என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • பள்ளிக்கு சென்றபோது துணிகரம்

    செங்கம்:

    செங்கம் அடுத்த சாத்தனூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 57). இந்த நிலையில் கூலி தொழிலாளியின் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மகளிடம் கோவிந்தராஜ் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவியிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். மேலும் செங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று இரவு கோவிந்தராஜை கைது செய்தனர்.

    • மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே தளரப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் துளசிராமன் (வயது 50). இவர் தனது வீட்டின் பின்புறமாக மாடுகளை வளர்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான கன்றுகுட்டியை திருடி சென்று விட்டனர்.

    இது தொடர்பாக துளசிராமன் மோரணம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அப்பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்தது விசாரணை நடத்தினர்.

    இதில் செய்யாறு டவுன் புறநகர் பகுதியைச் சேர்ந்த சக்கரவர்த்தி(37),செய்யாறு கண்ணியம் நகரைச் சேர்ந்த மதன்(35), முருகன்(38), ஆகியோர் திருடியது தெரியவந்தது.

    இவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் சக்கரவர்த்தி மற்றும் மதனை கைது செய்தனர். மேலும் முருகனை தேடி வருகின்றனர்.

    • ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    புதுப்பாளையம்:

    செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன், புதுப்பாளையம் யூனியன் சேர்மன் சி.சுந்தரபாண்டியன் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்வில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நடைபெற்றது. அப்போது கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்வில் ஒன்றிய கவுன்சிலர் பொன்னி சுந்தரபாண்டியன் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • புதரில் இருந்து கூட்டமாக வந்து அவரை கொட்டியது
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அருகே வட திண்ணலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கனகா(வயது 68). இவர் காலையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிக்கு சென்றார்.

    பின்னர் வேலை முடிந்து மதியம் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக புதரில் இருந்த குளவிகள் கூட்டமாக வந்து அவரை கொட்டின. இதில் படுகாயம் அடைந்த கனகாவை அருகிலிருந்தவர்கள் மீட்டு கோவிலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேல் சிகிச்சை க்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    கனகா இறப்பு தொடர்பாக அவரது மகன் விஜய் பிரகாஷ் அனக்காவூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    சப் இன்ஸ்பெக்டர் கன்னி யப்பன் தலைமையிலான போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தீபத் திருவிழாவிற்குள் முடிக்க நடவடிக்கை
    • அமைச்சர் எ.வ.வேலு தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தூய்மை அருணை அமைப்பு சார்பில் அருணாச லேஸ்வரர் தெப்பல் திருவிழா நடைபெறும் அய்யங்குளம் தூர்வாரப்பட்டு, சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    குளத்தின் சீரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார். 320 அடி அகலம் மற்றும் 320 அடி நீளத்துடன் 3 ஏக்கரில் அய்யங்குளம் அமைந்துள்ளது தற்போது ஆயிரம் நபர்களைக் கொண்ட தூய்மை அருணை அமைப்பின் சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    குளத்தின் நடுவில் உள்ள மைய மண்டபத்தில் சிவனின் சின்னமான நந்தி சிலை நிறுவப்பட உள்ளது. குளத்தின் அழகை இரவிலும் ரசிக்கும் வண்ணம் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படஉள்ளது.

    குளத்தின் சுற்றுப்புற சுவர்களில் திருக்குறள் மற்றும் திருப்பாவை எழுதப்படும்.

    சீரமைப்பு பணிகள் அனைத்தும் கார்த்திகை தீபத்திருவிழா விற்குள் முடிக்கப்படும் என பொது ப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

    கலெக்டர் முருகேஷ், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மு.பெ.கிரி எம்.எல்.ஏ, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட ப்பொறியாளர் ராஜ்குமார், உதவி கோட்டப்பொறியாளர் ரகுராமன், தொழிலாளர் நலன் மேம்பாட்டு துறை அரசு பிரதிநிதி இரா.ஸ்ரீதரன், சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் கார்த்திக் வேல்மாறன், நகராட்சி ஆணையாளர் என்.தட்சணாமூர்த்தி, ஒப்பந்ததாரர்கள் துரை வெங்கட், ப்ரியா விஜயரங்கன், குணசேகரன், செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தரணிவேந்தன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
    • பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சென்னாவரம் ரோட்டு தெருவை சேர்ந்தவர் ரேணுகோபால்.

    இவர் தனது குடும்பத்துடன் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 12 மணி அளவில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ரேணுகோபால் வீட்டின் உள்ளே நுழைந்தார்.

    சத்தம் கேட்டு ரேணுகோபால் கண் விழித்து பார்த்தார். வீட்டிற்குள் வாலிபர் சட்டை இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

    இது குறித்து அப்பகுதி மக்கள் வந்தவாசி தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசாரிடம் அந்த வாலிபரை பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

    அப்போது போலீசார் அந்த வாலிபரிடம் நீ யார் என்று கேட்டபோது என்னுடைய பெயர் கமல்ஹாசன் என்றும், பின்னர் ரஜினி என்றும் கூறினார். இதனைக்கேட்டு போலீசாரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர் பொதுமக்கள் இன்னொரு முறை பெயரை கேட்டால் சிவாஜி என்று கூறுவான் என கூறியதால் போலீசார் அங்கு நின்றிருந்தவர்களும் சிரிப்பலையில் மூழ்கினர்.

    மேலும் பொதுமக்கள் தாக்கியதில் காயமடைந்த வாலிபரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    வீட்டின் உள்ளே திருட முயன்ற வாலிபரிடம் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விடிய விடிய பெய்தது
    • 96.40 மில்லி மீட்டர் மழை பதிவானது

    செங்கம்:-

    செங்கம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளான ஜமுனாமரத்தூர், ஜவ்வாதுமலை அடிவாரப் பகுதிகள் உள்பட குப்பனத்தம், கிளியூர், பரமனந்தல், கரியமங்கலம், மண்மலை, முறையாறு, தாழையுத்து, அரட்டவாடி, நீப்பத்துறை, மேல்பள்ளிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு கன மழை கொட்டி தீர்த்தது.

    நள்ளிரவுக்கு மேல் தொடங்கிய மழையானது இடி மின்னலுடன் விடிய விடிய மழை பெய்தது. மேலும் செங்கம் பகுதியில் 96.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    • செங்கம் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடந்தது
    • அதிகாரிகள் கலந்து கொண்டனர்

    செங்கம்:-

    செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சாதாரண கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் விஜயராணிகுமார் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலு முன்னிலை வகித்தார்.

    இந்த கவுன்சில் கூட்டத்தில் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மண் ரோடுகள் உள்ள இடங்களில் சிமெண்டு சாலை அமைத்தல் உள்பட பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்த தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டன.

    கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் உட்பட துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராம்குமார், தனஞ்செயன், பொறியாளர்கள் வினோத்குமார், வினோத்கன்னா, வெற்றி உள்பட பணி மேற்பார்வையாளர்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம் நன்றி கூறினார்.

    • கணவர் புகார்
    • போலீசார் விசாரணை

    வெம்பாக்கம்:-

    வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன் (55).கூலி தொழிலாளி. இவரது மனைவி பேபி (வயது52).

    கணவன், மனைவி இருவரும் பைக்கில் நேற்று வேலை சம்பந்தமாக காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காஞ்சிபுரம் -வந்தவாசி சாலை லட்சுமிபுரம் அருகே வரும்போது பின்னால் வந்த லாரி இவர்கள் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். பேபி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    அந்த வழியாக சென்றவர்கள் தூசி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம்
    • திருவண்ணாமலை சைவ சாஸ்திர பிரசார சபா சார்பில் நடந்தது

    வந்தவாசி:-

    வந்தவாசி ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 3 தின பவித்ரோத்சவம் தொடங்கியது. திருவண்ணாமலை சைவ சாஸ்திர பிரசார சபா சார்பில் நடைபெற்ற இந்த விழாவையொட்டி காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

    இதனைத் தொடர்ந்து அனுக்ஞை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது.

    மேலும் அங்குரார்ப்பணம், முதற்கால யாக பூஜை, கந்த பவித்ரஸமர்பணம், பூர்ணாஹூதி நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த சிறப்பு வாய்ந்த பூஜையை வந்தவாசி சுற்றியுள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    • நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்
    • கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்னதாக முடிக்க உத்தரவு

    வேங்கிக்கால்:-

    திருவண்ணாமலை நகராட்சியில் புதிய எல்இடி விளக்குகள் பொருத்தும் பணியை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார்.

    திருவண்ணாமலை நகராட்சியில் 39 வார்டுகள் உள்ளன. இதில் 5 ஆயிரத்து 634 மின் கம்பங்கள் உள்ளன. இந்த மின்கம்ப ங்களில் உள்ள பழைய விளக்குகளை அகற்றிவிட்டு புதிதாக எல்இடி விளக்குகள் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

    எல்.இ.டி. விளக்குகள் பொருத்தும் பணியை நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி, சீனியர் தடகள சங்க மாவட்ட தலைவர் ப.கார்த்தி வேல்மாறன், நகராட்சி பொறியாளர் நீலேஷ்வர், உதவி பொறியாளர் ரவி, நகரமன்ற உறுப்பினர் கோபிசங்சர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    நகராட்சி பகுதியில் உள்ள 39 வார்டுகளிலும் 5 ஆயிரத்து 634 மின்கம்பங்களில் உள்ள டியூப் லைட்டுகள் அகற்றப்பட்டு 9 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பிலான புதிய எல்இடி பல்புகள் பொருத்தப்படும். மேலும் 801 இடங்களில் மின்கம்பங்கள் நடப்பட்டு எல்இடி பல்புகள் பொருத்தப்படும்.

    இந்த பணிகள் அனைத்தும் கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முன்னர் முடிக்கப்படும் என நகர மன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் மற்றும் நகராட்சி ஆணையாளர் ந.தட்சணாமூர்த்தி ஆகியோர் தெரிவித்தனர்.

    இந்த புதிய எல்இடி விளக்குகள் அனைத்தும் பொருத்தப்பட்ட பின்பு திருவண்ணாமலை நகராட்சியில் உள்ள தெருக்கள் அனைத்தும் இரவிலும் பகல் போன்று காட்சி தரும் என தெரிவித்தனர்.

    • இளம்பெண்ணை சீட்டில் அமர சொன்னதால் வாக்குவாதம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:-

    ஆரணி அடுத்த களம்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). அரசு பஸ் கண்டக்டர்.

    இவர் சென்னையில் இருந்து பயணிகளை பஸ்சில் ஏற்றிக்கொண்டு போளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    மட்டபிறையூர் என்ற இடத்தில் பஸ் நின்றது. பஸ்சில் 2 இளம்பெண்கள் ஏறினர். அதில் ஒரு இளம்பெண் சீட்டில் அமர்ந்தார். இன்னொருவர் நின்று கொண்டு பயணம் செய்தார்.

    அப்போது கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சீட்டு காலியாக உள்ளதே அதில் அமர மாட்டீர்களா என்று கூறினார்.

    இதனால் இளம்பெண் அழுது கொண்டு தனது உறவினரான போளூர் டவுனை சேர்ந்த சீனிவாசன் (வயது 35) என்பவரிடம் தெரிவித்தார்.

    பஸ் போளூர் பஸ் நிலையத்தில் வந்து நின்றபோது கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் இளம் பெண்ணிடம் ஏன் இப்படி பேசினாய் என்று சீனிவாசன் தகராறில் ஈடுபட்டார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீனிவாசன் மற்றும் அவரது நண்பரான எந்தல் பகுதி சேர்ந்த அருண்குமார் (31) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

    இது குறித்து கிருஷ்ணமூர்த்தி போளூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார், சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×