என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை 25-வது வார்டில் விறு விறுப்பாக மறுவாக்குப்பதிவு நடந்தது. வாக்காளர்கள் மீண்டும் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நகராட்சிக்குட்பட்ட 39 வார்டுகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 25-வது வார்டில் பா.ஜ.க. சார்பில் சுகந்தி, அ.தி.மு.க. சார்பில் மணிமேகலை, தி.மு.க  சார்பில் முனியம்மாள் உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.

    இதில் சுயேட்சையாக ஸ்ரீதேவி என்பவர் போட்டியிட்டார்.  தென்னை மரச் சின்னத்தில் போட்டியிடும் ஸ்ரீதேவியின் கணவர் பழனி இப்பகுதி மக்கள் மத்தியில் பிரபலமானவர் என்று கூறப்படுகிறது.

    இந்த வார்டில் சமுத்திரம் ஏரிக்கரை,  சந்தைமேடு, பெரும்பாக்கம் ரோடு ,ராஜீவ் நகர், அரசு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ரமணா நகர், அக்னிலிங்கம் குறுக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில உள்ளன. மொத்தம்  1,590 ஓட்டுக்கள் உள்ளன.

    இந்த நிலையில் திருவண்ணாமலை நகராட்சி வார்டுகளுக்கான ஓட்டுப்பதிவு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் 25-வது வார்டுக்கான ஓட்டுப்பதிவு சண்முகா தொழிற்சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    காலையில் தொடங்கி மதியம் வரை 50 சதவீதம் ஓட்டுகள் இந்த வார்டில் பதிவாகின. இதை அறிந்த பா.ஜ.க. மற்றும் திராவிட கட்சிகள்மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. 

    இதனால் சந்தேகம் அடைந்த தி.மு.க.வினர் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு சண்முகா தொழிற்சாலை பள்ளிக்கு வந்தனர். சுயேட்சை வேட்பாளர் ஸ்ரீதேவி ஆட்களை திரட்டி வந்து கள்ள ஓட்டு போடுவதாக கூறி அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் ஓட்டு பதிவு நிறுத்தப்பட்டது.

    முறைகேடு நடப்பதாக கூறி தி.மு.க. வேட்பாளருடன் இணைந்து அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.

    இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷை சந்தித்து மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்.

    அதன் பின்னர் மாவட்ட தேர்தல் பார்வையாளர் சங்கீதா உடனடியாக சண்முகா தொழிற்சாலை பள்ளிக்கு விரைந்து வந்தார். மாலை வரை நடந்த ஓட்டுப்பதிவை பார்வையிட்டார். 

    ஓட்டுப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் போது முகவர்கள் அதில் கையெழுத்திடவில்லை. இதனால் 25-வது வார்டில் மறுதேர்தல் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

    இதைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி 25-வது வார்டில் இன்று மறுதேர்தல் நடக்கும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் முருகேஷ் நேற்று மாலை அறிவித்தார். 

    அதன்படி திருவண்ணாமலை நகராட்சி  25-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான மறு ஓட்டுப்பதிவு இன்று காலை 7 மணிக்கு சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் தொடங்கியது. 

    மாலை 5 மணி வரை வாக்கு பதிவு நடக்கிறது. அதன் பின்னர் 1 மணி நேரம் 6 மணி வரை கொரோனா வாக்காளர்கள் ஓட்டுபோட அனுமதிக்கப்படுகின்றனர். 

    இன்று வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று போட்டு போட்டனர். ஓட்டு போட வந்தவர்களுக்கு அவர்களது இடது கை நடுவிரலில் அழியாமை வைக்கப்பட்டது. இன்று மதியம் 12 மணி நிலவரப்படி 46.54 சதவீத வாக்கு பதிவாகியிருந்தது.

    இதையொட்டி சாலையின் இருபுறமும் தடுப்புகள் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களை தவிர மற்றவர்கள் அந்த வழியாக செல்ல அனுமதிக்கப்படவில்லை. வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருமுறை இசை நிகழ்ச்சி நடந்தது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தருவார்கள். கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். 

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக பக்தர்கள் நடத்தும் பல நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்து வந்தன. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் காஞ்சிபுரம் நால்வர் நற்றமிழ் மன்றம் சார்பில் நேற்று மாலை திருமுறை மாத வழிபாடு நிகழ்ச்சி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீப மண்டபம் அருகில் நடைபெற்றது.

    இதில் இசைக்கலைஞர்கள் பங்கேற்று திருமுறை பாடல்களை மனமுருகப் பாடினர். மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு மகிழ்ந்தனர்.

    நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.
    திருவண்ணாமலை மங்கலத்தில் போர்மன்ன லிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.
    திருவண்ணாமலை :

    திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ போர்மன்னலிங்கேஸ்வரர் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் தொடர்ந்து 5 நாட்கள் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டு 190 வது ஆண்டு தேர்த்திருவிழா கடந்த 16-ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தது.

    விழாவின் முதல் நாளான கடந்த 16-ஆம் தேதி இரவு விநாயகர் ஊர்வலமும், 17-ஆம் தேதி இரவு பாலமுருகன் ஊர்வலமும், 18-ஆம் தேதி இரவு பராசக்தி ஊர்வலமும்நடந்தது. நேற்று (19ஆம் தேதி) பரிவாரத தேவதைகள் ஊர்வலமும் வாணவேடிக்கையும் நடைபெற்றது.இரவு 12 :30 மணி அளவில் மகா கும்பமும் அருள் வாக்கும் நடைபெற்றது.

    இந்த மகா கும்பத்தில் குழந்தையில்லா தம்பதிகள் கலந்து கொண்டு சாமிக்கு படைத்த பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.இதனால் மகா கும்பத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு படையலிட்ட சாதத்தை வாங்கி சாப்பிட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வான 5-ஆம் நாளான இன்று ஸ்ரீ போர்மன்ன லிங்கேஸ்வரர் மகா உற்சவம் நடைபெற்றது. இதில் மங்கலம் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்தனர்.

    இந்தத் தேர்த் திருவிழா நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் இரவு பல்வேறு நிகழ்ச்சிகளான பக்தி பாடல்கள், பல்சுவை நிகழ்ச்சி, நாட்டுப்புற பாட்டு நிகழ்ச்சி, கரகாட்டம், இன்னிசை பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி, வானவேடிக்கை, மாபெரும் இன்னிசை கச்சேரி, சுந்தரி திருக்கல்யாணம் நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தேர்த்திருவிழாவில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
    தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிக்கேட்ட பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர், நகர பொதுச்செயலாளர் மற்றும் பா.ஜ.க.மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகளையும் தி.மு.க.வினர் தாக்கியதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது.திருவண்ணாமலை 13-வது வார்டுக்கு உட்பட்ட பகுதிக்கான வாக்குப்பதிவு நகராட்சி பெண்கள் பள்ளியில் நடைபெற்றது.

    அப்போது தி.மு.க.வினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிக்கேட்ட பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர், நகர பொதுச்செயலாளர் மற்றும் பா.ஜ.க.மகளிர் அணியை சேர்ந்த நிர்வாகிகளையும் தி.மு.க.வினர் தாக்கியதாகவும் பா.ஜ.க.வினர் புகார் தெரிவித்தனர்.

    இதனை கண்டித்து இன்று திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகே உள்ள அறிவொளி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில்மாநில துணைத்தலைவர் நரேந்திரன், மாநில செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் ஜீவானந்தம், பட்டியல்அணி பொதுச் செயலாளர் விஜயராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க.மகளிர்அணியினரை தாக்கிய தி.மு.க.வினரை கைது செய்ய வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

    திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையங்களில் போலீசார் 3 அடுக்கு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளிலும் நேற்று மாலை 6மணிக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. 

    இதைத் தொடர்ந்து அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டன.

    பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    திருவண்ணாமலை நகராட்சிக்கு திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியிலும், ஆரணி நகராட்சிக்கு ஆரணி மார்க்கெட்டிலும், செய்யாறுநகராட்சிக்கு ஆரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், வந்தவாசி நகராட்சிக்கு வந்தவாசி அகிலாண்டேஸ்வரி கல்லூரியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது. 

    அதேபோல செங்கம் மற்றும் புதுப்பாளையம் பேரூராட்சிகளுக்கு செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், கீழ்பென்னாத்தூர் மற்றும் வேட்டவலம் பேரூராட்சிகளுக்கு திருவண்ணாமலை டேனிஷ் மிஷன் மேல்நிலைப் பள்ளியிலும், கண்ணமங்கலம், போளூர், களம்பூர் பேரூராட்சிகளுக்கு ரேணுகாம்பாள் கலைக் கல்லூரியிலும் சேத்துப்பட்டு, தேசூர், பெரணமல்லூர் பேரூராட்சிகளுக்கு சேத்துப்பட்டு தோமினிக் மேல்நிலைப் பள்ளியிலும் வாக்குகள் எண்ணப்படுகிறது.

    வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு பணியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ஈடுபடுகிறார்கள்.

    மேலும் சிசிடிவி மற்றும் சுழலும் நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்படுகிறது.

    இந்நிலையில் நாளை மறுநாள் (22ஆம் தேதி) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப் படும். 

    பேரூராட்சிக்கான முடிவுகள் காலை 10 மணிக்கு தெரியவரும்.நகராட்சிக்கான முடிவுகள் பகல் 12 மணிக்குள் தெரியும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.
    திருவண்ணாமலையில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி வேட்பாளர்கள் 'திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நகராட்சி 25 -வது வார்டில் ஆண்கள் 745,பெண்கள் 845 உள்பட 1,590 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் 5 சுயேட்சைகள் உள்பட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே 2 வாக்குசாவடிகள் சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாக்குச் சாவடியில் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டுக்கள் பதிவானதாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    மேலும் வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர் ஆகியோரும் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். 

    இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

    மேலும் சம்பவ இடத்துக்கு எஸ்.பி பவன்குமார், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் பார்வையாளர் சங்கீதா, தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். 

    பின்னர் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெறும் என்றும், கள்ள ஓட்டுகள் போடுவதாக உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.அதன் பின்னர் மாலை 6 மணி வரை தடையின்றி வாக்குப்பதிவு நடந்தது.
    செய்யாறில் வாக்கு பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
    செய்யாறு:

    செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் 27 வார்டுக்கு தேர்தல் நடைபெற்றது. 40 வாக்குச்சாவடிகளில் வாக்கு எந்திரத்தில் பதிவு செய்யப்பட்டது. 

    பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை செய்யாறு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் ரகுராமன் அறைக்கு சீல் வைத்தார். 

    போலீசில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மற்றும் சுயேட்சை வேட்பாளர் ஆகியோர் முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் அறைக்கு   சீல் வைக்கப்பட்டது.
    கண்ணமங்கலம் பேரூராட்சியில் 79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தேர்தல் நேற்று 19-ந்தேதி மாலை 6 மணி வரை நடைபெற்றது. இதில் வார்டு வாரியாக பதிவான வாக்குகள் விவரம் வருமாறு:-

    1ம்வார்டு 231/301
    2ம்வார்டு 475/596
    3ம்வார்டு 334/384
    4ம்வார்டு 326/365
    5ம்வார்டு 365/449
    6ம்வார்டு 389/493
    7ம்வார்டு 381/498
    8ம்வார்டு 326/421
    9ம்வார்டு 373/428
    10ம்வார்டு 437/628
    11ம்வார்டு 373/425
    12ம்வார்டு 629/815
    13ம்வார்டு 292/361
    14ம்வார்டு 233/280
    15ம்வார்டு 318/415

    மொத்தம் பதிவான வாக்குகள் 5482/6928சதவீதம் 79 ஆகும்.

    வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்புடன் எட்டிவாடி தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.வருகிற 22-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

    அன்று காலை 11 மணியளவில் கண்ணமங்கலம் பேரூராட்சியை கைப்பற்றுவது யார் என்பது தெரிந்துவிடும்.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் 61.11 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, திருவத்திபுரம் ஆகிய 4 நகராட்சிகள் மற்றும் செங்கம், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வேட்டவலம், போளூர், களம்பூர், கண்ணமங்கலம், சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் ஆகிய 10பேரூராட்சிகளில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.

    நகராட்சி பகுதிகளில் 123 வார்டுகளிலும், போளூரில் ஒரு வார்டில் மட்டும் ஒருவர் போட்டியின்றி வெற்றி பெற்று உள்ளதால் அதை தவிர்த்து 149 வார்டுகளுக்கும் என மொத்தம் 272 வார்டுகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., நாம் தமிழர் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உள்பட 1,214 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 

    தேர்தலை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

    143 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள்வெப்கேமரா மூலம் இணையதள வாயிலாக தொடர்ந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

    வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குசாவடி மையங்களில் உள்ள வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் முன்னிலையில் வாக்குபதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

    திருவண்ணாமலை நகராட்சியில் 61.11சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. மாவட்டம் முழுவதும் 73.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    திருவண்ணாமலையில் வீட்டில் இருந்து பறக்கும் படை கைப்பற்றிய ரூ.10 லட்சம் லோன் பணமா? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவண்ணாமலை

    திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் இறுதி கட்ட பிரச்சாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில் வேட்பாளர்கள் சிலர் வாக்காளர்களை கவரும் வகையில் பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கும் பணியில் நேற்று முன்தினம் இரவு தீவிரமாக ஈடுபட்டனர்.

    வாக்காளர்களுக்கு ஓட்டிற்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக அமைக்கப்பட்டு இருந்த பறக்கும் படையினரும் ஒருபக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    பணப்பட்டுவாடா நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் தேனிமலை பகுதியில் பறக்கும் படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது அங்கு வந்த எதிர்தரப்பினர் ஒரு கட்சியின் வேட்பாளருக்காக வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்வதற்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக கூறி அவர்கள் ஒரு வீட்டில் இருந்து ரூ.10 லட்சத்தை எடுத்து வந்து பறக்கும் படையினரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அந்த வீட்டில் இருந்த நபர்கள் அது லோன் வாங்கி வைத்திருந்த பணம் என்று கூறியுள்ளனர். இதையடுத்து பறக்கும் படையினர் ரூ.10 லட்சத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். 

    அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் மதியம் வரை சமர்ப்பிக்கபடாததால் அந்த பணத்தை நகராட்சி அலுவலர்கள் மூலம் சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர். 

    தொடர்ந்து நகராட்சி அலுவலகத்திற்கு ஆய்வு பணிக்காக வந்த மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் கூறுகையில்:&

    வேட்பாளருக்காக ஒருவரின் வீட்டில் இருந்து ரூ.10 லட்சம் எடுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வந்து உள்ளது. அந்த பணம் சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

    இதற்காக அமைக்கப்பட்டு உள்ள சிறப்பு குழு மூலம் விசாரணை நடத்தப்பட்டு அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்தனரா ?அல்லது சொந்த செலவிற்காக வைத்திருந்தனரா? என்று முடிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    கண்ணமங்கலம் பேரூராட்சியில் மந்தமான நிலையில் வாக்குப்பதிவு நடந்தது
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேருராட்சியில் 15 வார்டு உறுப்பினர்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் தொடங்கியது.

    இதற்காக கண்ணமங்கலம் அம்பேத்கர் நகர் அங்கன்வாடி மையத்தில் ஒரு வாக்குச்சாவடியும், கண்ணமங்கலம் இந்து ஆரம்பப்பள்ளி வளாகத்தில் 9 வாக்குச்சாவடிகளும், முஸ்லிம் துவக்கப்பள்ளியில் 3 வாக்குச்சாவடிகளும், புதுப்பேட்டை ஆரம்பப் பள்ளி வளாகத்தில் 2 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தது.

    கண்ணமங்கலத்தில் 6,928 வாக்காளர்கள் உள்ளனர். பெண் 3,645, ஆண் 3,282, திருங்கை ஒருவர் உள்ளனர்.

    9&வது வார்டில் இருளர் இனத்தை சேர்ந்த 27 பேர் வரிசையில் சென்று வாக்களித்தனர். 

    கண்ணமங்கலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் காலை 8.30 மணி வரை 884 வாக்குகள் பதிவாகி இருந்தது. 

    கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப் இன்ஸ் பெக்டர்கள் விஜயகுமார், தரணி உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    திருவண்ணாமலையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் விறுவிறுப்பான ஓட்டு பதிவு நடைபெற்றது.
    திருவண்ணாமலை:

    தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. திருவண்ணாமலை மாவட்டத்திலும்  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 நகராட்சிகள் மற்றும் 10 பேரூராட்சிகளில் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல்  இன்று நடைபெற்று வருகிறது. 

    திருவண்ணாமலை நகராட்சி 39 வார்டுகளுக்கும் தேர்தல் நடந்து வருகிறது. இதில் 271 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

    திருவண்ணாமலை மணலூர்பேட்டை சாலை யில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் நகராட்சி பெண்கள் பள்ளி வாக்குச் சாவடி உள்ளிட்ட பல வாக்குச்சாவடி களில் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. 

    ஆண், பெண் வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். 

    அனைத்து வாக்காளர்களுக்கும் பிளாஸ்டிக்கையுறை வழங்கப்படுகிறது. 

    மேலும் ஸ்கேனர் பரிசோதனை செய்து கைகளைக் கிருமி நாசினியாக சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர். ஆனால் சமூக இடைவெளியை மட்டும் யாரும் கடை பிடித்ததாக தெரியவில்லை. 

    அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வாக்குப்பதிவு மையங்களில் அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இருந்தனர் .அவர்கள் யாரும் கள்ள ஓட்டு போட முயற்சி செய்கிறீர்களா? என்று கண்காணித்து வருகின்றனர். 

    இன்று மாலை 6 மணி வரை தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருவண்ணாமலை நகராட்சிக்கு உடபட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்குப்பதிவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான முருகேஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    சில வேட்பாளர்கள் முதலிலேயே தங்களது வாக்குகளை பதிவு செய்து விட்டனர். சிலர் தங்களது வாக்குகளை கடைசியில் பதிவு செய்யக் காத்திருந்தனர்.
    ×