என் மலர்tooltip icon

    வேலூர்

    • 2 பேருக்கு அடி- உதை
    • போலீசார் ரோந்து பணியை தீவிரபடுத்த வலியுறுத்தல்

    வேலூர்:

    சத்துவாச்சாரி பொன்னியம்மன் நகர் மேற்கு தெருவை சேர்ந்தவர் ஸ்ரீ மனோஜ் (வயது 21).இவரது வீட்டில் உள்ள போர்டிகோவில் சமையல் கியாஸ் சிலிண்டர் ஒன்றை வைத்திருந்தனர். நேற்று மதியம் 1 மணிக்கு 2 பேர் பைக்கில் அவருடைய வீட்டின் அருகே வந்தனர். போர்டிகோவில் சிலிண்டர் இருந்ததை பார்த்த அவர்கள் அதனை திருட முடிவு செய்தனர்.

    ஒருவர் சென்று போர்டிகோவில் இருந்த சிலிண்டரை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார்.அதனை பைக்கில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றனர். அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த ஸ்ரீமனோஜ் குடும்பத்தினர் சிலிண்டர் திருடி செல்வதை கண்டு கூச்சலிட்டனர். அந்த தெருவில் இருந்த பொதுமக்கள் சிலிண்டர் திருடியவர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிலிண்டர் திருடிய இருவரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் வேலூர் சங்கரன் பாளையத்தை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 46) கஸ்பா வசந்தபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் (23) என்பது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சத்துவாச்சாரியில் நேற்று கெங்கையம்மன் கோவிலில் அம்மன் நகைகள் கொள்ளை போனது. பட்டப்பகலில் வீடுபகுந்து கியாஸ் சிலிண்டர் திருடியுள்ளனர். இதனால் பொது மக்களிடையே திருட்டு பயம் ஏற்பட்டுள்ளது.

    பகல் மற்றும் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியை தீவிர படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • பொம்மை படம் காட்டுவதாக கூறி கடத்திச் சென்றுள்ளார்
    • வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

    வேலூர், ஜூலை.2-

    சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளிக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

    ராணிப்பேட்டை மாவட்டம் காரை நேருநகரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் ராஜா (வயது 50). இவர் கால்நடைத்துறையில் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு விளையாடி க்கொண்டிருந்த 9 வயது சிறுமியிடம் பொம்மை படம் காண்பிப்பதாக ஆசைவார்த்தை கூறி வீட்டுக்கு கடத்திச் சென்றுள்ளார். பின்னர் அங்கு அந்த சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. பின்னர் ராணிப்பேட்டை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கு வேலூர் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசு தரப்பில் போக்சோ சிறப்பு வக்கீல் சந்தியாசுரேஷ்குமார் ஆஜராகி வாதாடினார்.

    நேற்று வழக்கின் இறுதி விசாரணை நடந்தது. நீதிபதி கலைப்பொன்னி தீர்ப்பளித்தார். அதில் சிறுமியை பாலியல் பாலாத்காரம் செய்ததால் 20 ஆண்டுகளும், சிறுமியை வெளியே விடாமல் தடுத்து வைத்ததற்கு ஒரு ஆண்டும் என மொத்தம் 21 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.6 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டிருந்தார்.

    • 3,120 பேர் விண்ணப்பித்திருந்தனர்
    • வெளி ஆட்கள் நுழைவதை தடுக்க போலீஸ் பாதுகாப்பு

    வேலூர்:

    தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் அடங்கிய பதவிகளுக்கான எழுத்துத்தேர்வு நடந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக வேலூர் மாவட்டத்தில் 3,120 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

    இதற்காக வேலூர் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, ஈ.வெ.ரா. பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கொணவட்டம் அரசுப்பள்ளி, தொரப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி, வேலூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி, ஊரீசு பள்ளி, அலமேலுமங்காபுரம் சினேகதீபம் பள்ளி உள்பட 11 மையங்களில் தேர்வு நடந்தது.

    காலை மற்றும் மாலை வேளையில் நடைபெறும் இந்த தேர்வில் செல்போன், கால்குலேட்டர், பென் டிரைவ் உள்ளிட்ட மின்னணு பொருட்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது.

    இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. 1729 பேர் தேர்வு எழுதினர்.1374 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு அறைக்குள் செல்லும் மாணவர்கள் அனைவரும் பலத்த பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

    தேர்வு மையங்களில் மின்தடை ஏற்படாதவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. தேர்வு மையங்களில் வெளி ஆட்கள் நுழைவதை தடுக்கும் பொருட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    • பொதுமக்கள் விரட்டி சென்றனர்.
    • கண்காணிப்பு கேமராவில் பதிவு

    வேலூர்:

    வேலூர் சேண்பாக்கம் வேந்தன் தெருவில் வசித்து வருபவர் சசிகலா. நேற்று இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இரவு 11.30 மணி அளவில் இவரது வீட்டில் திருடுவதற்காக மர்ம நபர் ஒருவர் வந்தார். வீட்டிற்கு வெளியே நின்று இருபுறமும் பார்த்துவிட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்தார்.

    சத்தம் கேட்டு கண்விழித்த சசிகலா குடும்பத்தினர் வாலிபர் வீட்டுக்குள் நுழைய முயன்றதை கண்டு அலறி கூச்சலிட்டனர். இதனால் சுதாரித்துக் கொண்ட மர்ம நபர் வெளியே குதித்து தப்பி ஓடினார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினரும் அவரை விரட்டி சென்றனர். ஆனாலும் பிடிக்கமுடியவில்லை. இது குறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். அந்த தெருவில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர் .

    அதில் வாலிபர் சசிகலாவின் வீட்டு சுவரில் ஏறி குதிக்கும் காட்சிகளும் தப்பி ஓடியது பதிவாகியுள்ளது. வாலிபரின் முகம் தெளிவாக பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் வாலிபரை தேடி வருகின்றனர்.

    சேண்பாக்கம் பகுதியில் இது போன்று தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதால் அதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வலியுறுத்தி உள்ளனர்.

    • காட்பாடி ரெயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • அ.தி.மு.க., நிர்வாகிகள் காட்பாடி போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி ரெயில்வே பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.நேற்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    நேற்று காலை அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அ.தி.மு.க.வினர் பாலத்தின் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் பாலத்தின் மீது ரிப்பன் கட்டினர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பாலத்தை சீரமைக்க நாங்கள் தான் காரணம்.தற்போது நன்றாக சீரமைக்க வில்லை.பணத்தை வீணடித்து விட்டதாக தெரிவித்தனர்.தொடர்ந்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க பிரமுகர்கள் வன்னியராஜா, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் தி.மு.க. வினர் அங்குத் திரண்டு வந்தனர். அவர்கள் எஸ்.ஆர்.கே.அப்புவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அ.தி.மு.க., தி.மு.க மோதலால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இரு தரப்பையும் சமாதானம் செய்து போலீசார் அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து தாராபடவேடு கிராம நிர்வாக அலுவலர் பவித்ரா காட்பாடி போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் காட்பாடி டி.எஸ்.பி. பழனி இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் காட்பாடி செங்குட்டையில் உள்ள அப்புவின் வீட்டுக்கு சென்றனர்.

    தகவல் அறிந்த அ.தி.முக.நிர்வாகிகள் அப்பு வீட்டின் முன்பு குவிந்தனர். அப்புவை காட்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடமும் மற்ற நிர்வாகிகளிடமும் விசாரணை நடந்தது. அதைத்தொடர்ந்து அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, காட்பாடி பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் மீது ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    இதனை கண்டித்து அ.தி.மு.க., நிர்வாகிகள் காட்பாடி போலீஸ் நிலையம் முன்பு மறியல் போராட்டம் செய்தனர்.

    பின்னர் அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோரை வேனில் இரவு 8.15 மணிக்கு ஏற்றினர். வேன் முன்பு அ.தி.மு.க., நிர்வாகிகள் திரண்டு வேன் செல்ல விடாமல் தடுத்தனர்.

    பின்னர் பாதுகாப்புக்கு நின்றிருந்த 100-க்கும் மேற்பட்ட போலீசார் அ.தி.மு.க., நிர்வாகிகளை அப்புறப்படுத்தி வேன் செல்ல வழிவகை செய்தனர்.

    தொடர்ந்து காட்பாடி போலீஸ் நிலையத்திற்குள் பொதுமக்கள் யாரும் செல்ல விடாமல் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து காட்பாடி மாஜிஸ்திரேட் முன்பு எஸ்.ஆர்.கே. அப்பு மற்றும் பகுதி செயலாளர் ஜனார்த்தனன் ஆகியோர் ஆஜர்படுத்தப்பட்டனர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    மேலும் காட்பாடியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • 1 மாத காலமாக பணி நடைபெற்று வந்தது.
    • கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு

    வேலூர்:

    வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காட்பாடி ரெயில்வே மேம்பாலம் பழுது ஏற்பட்டதன் காரணமாக சீரமைப்பு பணிகள் கடந்த 1 மாத காலமாக நடைபெற்று வந்தது. தற்போது, பாலம் சீரமைக்கும் பணி விரைந்து முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமப்படுவதால் அதனை கருத்தில் கொண்டு இன்று இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

    4 -ந் தேதி முதல் நான்கு சக்கர வாகனம் மற்றும் பஸ்கள் செல்லலாம்.

    சரக்கு மற்றும் கனரக வாகனங்கள் கலெக்டர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வுக்கு பிறகு அனுமதிக்கப்படும் என்பதை தெரிவித்து க்கொள்கிறேன்.

    பாலம் சீரமைப்பு பணியை விரைந்து முடித்த அதிகாரிகள், பணிக்காக ஒத்துழைப்பு அளித்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எனது நன்றியை தெரிவித்து க்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பணிகள் நிறைவடைந்தது.
    • 4-ந் தேதி முதல் பஸ், லாரிகளுக்கு அனுமதி

    வேலூர்:

    காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் பழுது சீரமைக்கும் பணிகள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கியது.

    இதைத் தொடர்ந்து மேம்பாலத்தில் 3 இணைப்புகளில் ஏற்பட்ட விரிசலை சீரமைக்கும் வகையில் ரப்பர் பேடு இரும்புச் சட்டம் கம்பிகள் பொருத்தப்பட்டன. அதோடு பாலத்தின் இணைப்பை உறுதி செய்யும் வகையில் அந்த பகுதியில் கெமிக்கல் மற்றும் சிமெண்ட் கலவை கொண்டு பேக்கிங் செய்ய ப்பட்டது.

    இந்த பணிகள் அனைத்தும் கடந்த 18-ந் தேதியுடன் நிறைவடை ந்தது. இணைப்பு பகுதியில் செய்யப்பட்ட பணிகள் செட் ஆவதற்கு 10 நாட்கள் கால அவகாசம் எடுத்துக் கொள்ள ப்பட்டது.

    நேற்று ரெயில்வே பாலத்தின் மீது கனரக வாகனங்களை இயக்கி சோதனை செய்தனர்.

    இதற்காக தலா 30 டன் எடையில் மொத்தம் 120 டன் எடை கொண்ட நான்கு லாரி மேம்பாலத்தின் மீது ஒரே நேரத்தில் இயக்கியும் நிறுத்தியும் பாலத்தின் அதிர்வு தன்மை பளுதாங்கும் தன்மை குறித்து பிரிட்ஜ் டெஸ்டிங் எந்திரம் மூலமாக ெரயில்வே என்ஜினீயர்கள் சோதனை செய்தனர்.

    அப்போது இதற்கு முன்னர் பாலத்தின் மீது கனரக வாகனங்கள் சென்ற போது ஏற்பட்ட அதிர்வுகள் சீரமைக்கும் பணி முடிந்த பிறகு ஏற்படவில்லை. அதோடு போக்குவரத்துக்கும் பாலம் தயார் நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

    அதே நேரம் பாலத்தின் மீது தண்ணீர் தேங்காத வகையில் குழாய் புதைக்கும் பணிகள் நடைபெற உள்ளது.

    இருசக்கர வாகனங்கள்

    இந்த நிலையில் இன்று காலை முதல் ரெயில்வே பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாக கதிர் ஆனந்த் எம்.பி. தெரிவித்தார்.அதன்படி பாலத்தில் ரெயில்வே மேம்பாலத்தில் இன்று காலை இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. இதனால் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    அத்து மீறி சில ஆட்டோக்களும் பாலத்தின் மீது இயக்கப்பட்டன. அந்தப் பகுதியில் போக்குவரத்து போலீசார் நிறுத்தப்பட்டு இரு சக்கர வாகனங்களை மட்டும் அனுமதித்து வருகின்றனர். கனகரக வாகனங்கள் வழக்கம்போல் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. வருகிற 4-ந்தேதி முதல் பஸ் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    • கால்வாய்கள் தூர் எடுக்காததால் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது.
    • நகர மன்ற கூட்டத்தில் தலைவர் சவுந்தரராசன் தகவல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மன்றத்தின் சாதாரண கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராசன் தலைமை தாங்கினார்.நகர மன்ற துணைத் தலைவர் பூங்கொடிமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் ஏ. திருநாவுக்கரசு, நகராட்சி பொறியாளர் பி.சிசில்தாமஸ், சுகாதார அலுவலர் பாலச்சந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய பெரும்பாலான உறுப்பினர்கள் குடியாத்தம் நகராட்சி பகுதியில் ஏராளமான வெறிநாய்கள் உள்ளதாகவும் பல பகுதிகளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வெறிநாய்கள் கடித்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளனர் இதனால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் சூழல் உள்ளதால் உடனடியாக வெறி நாய்களை பிடிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் தூர் எடுக்காததால் கழிவுநீர் தேங்கும் நிலை உள்ளது.

    கவுண்டன்யமகாநதி ஆற்றில் குப்பைகள் கொட்டுகின்றனர் அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பல இடங்களில் தூய்மை பணியாளர்கள் வராததால் குப்பைகள் தேங்கியுள்ளதாக உறுப்பினர்கள் கூறினார்கள் மேலும் நகராட்சிக்கு சொந்தமான இடங்கள் குறித்து விரிவான பட்டியல் வெளியிட வேண்டும் எனவும் அப்போதுதான் நகராட்சி இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருப்பது தெரியவரும் என உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டனர்.

    உறுப்பினர்களின் கோரிக்கைக்கு நகர்மன்றத் தலைவர் சவுந்தரராஜன் பதிலளித்து பேசுகையில் வெறி நாய்களை பிடிக்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் கழிவுநீர் கால்வாய்களில் துர்வார நடவடிக்கை எடுக்கப்படும்.

    குடியாத்தம் நகராட்சி 27 வது வார்டு அதிமுகவைச் சேர்ந்த நகர மன்ற உறுப்பினர் சிட்டிபாபு தனது வார்டில் குப்பைகள் சரிவர எடுப்பதில்லை எனக் கூறி குப்பை கூடையுடன் நகராட்சிக்கு வருகை தந்தார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    கெங்கையம்மன் கோவில் தரைப்பாலம் பகுதியை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்கும் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • கல்லூரி படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 திட்டம் அறிவிக்கப்பட்டது சிறப்பான ஒன்று.
    • இந்தியாவில் வெளிநாடுகளில் கிடைப்பது போன்ற நல்ல கல்வியை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.

    வேலூர்:

    வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் சார்பில் கேளம்பாக்கம் அருகே காயார் கிராமத்தில் வேலூர் இன்டர்நேஷனல் பள்ளி (வி.ஐ.எஸ்.)தொடங்கப்பட்டுள்ளது.

    இப்பள்ளியின் திறப்பு விழா நடந்தது. வி.ஐ.டி. கல்விக்குழும தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். வி.ஐ.டி. கல்விக்குழும துணைத்தலைவரும், வேலூர் இன்டர்நேஷனல் பள்ளியின் தலைவருமான ஜி.வி.செல்வம் வரவேற்றார்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு புதிய பள்ளிக்கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    வேலூர் சர்வதேச பள்ளியில், குரு சிஷ்யா பரம்பரையின் ஆக்கப்பூர்வ அம்சங்களை தற்கால கற்கபித்தல் முறையோடு ஒருங்கிணைக்க, 'வீட்டு பெற்றோர்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சிப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன்.

    பள்ளிக் கல்வியில் தாய் மொழியை பயன்படுத்துவதற்கும் நாம் உரிய கவனம் செலுத்த வேண்டும். எங்கெங்கு முடியுமோ, குறைந்தபட்சம் தொடக்க நிலை வரையிலாவது, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தாய்மொழியிலேயே பயிற்றுவிக்க வேண்டும். ஒருவர் தம்மால் எவ்வளவு முடியுமோ அத்தனை மொழிகளை கற்றாலும், தாய்மொழியில் வலுவான அடித்தளமிடுவது அவசியம். பல மொழிகளை பயில்வது குழந்தைகளிடையே மேம்பட்ட அறிவாற்றல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருவர் தமது தாய்மொழியுடன், பிற மொழிகளிலும் புலமை பெற்றிருப்பது, கலாச்சார பிணைப்புகளை உருவாக்க உதவுவதோடு, புதிய உலக அனுபவங்களை அறிந்து கொள்ளவும் உதவும்.

    இவ்வாறு பேசினார்.

    அதைதொடர்ந்து துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுக்கு பள்ளியின் தலைவர் ஜி.வி.செல்வம் நினைவு பரிவு வழங்கி கவுரவித்தார்.

    விழாவில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், மு.க.ஸ்டாலினின் வாழ்த்து செய்தியை வாசித்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    வி.ஐ.எஸ். பள்ளியானது உறைவிடப் பள்ளி யாக திட்டமிடப்பட்டுள்ளது. வீடும், பள்ளியுமான இரட்டை நிலைகளையும் கொண்டதாக உள்ளது. வீடு என்பது அன்பையும் பண்பாட்டையும் உள்ளடக்கியது. பள்ளி என்பது அறிவையும் ஆற்றலையும் உள்ளடக்கியது. அத்தகைய அன்பையும், பண்பாட்டையும், அறிவையும், ஆற்றலையும் கற்றுத்தருவதாக இப்பள்ளிஅமைய வேண்டும் என்று விரும்புகிறேன்.

    ஜி.விசுவநாதன் கல்வி நிறுவனங்களில் அதிக கவனம் செலுத்தினாலும் தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகிய நமது விழுமியங்களில் மாறா பற்றுகொண்டு அதற்கான தமிழியக்கத்தையும், தொடர்ந்து நடத்தி வருபவர் என்பதை இந்த நாடு அறியும். சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம், தாய்மொழிப்பற்று, தமிழ்ப்பண்பாடு, அறிவுக்கூர்மை, தொண்டுள்ளம் ஆகியவையும் கொண்டவர்களாக தமிழக மாணவர் சமுதாயம் வளர தேவையான விழுமியங்களையும் இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் புகட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என கூறப்பட்டுள்ளது.

    வி.ஐ.டி. கல்விக் குழுமத் தலைவரும், வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தருமான ஜி.விசுவநாதன் பேசுகையில், "கல்லூரி படிப்பில் சேரும் மாணவியருக்கு மாதம் ரூ.1000 திட்டம் அறிவிக்கப்பட்டது சிறப்பான ஒன்று.

    இந்த திட்டத்தை இந்தியா முழுமைக்கும் கொண்டு செல்ல வேண்டும். இந்தியாவில் வெளிநாடுகளில் கிடைப்பது போன்ற நல்ல கல்வியை தனியார் நிறுவனங்கள் வழங்க வேண்டும். அரசே எல்லாவற்றையும் செய்து விட முடியாது. தனியார் பங்களிப்பு என்பது கல்வியில் மிக அவசியம்" என்றார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, வி.ஐ.டி. துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், அறங்காவலர் அனுஷ செல்வம் துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தேமுதிக துணை செயலாளர் எல். கே.சுதீஷ், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதி பதி டி.என்.வள்ளிநாயகம், வேல்ஸ் கல்விக்குழும தலைவர் ஐசரிவேலன், திருப்போரூர் எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் எஸ்.ஆர். எல்.இதயவர்மன், முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வைகைச்செல்வன், சோமசுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து காண்டனர். பள்ளி இயக்குனர் சஞ்சீவி நன்றி கூறினார்.

    சுமார் 35 ஏக்கர் பரப்பளவில் வி.ஐ.எஸ். எனப்படும் வேலூர் இன்டர் நேஷனல் உறைவிட பள்ளியை இயற்கை சூழ்ந்த எழில்மிகு பகுதியில் மிக பிரமாண்டமாக அமைத்துள்ளது.

    இங்கு வெளிநாட்டு பள்ளிகளுக்கு இணையாக அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் வகுப்பறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கல்வியாண்டில் (2022-2023) 5 முதல் 8-ம் வகுப்பு வரை ஐ.சி.எஸ்.இ. மற்றும் கேம்பிரிட்ஜ் பாடத்திட்டத்தின் கீழ் இங்கு மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

    • காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது.
    • அ.தி.மு.க., தி.மு.க.வினர் மோதலால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    வேலூர்:

    காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ளது. இன்று முதல் இருசக்கர வாகனங்கள் மட்டும் அனுமதிக்கபடும் என்று அறிவித்தனர். அதன்படி இருசக்கர வாகனங்கள் பாலத்தில் இயக்கப்பட்டன.

    இந்த நிலையில் இன்று காலை அ.தி.மு.க மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே அப்பு தலைமையிலான அ.தி.மு.க.வினர் பாலத்தின் அருகே திரண்டு வந்தனர். அவர்கள் பாலத்தின் மீது ரிப்பன் கட்டினர். இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    பாலத்தை சீரமைக்க நாங்கள் தான் காரணம்.தற்போது நன்றாக சீரமைக்க வில்லை.பணத்தை வீணடித்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு ரிப்பன் வெட்டி பாலத்தை திறந்து வைத்தார்.

    இது பற்றி தகவல் அறிந்த தி.மு.க பிரமுகர்கள் வன்னியராஜா, ஒன்றிய குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் தி.மு.க.வினர் அங்குத் திரண்டு வந்தனர். அவர்கள் எஸ்.ஆர்.கே.அப்புவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படும் சூழ்நிலை உருவானது. போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். அ.தி.மு.க., தி.மு.க.வினர் மோதலால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இரு தரப்பையும் சமாதானம் செய்து போலீசார் அங்கிருந்து அவர்களை அனுப்பி வைத்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கொரனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோவில் கூட மூடப்படவில்லை.
    • நான் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போவதுண்டு.

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஸ்ரீபுரம் நாராயணி மஹாலில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கத்தின் சார்பில் பாலாறு பெருவிழா நடந்து வருகிறது. இதில் தெலுங்கானா புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;-

    காவிகள் இருக்கும் இடத்தில் அன்பு அதிகாரம் பலம் அனைத்தும் இருக்கும். அனைத்து மதங்களையும் மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஆன்மிகம் இல்லாமல் தமிழகம் இல்லை. ஆண்டாள் கற்றுக்கொடுத்த தமிழைதான் இன்று அனைவரது நாவிலும் தவிழ்ந்துக் கொண்டிருக்கிறது. ஆழ்வார்கள் இல்லாமல் தமிழ் இல்லை. ஆன்மீகமும் காவியும் சேர்ந்ததுதான் தமிழகம்.ஆனால் தமிழகத்தில் காவிக்கு சம்பந்தமில்லை என்ற நிலை உருவாக்க சில சக்திகள் செயல்பட நினைத்தனர். கொரனா காலத்தில் புதுச்சேரி மாநிலத்தில் ஒரு கோவில் கூட மூடப்படவில்லை. திறந்த வழிபாட்டோடு தான் கொரோனாவை கட்டுப்படுத்தினோம். இதனை புதுச்சேரி மாடல் என்று கூட சொல்லலாம்.

    அனைத்து மதத்தினரும் இறைவனை கும்பிட வேண்டும். ஒரு மதம் பற்றி மற்றொரு மதத்தினர் விமர்சிக்க கூடாது.

    நான் நேரம் கிடைக்கும்போது எல்லாம் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு போவதுண்டு. இன்னும் சொல்லப்போனால் நடராஜர் இயங்கிக் கொண்டிருப்பதனால் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அஞ்ஞானமும் சொல்கிறது. மெய்ஞானமும் சொல்கிறது. விஞ்ஞானமும் அதை தான் சொல்கிறது.

    நடராஜரை மோசமாக விமர்சிக்க முடியும் என்றால் அதுதான் சுதந்திரம் என்றால் அது சுதந்திரம் இல்லை.

    அனைவருக்கும் மரியாதை கொடுக்க வேண்டும் என்ற பரந்த மனப்பான்மை தான் அனைத்து மதமும் சொல்லிக் கொடுக்கிறது.

    இந்து மதமும் அதைத்தான் சொல்லிக் கொடுக்கிறது. சகிப்புத்தன்மை இருக்கிறது என்பதிற்காக சகிக்க முடியாத வார்த்தைகளை கேட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை. என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதனால் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கொடுக்கும் மரியாதை தான் நாமெல்லாம் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு மரியாதையாக இருந்து கொண்டிருக்கிறது.எனக்கு பக்கத்து வீட்டு நண்பர் ஒருவர் இருக்கிறார்.மத நல்லிணக்கம் என பேசுகிறார்.

    அவர், கிறிஸ்துமசுக்கு வாழ்த்து சொல்லுவார். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லுவார்.ஆனால் தீபாளிக்கு மட்டும் வாழ்த்து சொல்ல மாட்டார்.

    அவரை ஆதரித்தாலும் வாழ்த்து சொல்லமாட்டார்.. ஏனென்று கேட்டால் இதுவரை பதில் இல்லை.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் கவர்னர் தமிழிசை சவுந்தர்ராஜன் அளித்த பேட்டியில் அனைத்து மாநிலங்களிலும் கவர்னர்கள் தன்னிச்சையாக செயல்படவில்லை. அந்தந்த மாநில அதிகாரத்துக்கு உட்பட்டு சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுகிறார்கள். நானும் அவ்வாறு தான் செயல்படுகிறேன். மற்ற மாநில கவர்னர்களும் அப்படித்தான் செயல்படுகிறார்கள் என்றார்.

    • கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • கெங்கை அம்மன் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரியில் பழமை வாய்ந்த புகழ் பெற்ற கெங்கை அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் திருவிழா பிரமாண்டமாக நடைபெற்றது.

    இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.இந்த நிலையில் நேற்று இரவு பூஜை முடிந்து வழக்கம்போல் கோவிலை பூட்டி சென்று விட்டனர். நள்ளிரவில் தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலையில் இருந்து கோவிலுக்குள் மர்ம நபர்கள் ஏறி குதித்துள்ளனர். அங்கு அம்மன் சன்னதியில் உள்ள கிரீல் கதவின் பூட்டை உடைத்தனர். அதற்கு அடுத்து உள்ள மரக் கதவில் பூட்டு இல்லை. அதனால் எளிதாக கதவை திறந்து உள்ளே சென்றனர்.

    அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயின், 4 குண்டு, 2 தங்க பொட்டு உள்பட 3 பவுன் நகைகளை எடுத்தனர். பின்னர் கோவில் வளாகத்தில் உள்ள அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த 4 பட்டுப் புடவைகள், வெள்ளி குடை, ஒரு வெள்ளி கிரீடம், வெள்ளி மாலை, வெள்ளி சந்தன கிண்ணம், வெள்ளி தட்டு ஆகியவற்றை கொள்ளையடித்தனர். மேலும் கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு செய்யக்கூடிய ஹார்ட் டிஸ்கை எடுத்துச் சென்று விட்டனர்.

    கோவிலில் அம்மன் சன்னதியில் சிரசு ஒன்று உள்ளது. இந்த சிரசின் மேல் வெள்ளி கிரீடம் பொருத்தப்பட்டுள்ளது.கொள்ளையர்கள் வெள்ளி கிரீடத்தினை விட்டு சென்று விட்டனர்.

    இன்று காலையில் கோவிலுக்கு வந்த ஊழியர்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு திடுக்கிட்டனர். உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர்கள் மூலம் சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது.இதனால் கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.

    கோவிலில் கைவரிசை காட்டிய கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். கோவிலில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை எடுத்துச் சென்றதால் அவர்கள் ஏற்கனவே இந்த பகுதியில் அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

    இதன் மூலம் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். கோவில் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    நேற்று முன்தினம் சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. அலுவலக சாலையில் டாக்டர் வீட்டில் கொள்ளை நடந்தது. அலமேலு மங்காபுரம் பகுதியில் பணம் தர மறுத்த நகை அடகு கடை வியாபாரி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி விட்டு சென்றனர். தொடர்ந்து சத்துவாச்சாரியில் நடைபெறும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மேம்பாலத்தின் அடியில் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அருகில் உள்ள கெங்கை அம்மன் கோவிலில் கொள்ளை நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுபோன்ற சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×