ளிட்ட வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

    சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான வசந்த லீலா தலைமை தாங்கி திருப்பத்தூரில் நிலம் ஆர்ஜிதம் செய்த வழக்கில் ரூ.1.92 கோடி இழப்பீடாக வழங்கினார்.

    சத்துவாச்சாரியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வாகன விபத்தில் இறந்ததால் அவரது மனைவியிடம் ரூ.13 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

    • வி.ஐ.டியில் திறன் மேம்பாட்டு பயிற்சி நிறைவு விழா
    • வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது.

    வேலூர்:

    பள்ளிக் கல்வியில் கடைசி இடத்திலுள்ள வேலூரை சிறப்பான இடத்துக்கு முன்னேற்ற ஆசிரியர்கள் மேலும் சிறப்பாக செய லாற்ற வேண்டும் என்று விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பயிலும் மாணவர்க ளின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் சீரமைக்கப்பட் டுள்ளதை அடுத்து மாநில முழுவதும் உள்ள தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள இணைய வழி திறன் மேம்பாட்டுப் பயிற்சி மையங்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

    வேலூர் மாவட்ட தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கணினி மையத்தில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் அளிக்கப்பட்டது. இதன் நிறைவு நாள்நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில், விஐடி வேந்தர் கோ.விசு வநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பாராட்டி பேசியதாவது:-

    மாணவர்களின் கல்வி மேம்பட திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்கல்வி அளிக்கப்பட இருப்பது அவர்களுக்கு நன்மை அளிக்கும். மேலும் பள்ளிக்கல்வியில் கடைசி இடத்தில் உள்ள வேலூர் மாவட்டத்தை சிறப் பான இடத்துக்கு முன்னேற்ற ஆசிரியர்கள் மேலும் சிறப்பாக செயலாற்ற வேண்டும் என்றார்.

    முன்னதாக, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி முன் னிலை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் செ.நா.ஜனார்த்தனன் வர வேற்றார். க.ராஜா,எஸ்.ரமேஷ், எம். நாகலிங்கம், கே.பழனி, இ.ராமன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். தொழிற்கல்வி ஆசிரியர் கள் சு.செல்வபாரதி, க.சத்யபாமா, ஜி.பொற்செல்வி, ஜி.பழனி, டி.பிச் சாண்டி, எஸ்.கோபி, கே.பி.சிவஞா னம், எஸ்.பிச்சைகண்ணு, ராணிப் பேட்டை மாவட்டத்தின் சார்பில் வேலாயுதம், சந்திரன், அசோகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • ஆற்காட்டில் அரிசி, விதை திருவிழா கண்காட்சி நடந்தது
    • ஏராளமாேனார் கலந்து கொண்டனர்

    வேலூர்:

    உடல் நலத்திற்கு உகந்த உணவு உற்பத்தி அதிலும் இயற்கை உணவு உற்பத்தி, பாரம்பரிய உணவு உற்பத் தியை விவசாயிகளுக்கு பறை சாற்றும் வகையில் தொண்டை மண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு தொடங் கப்பட்டது. இந்த அமைப் பின் மூலம் ஆற்காடு அரிசி மற்றும் விதைத் திருவிழா 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு விழா ஆற்காடு தக்காங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கே.எம்.இயற்கை வழி வேளாண் பண்ணை யில் நடைபெற்றது. இதை யொட்டி நெல், கரும்பு, தென்னை, பாரம்பரிய வேளாண் உற்பத்தி உள்ளிட்ட 120க்கும் மேற்பட்ட அரங்குகள் அடங்கிய வேளாண் கண்காட்சி அமைக் கப்பட்டது.

    தொடக்க விழாவிற்கு இலவச முதி யோர் இல்ல தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். கூட்டமைப் பின் முதன்மை ஒருங்கி ணைப்பாளர் விமல் ஜி.நந்தகுமார், கே.எம் இயற்கை வழி வேளாண் பண்ணை நிறுவனர் கே.எம்.சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வேலூர் நறுவீ மருத்துவமனை தலைவர் ஜி.வி. சம்பத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வேளாண் கண்காட்சியை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தமிழ் மக்களின் முக்கிய அடையாளமே இயற்கை வேளாண்மை மூலம் உணவு உற்பத்தி செய்வது தான்.

    தமிழர்களின் அடை யாளங்கள் தற்போது சிறிது சிறிதாக அழிந்து வருகிறது. அதில் ஒன்றுதான் பாரம்பரிய உணவு வழக்கம். இப் போது, அந்த பாரம்பரிய உணவு உற்பத்தியை தொடங்கி உள்ளனர். அதன் எதிரொலி தான் இந்த நிகழ்ச்சி.

    அடுத்த தலைமுறை யினருக்கு நாம் ஆரோக்கிய வாழ்வு கொடுக்க இயற்கை முறை உணவு அவசியம். உடல் பாதிப்பு இல்லாத வகையில் ராசயன உரங்களை தவிர்த்து இயற்கை உரம் பயன்படுத்தும் நிலை வரவேண்டும். அது பற்றி இந்த திருவிழாவில் வேளாண் பெருமக்களுக்கு எடுத்து ரைக்க வேண்டும்.

    பாரம்பரிய இயற்கை முறை உணவு உற்பத்தி மற்றும் விளை பொருட் களுக்கான உரிய விலைகிடைப்பது ஆகியவற்றை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இதுபோன்ற நிகழ்ச்சி கள் அதிகளவில் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில், மேட்டுப் பாளையம் உயிராற்றல் வேளாண்மை பயிற்சி மைய பயிற்றுனர் முன் னோடி விவசாயி நவநீத கிருஷ்ணன், சென்னை மண் வாசனை அமைப் பின் பிரதிநிதி மேனகா, இயற்கை விவசாய அமைப்பின் கீதா பிரிய தர்ஷினி, பாரம்பரிய விதைகள் சேகரிப்பாளர் பிரியா, வெல்லூர் கிச்சன் உரிமையாளர் கே.ஜி. புண்ணியகோட்டி பலர் கலந்து கொண்டனர்.

    • யாரும் மனுதாக்கல் செய்யவில்லை
    • கிராம மக்கள் புகார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்து 623 வாக்காளர்கள் உள்ளனர்.

    தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவி எஸ்.டி.பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தட்டப்பாறை ஊராட்சியில் எஸ்.டி. பிரிவினர் யாரும் வசிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் தட்டப்பாறை ஊராட்சிக்கு எஸ்.டி.பெண்கள் பிரிவில் ஒரே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது அந்த மனுவிலும் ஜாதி சான்று சரியானபடி இல்லை என்று தள்ளுபடி செய்யப்பட்டது.அதனால் தட்டப்பாறை ஊராட்சிக்கு தேர்தல் நடைபெறவில்லை முன்னதாக அந்த ஊராட்சி பொதுமக்கள் தட்டப்பாறை ஊராட்சியில் எஸ்.டி.வகுப்பினர் யாரும் வசிக்கவில்லை அதுபோல் மனு அளித்தது தேர்தலில் போட்டியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கடந்த ஆண்டு மனு அளித்திருந்தனர்.

    இந்நிலையில் கடந்த ஆண்டே தட்டப்பாறை ஊராட்சி எஸ்.டி.பெண்கள் என ஒதுக்கப்பட்டதை ரத்து செய்து பொதுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என தட்டப்பாறை கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தனர். இதுகுறித்து குடியாத்தம் உதவி கலெக்டர் விசாரணை செய்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அனுப்பி இருந்தார்.

    இந்நிலையில் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியம் தட்டப்பாறை ஊராட்சிக்கு மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. மீண்டும் எஸ்.டி.பெண்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இந்த எஸ்டி பெண்கள் பிரிவு நீக்க வேண்டுமென தேர்தலை ஆணையத்திற்கும், தமிழக அரசுக்கும் பொதுமக்கள் மனு அளித்திருந்தனர் ஆனால் மீண்டும் எஸ்டி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது.

    இந்த தட்டப்பாறை ஊராட்சி மன்றத் தேர்தலுக்கு 20ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனாலும் நேற்று சனிக்கிழமை மாலை வரை ஒருவரும் மனுதாக்கல் செய்யவில்லை.

    நிலையில் தட்டப்பாறை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலரும், தட்டப்பாறை ஊராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரான எம்.கார்த்திகேயன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், துணை வட்டார வளர்ச்சி அலுவலருமான எம். தமிழ்வாணனிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்து 2019 ஆம் ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தட்டப்பாறை ஊராட்சி கான ஊராட்சி மன்றத் தலைவர் பதவியானது பெண்கள் பொதுப் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனையடுத்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலின்போது தட்டப்பாறை ஊராட்சி எஸ். டி. பெண்கள் பிரிவிற்கு ஒதுக்கப்பட்டது இதுகுறித்து கிராமத்தின் சார்பில் ஆட்சேபனை தெரிவித்து மனு அளித்தும், நீதிமன்றம் சென்றும் எங்கள் பகுதியில் எஸ்டி பிரிவினர் யாரும் இல்லை என்பதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது தற்போது மீண்டும் எஸ்டி பெண்கள் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் போலியான சான்றிதழ் கொடுத்து சிலர் மனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல்கள் வந்துள்ளதால் எங்கள் பகுதியில் எஸ்.டி. பிரிவினர் யாரும் இல்லை என்பதாலும் தட்டப்பாறை ஊராட்சி மன்ற தலைவர் பதவியை மகளிர் பொதுப்பிரிவில் ஒதுக்கித் தந்து மகளிருக்கான பிரதிநிதித்துவம் கிடைத்திட ஆவன செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம் என மனு அளித்தனர்.

    இதுகுறித்து மனுவை பெற்றுக்கொண்ட தேர்தல் அதிகாரிகள் இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்தனர்.

    • தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள பரோல் வழங்க வேண்டும் என நளினி கோரிக்கை வைத்தார்.
    • வருகிற 26.07.2022 வரை மேலும் 30 நாட்கள் நளினி பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    வேலூர்:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் தனிச்சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    அவரது தாயார் பத்மாவதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை கவனித்துக்கொள்ள தனக்கு பரோல் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

    இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 27-ந்தேதி நளினிக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது. பரோலில் உள்ள நளினி தனது தாயார் பத்மாவுடன் காட்பாடி அடுத்த பிரம்மபுரத்தில் தங்கியுள்ளார்.

    தொடர்ச்சியாக 5 முறை நளினிக்கு பரோல் நீட்டிக்கப்பட்ட நிலையில் நாளை ஜெயிலுக்கு திரும்ப இருந்தார். இந்நிலையில் தனது உடல்நிலையைக் காரணம் காட்டி நளினியின் தாயார் பத்மா நளினிக்கு மேலும் பரோல் நீட்டிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனு அளித்தார்.

    இதனைத் தொடர்ந்து நளினிக்கு 6-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. வருகிற 26.07.2022 வரை மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    ×