என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேட்பாளர்கள் மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.
    X
    வேட்பாளர்கள் மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

    திருவண்ணாமலையில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி வேட்பாளர்கள் 'திடீர்' சாலை மறியல்

    திருவண்ணாமலையில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரி வேட்பாளர்கள் 'திடீர்' சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் நகராட்சி 25 -வது வார்டில் ஆண்கள் 745,பெண்கள் 845 உள்பட 1,590 வாக்காளர்கள் உள்ளனர்.

    இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் 5 சுயேட்சைகள் உள்பட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.மேலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியே 2 வாக்குசாவடிகள் சண்முகா அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த வாக்குச் சாவடியில் ஒரு சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டுக்கள் பதிவானதாக தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

    மேலும் வாக்குப்பதிவை நிறுத்திவிட்டு மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என அதிகாரிகள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சுமார் 1 மணி நேரம் வாக்குப்பதிவு தடைபட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், முன்னாள் நகராட்சி தலைவர் ஸ்ரீதர் ஆகியோரும் அங்கு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர். 

    இதுபற்றி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது.

    மேலும் சம்பவ இடத்துக்கு எஸ்.பி பவன்குமார், ஏ.டி.எஸ்.பி. வெள்ளத்துரை மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

    மேலும் தேர்தல் பார்வையாளர் சங்கீதா, தேர்தல் நடத்தும் அலுவலர் பார்த்தசாரதி ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். 

    பின்னர் வாக்குப்பதிவு தடையின்றி நடைபெறும் என்றும், கள்ள ஓட்டுகள் போடுவதாக உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.அதன் பின்னர் மாலை 6 மணி வரை தடையின்றி வாக்குப்பதிவு நடந்தது.
    Next Story
    ×