என் மலர்
திருவண்ணாமலை
- வங்கி அதிகாரி பேசுவதாக கூறி மோசடி
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
செங்கம் தாலுகா கல்லரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் வரதன் மகன் சுரேஷ். இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் கூலி வேலை செய்து வருகிறேன். தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளேன். கடந்த 23-ந் தேதி மாலையில் எனது செல்போனுக்கு வங்கியில் இருந்த அதிகாரி பேசுவதாக கூறி உனது ஏ.டி.எம். கார்டு தேதி முடிவடையும் நிலையில் உள்ளது. புதியதாக கார்டு பெற வேண்டும். அதற்கு உங்கள் ஏ.டி.எம். கார்டின் பின்புறம் உள்ள குறியீடு எண்ணை கொடுக்குமாறு கேட்டார். நானும் அவர் கூறியதை உண்மை என்று நம்பி எனது ஏ.டி.எம். கார்டு பின்புறம் உள்ள குறியீடு எண்ணை அவருக்கு கொடுத்தேன்.
அதன்பிறகு அவர் எனது செல்போனுக்கு தகவல் வரும். அந்த குறியீடு எண்ணை கூறுமாறு சொன்னார்.
அவர் கூறியவாறே நான் அந்த எண்ணை அவரிடம் கூறினேன். அப்போது எனது வங்கி கணக்கில் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் தொகை இருப்பு இருந்தது.
அதன்பிறகு சில நாட்கள் கழித்து நேற்றுமுன்தினம் நடமாடும் ஏ.டி.எம். வங்கி அலுவலரிடம் எனது ஆதார் எண்ணை வைத்து பணம் எடுக்க முயன்ற போது வங்கி கணக்கில் பணம் இல்லை என தகவல் சொன்னார்.
இது குறித்து நேற்று தேவனாம்பட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று கிளை மேலாளரை சந்தித்து விவரம் கூறிய போது எனது வங்கி கணக்கு ஸ்டேட் மெண்டடை என்னிடம் கொடுத்து போலீசில் புகார் அளிக்க கூறினார்.
எனவே இந்த புகார் மனுவினை பரிசீலித்து எழுத படிக்க தெரியாத என்னை ஏமாற்றி எனது வங்கி கணக்கில் இருந்து நூதன முறையில் பணத்தை எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பெரணமல்லூர் ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்
- ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு ரூ.3 கோடியே 64 லட்சம் ஒதுக்கீடு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் ஒன்றிய குழு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தலைமை தாங்கினார். ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனசுந்தரம், ஏ.பி.வெங்கடேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் அலுவலக மேலாளர் பாஸ்கரன், வரவேற்றார்.
கூட்டத்தில் பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு ரூ.3 கோடியே 64 லட்சம் ஒதுக்கீடு செய்த முதல்வருக்கும், மேலும் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கவும், பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்ட வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பெரணமல்லூர் ஊராட்சி ஒன்றியம் சார்பாக சிறப்பான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர்கள், அலுவலக ஊழியர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் விரக்தி.
- போலீசார் விசாரணை
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த பழவேரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு (வயது 37) விவசாயி இவரது மனைவி மலர் (35) இவர்களுக்கு அன்பரசன் (18) என்ற மகன் உள்ளார். அன்பரசன் தெய்யார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இந்த நிலையில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்று 285 மதிப்பெண்கள் பெற்ற நிலையில் அன்பரசன் டிசி மற்றும் மார்க் சீட் வாங்குவதற்கு கடந்த 1-ந் தேதி அன்று பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீடு திரும்பினர்.
தாயார் அன்பரசனை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மன வேதனை அடைந்த அன்பரசன் வீட்டிலிருந்த 3 லிட்டர் மண் எண்ணெயை எடுத்துக் கொண்டு வீட்டின் மாடிக்குச் சென்று உடலில் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்ட பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் உடனடியாக அன்பரசனை மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அன்பரசன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சேவூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. ஆய்வு
- சந்தைமேட்டில் காரிய மேடை அமைக்க வலியுறுத்தல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் நேற்று முன்தினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
அப்போது கடந்த ஆண்டு கண்ணமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள மயான பாதை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
ஆனால் இதுவரை சீரமைக்காததால், இவ்வழியே பொதுமக்கள் யாரும் பயன்படுத்தாத நிலையில், உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்ந்து மயான பாதையை நேரில் சென்று சேவூர் ராமச்சந்திரன் பார்வையிட்டு, கலெக்டர் மூலம் உரிய பாதை அமைத்து தரப்படும் என கூறினார்.
மேலும் சந்தைமேட்டில் காரிய மேடை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பின்னர் ரெட்டிபாளையம் தம்டகோடி மலையில் அமைந்துள்ள சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து ஆரணி சட்டமன்ற தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை சேவூர் ராமச்சந்திரன் பெற்றுக்கொண்டார்.
- பயணிகள் ரெயில் எக்ஸ்பிரஸாக மாற்றம்
- டிக்கெட் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதி
அரக்கோணம் :
அரக்கோணம் காட்பாடி வேலூர் கண்டோன்மென்ட் இடையே இக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரெயில்கள் கொரோனா காரணமாக கடந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த ரெயில்கள் தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயிலாக இன்று முதல் இயக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் நிலையத்திற்கு வந்தடையும். அதேபோல் வேலூர் கண்ட்ரோன்மென்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
மதியம் 2. 5 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 4. 35 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும் .
அதேபோல வேலூர் கண்ட்ரோன்மெண்ட் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு இரவு 7. 15 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு காட்பாடி சென்றடையும். இதே போல காட்பாடியில் இருந்து காலை 4.25 புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.5 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசஞ்சர் ரெயில்களாக இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில்கள் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரெயில்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு பாசஞ்சர் ரெயிலில் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில் என பெயர் மாற்றப்பட்டுள்ளதால் இந்த ரெயிலில் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ெரயில்கள் மீண்டும் ரெயில் இயக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வால் அவதியடைந்துள்ளனர். மீண்டும் பழைய கட்டணத்திலேயே ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- முன்னேற்பாடுகள் தீவிரம்
- அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் 8 மற்றும் 9 தேதியில் வருகை தருவதை ஒட்டி முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்து ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
திருவண்ணாமலையில் வருகின்ற 8 மற்றும் 9-ந் தேதிகளில் முதல் -அமைச்சர் மு.க. ஸ்டாலின் வருகை தர உள்ளார். அன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகள், கட்சி நிகழ்ச்சிகள் கருணாநிதி சிலை திறப்பு விழாகளில் கலந்து கொண்டு பேசுகிறார்.
இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது திருவண்ணாமலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ள இடம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
அப்போது கலெக்டர் முருகேஷ் வேலூர் வடக்கு மண்டல டி.ஐ.ஜி. ஆனி விஜயா,துணை சபாநாயகர் பிச்சாண்டி அண்ணாதுரை எம்பி, திமுக மருத்துவமனை மாநில துணைத்தலைவர் கம்பன் திருவண்ணாமலை நகர செயலாளர் கார்த்திக் வேல்மாறன் திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வாகன நெரிசல் ஏற்பட்டதால் அவதி
- விரைவில் ஆடி மாத விழா தொடங்குகிறது
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் நேற்று 3ம்தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் குடும்பம் குடும்பமாய் வருகைதந்து அம்மனை தரிசனம் செய்தனர்.
மேலும் வாகன நிறுத்துமிடத்தில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்தனர்.
விரைவில் ஆடி மாத வெள்ளிக்கிழமை விழா துவங்கும் நிலையில், இப்போதே பக்தர்கள் குவிந்ததால் உரிய போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காளசமுத்திரம் கோவிலில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த மாதம் 25-ந்தேதி அம்மனுக்கு அலகு நிறுத்தி மகாபாரத விழா தொடங்கியது.
அதைத் தொடர்ந்து மகாபாரத சொற்பொழிவும், வருகிற 14-ந்தேதி முதல் தினமும் இரவில் மகாபாரத நாடகமும் நடைபெற உள்ளது.
6-ந்தேதி இரவு 7 மணி அளவில் திரவுபதியம்மன் திருக்கல்யாணம், 24-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியுடன், மாலை 6 மணி அளவில் தீமிதி விழா நடக்கிறது. அன்று மாலை பட்டிமன்றம் நடக்கிறது.
மறுநாள் திங்கள்கிழமை தர்மர் பட்டாபிஷேகம், மாலை இன்னிசை பாட்டுக்கச்சேரியும் நடக்கிறது. 24.6.22 முதல் வருகிற 25.7.22 வரை 32 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவை கிராம பொதுமக்கள் சார்பில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
- செய்யாறு அருகே பரிதாபம்
- போலீஸ் விசாரணை
செய்யாறு:
செய்யார் அருகே உள்ள புளியரம்பாக்கம் கிராமம், கொல்லைமேடு பகுதியை சேர்ந்த லட்சுமணன் (வயது 30). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு அஞ்சலி வயது 21,மனைவியும், கிருத்திகா (வயது 4) பெண் குழந்தையும் உள்ளனர்.
இவர் வழக்கம் போல நேற்று ஆடு மேய்க்க சென்றார். பகல் 2 மணி அளவில் விண்ணவாடி காட்டுப் பகுதியில் உள்ள குட்டையில் குளித்துக் கொண்டு இருந்தார். அதனை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் திருப்பதி ஆகியோர்களின் பார்த்துள்ளனர்.
சிறிது நேரம் கழித்து மீண்டும் அந்த வழியாக வந்த அவர்கள் பார்த்தபோது லட்சுமனின் துணி மட்டும் கரையில் இருந்தது லட்சுமணனை காணவில்லை. குட்டையில் மூழ்கி இருந்த லட்சுமணனை திருப்பதி மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கு பரிசோதித்து டாக்டர் ஏற்கனவே லட்சுமணன் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து அஞ்சலி செய்யாறு காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
- போலீஸ் சூப்பிரண்டும் பாதிப்பு
- கட்டாயம் முகக்கவசம் அணிய உத்தரவு
திருவண்ணாமலை:
தமிழகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா நோய் தொற்று பரவ தொடங்கியது. இதனால் ஊரடங்கு போன்று பல்வேறு நடைமுறைகள் கையாளப்பட்டு கொரோனா நோய் தொற்றின் பரவல் குறைக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு கைவிடப்பட்டு பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.
கொரோனா பரவல் அதிகரிப்பு
இந்த நிலையில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா நோய் தொற்று அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் வீட்டில் இருந்து வெளியே வரும் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது. இருப்பினும் பெரும்பாலான பொதுமக்கள் முகக்கவசம் அணிவதில்லை.
எஸ்.பி.கள் பாதிப்பு
திருவண்ணாமலை மாவட்டத்திலும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. அரசு தரப்பில் தெரிவித்த தகவலின் படி நேற்று முன்தினம் மட்டும் 13 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது 79 பேர் தொடர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயனும் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தி கொண்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 66 ஆயிரத்து 945 பேர் கொரோனா நோய் தொற்றிற்கு பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 66 ஆயிரத்து 181 பேர் குணமடைந்து உள்ளனர். 685 பேர் நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய் தொற்று காரணமாக பொது இடத்திற்கு வரும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
- திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறைசார்பில் அறிவிப்பு
- வருகிற 6-ந் தேதி கடைசி நாள்
திருவண்ணாமலை :
திருவண்ணாமலை பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தகுதியான விண்ணப்ப தாரர்கள் எழுத்து மூலமான விண்ணப்பங்கள் நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் வாயிலாகவோ உரிய கல்வித் தகுதி சான்று களுடன் தொடர்புடைய மாவட்ட கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
காலிப்பணியிட முதன்மைக் கல்வி, மாவட்டக் கல்வி, வட்டாரக் கல்வி அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டு உள்ளது.
வருகிற 6-ந்தேதி (புதன்கிழமை) மாலை 5 மணி விண்ணப்பிப்பதற்கான கடைசி நாளாகும். குறித்த நேரத்திற்கு பிறகு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகவல் பலகையில் வெளியி டப்படும் காலிப்பணியிட விவரங்கள் மாறுதலுக்கு உட்பட்டது.
திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலகம் deotvm@gmail.com என்ற முகவரிலும், செய்யாறு மாவட்ட கல்வி அலுவலகம் cheyyardeo@gmail.com என்ற முகவரிலும், ஆரணி மாவட்ட கல்வி அலுவலகம் deoarni2018@gmail.com என்ற முகவரிலும், போளூர் மாவட்ட கல்வி அலுவலகம் deopolur@gmail.com என்ற முகவரிலும், செங்கம் மாவட்ட கல்வி அலுலகம் deochengam@gmail.com என்ற முகவரிலும் விண்ணப்பங்களை அனுப்பலாம். இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.
- 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
- ஏராளமானோர் பங்கேற்றனர்.
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள கொங்கராம்பட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நேற்று ஊராட்சி மன்ற தலைவர் சுகுணாநாராயணன் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார்.
மேற்கு ஆரணி வட்டார வளர்ச்சி அலுவலர் திலகவதி கலந்து கொண்டு, கடந்த 1-ந் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, துணிப்பை பயன்படுத்த வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவோருக்கு உரிய அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்திப் பேசினார்.
இதில் துணை தலைவர் மாதவன், வார்டு உறுப்பினர்கள், மக்கள் நல ஒருங்கிணைப்பாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலர் (பொறுப்பு) ஜானகிராமன் நன்றி கூறினார்.






