என் மலர்
வேலூர்
- துபாய், குவைத் உள்பட 123 மையங்களில் நடந்தது.
- 6-ந்தேதி வரை நடக்கிறது
வேலூர்:
விஐடியில் பிடெக் பட்டப்படிப்பில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு இன்று துவங்கியது. வருகிற 06-ம் தேதி வரை முறையில் துபாய், குவைத், மஸ்கட் மற்றும் கத்தார் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் உள்நாட்டிலுமாக 123 மையங்களில் இந்த நுழைவுத் தேர்வு கணினி முறையில் நடைபெறுகிறது.
நுழைவுத் தேர்வு முடிவுகள் ஜூலை 8-ந்தேதி www.vit.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு அன்றைய தினமே ஆன்லைன் கலந்தாய்வு துவங்குகிறது.
விஐடி வேலூர் வளாகத்தில் உள்ள நுழைவுத் தேர்வு மையத்தில் நடைபெற்ற நுழைவுத் தேர்வினை வி ஐ டி துணைத்தலைவர்கள் டாக்டர்.சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் துணை வேந்தர் டாக்டர்.ராம் பாபு கோடாளி, இணை துணை வேந்தர் டாக்டர்.எஸ்.நாராயணன், ஆகியோர் பார்வையிட்டனர்.
ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி மத்திய, மாநில கல்வி வாரியம் நடத்தும் +2 தேர்வில் மாநில அளவிலான முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு விஐடி பல்கலைக்கழகத்தின் ஜிவி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பிடெக் படிப்பு பயிலும் 4 ஆண்டுகால முழுவதும் 100 சதவீத படிப்பு கட்டண சலுகை வழங்கப்படுகிறது. அத்துடன் விஐடி நுழைவுத்தேர்வில் 1 முதல் 50 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 51 முதல் 100 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 101 முதல் 1000 ரேங்குக்குள்ளாக தகுதி பெறும் மாணவ, மாணவியருக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் 4 ஆண்டு கால முழுவதும் வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திர பிரதேஷ் மற்றும் மத்திய பிரதேஷில் உள்ள கிராமபுற பகுதிகளை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தின் மாணவ, மாணவியரும் விஐடி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயிலும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட அளவில் +2 தேர்வில் முதலிடம் பெறும் மாணவ, மாணவியருக்கு 100 சதவீத படிப்பு கட்டண சலுகையுடன் அவர்களுக்கு உணவு மற்றும் விடுதி வசதியுடன் விஐடி பல்கலைக்கழகத்தில் இலவச சேர்க்கை வழங்கப்படுகிறது.
- வேலூரில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு
- 24 பணிகள் ரூ.334 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.
வேலூர்:
வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் எ.வ.வேலு, காந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வரவேற்றார். எம்.பி.கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், அமலு விஜயன், மேயர் சுஜாதா ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு முடிவற்ற திட்டப்பணிகள், புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், பல்வேறு துறைகள் வாரியாக நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என மொத்தம் ரூ.455 கோடியே 82 லட்சத்துக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அவருக்கு அமைச்சர் துரைமுருகன், எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வேலூர் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பாபு ஆகியோர் வெள்ளி செங்கோல்களையும், கதிர் ஆனந்த் எம்.பி. வெள்ளியிலான வீர வாள் வழங்கினர்.
விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
வேலூர் வீரத்தின் அடையாளம். விவேகத்தின் அடையாளம் விடுதலை, நல்லிணக்கம் மற்றும் போர்க்களத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது.
வரலாற்று சிறப்பு மிக்க வேலூரில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மாவட்டத்தின்அ மைச்சரும் பொதுச்செயலாளருமான துரைமுருகனை கலைஞர், பேராசிரியர் இடத்தில் வைத்து பார்க்கிறேன்.
அனைத்து தரப்பு மக்களுக்கும் பாடுபடும் அரசாக தி.மு.க. திகழ்கிறது. அதுதான் திராவிட மாடல் அரசு. இந்த மாடல் ஆட்சிதான் இந்தியா முழுவதும் வழிகாட்டும் அரசாக திகழ்கிறது. இந்த தருணத்தில் வேலூரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது அனைத்து தரப்பினரையும் பாராட்டுகிறேன்.
ஓராண்டில் வேலூர் மாவட்டத்திற்கு செய்த திட்டங்கள் என்ன என்று அதிகாரியிடம் கேட்டேன் அப்போது ஒரு புத்தகம் கையில் கொடுத்தார்கள் அந்த அளவிற்கு வேலூருக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்ப ட்டுள்ளன இதை செய்ததால் தான் தற்போது உங்கள் முன்பு கம்பீரமாக நிற்கிறேன். வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.963 கோடியில் 52 பணிகள் தேர்வு செய்யப்பட்டு 24 பணிகள் ரூ.334 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகொண்டா, ஒடுக்கத்தூர் பேருராட்சியில் சாலை மற்றும் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பேரணாம்பட்டு சாலை பணியும் நடைபெற்று வருகிறது.
வடுங்கதாங்கல் பகுதியில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் ரெயில்வெ பாலம் கட்டப்பட்டுள்ளது. 12 புதிய பால் உற்பதியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு திட்டத்தில் 704 அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.61 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. 7,340 அமைப்புசார தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடியே 73 லட்சம் மதிப்பில் உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது.
இலவச வீட்டு மனை
வேலூர் மாவட்டத்தில் 4,467 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
கூட்டுப்பண்ணை திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட 16 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ50 லட்சம் மூல நிதி வழங்கப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர் திட்டத்தின் மூலம் 7,897 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 12,415 தகுதிவாய்ந்த நபர்கள் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். 1,915 உழவர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது. பல ஹெக்டேர் கணக்கில் ஆக்கிரமிப்பு நிலங்கள் அற்றப்பட்டுள்ளது.
அகரம் ஆற்றின் குறுக்கே கோவிந்தம்பாடி கிராமத்தில் தடுப்பணை, பாலாற்றின் குறுக்கே பொய்கை கிராமத்தில் தடுப்பணை, சேண்பாக்கத்தில் தரைகீழ் தடுப்பணை,
பொன்னை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட குகையநல்லூரில் கிராமத்தில் தடுப்பணை என ரூ.58 கோடி மதிப்பீட்டில் கட்டும்பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
பழுதுபார்த்தல் மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ் 9 ஏரிகளை புணரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மலை கிராமத்திற்கு தார்சாலை, தொரப்பாடி, பத்திலப்பல்லியில் குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது.
நீர்வளத்துறை அமைச்சர் கேட்டதற்காக காட்பாடி மகிமண்டலத்தில் 300 ஏக்கரில் சிப்காட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாகும்.
மேல்மொணவூர், அப்துல்லாபுரம் கிராம பகுதியில் 5 ஏக்கரில் டைடல் பார்க் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
குடியாத்தம்
குடியாத்தம் புறவழிச்சாலை 7 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.228 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
வேலூர் வட்டச் சாலை 9 கிராமங்களை இணைக்கும் வகையில் ரூ.328 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக தற்போது நில எடுப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
வேலூர்
வேலூர் புறவழிச்சாலை சுமார் ரூ.220 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
காட்பாடி காங்கேயநல்லூரில் இருந்து சத்துவாச்சாரி பகுதிக்கு பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் கட்டப்பட உள்ளது.
காட்பாடி சேர்க்காட்டில் 6 ஏக்கரில் அரசு பல்நோக்கு மருத்துவமனை அமைக்கப்படும். அங்கு 6 ஏக்கரில் புதிய அரசு கலை கல்லூரியும் கட்டப்படும்.
வல்லம் மற்றும் கீழ்பள்ளிக்குப்பம் இடையே ரெயில்வே மேம்பாலம் ரூ.181 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
முடிவில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.
- மாநில, மத்திய அரசின் அனுமதியை பெறாமல் கர்நாடகா அணையைக் கட்ட முடியாது.
- காவிரி நீர் உரிமையைப் பெறுவதில், திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகளில் ஒன்று காவிரிப் பிரச்னை. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரில் முழு உரிமை இருக்கிறது. எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில், திமுகஅரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்! வாதாடும்! என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.
தனது உரிமையை நிலைநாட்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதன்படிதான் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு - மேகதாது என்ற புதிய அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது.
அதைத் தொடக்கத்தில் இருந்தே நாம் எதிர்த்து, தடுத்து வருகிறோம். ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கிற பொழுது எல்லாம், பொழுது போகவில்லை என்றால், உடனே அதைப் பற்றி தொடங்கிவிடுகிறார்கள். அணை கட்ட நிதி ஒதுக்குவது, சட்டம் போடுவது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, டெல்லிக்குப் படையெடுப்பது என்று
செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யும்போதெல்லாம், நாமும் அவற்றுக்குத் தடுப்பணை போடும் காரியங்களைச் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்னால், கர்நாடக அரசு இதில் அதிகமான முனைப்பைக் காட்டியது.
காவிரி ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டுமென்று சொன்னார்கள். உடனடியாக, நான் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். மேகதாது தொடர்பாக விவாதிக்கக் கூடாது அப்படி என்று வலியுறுத்தி, வற்புறுத்தி பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர், டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்து, மேகதாது அணைக்கு ஆதரவா பேசிவிட்டு வந்திருக்கிறார்கள்.
உடனடியாக, நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர், காவிரிப் பிரச்சனையில் அத்துப்பிடி அவருக்கு. எந்த நேரத்தில், எதைக் கேட்டாலும், தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பிக் கேட்டால் கூட அந்த காவிரிப் பிரச்சனையில் பட்டு, பட்டு என்று அப்படி Finger tips-ல் வைத்திருப்பார். அவர்தான் அன்றைக்கு அந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்.
ஆகவே அவருடைய தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் எல்லாம் அழைத்துப் பேசி முடிவெடுத்து, ஒரு குழு அமைத்து, அந்தக் குழு டெல்லிக்கு போனது. அவருடைய தலைமையில் தான் போனார்கள். மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் போய் சந்தித்து நமது தரப்பினுடைய வாதங்களை வலியுறுத்தி சொல்லியிருந்தார்கள்.
ஆகவே டெல்லிக்கு சென்று அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கு உடன்பாடு இல்லாமல், எந்தக்காரியத்தையும் காவிரிப் பிரச்னையில் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரிடம் வாக்குறுதி பெற்று வந்திருக்கிறது நம்முடைய குழு.
அந்த உறுதியைப் பெற்றுத்தான் அண்ணன் துரைமுருகன் சென்னைக்கு வந்தார்கள். அதேபோல், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க மாட்டோம் அப்படி என்று அந்த அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.
இப்போது தற்சமயத்தில், கூட்ட விவரத்தில் இருந்து மேகதாது விஷயத்தை நீக்கி விட்டார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, தொடர்புடைய மாநிலத்தின் அனுமதியைப் பெறாமல், மத்திய அரசின் அனுமதியையும் பெறாமல் அணையைக் கட்ட முடியாது.
ஆகவே, கர்நாடக அரசின் முடிவானது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனவே, கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும், மத்திய அரசு தரக்கூடாது என்பதை இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இப்படி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்காகவும், எந்த சமரசங்களுக்கும் இடமில்லாமல் போராடக்கூடிய, வாதாடக்கூடிய அரசு தான் திமுக அரசு. நிதி உரிமை வேண்டும், சமூகநீதி உரிமை வேண்டும், காவிரி உரிமை வேண்டும், கல்வி உரிமை வேண்டும் என்று குரல் கொடுப்பதால், இது ஏதோ மத்திய அரசுக்கு எதிரான குரலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.
ஒரு சிலரால். இல்லை இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான குரல்கள்தான் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. ஆளும் கட்சியாக இருக்கும்போதும், தீட்டக்கூடிய திட்டமாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வைக்கும் கோரிக்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுடைய நலனுக்காக மட்டுமே. அப்படித்தான் திமுக எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- ரூ. 54 ேகாடியில் கட்டப்பட்டுள்ளது.
- ரூ.360 கோடியில் நலதிட்ட உதவிகள் வழங்கினார்.
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று முதல் 2 நாட்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும் புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
இதற்காக நேற்று இரவு சென்னையில் இருந்து கார் மூலம் ஆம்பூர் வந்து தங்கினார்.
திருப்பத்தூரில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய கலெக்டர் அலுவலக திறப்பு விழா மற்றும் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் உள்ள டான்போஸ்கோ பள்ளியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலையில் ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி, ஜோலார்பேட்டை வழியாக காரில் திருப்பத்தூருக்கு புறப்பட்டு சென்றார்.
வழி நெடுகிலும் அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
கலெக்டர் அமர் குஷ்வாஹா தி.மு.க நிர்வாகிகள் புத்தகங்கள், சால்வை ஆகியவற்றை வழங்கி மு.க ஸ்டாலினை வரவேற்றனர்.
பின்னர் புதிய கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.தொடர்ந்து குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் கலெக்டர் அறையில் அமர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மைதானத்திற்கு முதல்-அமைச்சர் சென்றார்.
அங்கு பல்வேறு துறைகளின் சார்பில் 16,820 பயனாளிகளுக்கு ரூ.103 கோடியே 42 லட்சத்து 51,541 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கலெக்டர் அமர்குஷ்வாஹா, எம்.எல்.ஏ.க்கள் தேவராஜ், நல்லதம்பி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருப்பத்தூர் நகரமே இன்று காலை விழா கோலம் பூண்டிருந்தது.
திருப்பத்தூரில் நடைபெற்ற விழா நிறைவடைந்ததும் அங்கிருந்து காரில் வேலூருக்கு முதல்அமைச்சர் புறப்பட்டு வந்தார்.ரூ.54 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ள வேலூர் புதிய பஸ் நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன், கதிர் ஆனந்த் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் நந்தகுமார், கார்த்திகேயன், மேயர் சுஜாதா, துணைமேயர் சுனில்குமார், கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் அலுவலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
இன்று மாலை 4.30 மணிக்கு வேலூர் கோட்டை மைதானத்தில் அரசு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கிறது. இதில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.விழாவில் வேலூர் மாவட்டத்தில் ரூ.62 கோடியே 10 லட்சத்தில் முடிவற்ற 17 திட்ட பணிகளை திறந்து வைத்தும், ரூ.32 கோடியே 89 லட்சம் மதிப்பில் 50 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்அமைச்சர் மு.க ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பல்வேறு துறைகளின் சார்பில் 30,423 பயனாளிகளுக்கு ரூ.360 கோடியே 53 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.
விழாவில் நலத்திட்ட உதவிகள் பெரும் பயனாளிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடல் வெப்பநிலை விழா தொடங்கும் முன்பாக பரிசோதனை செய்யப்பட உள்ளது.அதில் அவர்களுக்கு எந்தவித பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே முதல் அமைச்சரிடம் இருந்து நலத்திட்ட உதவிகள் பெற அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் விழாவில் கலந்து கொள்ளும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொரோனா தடுப்பு விதிகள் விழாவில் பின்பற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல்மைச்சர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
விழா நிறைவடைந்ததும் முதல்மைச்சர் மு. க.ஸ்டாலின் ராணிப்பேட்டை செல்கிறார். அங்குள்ள தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை காலை ராணிப்பேட்டை புதிய கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
- முதலுதவி அறை, மின்வாகனங்களுக்கு சார்ஜ் ஏற்றலாம்
- கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்.
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீட்டின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக வேலூர் புதிய பஸ் நிலையம் நவீன மயமாக்களுடன் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு 12.02.2020 அன்று பூஜை போடப்பட்டு 2 ½ ஆண்டுகளுக்கு பின் தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
வேலூர் புதிய பஸ் நிலையம் ரூ.53 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 9.25 ஏக்கர் பரப்பளவில் 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரே நேரத்தில் மொத்தம் 84 பஸ்கள் நிற்க முடியும். இதன் முகப்பு கட்டிடத்தில் 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
வெளியில் 1450 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்கிங் வசதி, பஸ் நிலையம் பின்புறம் உள்ள அடுக்குமாடி கார் பார்க்கிங்கில் 300 கார்கள் வரை நிறுத்த முடியும். பஸ் நிலையத்தின் குடிநீர் தேவைக்கு ஆர்.ஓ. பொறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 500 லிட்டர் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ய முடியும்.
பஸ் நிலைய தண்ணீர் தேவைக்காக காவேரி கூட்டு குடிநீர் திட்டம், பாலாறு குடிநீர் மற்றும் பஸ் நிலையத்திலேயே உள்ள கிணற்று நீரையும் பயன்படுத்த உள்ளனர்.
மேற்கு பக்கம் 2 நுழைவு வாயில், கிழக்கு பக்கம் 2 நுழைவு வாயில் உள்ளது. பஸ் நிலையத்தின் மொத்த மின் தேவை 200 கிலோ வாட் ஆகும். இதில் ஒரு சிறிய குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை சோலார் போர்டு மூலம் பெற உள்ளனர். மின் சிக்கனத்திற்க்காக முழுவதும் எல்.இ.டி பல்புகள் பயன்படுத்தப்பட உள்ளது. முகப்பு கட்டிடத்தின் இரண்டு பக்கமும் 2 லிப்டுகள், 4 படிக்கட்டுகள் உள்ளது. 4 உயர் கோபுர விளக்குகள் உள்ளன.
பஸ் நிலையம் முழுவதும் 24 சி.சி.டி.வி. கேமிராக்ள் பொறுத்தப்பட்டுள்ளன.
மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதியும் இதில் உள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் முதலுதவி அறையும் உள்ளது. தாய்மார்கள் பாலுட்டும் அறை, பயணிகள் ஓய்வு அறை, டிரைவர்கள் ஓய்வு அறை, காவல் கண்காணிப்பு கோபுரங்கள், 7 கழிவறைகள் உள்ளது. மேலும் பஸ் நிலையை மழை நீர் வெளியேறி பூமிக்கு அடியில் சேமிக்கும் வகையில் 2 மீட்டர் ஆழத்துக்கு வடிகால் அமைப்பு ஏற்படுத்த ப்பட்டுள்ளது.
கழிவு நீர் வெளியேற 250 மீட்டர் தொலைவிற்க்கு பாதாள சாக்கடை திட்டம் செயல்ப டுத்தப்பட்டுள்ளது. கழிவு நீர்கள் முத்துமண்டபம் பகுதியில் உள்ள சுத்திகரிப்பு நிலையம் மூலம் சுத்திகரித்து மறு சுழற்சி செய்யப்படும். பஸ் நிலையத்தில் உள்ள கடைகளுக்கு அரசு மதிப்பீடு தயார் செய்து வருவதாகவும் விரைவில் பொது ஏலம் விட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
- தலைவர்களின் பெயரை சூட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
- வளைவுக்கு அண்ணா நூற்றாண்டு என பெயர் சூட்டப்பட்டுள்ளது
வேலூர்:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வேலூர் புதிய பஸ் நிலைய விரிவாக்கம் செய்யப்பட்டு நவீனமாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை புதன்கிழமை திறந்து வைக்கிறார்.
புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்களின் பெயர்களைச் சூட்ட வேண்டுமென சில அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில் தற்போது வரை புதிய பஸ் நிலையத்திற்கு எந்தவிதமான பெயரும் சூட்டப்படவில்லை.
ஏற்கனவே செல்லியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள நுழைவுவாயிலுக்கு அண்ணா நூற்றாண்டு வளைவு என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அந்த வளைவிற்கு வண்ணம் தீட்டப்பட்டு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
புதிய பஸ் நிலையத்தில் முகப்பில் வேலூர் மாநகராட்சி புதிய பஸ் நிலையம் என வண்ண விளக்குகளால் ஆன பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்கள் பெயர் இதுவரை சூட்டப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
ஒருவேளை நாளை விழாவில் புதிய பஸ் நிலையத்திற்கு தலைவர்கள் பெயர் ஏதாவது சூட்டப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
- 2 பேரிடம் விசாரணை
- பணம் தர மறுத்ததால் ஆத்திரம்
வேலூர் :
வேலூர் அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் முகேஷ் குமார் அவரது வீட்டை ஒட்டியே நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று காலை இவரது வீட்டின் முன்பு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.இதுகுறித்து தகவல் அறிந்து சத்துவாச்சாரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முகேஷ்குமாரிடம் மர்ம நபர்கள் சிலர் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அவர் பணம் தர மறுத்ததால் அவரது வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
- முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- புதிய பஸ் நிலையம், கோட்டை மைதானம், அரசு சுற்றுலா மாளிகை ஆகிய இடங்களில் போலீசார் குவிப்பு
வேலூர்:
வேலூரில் நாளை புதிய பஸ் நிலையம் திறப்பு விழா மற்றும் கோட்டை மைதானத்தில் அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இதில் முதல்-அமைச்சர் மு. க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறார்.
அகில பாரதிய சந்நியாசிகள் சங்கம் ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஆகியவை சார்பில் வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மகாலில் நாளை பாலாறு பெருவிழா தொடங்குகிறது. இந்த விழாவை தமிழக கவர்னர் ஆர்.என். ரவி தொடங்கி வைக்கிறார்.
இதற்காக சென்னையில் இருந்து கவர்னர் நாளை காலை கார் மூலமாக வேலூர் வருகிறார். நாராயணி பீடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.விழா முடிந்ததும் அங்கிருந்து சென்னை புறப்பட்டு செல்கிறார்.
ஒரே நாளில் தமிழக கவர்னர் மற்றும் முதல் - அமைச்சர் வருவதால் வேலூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வேலூர் புதிய பஸ் நிலையம், கோட்டை மைதானம், அண்ணா சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை ஆகிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சந்திப்புகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
- ஏரி கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது
- இந்திய குடியரசு கட்சி சார்பில் கலெக்டரிடம் மனு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றானது குடியாத்தம் நெல்லூர்பேட்டை பெரிய ஏரி என்கிற செருவங்கி ஏரியாகும்.
இந்த நெல்லூர்பேட்டை பெரிய ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது சுமார் 100 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது மோர்தானா அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை காலங்களில் பெய்யும் மழைத் தண்ணீர் இந்த ஏரியில் நிரம்பும் கடந்த ஆண்டு இந்த ஏரி நிரம்பியது அப்போது ஏரிக்கரையின் கரை பல இடங்களில் பழுதாகி பல மீட்டர் தூரத்திற்கு கீழே இறங்கியது இதனால் ஏரி கரை உடையும் அபாயம் ஏற்பட்டது இதனை கருத்தில் கொண்டு செட்டி குப்பம் பகுதியில் கோடிசெல்லும் பகுதியில் உள்ள மதகுகளை உடைத்து சுமார் 40 சதவீதம் தண்ணீர் வெளியேற்றினர். அதன் பின்னர் அந்த கோடிப்போகும் மதகுகளை கட்டவில்லை இதனால் ஏரிக்கு வரும் தண்ணீர் பல மாதங்களாக வீணாக செல்கிறது வீணாக செல்லும் தண்ணீர் பல இடங்களில் குடியிருப்பு பகுதிக்கும் விளைநிலங்களுக்குள் புகுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இந்திய குடியரசு கட்சியின் வேலூர் மாவட்ட தலைவர் இராசி.தலித்குமார்
வேலூர் மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் நெல்லூர்பேட்டை ஏரியில் மதகு உடைக்கப்பட்டதை சரிசெய்யவும், கரையை பலப்படுத்த பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் ஏரி தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது எனவே கலெக்டர் போர்க்கால அடிப்படையில் ஏரிக் கரையை பலப்படுத்தி மதகுகளை சீரமைக்க வேண்டும் இதனை தவிர நீர் வரத்து கால்வாய்கள், நீர் வெளியேற்று கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என அந்த புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.
- குடியாத்தத்தில் நடந்தது
- பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்
குடியாத்தம்:
குடியாத்தம் நடுப்பேட்டை அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்லப்பாடி ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மாணவிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் ஏ.திருநாவுக்கரசு, நகர்மன்ற உறுப்பினர்கள் இ.ஜாவித்அகமது, ஜி.எஸ்.அரசு, பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் ஆடிட்டர் மோகன், எம்.என். ஜோதிகுமார் உள்பட பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் ஜெயஸ்ரீகிறிஸ்டி அனைவரையும் வரவேற்றார்.
மருத்துவ முகாமை குடியாத்தம் அமலு விஜயன் எம்.எல்.ஏ, நகர்மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
வட்டார மருத்துவ அலுவலர் எஸ்.விமல் குமார் தலைமையில் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 20 பேர் கொண்ட மருத்துவ குழுவினர் மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை, மருத்துவ ஆலோசனை, ரத்த வகை கண்டறிதல், ரத்த சோகை குறித்து கண்டறிதல் உள்ளிட்ட சிகிச்சை அளித்தனர். இதில 600 மாணவிகள் பயன்பெற்றனர்.
- மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது
- நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்
வேலூர் :
வேலூர், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கலெக்டர் அலுவலகங்கள், விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பஸ் நிலையம் ஆகியவற்றின் திறப்பு விழா, நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை வருகிற 29,30-ந் தேதிகளில் நடைபெற உள்ளன.
இந்த விழாக்களில் பங்கேற்பதற்காக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 7 மணியளவில் ஆம்பூருக்கு வருகிறார்.
தொடா்ந்து, அவா் நாளை காலை 11 மணிக்கு திருப்பத்தூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தைத் திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.
பின்னர் வேலூர் வருகிறார். மதியம் 12 மணிக்கு விரிவுபடுத்தப்பட்ட வேலூா் புதிய பஸ் நிலையத்தைத் திறந்து வைக்கிறார்.
புதிய பஸ் நிலையத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தயார் நிலையில் உள்ளது.மேலும் திறப்பு விழாவையொட்டி பஸ் நிலையம் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.இரவு நேரங்களில் புதிய பஸ் நிலையம் மின்னொளியில் ஜொலிக்கிறது.
இன்று காலையில் புதிய பஸ் நிலையத்தில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இதனை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.
சாலைகள் பளிச்சென காணப்படுகின்றன
முதல்அமைச்சர் வருகையை ஒட்டி வேலூர் மாநகராட்சி அலுவலகம் மாவட்ட மற்றும் மாநகர திமுக அலுவலகங்களில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நாளை மாலை 4 மணியளவில் வேலூா் கோட்டை மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசுகிறார்.
இதற்காக கோட்டை மைதானத்தில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.முதல்அமைச்சர் வருகையை யொட்டி வேலூர் மாநகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளன.
- பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடந்தது.
- புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
வேலூர்:
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29-ம் தேதி வேலூர் வருகிறார்.வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைக்கிறார்.
பின்னர் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முதல்அமைச்சர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்த ப்பட்டுள்ளன. இன்று காலை முதல்அமைச்சர் தனிப் பிரிவு போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு முதலமைச்சர் வரும் இடங்களை ஆய்வு செய்தார்.
புதிய பஸ் நிலையம் அண்ணா சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை, கோட்டை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பந்தல் மேடை பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா ஆனந்தகுமார் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






