என் மலர்tooltip icon

    வேலூர்

    • விரிஞ்சிபுரம் கோவிலில் வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • கனவில் சிவன் தோன்றி அருள் தருவார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற சிவதலங்களில் ஒன்று. இந்த கோவில் வேலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலையிலிருந்து வடுகன்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையான இக்கோவிலின் மதிலழகு சிறப்பு வாய்ந்தது.

    தஞ்சை கோவில் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் இக்கோவிலின் மதில் சுவர் சிறப்பினை அறியலாம்.

    அடிமுடி காண முடியாமல் பொய் சொல்லி திருஅண்ணாமலையாரிடம் பெற்ற சாபத்தை பிரம்மா, மார்க்கபந்தீஸ்வரரை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக இந்த தலத்தின் வரலாறு கூறுகிறது. இந்த கோவிலுக்குள் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விஷேசமானது.

    இக்குளத்தை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இத்தீர்த்த குளம் ஆண்டிற்கு ஒருமுறை அதாவது கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்.

    இந்த தீர்த்த குளத்தில் நீராடினால் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம், வலிப்பு, தீவினைகள் பிடித்தவர்களுக்கு அகலவும் செய்யும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

    இவர்கள் முதலில் ஷீரா நதி என்னும் பாலாற்றில் நீராட வேண்டும். பின்னர் கோவிலின் அருகில் பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் தோன்றி பழம், புஷ்பம், கொடுத்து குழந்தை வரம் அருள்வார் என்பது நம்பிக்கை.

    இவ்வாறு சிறப்பு வாய்ந்த கடை ஞாயிறு விழா வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடக்கிறது. 9-ந் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறக்கப்படுகிறது.

    10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு பிரம்ம குளத்தில் தீர்த்தவாரியும், காலை 9 மணிக்கு பாலகனுக்கு உபநயன சிவதீட்சையும், காலை 9.30 மணிக்கு சுவாமி திருமாட வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அபிஷேகமும், மாலையில் மகா தீபாராதனையும், இரவு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சிம்ம தீர்த்தத்தில் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிகான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர், தக்கார், ஆய்வாளர், செயல் அலுவலர் உள்பட கோவில் பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் விரிஞ்சிபுரம் பொதுமக்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    • விவசாய நிலங்களை சேதபடுத்தியதால் நடவடிக்கை
    • மலைப் பகுதியில் கொண்டு சென்று விட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், ஒடுகத்தூரை சுற்றி பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்கள் உள்ளது. ஒடுகத்தூர், குருவராஜபாளையம் ஆசனம்பட்டு, மேல் அரசம்பட்டு, ராசி மலை மற்றும் அரிமலை உள்ளிட்ட பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக உணவு தேடி கிராமத்திற்குள் நுழைந்தன.

    விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி, கத்திரிக்காய், வாழை உள்ளிட்ட பயிர்களை சாப்பிட்டு சேதப்படுத்துவதோடு, கிராம பகுதியில் ஒட்டியுள்ள மரங்களில் தஞ்சமடைந்து பொதுமக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது.

    குரங்குகள் அட்டகாசத்தால் பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் வசித்து வந்தனர். விவசாய பயிர்கள் அதிக அளவில் நாசமாவதால், குரங்குகளை பிடித்து வனத்துறையில் விட வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி இன்று ராசிமலை அடிவாரத்தில் உள்ள அரிமலை உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த குரங்குகளை பிடிக்க வனத்துறையினர் பாதுகாப்பு கவசங்களுடன் வந்தனர். வனத்துறையினர், 20 குரங்குகளை ஒவ்வொன்றாக பிடித்து, கூண்டுக்குள் அடைத்தனர்.

    பிடித்த குரங்குகளை வனத்துறையினர் குருராஜபாளையம் அருகே உள்ள தர்மகொண்ட ராஜா கோயில் மலைப் பகுதியில் கொண்டு சென்று பத்திரமாக விட்டனர்.

    • பொதுமக்களை கவர்ந்த சிறுதானிய உணவுகள்
    • உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் சார்பில் சிறுதானிய உணவு திருவிழா நடந்தது.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, பள்ளி மாணவ மாணவிகளின் சிறுதானிய உணவு குறித்த விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    இதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்,வேலூர் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு துறை, வேலூர் மாவட்ட நுகர்வோர்கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, உழவர் நலத்துறை, மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளிட்டோர் அரங்குகள் அமைத்திருந்தனர்.

    இதில் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்' என்ற பழமொழியின் படி நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு 'உணவே மருந்து' என்பதை வலியுறுத்தும் வகையில் பாரம்பரிய உணவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

    சிறுதானிய உணவு வகைகளான கேழ்வரகு, சம்பா, தினை உள்ளிட்டவைகளால் தயாரிக்கப்பட்ட உணவு வகைகள், மக்களுக்கு காட்சிப்படுத்தி அவற்றின் செய்முறை மற்றும் பயன்கள் குறித்து விளக்கப்பட்டது. காட்சிக்க வைத்திருந்த உணவுகள் பொதுமக்களை கவரும் வகையில் இருந்தது.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மகளிர் திட்ட இயக்குநர் நாகராஜன் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அப்துல் முனீர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • திருவண்ணாமலை கோவிலுக்கு சென்ற நேரத்தில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி கல் புதூர் மாருதி நகரை சேர்ந்தவர் குமார். நெடுஞ்சாலைத்துறையில் பணியாற்றி வருகிறார்.

    இவர் நேற்று கார்த்திகை தீப திருவிழா என்பதால் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் திருவண்ணாமலை கோவிலுக்கு சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கு பீரோவில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலை குமாரின் உறவினர்கள் வீட்டுக்கு வந்தனர். அப்போது கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து குமாருக்கு தகவல் தெரிவித்தனர்.கோவிலுக்கு சென்றிருந்த குமார் உடனடியாக வீடு திரும்பினார். உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளை நடந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து காட்பாடி போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மர்ம நபர்கள் வீட்டில் இருந்த 60 பவுன் நகைகள் மற்றும் ரூ.4 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மதுரை ரெயில் நடுவழியில் நிறுத்தம்
    • துரிதமாக செயல்பட்ட ரெயில் டிரைவரை அதிகாரிகள் பாராட்டினர்

    வேலூர்:

    மதுரையில் இருந்து திருப்பதி செல்லும் மீனாட்சி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை புறப்பட்டு சென்றது. காட்பாடி - திருப்பதி இடையே பாகாலா அருகே வந்தபோது, தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை ரெயில் என்ஜின் டிரைவர் கண்டுபிடித்தார்.

    உடனே சுதாரித்துக் கொண்ட டிரைவர் ரெயிலை நடுவழியில் நிறுத்தினார். இது குறித்து ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    தகவல் அறிந்த ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்டவாள விரிசலை சரி செய்தனர்.

    இதையடுத்து தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ரெயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக ரெயில் புறப்பட்டு சென்றது. துரிதமாக செயல்பட்ட ரெயில் டிரைவரை அதிகாரிகள் பாராட்டினர்.

    • கலெக்டர் அலுவலகத்தில் மனு
    • வேலூரில் 2 பேர் பலி எதிரொலி

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்கள் குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

    காட்பாடி சட்டமன்ற தொகுதி, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வீரத்தமிழர் முன்னணி செயலாளர் விஜய் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது;-

    மோட்டூர் சர்க்கரை ஆலை பஸ் நிலையம் அருகே கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாம் தமிழர் கட்சியின் கொடி கம்பத்தை நட்டோம்.

    தற்போது கம்பம் பழையதாக உள்ளது. இதனால் பெயிண்ட் அடிப்பதற்காக பிடுங்கி புதுப்பித்த பின்பு திரும்பவும் அதே பகுதியில் நட்டோம்.

    ஆனால் காட்பாடி தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கொடிக்கம்பத்தை அகத்திவிட்டனர். எனவே கொடிக்கம்பத்தை மீண்டும் நடுவதற்கு ஆணையிட வேண்டும் என கூறியிருந்தார்.

    தொரப்பாடியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மண்டல தலைவர் மதியழகன் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது;-

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 4-வது மண்டலம் தொரப்பாடி நேதாஜி தெரு, பலராம முதலி தெரு, அண்ணாமலை கவுண்டர் தெரு, திரவுபதி அம்மன் கோவில் தெரு, எம்.சி ரோடு, கஸ்பா இப்ராஹிம் சாஹெப்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரிவர செய்து தருவதில்லை.

    குப்பைகள் சரிவர வாரவில்லை. கொசு தொல்லைகள் மற்றும் தெருநாய்களின் தொல்லைகள் மிக அதிகமாக உள்ளது. நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

    எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    கஸ்பா ஆரன்பாளையம் வசந்தபுரம் பகுதி பொதுமக்கள் கூட்டமாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசு நெடுஞ்சாலை துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் கீழ் கஸ்பா பகுதியில் மேம்பாலம் கட்டப்பட்டது.

    இதனை கஸ்பா, வசந்தபுரம், ஆர்.என். பாளையம், சதுப்பேரி, சிறுங்காஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.

    குறிப்பாக பள்ளி மாணவர்களுக்கு இந்த மேம்பாலம் மிகவும் உதவியாக உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு தடுப்பு சுவர் உயரம் குறைவாக உள்ளது. இதனை உயர்த்தி கட்ட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால் எந்தெந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் கடந்த 12-ந் தேதியன்று தீபாவளி பண்டிகை தினத்தன்று தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 2 இளைஞர்கள் இந்த மேம்பாலத்தின் பக்கவாட்டுச் சுவரில் மோதி நிலைதடுமாறி மேலிருந்து கீழே விழுந்தனர். 40 அடி உயரமுள்ள பாலத்தின் மீது விழுந்ததில் கொடூரமாக தலை சிதறி உயிழந்தனர்.

    எனவே பாலத்தின் இருபுறமும் உள்ள தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    • மலர் அலங்காரம் செய்யப்பட்டது
    • பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட சாத்துமதுரை கிராமத்தில் குன்றின் மேல் அமைந்துள்ள வள்ளி தேவசேனா சமேத பாலசுப்ரமணியர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதற்கு கிராம கனாச்சாரி சிவலிங்கம், கிராம நாட்டான்மைதாரர் துளசிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமிராஜ்குமார், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமச்சந்திரன் மற்றும் முருகனடிமை ஜம்பு என்கிற சம்பத் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதனை முன்னிட்டு நேற்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் தங்க கவசம் அணிவித்து, மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் இளைஞர்கள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • நாளை நடக்கிறது
    • பல்வேறு விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது

    வேலூர்:

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ், செயல்பட்டு வரும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) நிறுவனம் சார்பில், நாளை (செவ்வாய்க்கிழமை) வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் குறைதீர்வு முகாம் நடக்கிறது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் காட்பாடி மாதா கோவில் பின் தெரு, க்ளூனி கான்வென்ட் 14/2, (காமராஜ் ஜூஸ் கடை அருகில்), திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி அகஸ்தியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியிலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கலவையில் உள்ளஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியிலும், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூரில் உள்ள, பிளெஸ்ஸோ மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் குறைதீர்வு முகாம் நடக்கிறது. இந்த இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.45 வரை குறைதீர் முகாம் நடக்கிறது.

    இதில், உறுப்பினர்களுக்கான சேவைகள், குறைகளை நிவர்த்தி செய்தல், முதலா ளிகள், பணியாளர்கள், ஒப்பந்ததா ரர்களுக்கான ஆன்லைன் சேவைகள், ஊழியர்க ளுக்கான இணையதள சேவைகள், முதலாளி கள், ஊழியர்க ளுக்கான சட்டங்கள், கடமைகள், பொறுப்புகள், விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களுடன் உள்ள தொடர்புகள், புதிய முயற்சிகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு, ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழ்களை சமர்ப்பி த்தல், உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் முதலாளி களிடமிருந்து வரும் குறைகளை நிவர்த்தி செய்தல், மின்- நாமினேஷனை தாக்கல் செய்தல், ஒப்பந்த தாரர்களின் விவரங்களைப் பதிவேற்றுதல் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட உள்ளது.

    • 4 பேருக்கு காயம் ஏற்பட்டது

    வேலூர்:

    வேலூர்-ஆற்காடு சாலை யில் உள்ள காகிதப்பட்டறை டான்சி அருகே சுமார் 200 ஆண்டுகள் பழமையான அர சமரம் ஒன்று இருந்தது. இதன் கீழே விநாயகர் சில வைக்கப்பட்டு வழிபாடு செய்து வந்தனர்.

    கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக அந்த மரம் வலுவிழந்து இருந்தது.

    இந்த நிலையில் நேற்று மாலை திடீரென மரம் சாலையில் விழுந்தது. அந்த வழியாக சென்ற 2 பெண் கள் உள்பட 4 பேருக்கு காயங் கள் ஏற்பட்டது.

    மேலும் அங்கு நிறுத்தப்பட் டிருந்த பைக்குகள், ஒரு கார் சிக்கிக் கொண் டது. மின்ஒயர்கள் அறுந்த தால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. மேலும் அருகில் இருந்த மின் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர் ஒன்றும் சேதமடைந்தது.

    சாலையின் குறுக்கே மரம் விழுந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    தகவல் அறிந்ததும் வேலூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மரக் கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சாலை ஓரம் முறிந்து விழுந்த அரச மரத்தை உடனடியாக அப்புறப்படுத்த கோரி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • கேரளாவில் பலத்த மழை எதிரொலி
    • கூட்டமின்றி வெறிச்சோடியது

    வேலூர்:

    வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா உள்ளிட்ட இடங்களில் இருந்து மீன் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் மீன்கள் விற்பனை அதிகரித்து காணப்படும். அசைவ பிரியர்கள் அதிக அளவில் குவிந்து, ஆர்வத்துடன் மீன், ஆடு மற்றும் கோழி உள்ளிட்ட இறைச்சிகளை வாங்கி செல்வார்கள்.

    கேரளாவில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதன் எதிரொலியாக வேலூர் மார்க்கெட்டுக்கு கடந்த வாரத்தை விட, இந்த வாரம் மீன்கள் குறைவாக கொண்டு வரப்பட்டது.

    வரத்து குறைந்ததால் மீன்களின் விலையும் உயர்த்தி விற்பனை செய்யப்பட்டது.

    இதில் வஞ்சரம் மீன் ரூ.600 முதல் 900 வரையும், சங்கரா ரூ. 250 முதல் 300 வரையும், நண்டு ரூ.400 முதல் 500 வரையும், ஏரா ரூ.400 முதல் 500 வரையும், கடல் வவ்வா ரூ. 500, அணை வவ்வா ரூ.180-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் இன்று கார்த்திகை தீபம் என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க வரும் அசைவ பிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து, மார்க்கெட் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது.

    • பக்தர்கள் அவதி
    • இடம் பிடிக்க முண்டியடித்துக்கொண்டு ஏறினர்

    வேலூர்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். வேலூர் மாவட்டம் மற்றும் ஆந்திராவிலிருந்து திருவண்ணாமலை தீப திருவிழாவை காண காலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர்.

    பக்தர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அரசு சார்பில் போதிய பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்து வருகின்றனர். புதிய பஸ் நிலையத்திற்குள் வரும் சிறப்பு பஸ்களில் இடம் பிடிக்க பக்தர்கள் முண்டியடிக்கும் நிலை ஏற்பட்டது. ஒரு சில பஸ் டிரைவர்கள் பஸ்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தாமல் அங்கும் இங்குமாக பஸ்களை ஓட்டிச் சென்று பக்தர்களை அலைக்கழித்தனர்.

    கடந்த ஆண்டு திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு குழந்தைகளுடன் செல்லும் பக்தர்கள் குழந்தைகளை தவறவிட்டால் எளிதாக கண்டுபிடிக்க புதிய பஸ் நிலையத்தில் போலீசார் அடையாள டேக் கட்டி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு குழந்தைகளுக்கு டேக் கட்டப்படவில்லை.

    • உறவினர் துக்க நிகழ்வுக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 10 பேர் நேற்று மதியம் ஆட்டோ மூலம் குச்சிபாளையம் கிராமத்தில் உள்ள உறவினர் துக்க நிகழ்வுக்கு பிராமண மங்களம் வழியாக சென்றனர்.

    ஒடுகத்தூரில் இருந்து குடியாத்தம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் ஒன்று பிராமணமங்களம் அருகே வந்துகொண்டு இருந்தது. அப்போது பஸ், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

    ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் பயணம் செய்த வேண்டா, சாந்தி, முருகம்மாள், ராதா, தேவராஜ், சரளா, வள்ளி, கலாவதி, இளவரசன், இளையராஜா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து, ஆட்டோவுக்குள் சிக்கியிருந்த அனைவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவ மனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

    தகவலறிந்து விரைந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் வேண்டா உடலை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×