என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    ஆரணியில் கூல்டிரிங்ஸ் கடையில் ஜூஸ் குடித்த 18 பெண் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ஆரணி:

    ஆரணி அடுத்த மலையாம்பட்டு கிராமத்தில் குமரேசன் என்பவரின் விளை நிலத்தில் அதே கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா, சாந்தி, விஜயலட்மி உள்ளிட்ட 18 பேர் விவசாய வேலை செய்து வந்தனர்.

    அவர்கள் களம்பூரில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் ஜீஸ் வாங்கி குடித்தனர்.

    இதனை தொடர்ந்து இன்று காலை அவர்கள் 18 பேருக்கும் திடீரென வாந்தி மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டது.

    அவர்கள் அனைவரும் மலையாம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து களம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜூஸ் கடை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆரணியில் ஆணழகன் போட்டி நடந்தது.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை மைதானத்தில் ஸ்பாட்ன்ஸ் பிட்னஸ் ஜிம் மற்றும் தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட அளவில் ஆணழகன் போட்டி நடைபெற்றது.

    இதில் தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையா–ளர்கள் சங்க மாநில தலைவர் எம்.எஸ்.டி கார்த்தி ஆரணி டவுன் சேர்மன் ஏ.சி.மணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் ஆரணி சேர்மன் ஏ.சி.மணி குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார்.

    மேலும் 50,55 பல்வேறு எடை கொண்ட பிரிவிகளில் இளைஞர்கள் பங்கேற்று தனது உடற்தகுதி தனிதிறமையை காட்டி அசத்தினார்கள்.

    இதில் வெற்றி பெற்ற ஆணழகன்களுக்கு தமிழ்நாடு உடற்பயிற்சி உரிமையாளர் சங்க மாநில தலைவர் கார்த்தி ஆரணி சேர்மன் ஏ.சி.மணி ஆகியோர் சான்றிதழ் கேடயம் மற்றும் ரொக்க பரிசு வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மா வட்ட கவுன்சிலர் அருணா குமரேசன் நகரமன்ற கவுன்சிலர்கள் கார்த்தி அரவிந்த் ரிஸ்வானா மாலிக் பழனி நளினி பார்த்திபன் உஷாராணி சிவக்குமார் உள்ளிட் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்றனர்.
    திருவண்ணாமலை அருகே கிராம சபை கூட்டம் குறித்து முறையாக அறிவிக்கவில்லையென்று 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகில் உள்ள நல்லவன்பாளையத்தில் நேற்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் குறித்து முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று நல்லவன்பாளையம் ஊராட்சியை சேர்ந்த சேர்ந்த பொதுமக்கள் தண்டராம்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் இந்த சாலை மறியல் போராட்டம் 1 ½ மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றது. 

    இது குறித்து தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தராஜ் தலைமை யிலான அலுவலர்கள் மற்றும் திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், கிராம கூட்டம் குறித்து முறையாக அறிவிக்க வில்லை. இந்த ஊராட்சியில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் முறையாக செய்து கொடுக்கவில்லை. வரவு- செலவு கணக்கு முறையாக வழங்க வில்லை என்று கூறினர். அடிப்படை வசதிகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அதேபோல் திருவண்ணாமலை அடுத்த சானானந்தல் பகுதியிலும் கிராம சபை கூட்டத்திற்கு முறையான அறிவிப்பு செய்யப்படவில்லை என்று பழைய சானானந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சானானந்தல் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இது குறித்து அவர்கள் கூறுகையில், கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது என்று தண்டோரா போடப்பட்டது. ஆனால் அதில் எங்கு கூட்டம் நடைபெற உள்ளது முறையாக தெரிவிக்கப்படவில்லை. வழக்கமாக ஊராட்சி மன்ற அலுவலக முன்பு தான் கூட்டம் நடைபெறும். அதனால் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை காத்திருந்தும் எந்த பயணும் இல்லை என்றனர். 

    இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது, ஊராட்சி உட்பட்ட குறிப்பிட்ட 4 இடங்களில் எங்கு வேண்டும் என்றாலும் கூட்டம் நடத்தலாம். இது குறித்து முறையாக தண்டோரா போட்டப்பட்டு உள்ளது. 

    அதன்படி கூட்டம் அரசு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் என்றனர்.

    இதற்கிடையில் போராட்டம் குறித்து தகவலறிந்த மங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    அப்போது போலீசார் இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அல்லது அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அளியுங்கள் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அவர்கள் கலைந்து சென்றனர்.
    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்க கோவில்களில் சிவனடியார்கள் உழவாரப்பணி செய்தனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை 14 கிலோமீட்டரை சுற்றியுள்ள அஷ்டலிங்க கோயில்களில் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் மலையைச் சுற்றி கிரிவலம் வரும்போது இக்கோவில்களில் வழிபட்டு செல்கின்றனர். 

    இதனால் கோவில்களில் தூய்மைப்படுத்தும் பணியை பல்வேறு பகுதிகளில் உள்ள சிவனடியார்கள் தானாக முன்வந்து அஷ்டலிங்க கோவில்கள் அருணாசலேஸ்வரர் கோவில் துர்க்கை அம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிவனடியார்கள் மூலம் உழவாரப் பணி செய்து வருகின்றனர். 

    இப்பணியினை அருணாசல கோவில் இணை ஆணையர் அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
    காரியந்தல் ஊராட்சியில் கிராம சபா கூட்டத்தில் துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்றார்.
    திருவண்ணாமலை:

    துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காரியந்நல் ஊராட்சியில் நேற்று தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. 

    திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குனர் டீ. கே. லட்சுமி நரசிம்மன், ஒன்றியக்குழு தலைவர் தமிழேந்தி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

    துணை சபாநாயகர் கு. பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கிரா மத்தின் முன்னேற்றத்திற்கு பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்வது குறித்து பேசினார் முன்னதாக ஊராட்சி மன்ற தலைவர் மோகன் வரவேற்றார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயலட்சுமி, கிருஷ்ணமூர்த்தி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி அண்ணாமலை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
    சிறையில் இருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த இளையான்குன்னிய அடுத்த தட்டரணை பகுதியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 48). கடந்த 26ந்தேதி திருவண்ணாமலை மதுவிலக்கு பிரிவு போலீசார் சாராயம் விற்பனை தொடர்பாக தங்கமணியை கைது செய்தனர்.

    பின்பு சிறையில் இருந்த அவர் திடீரென உடல்நலக் குறைவால் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு உயிரிழந்தார். கடந்த 27ந்தேதி உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை வாங்க உறவினர்கள் மறுத்து வருகின்றனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய திருவண்ணாமலை மதுவிலக்கு போலீஸ் துணை சூப்பிரண்டு உட்பட 4 பேர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    ஓரிரு நாட்களில் சிபிசிஐடி விசாரணை தொடங்கப்பட உள்ளது. தட்டரணை கிராமத்திலுள்ள தங்கமணி வீடு மற்றும் பொதுமக்கள், மாவட்ட மதுவிலக்கு போலீசார், சிறைத்துறை அதிகாரிகள், அரசு மருத்துவமனை டாக்டர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

    கண்ணமங்கலம் அருகே பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே ராமசாணிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நேற்று காலை 10 மணிக்கு பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

    இக் கூட்டத்திற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்வேல், ஊராட்சி மன்றத் தலைவர் பா. மகேஸ்வரி பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இக் கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைத்து பெற்றோர்களையும் தலைமை ஆசிரியர்தா மரைச்செல்வி வரவேற்றார்.பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் 15 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    இதில் பள்ளி மேலாண்மை குழு தலைவராக வாசுகி, துணைத் தலைவராக பி.பி.உதயகுமார் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இவர்கள் அனைவருக்கும் சால்வை அணிவித்து பள்ளி மேலாண்மைக் குழு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து பள்ளி மேலாண்மைக் குழு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    இதில் முன்னாள் பள்ளி மேலாண்மை் குழு உறுப்பினர்கள், முன்னாள் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர்கள் மற்றும் முன்னாள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். 

    இவ்விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் சமூக ஆர்வலர்  பிரபாகரன் ஏற்பாடு செய்தார்.இவ் விழாவில் ஆசிரியர்கள் சுமதி, கீதா, முரளீதரன், ஆசிரியைகள் வினிதா, ஜெயந்தி, துர்கா, பவானி ஆகியோர் கலந்து கொண்டு இவ் விழாவினை சிறப்பித்தனர்.

    இக்கூட்டத்தில் பங்கு பெற்ற வார்டு உறுப்பினர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள், சத்துணவு ஊழியர்கள், முன்னாள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்..இவ் விழாவில் அனைவருக்கும் சுண்டல், தேநீர் வழங்கப்பட்டது.
    கண்ணமங்கலம் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் நடைபெற்றது.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் ஹோஸ்ட்சங்கம் சார்பில் நேற்று காலை முதல் மதியம் வரை இலவசக் கண் பரிசோதனை முகாம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதில் பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் பத்மநாதன், கண் மருத்துவக் குழுவினர் கலந்து கொண்டு சுமார் 250-க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
    திருவண்ணாமலையில் விசாரணை கைதி உயிரிழந்ததையடுத்து டி.எஸ்.பி., பெண் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீசார் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தட்டரணை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. சாராயம் பதுக்கி வைத்திருந்ததாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கடந்த 26ந்தேதி தங்கமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் தங்கமணி உடல்நிலை பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்ததார்.

    தங்கமணியின் மனைவி மலர் தனது கணவரை போலீசார் அடித்து கொலை செய்துவிட்டதாக திருவண்ணாமலை கலெக்டர் முருகேசிடம் புகார் கொடுத்தார்.

    தங்கமணியின் சாவுக்கு காரணமான போலீசார் மற்றும் சிறைத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உடலை வாங்க மறுத்தனர்.

    இந்த சம்பவம் சட்டசபை கூட்ட தொடரில் எதிரொலித்தது. சம்பந்தப்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் போர்கொடி தூக்கினர்.

    இந்த நிலையில் இந்த வழக்கு சம்பந்தமாக திருவண்ணாமலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜன், பெண் இன்ஸ்பெக்டர் நிர்மலா தேவி, ஜெயசந்திரன், ஜெயக்குமார் உட்பட 4 போலீசாரை காத்திருப்போர் பட்டியலுக்கு ஐ.ஜி பிரேம் ஆனந்த் சின்கா மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் விசாரணை கைதி தங்கமணி இறந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

    சிபிசிஐடி விசாரணைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    இந்த நிலையில் 4வது நாளான இன்றும் தங்கமணியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துள்ளனர்.

    இதுசம்பந்தமாக அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
    தங்கமணியை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த இளையாங்கண்ணி தட்டறையை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி (வயது48). கள்ளச்சாராய வழக்கில் கைது செய்யப்பட்டு, திருவண்ணாமலை சப் ஜெயிலில் அடைக்கப்பட்ட இவர் உயிரிழந்தார். உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டதாகவும், சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், அவரை போலீசார் அடித்து கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். இது தொடர்பாக போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

    விசாரணைக் கைதி தங்கமணி மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவின்பேரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
    திருவண்ணாமலை மாவட்டத்தில் முறைகேடு நடந்த அரசு மாணவர் விடுதி பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையில் கீழ் 102 அரசு மாணவர்கள், மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. 

    இந்த விடுதிகள் முறையாக செயல்படவில்லை எனவும் போலியான வருகைப்பதிவேடு களை வைத்து முறைகேடுகள் செய்யப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தது. 

    கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டது. அதனால் விடுதிகளில் வார்டன்கள் முறையாக தங்குகின்றனரா, மாணவர்கள் விடுதியில் தங்குகின்றனரா, விடுதிகள் பாதுகாப்பான முறையில் உள்ளதா போன்றவை குறித்து கடந்த 25-ந்தேதி மாலையில் மாவட்ட கலெக்டர் முருகேஷ் மட்டுமின்றி உயர் அதிகாரிகள் அனைவரும் ஒவ்வொரு விடுதியிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். 

    அப்போது மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறை, உணவு பொருட்கள் இருப்பு விவரம், வருகை பதிவேடு, மாணவர்களின் எண்ணிக்கை, கல்வித்தரம், கழிவறை வசதி உள்ளதா, குடிநீர் வசதி உள்ளதா போன்றவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இந்த ஆய்வில் பல விடுதிகளில் மாணவர்கள் இல்லாததும், மாணவர்கள் இருந்தும் வார்டன் இல்லாததும், வளாகம் தூய்மையாக இல்லாமலும் இருந்தது தெரியவந்தது. 

    மேலும் சில விடுதிகளில் வருகை பதிவேடுகள் முறையாக வைக்கப்படாமலும் உள்ளிட்ட முறைகேடுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    இதுகுறித்து கலெக்டர் முருகேஷிடம் கேட்ட போது, முறைகேடுகள் நடைபெற்ற விடுதிகள் குறித்து பட்டியல்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. 

    முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட ஆணையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதன் மூலம் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
    திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே குடும்பத் தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் அடுத்த பாடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேஷ் (வயது52) கூலி தொழிலாளி. இவரது மனைவி தேவி. மகன்கள் முத்துக்குமார், வெள்ளையப்பன்.  

    முத்துக்குமாரின் மனைவி வேண்டா கேட்டவரம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.

    இதனால் வேண்டா அங்கே தங்கி பணிபுரிந்து வருகிறார். அவருக்கு துணையாக முத்துக்குமார் மனைவி தேவி உடன் இருந்து வருகிறார். இதனால் முத்துக்குமாருக்கும் அவரது தந்தை முருகேசுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு முருகேஷ் முத்துக்குமாரிடம் மனைவியை அழைத்து வரும்படி கேட்டுள்ளார். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முத்துக்குமார் இரும்பு கம்பியால் முருகேசின் தலையில் பின்புறமாக தாக்கினார். 

    இதில் படுகாயமடைந்த முருகேஷ் மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
     
    இது சம்பந்தமாக மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை அடித்துக் கொன்ற முத்துக்குமாரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளன.
    ×