என் மலர்
வேலூர்
- வேலூரில் வெயிலை சமாளிக்க நடவடிக்கை
- டி.ஐ.ஜி. முத்துசாமி தொடங்கி வைத்தார்
வேலுார்:
வேலுாரின் கோடைவெயிலால் பகல் மட்டுமின்றி இரவிலும் அனலின் தாக்கம் இருக்கும். இதனால், பகல் நேரத்தில் கோடைக்காலத்தில் வெளியில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து போகும். அப்படியே வெளியில் செல்பவர்களும், குடை, தொப்பி, கூலிங்கிளாஸ் என்று பாதுகாப்பு உபகரணங்களுடனே வலம் வருவார்கள்.
சாதாரணமாக ஒருசில மணி நேரம் வெளியில் சென்று திரும்பு பவர்களுக்கே கோடையை தாங்க இத்தனை பொருட்கள் தேவைப்படுகிறது. ஆனால், காலை யில் இருந்து மாலை வரை சாலைகளில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் போக்குவரத்து போலீசாரின் நிலைமையை சொல்லிமாளாது.
அவர்கள் பாடு திண்டாட்டம்தான். கொளுத்தும் வெயிலில் வியர்வை சொட்டச் சொட்ட கடமையாற்றி வருகின்றனர்.
இந்நிலையில்தான் வேலூர் மாவட்ட போலீ சாருக்கு கோடைக்காலத்தில் வெப்பம் தாங்கும் வகையிலான பெரிய அள வில் நவீன தொப்பிகள், அவ்வப்போது மோர், எலுமிச்சை பழச்சாறு போன்றவை போலீஸ்துறையால் வழங்கி வருகின்றனர்.
இந்தமுறை போக்கு வரத்து போலீசாரின் துயர் துடைக்க தொப்பியுடன், அவர்கள் கண்களை பாதுகாக்க வசதியாக கருப்பு கூலிங்கிளாஸ் வழங்கப்படுகிறது.
வேலூர் மக்கான் சிக்னல் அருகே போலீசாருக்கு தொப்பி மற்றும் ஜில்லென மோர் ஆகியவற்றை டி.ஐ.ஜி முத்துசாமி வழங்கி தொடங்கி வைத்தார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் டி.எஸ்.பி.திருநாவுக்கரசு, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து காட்பாடி சித்தூர் பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து போலீசாருக்கு டி.ஐ.ஜி. முத்துசாமி கூலிங்கிளாஸ் வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று முதல் தொடர்ந்து 120 நாட்கள் போலீசாருக்கு தாகம் தீர்க்க மோர் அல்லது எலுமிச்சை ஜூஸ் தெர்மாகோல் தொப்பி கூலிங்கிளாஸ் ஆகியவை வழங்க உத்தரவிட்டார்.
அதன்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள 110 போலீசாருக்கு தொப்பி கூலிங்கிளாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஜில்லென மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஹால் டிக்கெட் வழங்கும் பணி தொடக்கம்
- மொத்தம் 16 ஆயிரத்து 970 பேர் தேர்வு எழுத உள்ளனர்
வேலூர்:
பிளஸ் 2 பொதுத் தேர்வு வருகிற 13-ந் தேதி தொடங்குகிறது. பிளஸ்-1 வகுப்புக்கு வருகிற 14-ந் தேதி முதல் ஏப்ரல்5-ந் தேதி வரையும் 10-ம் வகுப்புக்கு ஏப்ரல் 6-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ந் தேதி வரை பொது தேர்வு நடத்தப்படுகிறது.
தொடர்ந்து பொது தேர்வுக்கான பணிகளில் அரசு தேர்வுகள் இயக்குனரகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கு செய்முறை தேர்வு இன்று தொடங்கியது.
வேலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வு 8 ஆயிரத்து 247 மாணவர்களும் 8,723 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 970 பேர் எழுத உள்ளனர்.
இவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 81 மையங்களில் செய்முறை தேர்வுகள் நடந்தது. அனைத்து மையங்களிலும் எந்தவித புகாருக்கும் இடமின்றி தேர்வுகள் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 2 கடைகள் முற்றிலும் எரிந்து நாசம்
- தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
வேலூர்:
வேலூர் பழைய பஸ்நிலையம் பகுதியில் பர்மா பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன், மின்னனு சாதன பொருட்கள், காலணிகள், துணிக்கடைகள் என 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இன்று அதிகாலை 1 மணியளவில் பர்மா பஜாரில் செயல்பட்டு வரும் ஒரு கடையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் 2 கடைகளில் தீ பரவி முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பர்மா பஜாரில் உள்ள அகமதுவுல்லா என்பவரின் காலணி கடையில் இருந்து மின் இணைப்பில் பழுது ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தீ அருகில் இருந்து தனசேகர் என்பவரின் மின்சாதன கடைக்கு பரவியது. இதனால் 2 கடைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
- ஊராட்சி மன்ற தலைவர் பேச்சுவார்த்தை
- எதிர்ப்பால் பணிகள் நிறுத்தப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியம் சீவூர் ஊராட்சி புவனேஸ்வரிபேட்டை முருகன்நகர் பகுதியில் தனியார் செல்போன் டவர் அமைக்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நேற்று அங்கு செல்போன் டவர் அமைப்பதற்கான ஆரம்பப்ப பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அப்பகுதி பொதுமக்கள் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தாசில்தார் விஜயகுமார், குடியாத்தம் ஒன்றியகுழு தலைவர் என்.இ.சத்யானந்தம், ஒன்றிய குழு உறுப்பினர் அமுதாலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் கே.ஆர்.உமாபதி, துணைத்தலைவர் அஜீஸ் உள்ளிட்டோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க கூடாது என அப்பகுதி பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் அனுமதி பெற்ற பின்னரே செல் செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும்.
இப்பகுதியில் பொதுமக்கள் எதிர்ப்பு இருப்பதால் செல்போன் டவர் அமைக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு செல்போன் டவர் அமைக்கும் ஆரம்ப பணிகள் நிறுத்தப்பட்டது.
- 9400 சதுர மீட்டரில் 5 மாடிகள் கொண்டது
- கலெக்டர் ஆய்வு
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனையை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டுமென பல ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் இக்கோரிக்கையை சட்டமன்றத்தில் வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பழைய கட்டிடங்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கான நவீன வசதிகளின் கூடிய கட்டிடங்கள் கட்ட 40 கோடி ரூபாயை ஒதுக்கியது.
நேற்று காலையில் சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் குடியாத்தத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடங்கள் கட்டுவதற்கான தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் கண்ணகி தலைமை தாங்கினார்.
குடியாத்தம் உதவி கலெக்டர் எம்.வெங்கட்ராமன், பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளர் ஜெயராமன், குடியாத்தம் நகர் மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், குடியாத்தம் ஒன்றிய குழு தலைவர் என்.இ.சத்யானந்தம், அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள் கள்ளூர்ரவி, நத்தம்பிரதீஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மருத்துவஅலுவலர் எம். மாறன்பாபு அனைவரையும் வரவேற்றார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கி பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் கட்டப்படவுள்ள மாவட்ட தலைமை மருத்துவமனை 9400 சதுர மீட்டரில் 5 மாடிகள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட உள்ளதுள்ளது இந்த மருத்துவமனை கட்டிடங்களில் தற்போதைய நவீன மருத்துவ வசதிகளுக்கு ஏற்ப மருத்துவமனை கட்டிடங்கள் உருவாக்கப்பட்டு கட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திகேயன், அரசு வழக்கறிஞர்கள் பாண்டியன், லோகநாதன் உள்பட அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர்கள், நகர மன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
- வீடு கட்ட பட்டா வழங்குவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது
- 736 பயனாளிகள் குறித்து அதிகாரி கேட்டறிந்தார்
அணைக்கட்டு:
பிஎம்ஏஒய் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடு கட்டுவது மற்றும் பட்டா வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அணைக்கட்டு பிடிஓ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஒன்றிய குழு தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். தாசில்தார் ரமேஷ் பிடிஓக்கள் சுதாகரன், சாந்தி முன்னிைல வகித்தனர். இதில் டிஆர்ஓ ராமமூர்த்தி கலந்து கொண்டு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கடந்த 2011 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பிஎம்ஏஒய் திட்டத்தில் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டுவது. வீட்டு மனை இல்லாதவர்களுக்கு அரசு நிலம் கொடுத்து வீடு கட்டி கொடுப்பது தொடர்பான கனக்கெடுக்கும் பணி துவங்கி அதில் சுமார் 736 பயனாளிகள் தேர்வாகினர். இவர்களுக்கு இதுவரை யார் யார் வீடு, நிலம் இல்லாமல் இருக்கின்றார்கள் என ஆய்வு செய்து அப்பணியை உடனடியாக துவங்குவது தொடர்பாக கூட்டம் நடைப்பெற்றது.
இந்த கூட்டத்தில் மண்டல துணை பிடிஓக்கள், ஊராட்சி செயலாளர்கள், விஏஓக்கள் ஆகியோர்களிடம் தனித்தனியாக இடம் அற்றவர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பயனாளிகளை குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பயனாளிகளுக்கு முன்னதாக வேறு எங்கயாவது இடம் உள்ளதா? தற்போது சொந்தமாக வீடுகள் ஏதாவது கட்டியுள்ளார்களா? எனவும் அவர்களின் தற்போதைய பொருளாதார நிலை உள்ளிட்ட விலை குறித்து ஆர்டிஓ விசாரணை நடத்தினார்.
வீடுகள் வழங்க தேர்வு செய்யப்பட்ட 736 பயனாளிகளின் குறித்து விவரங்களையும் டிஆர்ஓ கேட்டறிந்தார்.
இறுதியாக பிஎம்ஏஓய் திட்டத்தில் வீடு வழங்க இடம் இல்லாதவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள பயனாளிகளுக்கு பட்டா வழங்க அரசுக்கு சொந்தமான இடங்களை விரைவாக தேர்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
அதனை ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்கப்படும். பட்டா வழங்கியதும் அந்த பயனாளிகளுக்கு இந்த திட்டத்தில் கீழ் வீடு கட்ட பணி ஆணைகள் வழங்க வேண்டும் என வருவாய்துறைக்கும், பிடிஓக்களுக்கும் டிஆர்ஓ உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மண்டல துணை தாசில்தார் ராமலிங்கம், ஒன்றிய கவுன்சிலர் அறிவழகன், ஆஷா ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
- சென்னை சென்ட்ரல், பெங்களூரு மற்றும் மைசூருலிருந்து 8666 பேர் காட்பாடி வந்துள்ளனர்.
வேலூர்:
தமிழ்நாட்டின் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றான காட்பாடி ரெயில் நிலையத்துக்கு தினமும் சராசரியாக சுமார் 38,000 பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த ரெயில் நிலையத்தில் ரூ.360 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது.
இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 10 வந்தே பாரத் ரெயில்கள் 17 மாநிலங்களை இணைக்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.
அதில் சென்னை-மைசூர் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்தே பாரத் ரெயில் சேவை தொடங்கப்பட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த வந்தே பாரத் ரெயில் புதன்கிழமை தவிர அனைத்து வார நாட்களிலும் சென்னையிலிருந்து காலை 5.50 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.20-க்கு மைசூரை சென்றடைகிறது. இடையில் காட்பாடி மற்றும் பெங்களூரு ரெயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது.
இதனால் காட்பாடி, வேலூர், அரக்கோணம், ராணிபேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய அனைத்துப் பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர்.
12.11.2022 முதல் 16.02.2023 வரை வந்தே பாரத் ரெயில் மூலம் காட்பாடியிலிருந்து சென்னை சென்ட்ரல், பெங்களூரு மற்றும் மைசூருக்கு 10,510 பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை சென்ட்ரல், பெங்களூரு மற்றும் மைசூருலிருந்து 8666 பேர் காட்பாடி வந்துள்ளனர். 4 மாதத்தில் காட்பாடியில் இருந்து மட்டும் 19,176 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.
காட்பாடியில் வந்தே பாரத் ரெயிலுக்கு காட்பாடி சுற்றுப்புற மக்கள் பெரும் ஆதரவை அளித்து வருவதாக தெற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- விவசாயிகள் சரியான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் நாட்டு விதைகளை திரும்ப திரும்ப உருவாக்கலாம்.
- மரபணு மாற்றப்பட்ட விதையால் உருவாகும் காய்கறிகளில் இருந்து கிடைக்கும் விதைகள் மீண்டும் முளைக்காது.
வேலுார்:
தமிழ்நாடு விதை சேகரிப்பாளர் கூட்டமைப்பின் சார்பில், மரபு காய்கறி மற்றும் கிழங்கு திருவிழா வேலுார் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
விவசாயிகள், பொதுமக்கள் வியக்கும் வகையில் இந்த கண்காட்சி அமைந்திருந்தது.
இதில், 500க்கும் அதிகமான மரபு காய்கறி மற்றும் கிழங்கு வகைகளின் கண்காட்சி மற்றும் விதைகள் விற்பனை நடந்தது. தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் சிறப்பு வாய்ந்த காய்கறிகள், கிழங்கு வகைகள் இடம்பெற்றிருந்தன.
குறிப்பாக கண்காட்சியில், மதனப்பள்ளி, கருஞ்சிவப்பு, லைபீரியா, கருப்பு வால், கருப்பு பிளம், சிகப்பு வால், கொடி பிளம், பச்சை வரி, ஆப்பிள் உள்ளிட்ட 86 வகையான தக்காளி வகைகளும்,
வெள்ளை நிற கத்தரி, செவந்தம்பட்டி கத்தரி, வெள்ளை தொப்பி கத்தரி, திண்டுக்கல் சல்லி, பச்சை வரி, வெள்ளை முள், காளான், வெள்ளை மடிப்பு, பொள்ளாச்சி வரி உள்ளிட்ட 30 கத்தரிக்காய் வகைகளும் இடம்பெற்று இருந்தது. அதோடு, 60 வகையான மிளகாய் வகைகள், 40 வகையான சுரக்காய் மற்றும் பரங்கிக்காய் வகைகள் இடம்பெற்று இருந்தது.
இதேபோன்று, சிகப்பு மக்காச்சோளம், மஞ்சள் மக்காச்சோளம், பலநிற மக்காச்சோளம், கருப்பு மக்காச்சோளம் ஆகியவையும், பன்னீர் பாகற்காய், ருத்திராட்சை பாகற்காய், வெளிர் பச்சை பாகற்காய், குருவி தலை பாகற்காய் என பாகற்காய் வகைகளும் இடம்பெற்று இருந்தது.
கிழங்கு வகைகளில் யானை பாதம் கிழங்கு, முள்ளன் கிழங்கு, வாழை வெற்றிலைவள்ளி, சேனை வெற்றிலை வள்ளி, பரணி வெற்றிலைவள்ளி, கூகை கிழங்கு உள்ளிட்ட 90 வகையான கிழங்குகள் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.
'இப்போது புவிசார் குறியீடு பெற்றுள்ள வேலூர் இலவம்பாடி கத்தரிக்காய் கூட நம்மிடம் விதைகளாக வழங்கப்படுபவை மரபணு மாற்றப்பட்டவை அல்லது ஒட்டுரகங்கள்தான்.
நாங்கள் அதை அணைக்கட்டு, ஒடுகத்தூர் பகுதிகளில் தேடித்தேடி மரபு சார்ந்த இலவம்பாடி கத்தரி விதைகளை வாங்கி சேகரித்து உற்பத்தி செய்து தருகிறோம்' என தெரிவித்தனர்.
இக்கண்காட்சியில் 500க்கும் மேற்பட்ட வகைகளில் பாரம்பரிய காய்கறிகள், விதைகள், அவற்றுக்கான செடி, கொடிகள், கிழங்குகள், கீரை வகைகள், நாம் உண்ணத்தகுந்த களைகளாக பாவித்து வீசியெறியும் கீரைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இதில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து கண்காட்சியை பார்த்து காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்கி சென்றனர். காய்கறிகளுடன், விதைகளையும் அதிகளவில் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். அதோடு இயற்கை வேளாண் ஆர்வலர்கள், கூட்டமைப்பு நிர்வாகிகள் பேச்சுக்களை ஆர்வமுடன் கவனித்து பார்வையாளர்கள் குறிப்பு எடுத்துக்கொண்டனர்.
இந்த அவசர காலத்தில் ஹைபிரிடு காய்கறிகளை உண்டு வாழ்ந்து வரும் மக்களுக்கு, உடலுக்கு நன்மையை மட்டுமே அளிக்கும் மரபு காய்கறிகள், கிழங்குகள் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது.
இதனால், பலரும் தங்களுக்கு தேவையான காய்கறிகள் மற்றும் கிழங்குகளின் விதைகளை வாங்கிச் சென்றனர். அதோடு, விவசாயிகளும் தங்களுக்கு தேவையான விதைகளை பெற்று சென்றனர்.
இதில் சிறப்பு விருந்தினராக சிறைத்துறை டிஐஜி செந்தாமரைக்கண்ணன் கலந்து கொண்டு பேசியதாவது:
விவசாயிகள் சரியான விதைகளை தேர்வு செய்வதன் மூலம் நாட்டு விதைகளை திரும்ப திரும்ப உருவாக்கலாம். ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதையால் உருவாகும் காய்கறிகளில் இருந்து கிடைக்கும் விதைகள் மீண்டும் முளைக்காது. விளைச்சலும் சரியாக இருக்காது.
கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மத்திய சிறை வளாகத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் இருமடி பாத்தி முறையில் விவசாயம் செய்வதுடன் விதைகளும் உற்பத்தி செய்யப்படுகிறது. அங்கு இயற்கை உரம், பஞ்சகவ்யம், அமிர்தகலசம், இயற்கை பூச்சி விரட்டிகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இதனால் கூடுதலாகவும் விளைச்சல் கிடைப்பதுடன், விதைகளும் தாராளமாக கிடைக்கிறது. விதைகளுக்காக எங்கும் தேடி செல்வதில்லை. வேலூர் மாவட்டத்திலும் விவசாயிகளும் இதை முன்மாதிரியாக கொண்டு விவசாயம் செய்தால் நீடித்த நிலையான வளர்ச்சியை பெற முடியும். வேலூர் சிறையிலும் அதை பின்பற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
- 10 பேர் கைது
- ஆன்லைனில் அபராதம் விதிப்பதை கைவிட வலியுறுத்தல்
வேலூர்:
சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று தமிழகம் முழுவதும் 12 மணி முதல் 12.15 மணி வரை வாகனங்களை ரோட்டில் நிறுத்தி போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி வேலூர் நேஷனல் சிக்னல் அருகே ஆட்டோக்களை சாலையில் நிறுத்தி போராட்டம் செய்தனர். சி.ஐ.டி.யு. ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் முரளி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பரசுராமன், பிரபாகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், மக்களுக்கு எதிராகவும் உள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது. ஆன்லைன் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும். 15 ஆண்டுகளை கடந்த வாகனங்களை அழிப்பது என்ற முடிவை கைவிட வேண்டும். ஆட்டோ, டாக்சி கட்டணத்தை தீர்மானிக்கும் செயலியை அரசு உருவாக்க வேண்டும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். டோல்கேட் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இந்தப் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை கைது செய்தனர்.
- மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை
- ஜப்தி நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்
வேலூர்:
வேலூர் மாநகராட்சியில் சொத்து வரி குடிநீர் கட்டிட வரி வசூல் தீவிர படுத்தப்பட்டுள்ளது. வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள எல்.ஐ.சி. அலுவலகத்தில் சார்பில் சொத்து வரி கட்டப்படாமல் உள்ளது.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கிட்ட போது ரூ.35 லட்சம் வரை எல்.ஐ.சி. வரி பாக்கி வைத்துள்ளது தெரிய வந்தது.
இதனையடுத்து வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் இருந்து எல்.ஐ.சி. அலுவலகத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.அதில் ரூ.33 லட்சம் வரை பாக்கி உள்ளது.
அதனை உடனடியாக செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் எல்.ஐ.சி. அலுவலகம் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் நேரில் சென்று இது குறித்து நடவடிக்கை எடுக்கப் போவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து எல்.ஐ.சி. அதிகாரிகள் மாநகராட்சி அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் விரைவில் சொத்து வரியை செலுத்தி விடுகிறோம் எந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்.ஐ.சி. சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனால் ஜப்தி நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பஸ் படிக்கட்டில் தொங்கி சென்ற போது பரிதாபம்
- கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க வலியுறுத்தல்
வேலூர்:
ஆற்காட்டில் இருந்து வேலூர் பழைய பஸ் நிலையத்திற்கு இன்று காலை அரசு டவுன் பஸ் வந்து கொண்டிருந்தது.ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர். கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் மாணவர்கள் தொங்கி கொண்டு வந்தனர்.
சத்துவாச்சாரி பஸ் நிறுத்தம் வந்ததும் பஸ் நின்றது.அதிலிருந்து சில பயணிகள் கீழே இறங்கினர். பஸ் புறப்பட்டதும் வேகமாக ஓடி சென்று கல்லூரி மாணவர் ஒருவர் ஓடிக்கொண்டிருந்த பஸ் ஜன்னலை பிடித்து தொங்கினார்.
அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் டயருக்கும் பஸ்சுக்கும் நடுவில் சிக்கியது.இதனால் அவர் அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டதும் டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். அதனால் மாணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மாணவரின் காலை லாவகமாக மீட்டனர். இந்த விபத்தில் மாணவரின் காலில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டது. அவரை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இதை தொடர்ந்து பஸ் புறப்பட்டு சென்றது. இந்த விபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாநகரப் பகுதியில் கிராமங்களில் இருந்து வரும் அரசு டவுன் பஸ் களில் நாளுக்கு நாள் பள்ளி மாணவ மாணவிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பல மாணவ மாணவிகள் தொங்கியபடியே பள்ளிக்கு செல்கின்றனர்.
அசம்பாவிதம் நடைபெறுவதை தடுக்க கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதலாக அரசு டவுன் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
- காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
- காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வேலூர்:
வேலூர் சைதாப்பேட்டை பழைய காலனியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மனைவி காஞ்சனா (வயது 45) கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் இறந்து விட்டார். இதனை தொடர்ந்து காஞ்சனா அவரது மகன் ஆனந்தன் (25) என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருச்சிக்கு சென்ற ஆனந்தன் பைக் விபத்தில் இறந்துவிட்டார். இதனால் காஞ்சனா தனிமையில் வசித்து வந்தார். கணவரும் இல்லை, மேலும் மகன் இறந்த துக்கத்தை அவரால் தாங்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த காஞ்சனா தற்கொலை செய்ய முடிவு செய்தார்.
இன்று காலையில் அவர் காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றார். 2-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே போலீஸ் நிலையத்தை கடந்து சென்றார். காலை 7.40 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வழியாக டெல்லி செல்லும் நியூ டின் சிகியா எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற அந்த ரெயில் மீண்டும் சென்னை நோக்கி புறப்பட்டது. அப்போது காஞ்சனா ஓடி சென்று ரெயில் முன்பு தண்டவாளத்தின் நடுவில் நின்றார்.
அவர் என்ஜின் டிரைவரை நோக்கி கைகளை அசைத்தபடி நின்று கொண்டே இருந்தார். இதனை கண்ட டிரைவர்கள் ரெயில் பிரேக் போட்டனர். மேலும் அலாரம் எழுப்பினர்.
ஆனாலும் ரெயில் காஞ்சனா மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த காஞ்சனா சம்பவ இடத்திலேயே பரிதாபமாாக இறந்தார்.
இதனை நேரில் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். காட்பாடி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா மற்றும் போலீசார் சென்று ரெயிலுக்கு அடியில் சிக்கி கிடந்த காஞ்சனா உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து ரெயில் தாமதமாக புறப்பட்டு சென்றது.
காஞ்சனா உடலை மீட்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தபோதே 1-வது பிளாட்பாரத்தில் ரெயிலுக்காக காத்திருந்த வட மாநில பயணி ஒருவர் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு இறந்தார். இதனைக் கண்டு அவரது குடும்பத்தினர் அலறி கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு ரெயில்வே போலீசார் அங்கு சென்றனர். விசாரணையில் இறந்தவர் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் கிருபா (வயது 54) என்பது தெரியவந்தது. அவர் குடும்பத்துடன் வேலூருக்கு சுற்றுலா வந்துள்ளார்.
ரெயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது தெரியவந்தது. அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
காட்பாடி ரெயில் நிலையத்தில் இன்று காலை நடந்த அடுத்தடுத்த இந்த சம்பவங்களால் பரபரப்பு ஏற்பட்டது.






