search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Megha Dadu Dam"

    • மாநில, மத்திய அரசின் அனுமதியை பெறாமல் கர்நாடகா அணையைக் கட்ட முடியாது.
    • காவிரி நீர் உரிமையைப் பெறுவதில், திமுக அரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்.

    முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நேற்று வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடியான பிரச்சினைகளில் ஒன்று காவிரிப் பிரச்னை. தமிழ்நாட்டுக்குக் காவிரி நீரில் முழு உரிமை இருக்கிறது. எனவே, காவிரி நீர் உரிமையைப் பெறுவதில், திமுகஅரசு எந்த அளவுக்கும் சென்று போராடும்! வாதாடும்! என்பது உங்களுக்கு நன்றாக தெரியும்.

    தனது உரிமையை நிலைநாட்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். அதன்படிதான் இப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு - மேகதாது என்ற புதிய அணையைக் கட்டத் திட்டமிட்டிருக்கிறது.

    அதைத் தொடக்கத்தில் இருந்தே நாம் எதிர்த்து, தடுத்து வருகிறோம். ஆனாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கிற பொழுது எல்லாம், பொழுது போகவில்லை என்றால், உடனே அதைப் பற்றி தொடங்கிவிடுகிறார்கள். அணை கட்ட நிதி ஒதுக்குவது, சட்டம் போடுவது, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது, டெல்லிக்குப் படையெடுப்பது என்று

    செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அப்படிச் செய்யும்போதெல்லாம், நாமும் அவற்றுக்குத் தடுப்பணை போடும் காரியங்களைச் தொடர்ந்து செய்து கொண்டு வருகிறோம். இரண்டு வாரங்களுக்கு முன்னால், கர்நாடக அரசு இதில் அதிகமான முனைப்பைக் காட்டியது.

    காவிரி ஆணையத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்க வேண்டுமென்று சொன்னார்கள். உடனடியாக, நான் பிரதமருக்குக் கடிதம் எழுதினேன். மேகதாது தொடர்பாக விவாதிக்கக் கூடாது அப்படி என்று வலியுறுத்தி, வற்புறுத்தி பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். இந்த நிலையில் கர்நாடக முதலமைச்சர், டெல்லி சென்று மத்திய அமைச்சரைச் சந்தித்து, மேகதாது அணைக்கு ஆதரவா பேசிவிட்டு வந்திருக்கிறார்கள்.

    உடனடியாக, நம்முடைய நீர்வளத் துறை அமைச்சர், காவிரிப் பிரச்சனையில் அத்துப்பிடி அவருக்கு. எந்த நேரத்தில், எதைக் கேட்டாலும், தூங்கிக் கொண்டிருக்கும் போது எழுப்பிக் கேட்டால் கூட அந்த காவிரிப் பிரச்சனையில் பட்டு, பட்டு என்று அப்படி Finger tips-ல் வைத்திருப்பார். அவர்தான் அன்றைக்கு அந்தத் துறையினுடைய அமைச்சராக பொறுப்பேற்றிருக்கக்கூடியவர்.

    ஆகவே அவருடைய தலைமையில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் எல்லாம் அழைத்துப் பேசி முடிவெடுத்து, ஒரு குழு அமைத்து, அந்தக் குழு டெல்லிக்கு போனது. அவருடைய தலைமையில் தான் போனார்கள். மத்திய நீர்வளத் துறை அமைச்சரைச் போய் சந்தித்து நமது தரப்பினுடைய வாதங்களை வலியுறுத்தி சொல்லியிருந்தார்கள்.

    ஆகவே டெல்லிக்கு சென்று அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கு உடன்பாடு இல்லாமல், எந்தக்காரியத்தையும் காவிரிப் பிரச்னையில் செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரிடம் வாக்குறுதி பெற்று வந்திருக்கிறது நம்முடைய குழு.

    அந்த உறுதியைப் பெற்றுத்தான் அண்ணன் துரைமுருகன் சென்னைக்கு வந்தார்கள். அதேபோல், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்க மாட்டோம் அப்படி என்று அந்த அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    இப்போது தற்சமயத்தில், கூட்ட விவரத்தில் இருந்து மேகதாது விஷயத்தை நீக்கி விட்டார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் 2018-ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 16-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, தொடர்புடைய மாநிலத்தின் அனுமதியைப் பெறாமல், மத்திய அரசின் அனுமதியையும் பெறாமல் அணையைக் கட்ட முடியாது.

    ஆகவே, கர்நாடக அரசின் முடிவானது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது எனவே, கர்நாடக அரசுக்கு எந்தவிதமான தொழில்நுட்ப, சுற்றுச்சூழல் அனுமதியையும், மத்திய அரசு தரக்கூடாது என்பதை இந்தக் கூட்டத்தின் வாயிலாகவும் நான் கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    இப்படி தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளுக்காகவும், எந்த சமரசங்களுக்கும் இடமில்லாமல் போராடக்கூடிய, வாதாடக்கூடிய அரசு தான் திமுக அரசு. நிதி உரிமை வேண்டும், சமூகநீதி உரிமை வேண்டும், காவிரி உரிமை வேண்டும், கல்வி உரிமை வேண்டும் என்று குரல் கொடுப்பதால், இது ஏதோ மத்திய அரசுக்கு எதிரான குரலாக அனைவராலும் பார்க்கப்படுகிறது.

    ஒரு சிலரால். இல்லை இவை அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கு ஆதரவான குரல்கள்தான் என்பதை யாரும் மறந்து விடக் கூடாது. ஆளும் கட்சியாக இருக்கும்போதும், தீட்டக்கூடிய திட்டமாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது வைக்கும் கோரிக்கையாக இருந்தாலும் சரி, அவை அனைத்தும் தமிழ்நாட்டின் அனைத்து மக்களுடைய நலனுக்காக மட்டுமே. அப்படித்தான் திமுக எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தமிழகத்துக்கு காவிரி நீரை கர்நாடக அரசு வழங்கவேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் உத்தரவை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.
    • மேகதாது என்ற இடத்தில் புதிய பிரம்மாண்ட அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது.

    புதுடெல்லி:

    தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 127.25 டி.எம்.சி. காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த நீர் பங்கீடை காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கண்காணித்து வருகிறது.

    இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அளவுக்கு அதிகமாக பருவமழை பெய்ததால் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஓராண்டில் 281 டி.எம்.சி. தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்பட்டு உள்ளது. இது காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்த அளவை விட 103.8 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாகும்.

    இதற்கிடையே, மேகதாது என்ற இடத்தில் புதிய பிரம்மாண்ட அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளில் இறங்கி உள்ளது. ரூ.9 ஆயிரம் கோடி செலவில் அணை கட்டுவதற்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளது.

    காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை எடுத்துக் கொள்ள கர்நாடக அரசு தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கர்நாடக அரசின் விரிவான திட்ட அறிக்கையை ஆய்வு செய்யவோ, எவ்வித உத்தரவுகளையும் காவிரி நீர் மேலாண்மை வாரியம் பிறப்பிக்கவோ தடை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

    ×