search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாநில அளவிலான செஸ் போட்டி
    X

    மாநில அளவிலான செஸ் போட்டி

    • வேலூரில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் நடந்தது
    • கலெக்டர் தொடங்கி வைத்தார்

    வேலூர்:

    பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக அண்ணா அரங்கில் மாநில அளவிலான செஸ் போட்டி இன்று நடந்தது. கலெக்டர் குமாரவேல் பாண்டியன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    இப்போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 456 மாணவர்கள், 456 மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டிகள் 11 வயதிற்கு உட்பட்டோர், 14 வயதிற்கு உட்பட்டோர், 17 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதிற்கு உட்பட்டோர் என நான்கு பிரிவுகளின் கீழ் நடைபெறுகிறது.

    ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், சான்றிதழ்களும், பரிசுத்தொகை முறையே ரூ.1000, ரூ.800, ரூ.650 என வழங்கப்படவுள்ளது.

    இதில் 14, 17, மற்றும் 19 ஆகிய மூன்று வயது பிரிவுகளில் முதல் 5 இடங்களை பிடிக்கும் மாணவ, மாணவிகள் டிசம்பர் மாதம் 26 முதல் 30-ந்தேதி வரை நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    இந்நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-

    செஸ் விளையாட்டு போட்டியானது இங்கே நான்கு பிரிவுகளில் மாநில அளவில் நடைபெறுகிறது. விதிமுறைகளின் படி இந்த விளையாட்டுப் போட்டிகள் முறையாக நடைபெற உள்ளது.

    பொதுவாக வெற்றி தோல்வி என்பது நம்முடைய வாழ்வில் அனைத்து நிலைகளிலும் இருக்கும். செஸ்ப் போட்டியை பொறுத்தவரை தோல்வியை நெருங்கும் நிலை வரும் பொழுது மாற்றுத் திட்டத்தை பயன்படுத்தி தோல்வி அடையாமல் மீண்டு வருவதற்கு முயற்சி செய்வோம்.

    அதுபோல் நாம் நம்முடைய வாழ்க்கையிலும் ஒவ்வொரு நிலையிலும் தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் அதிலிருந்து மீண்டு வருவதற்கான மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    இத்தகைய மனநிலையை நமக்கெல்லாம் விளையாட்டு போட்டிகள் வழங்குகிறது. எனவே நாம் படிப்பில் ஆர்வம் செலுத்துவதை போல விளையாட்டுப் போட்டிகளிலும் நம்முடைய எண்ணங்களை செலுத்தி நல்ல ஒரு மனப்பான்மையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இன்று நடைபெறும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 456 மாணவர்களும், 456 மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். மாணவ, மாணவிகள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் கார்த்திகேயன், அமுலு விஜயன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மண்டல குழுத் தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, மாமன்ற உறுப்பினர் விமலா சீனிவாசன், முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×