என் மலர்
வேலூர்
- விவசாயிகள் வேதனை
- நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சாலையில் தாழ்வான பகுதிகள், குளம், குட்டை போன்ற நீர் நிலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
மலைகளில் நீரூற்று ஏற்பட்டு, நீரோடிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த மேல்பாடி அருகே உள்ள தேன்பள்ளி ஊராட்சி, வெங்கடாபுரம் கிராமத்தில் சுமார் 50 ஏக்கரில் நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ளது.
இந்த விவசாய நிலங்களில் மழை நீர் அதிக அளவில் தேங்கியுள்ளது. அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்து, அழுகிய நிலையில் காணப்படுகிறது.
இதனால் நெற்பயிர்கள் றுவடை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளதாக, விவசாயிகள் வேதனையுடன் கூறுகின்றனர். எனவே விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்துள்ளனர்.
- வேலூரில் நாளை நடக்கிறது
- கலெக்டர் அறிவிப்பு
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக முதல் அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் 100 சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடைபெறுகிறது.
அதன் அடிப்படையில், வேலூர் மாவட்டத்தில் 2 இடங்களில் முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நாளை நடக்கிறது.
அணைக்கட்டு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், வேலூர் அரசு முஸ்லிம் மேல்நிலை பள்ளியிலும் நடைபெற உள்ளது.
இம்முகாமில் இதுவரை முதல் அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து பதிவு செய்து பயனடையலாம்.
மேலும், இம்முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள் வேலூர் கலெக்டர் கூடுதல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்தில் வந்து பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தண்டவாளத்தை கடந்த போது விபரீதம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி வள்ளிமலை கூட்ரோடு மிஷின் காம்பவுண்ட் அசோக் நகரை சேர்ந்தவர் முரளி கிருஷ்ணன் (வயது 48). தொழிலாளி.
இந்த நிலையில் முரளி கிருஷ்ணன் இன்று காலை வீட்டில் இருந்து குடத்தை எடுத்துக்கொண்டு தண்ணீர் எடுத்து வருவதற்காக சென்றார்.
அப்போது அருகே உள்ள ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த திருப்பதி பாசஞ்சர் ரெயில் இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முரளி கிருஷ்ணன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து காட்பாடி ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே போலீசார் முரளி கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிநீர் எடுத்து வர சென்ற தொழிலாளி ரெயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அப்பகுதி மக்கள், குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
- நீர் வரத்து தொடங்கி உள்ளது
- பொதுமக்கள் யாரும் குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது
வேலூர்:
வேலூர் பலவன்சாத்து குப்பத்தில் பெரிய ஏரி உள்ளது. ஓட்டேரி அடுத்த நாயக்கநேரி, குளவிமேடு, வாணியங்குளம் ஆகிய பகுதிகளில் உருவாகும் மழை நீர் சிறு ஓடைகள் வழியாக ஓட்டேரி ஏரிக்கு வரும்.
ஓட்டேரி ஏரியிலிருந்து வரும் உபரி நீர் மழைநீர் கால்வாய் வழியாக பலவன்சாத்து குப்பம் ஏரியை வந்தடையும்.
இந்த ஏரி நிரம்பியதும், இங்கிருந்து வெளியேறும் உபரி நீர் மீண்டும் கால்வாய் வழியாக சென்று தொரப்பாடி ஏரியில் கலக்கிறது. இந்த பலவன்சாத்துக்குப்பம் ஏரி நகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. மழைக்காலங்களில் இந்த ஏரி நிரம்பும் போது, ஏரிக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டால் தண்ணீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிடும்.
தற்போது பருவமழை பெய்து வரும் நிலையில், பலவன்சாத்துகுப்பம் ஏரிக்கு நீர் வரத்து தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை பலவன்சாத்துகுப்பம் ஏரியை திடீரென ஆய்வு செய்தார்.
அப்போது ஏரியை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடி உள்ளிட்ட முட்புதர்களை அகற்ற வேண்டும். ஏரியில் பொதுமக்கள் யாரும் குப்பைகள் கொட்ட அனுமதிக்க கூடாது.
நிரம்பும் போது உடைப்பு ஏற்படாத வகையில் ஏரிக்கரையை பலப்படுத்த வேண்டும்.
வருவாய்த் துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, உதவி கலெக்டர் கவிதா, வேலூர் தாசில்தார் செந்தில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
- ஒடுகத்தூர் வனத்துறை சார்பில் வழங்கப்படுகிறது
அணைக்கட்டு:
பசுமை தமிழகம் திட்டம் மூலம் ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு வனத்துறை சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி இந்த ஆண்டுக்கான இலவச மரக்கன்றுகள் பெறுவதற்கு விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து வனச்சரக அலுவலர் இந்து வெளியிட்டுள்ள செய்தி கூறியிருப்பதாவது:-
ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு வழங்க நெல்லி, கொய்யா, மூங்கில், புளி, மாமரம், நாவல், நீர் மருது, புங்கன், செங்கருங்காலி, சவுக்கு, எலுமிச்சை, வேம்பு, இலுப்பை உள்ளிட்டவைகளில் 40 ஆயிரம் மரக்கன்றுகள் உள்ளது.
இவை ஒரு ஏக்கருக்கு 200 முதல் 250 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
எனவே, விருப்பமுள்ளவர்கள் கம்ப்யூட்டர் பட்டா, ஆதார் அட்டை நகல், புகைபடம், வங்கி கணக்கு புத்தக நகல் போன்ற ஆவணங்களை ஒடுகத்தூர் வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்து பதிவு செய்து கொள்ள கொண்டு தங்களுக்கு தேவையான மரக்கன்றுகளை எடுத்து செல்லாலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- செல்வியிடம் போலீசார் கேட்டபோது காதலன் பிரசாந்துடன் செல்வதாக தெரிவித்தார்.
- இருவரும் மேஜர் என்பதால் செல்வியை அவரது விருப்பத்தின்படி பிரசாந்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24), கார் டிரைவர்.
நெல்லூர்பேட்டையை சேர்ந்த தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருபவர் செல்வி (20). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் செல்வியை அவரது குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக வீட்டில் சிறை வைத்தனர். இதனை அறிந்த பிரசாந்த் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
குடியாத்தம் போலீசார் செல்வி குடும்பத்தினரை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.
பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே பிரசாந்த்- செல்வி இருவரும் அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வாழ்ந்தது தெரியவந்தது.
செல்வியிடம் போலீசார் கேட்டபோது காதலன் பிரசாந்துடன் செல்வதாக தெரிவித்தார்.
தகவல் அறிந்த செல்வி மற்றும் பிரசாந்தின் குடும்பத்தினர், உறவினர்கள் போலீஸ் நிலையத்தின் முன்பு குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இருவரும் மேஜர் என்பதால் செல்வியை அவரது விருப்பத்தின்படி பிரசாந்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.
சினிமாவில் வருவது போல காதலியை மீட்டு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கலெக்டர் அதிரடி உத்தரவு
- 33 மருத்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் காய்ச்சலால் தினமும் 15 முதல் 20 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்காக அரசு ஆஸ்பத்திரிகளில் தனித்தனியாக வார்டுகள் செயல்படுகிறது.வேலூர் மாவட்டத்தில் டெங்கு தடுப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.
இது தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலூர் மாவட்டம் முழுவதும் 521 களப்பணியாளர்கள் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் நியமிக்கப்ப ட்டுள்ளனர். வேலூர் மாநகராட்சியில் டெங்கு பாதிப்பு பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளை கண்காணிக்க முதுநிலை பூச்சியியல் வல்லுநர் தலைமையில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள ப்பட்டுள்ளது.
மேலும் வட்டார அளவிலும், நகராட்சி, பேரூராட்சி அளவிலும் இரண்டாம் நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் 33 மருத்துவ முகாம்கள் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகிறது. டெங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தினந்தோறும் மருத்துவ முகாம் நடத்தப்படு கிறது. இந்த முகாம்களில் பாதிப்பு அதிகம் உள்ளவ ர்களை கண்டறிந்து சிகிச்சை பெற பரிந்துரைக்க ப்படுகின்றனர்.
டெங்கு பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் கொசு புழு தடுப்பு பணி மற்றும் புகை மருந்து அடிக்கும் பணி 3 நாட்கள் தொடர்ச்சியாக செய்யப்ப டுகிறது. குடிநீரில் குளோரின் அளவு பரிசோதிக்கப்படுகிறது. வட்டார மருத்துவ அலுவலர்கள் நகர் நல மருத்துவர் அலுவலர்கள் மூலம் டெங்கு தடுப்பு பணி கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். பொதுமக்கள் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் வீடுகளின் அருகே தண்ணீர் தேக்கி வைக்க கூடாது.
வீடுகளில் கொசு தடுப்பு மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
- பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் நடவடிக்கை
- 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைமுறை
குடியாத்தம்:
குடியாத்தம் நெடுஞ்சாலை உள் கோட்டத்துக்குட்பட்ட பள்ளிகொண்டா பலமநேர் சாலையில் சிறுபா லம் கட்டும் பணி நடைபெ றுவதால் வருகிற 9, 10 ஆகிய 2 நாள்கள் அனைத்து வாகனங்களும் மாற்று வழியில் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாகனங்களும் மாற்றுப் பாதையில் இயக்க வேண்டும்.
அதன்படி, குடியாத் தத்தில் இருந்து பள்ளி கொண்டா வழியாக வேலூர் செல்பவர்கள் தேசிய நெடுஞ்சாலை 75-ல் வடுகந்தாங்கல் மற்றும் காட்பாடி வழியாகச் செல்லலாம்.
வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வழியாக குடியாத்தம் செல்பவர்கள் தேசிய நெடுஞ்சாலை 48–-ல் செதுவாலை - விரிஞ் சிபுரம் -வடுகந்தாங்கல் வழியாகச் செல்லலாம்.
குடியாத்தத்தில் இருந்து பள்ளிகொண்டா வழியாக ஒடுகத்தூர், அணைக்கட்டு செல்பவர்கள் குடியாத்தம் மேல்பட்டி சாலையில் சென்று உள்ளி கூட்டுச் சாலை மும்முனை சந்திப்பு மாதனூர்வழியாகச்சென்று ஒடுகத்தூர், அணைக்கட்டு அதைச் சுற்றியுள்ள ஊர்க ளுக்குச் செல்ல வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
- வனச்சரக அலுவலர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன கண்ணன். இவரது வீட்டின் அருகே உள்ள கழிவறையில் நாகப் பாம்பு ஒன்று புகுந்தது.
பாம்பைப் பார்த்த சின்ன கண்ணன் ஒடுகத்தூர் வனத்துறையினருக்கு உடனடியாக தகவல் கொடுத்தார்.
பின்னர் அங்கு விரைந்த வனச்சரக அலுவலர் இந்து தலைமையிலான வீரர்கள் 4 அடி நீளம் கொண்ட நாகப்பாம்பை பிடித்து பருவமலை காப்பு காட்டில் விட்டனர்.
- வேறு இடத்திற்கு மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
- ரகளையில் ஈடுப்பட்டு வருவதாக புகார்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமி நகர் பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வருகின்றது.
இதன் அருகில் குடியிருப்பு பகுதிகள் உள்ளதால் ஆட்கள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. இந்த கடையை மாற்ற வேண்டும் என பொதுமக்கள் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்து வந்தனர்.
இதனையடுத்து நேற்று மதுவிலக்கு துறை அதிகாரியான முருகன், திடீரென ஆய்வு மேற்கொ ண்டனர். அப்போது அங்கு உள்ள குடியிருப்பு வாசிகளிடம் நேரடியாக கள ஆய்வு செய்தனர்.
அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள், "நாங்கள் இங்கு வசிக்கவே கடினமாக உள்ளது. வீட்டின் முன்பாக குடித்து விட்டு ரகளையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
எங்களால் இங்கு குடியிருக்க முடியவில்லை, பள்ளிகுழந்தைகள் வீட்டிற்கு வரும் போது பயந்து அங்கேயே நின்று விடுகின்றனர். இதனால் மது கடையை மாற்றகோரி வலியுறத்தினர்.
அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் வேப்பங்குப்பம் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி உட்பட பொதுமக்கள் இருந்தனர்.
- ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து துணிகரம்
- வாலிபர் கைது
வேலூர்:
குடியாத்தம் - வேலூர் ரோட் டில் உள்ள நகராட்சி மேல் நிலைப்பள்ளி பின்புறம் குடியாத்தம் டவுன் போலீ சார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த குடி யாத்தம் ஆர்எஸ் நகரை சேர்ந்த குமார் (வயது 27) என்பவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீ சார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் குமார் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து இங்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
போலீசார் குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் இது சம்பந்தமாக வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூரில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடந்தது
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூர்:
பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அண்ணா அரங்கில் மாநில அளவிலான செஸ் போட்டி இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இப்போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 456 மாணவர்கள், 456 மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டிகள் 11 வயதிற்கு உட்பட்டோர், 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்களும், பரிசுத்தொகை முறையே ரூ.1000, ரூ.800, ரூ.650 என வழங்கப்படவுள்ளது.
இதில் 14, 17, மற்றும் 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் டிசம்பர் மாதம் 26 முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
செஸ் விளையாட்டு போட்டியானது இங்கே நான்கு பிரிவுகளில் மாநில அளவில் நடைபெறுகிறது. விதிமுறைகளின் படி இந்த விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெற உள்ளது.
பொதுவாக வெற்றி தோல்வி என்பது நம்முடைய வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இருக்கும். செஸ்ப் போட்டியை பொறுத்தவரை தோல்வியை நெருங்கும் நிலை வரும் பொழுது மாற்றுத் திட்டத்தை பயன்படுத்தி தோல்வி அடையாமல் மீண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.
அதுபோல் நாம் நம்முடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நிலையிலும் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இத்தகைய மனநிலையை நமக்கெல்லாம் விளையாட்டு போட்டிகள் வழங்குகிறது. எனவே நாம் படிப்பில் ஆர்வம் செலுத்துவதை போல விளையாட்டுப் போட்டிகளிலும் நம்முடைய எண்ணங்களை செலுத்தி நல்ல ஒரு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 456 மாணவர்களும், 456 மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






