என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை வரம் தரும் சிம்மகுளம் திறப்பு
    X

    குழந்தை வரம் தரும் சிம்மகுளம் திறப்பு

    • விரிஞ்சிபுரம் கோவிலில் வருகிற 9-ந் தேதி நடக்கிறது
    • கனவில் சிவன் தோன்றி அருள் தருவார்

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், விரிஞ்சிபுரம் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவில் புகழ்பெற்ற சிவதலங்களில் ஒன்று. இந்த கோவில் வேலூர்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் செதுவாலையிலிருந்து வடுகன்தாங்கல் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் சுயம்புவாக தோன்றியது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான பழமையான இக்கோவிலின் மதிலழகு சிறப்பு வாய்ந்தது.

    தஞ்சை கோவில் அழகு, திருவிரிஞ்சை மதிலழகு என்பதன் மூலம் இக்கோவிலின் மதில் சுவர் சிறப்பினை அறியலாம்.

    அடிமுடி காண முடியாமல் பொய் சொல்லி திருஅண்ணாமலையாரிடம் பெற்ற சாபத்தை பிரம்மா, மார்க்கபந்தீஸ்வரரை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக இந்த தலத்தின் வரலாறு கூறுகிறது. இந்த கோவிலுக்குள் உள்ள சிம்ம தீர்த்தம் மிகவும் விஷேசமானது.

    இக்குளத்தை ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்ததாக பிரம்மாண்ட புராணம் கூறுகிறது. இத்தீர்த்த குளம் ஆண்டிற்கு ஒருமுறை அதாவது கார்த்திகை மாதம் கடைசி சனிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு திறக்கப்படும்.

    இந்த தீர்த்த குளத்தில் நீராடினால் குழந்தை பேறு இல்லாத பெண்களுக்கு குழந்தை பேறும், பேய், பிசாசு, பில்லி, சூன்யம், வலிப்பு, தீவினைகள் பிடித்தவர்களுக்கு அகலவும் செய்யும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை.

    இவர்கள் முதலில் ஷீரா நதி என்னும் பாலாற்றில் நீராட வேண்டும். பின்னர் கோவிலின் அருகில் பிரம்மனால் உருவாக்கப்பட்ட பிரம்ம தீர்த்தத்தில் நீராடி தொடர்ந்து சிம்ம வாய் முகம் கொண்ட சிம்ம தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து ஈர உடையுடன் மடியில் பூ, பழம், தேங்காய் வைத்துக் கொண்டு கோவில் பிரகாரத்தில் படுத்து உறங்கினால், அவர்களது கனவில் சிவபெருமான் தோன்றி பழம், புஷ்பம், கொடுத்து குழந்தை வரம் அருள்வார் என்பது நம்பிக்கை.

    இவ்வாறு சிறப்பு வாய்ந்த கடை ஞாயிறு விழா வருகிற டிசம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதிகளில் நடக்கிறது. 9-ந் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிம்ம குளம் திறக்கப்படுகிறது.

    10-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு பிரம்ம குளத்தில் தீர்த்தவாரியும், காலை 9 மணிக்கு பாலகனுக்கு உபநயன சிவதீட்சையும், காலை 9.30 மணிக்கு சுவாமி திருமாட வீதி உலாவும், பகல் 12 மணிக்கு அபிஷேகமும், மாலையில் மகா தீபாராதனையும், இரவு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலாவும் நடக்கிறது.

    இதில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சிம்ம தீர்த்தத்தில் நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    விழாவிகான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர், தக்கார், ஆய்வாளர், செயல் அலுவலர் உள்பட கோவில் பணியாளர்கள், முன்னாள் அறங்காவலர்கள் மற்றும் விரிஞ்சிபுரம் பொதுமக்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    Next Story
    ×