என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம்: வீட்டில் சிறை வைக்கப்பட்ட காதலியை மீட்டு சென்ற டிரைவர்
    X

    அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம்: வீட்டில் சிறை வைக்கப்பட்ட காதலியை மீட்டு சென்ற டிரைவர்

    • செல்வியிடம் போலீசார் கேட்டபோது காதலன் பிரசாந்துடன் செல்வதாக தெரிவித்தார்.
    • இருவரும் மேஜர் என்பதால் செல்வியை அவரது விருப்பத்தின்படி பிரசாந்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 24), கார் டிரைவர்.

    நெல்லூர்பேட்டையை சேர்ந்த தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வருபவர் செல்வி (20). இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    காதலுக்கு பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் செல்வியை அவரது குடும்பத்தினர் கடந்த 3 நாட்களாக வீட்டில் சிறை வைத்தனர். இதனை அறிந்த பிரசாந்த் குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    குடியாத்தம் போலீசார் செல்வி குடும்பத்தினரை தொடர்பு கொண்டு போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்தனர்.

    பெண்ணின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஏற்கனவே பிரசாந்த்- செல்வி இருவரும் அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்து கொண்டு தனித்தனியாக வாழ்ந்தது தெரியவந்தது.

    செல்வியிடம் போலீசார் கேட்டபோது காதலன் பிரசாந்துடன் செல்வதாக தெரிவித்தார்.

    தகவல் அறிந்த செல்வி மற்றும் பிரசாந்தின் குடும்பத்தினர், உறவினர்கள் போலீஸ் நிலையத்தின் முன்பு குவிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் இருவரும் மேஜர் என்பதால் செல்வியை அவரது விருப்பத்தின்படி பிரசாந்துடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    சினிமாவில் வருவது போல காதலியை மீட்டு அழைத்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×