என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கலைஞர் சிலை திறப்பு விழா நடைபெற உள்ளது
    • விழா மேடை அமைக்கும் பணியை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

    திருவண்ணாமலை:

    தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்று பயணமாக நாளை (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலைக்கு வருகை தர உள்ளார்.

    அப்போது அவர் திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவிலும், நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடைபெறும் அரசு விழாவிலும் கலந்து கொள்கிறார். இதற்காக திருவண்ணா மலை திருக்கோவிலூர் சாலையில் உள்ள மைதானத்திலும், ஈசான்ய மைதானத்திலும் விழா மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்த பணிகளை நேற்று மாலை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மேடை அமைக்கும் பணியை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து திருவண்ணாமலை - வேலூர் சாலையில் கலைஞர் சிலை வைக்கப்பட்டு உள்ள இடத்தையும், அண்ணா நுழைவு வாயிலில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது கலெக்டர் முருகேஷ், முதல்- அமைச்சரின் உள்வட்ட பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, ஓ.ஜோதி, மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனர் எம்.எஸ். தரணிவேந்தன், தி.மு.க. நகர செயலாளர் கார்த்திவேல்மாறன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • வழிபாட்டுத்தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.
    • அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.

    தூசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அடுத்த பல்லாவரம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தது.

    அவர்கள் தங்களின் குழந்தைக்கு தண்ணீர் மந்திரித்து தெளிப்பதற்காக, அருகில் உள்ள ஒரு வழிபாட்டுத் தலத்துக்கு நேற்று முன்தினம் குழந்தையைத் தூக்கி சென்றனர். அங்கு, தண்ணீர் மந்திரித்துத் தெளிக்கும் ஊழியரான ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அந்த இளம்பெண்ணிடம் உனது கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு நீ மட்டும் உள்ளே வா என்றார்.

    அதன்படி இளம்பெண் கணவரை வெளியே இருக்கச் சொல்லி விட்டு தனது குழந்தையை மட்டும் தூக்கிக்கொண்டு வழிபாட்டுத்தலத்துக்குள் சென்றார்.

    அப்போது வழிபாட்டுத்தல ஊழியர், உள்ளே சென்ற இளம்பெண் மீது தண்ணீரை தெளித்து, தொட்டு துடைப்பது போல் கபட நாடகமாடி அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

    அதிர்ச்சி அடைந்த இளம்பெண் தனது குழந்தையை தூக்கி கொண்டு அலறியடித்து வெளியே ஓடி வந்து தனக்கு நேர்ந்த விபரீத சம்பவத்தை கணவரிடம் கூறினார்.

    இதுகுறித்து இளம்பெண்ணின் கணவர் தூசி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து, வழிபாட்டுத்தல ஊழியரை கைது செய்தார்.

    • நாளை காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வருகிறார்.
    • முதலமைச்சர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    திருவண்ணாமலை:

    2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) திருவண்ணாமலைக்கு வருகை தருகிறார். அப்போது அவர் அண்ணா நுழைவு வாயில், கருணாநிதி திருவுருவச்சிலையை திறந்து வைக்கிறார்.

    திருவண்ணாமலைக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) வருகை தருகிறார். நாளை காலை அவர் சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு திருவண்ணாமலைக்கு வருகிறார். அவருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் காலை சுமார் 11 மணிக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

    பின்னர் அவர் கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதையடுத்து அன்று மாலை சுமார் 6 மணியளவில் திருவண்ணாமலை மாட வீதி பெரியத் தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் நடைபெறும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சிவாச்சாரியார்களுக்கு ஆடைகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறார்.

    தொடர்ந்து மாலை 7 மணியளவில் திருவண்ணாமலை-வேலூர் செல்லும் சாலையில் புதியதாக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் மற்றும் அதன் அருகே அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி உருவ சிலையை திறந்து வைக்கிறார். அதை தொடர்ந்து நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (9-ந் தேதி) காலை 9 மணியளவில் திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசுகிறார்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.

    சாலைகளில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன. மேலும் சாலைகளில் கட்சி கொடிகளும் கட்டப்பட்டு வருகிறது.

    விழா நடைபெறும் பகுதிகளில் பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    • துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த, திருவத்தூரில் செய்யாற்ற ங்கரையில் அமைந்துள்ள பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது.

    இன்று அதிகாலை 2.30மணி அளவில் 6-ம் யாக காலை பூஜை நடைபெற்று, அதனை தொடர்ந்து காலை 6.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து அனைத்துகோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு பிச்சாண்டி, எம் எல் ஏ ஒ ஜோதி, எ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், நகர மன்ற தலைவர் மோகனவேலு, நகர செயலாளர் கே. விஸ்வநாதன், திருப்பணிகுழு தலைவர் உருத்திரப்பன், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் உஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு டிஎஸ்பி செந்தில் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவரும் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. 17 வருடங்களுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    • தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 8, 9-ந்தேதிகளில் வருகை தருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலதிட்டங்களை வழங்குகிறார்.

    ஆரணி அருகே தனியார் மண்டபத்தில் தி.மு.க. திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் தலைமையில் நடைபெற்றது.

    மேலும் இதில் மாவட்ட பொருளாளர் பாண்டுரங்கன், முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஆர்.சிவானந்தம், ஏசி தயாநிதி, எதிரொலி மணியன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் பரமேஸ்வரி ராஜ்குமார், லோகநாதன், நகர மன்ற தலைவர் ஏ.சி மணி, ஒன்றிய செயலாளர்கள் எஸ்.எஸ் அன்பழகன், வழக்கறிஞர் சுந்தர், துரை மாமது, மோகன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் விண்ணமங்கலம் ரவி, மேற்கு ஆரணி ஒன்றிய சேர்மன் பச்சையம்மாள் சீனிவாசன், முன்னாள் ஒன்றிய செயலாளர் வெள்ளை கணேசன், தட்சிணாமூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பூக்கடை பிரகாஷ், அமர் ஷரீஃப், ரிஸ்வானா மாலிக், மாவட்ட கவுன்சிலர் அருணா குமரேசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஷர்மிளா தரணி. ஆகியோர் பங்கேற்றனர்.

    • முன்னாள் அமைச்சர் பங்கேற்பு
    • விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் கிராமத்தில் இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் உழவர் தியாகிகள் தினம் முன்னிட்டு விவசாயிகள் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாநிலத் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் தலைமையில் நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தூசி கே.மோகன் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு விவசாயிகளின் போராட்டத்திற்காக உயிர் நீத்த உழவர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் டி.கே.பி.மணி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார் முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன், குணசீலன் ஒன்றிய செயலாளர் அர்ஜுனன் லோகேஸ்வரன் பச்சையப்பன் தங்கராஜ் செல்வராஜ் மகேந்திரன் அரங்கநாதன் துரை திருமூலன் வந்தவாசி நகர செயலாளர் பாஷா உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது
    • காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை துண்டிப்பு

    கீழ்பென்னாத்தூர்:

    கீழ்பென்னாத்தூரில் உள்ள துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (7-ந்தேதி) காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை கீழ் பென்னாத்தூர், கருங்காலிகுப்பம், ராஜாதோப்பு, நெடுங்காம்பூண்டி, மேட்டுபாளையம், கொளத்தூர், இராயம்பேட்டை, ஆண்டாளூர், நல்லாண்பிள்ளை பெற்றாள், காட்டு சித்தாமூர், சிறுநாத்தூர், நாரியமங்கலம், கனபாபுரம், கழிகுளம், சோமாசிபாடி, சோ.நம்மியந்தல் ஆராஞ்சி, வழுதலங்குணம், மேக்களூர் மற்றும் சுற்றுபுற பகுதியில் உள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்தார்.

    • பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது
    • பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை

    திருவண்ணாமலை:

    வருகிற 8, 9-ந் தேதிகளில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் தமிழக முதல்- அமைச்சருக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

    திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் தமிழக முதல்- அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது என்று பொதுப்பணித்துறை அமைச்சரும், கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினருமான எ.வ.வேலு தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பதினைந்து வயதில் தன் உழைப்பால், தொண்டால், தியாகத்தால் 50 ஆண்டு கால அரசியல் பொது வாழ்வில் சாவல்கள், துரோகங்கள், நெருக்கடிகள், எதிர் கொண்டு வீழ்த்தி வெற்றிமாலை சூடியவர் தலைவர் மு.க.ஸ்டாலின். தோல்விகளை கண்டு துவளாமல், வெற்றிக் களை கண்டு ஆணவம் கொள்ளாமல் இனம், மொழி, நாடு, கலாச்சாரம் என இவற்றிற்கு பணி செய்து கிடப்பதே பணியென இருக்கும் தமிழக முதல்- அமைச்சர் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.

    முத்தமிழறிஞர் கலைஞர், "ஸ்டாலின் என்றால் உழைப்பு, உழைப்பு, உழைப்பு" என வாழ்த்திய வண்ணம், கழக தலைவராக பொறுப்பேற்றது முதல் எதிர் கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றிகளை ஈட்டி குறிப்பாக நாடாளுமன்றத்தில் 3-வது பெரிய கட்சியாகவும், உள்ளாட்சி மற்றும் நகர்புறத் தேர்தல்களில் நூறு சதவீத வெற்றி கண்டு வெற்றி நாயகனாக திகழ்கிற கழக தலைவர் தமிழக முதல்- அமைச்சராக பொறுப்பேற்று முதன் முறையாக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகள் என 2 நாட்கள் வருகை தர உள்ளார். எனவே அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.

    வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை தமிழக முதல்-அமைச்சருக்கு திருவண்ணாமலை மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் காலை 10 மணிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் அன்று மாலை திருவண்ணாமலை- வேலூர் செல்லும் சாலையில் உலக தமிழினத்தின் ஒப்பற்றத் தலைவராம், முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவச்சிலை திறப்பு விழாவும், பேரறிஞர் அண்ணா நுழைவு வாயில் திறப்பு விழாவும் நடைபெற உள்ளது.

    அதை தொடர்ந்து மறுநாள் 9-ந் தேதி (சனிக்கிழமை) காலை திருவண்ணாமலை திருக்கோவிலூர் சாலையில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொண்டு புதிய திட்டங்களுக்கு தொடக்க விழாக்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது.

    எல்லோருக்கும் எல்லாமும், சமூக நீதி, ஜனநாயகம், சமூக வளர்ச்சியை உள்ளடக்கிய உன்னதமான திராவிட மாடல் ஆட்சியை அளித்து கொண்டிருக்கும் தமிழக முதல்- அமைச்சர் வருகைத் தரும் அத்தனை திசைகளிலும் லட்சக்கணக்கில் கூடி, கைகளில் கழக கொடியையும், பதாகைகளையும் ஏந்தி, எழுச்சியான வரவேற்பு அளித்திட வேண்டும். தலைவர் மு.க.ஸ்டாலின் வருகைத் தரும் அந்தந்தப் பகுதிக்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், அமைப்பு சார்ந்த அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்பின் நிர்வாகிகள் பொறுப்பேற்று உற்சாகமான வரவேற்பு அளித்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தது.
    • இதனால் வங்கி மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் சுமார் 8.4 கிலோ போலியாக நகை வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் தேவிகாபுரம் சாலையில் உள்ள கூட்டுறவு நகர வங்கி கிளை இயங்கி வருகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டில் வங்கியின் மேலாளராக ஆரணியை சேர்ந்த லிங்கப்பா நகை மதிப்பீட்டாளராக மோகன் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    மேலும் கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில் 5 சவரன் தங்க நகை தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்தது.

    இதனால் வங்கி மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் சுமார் 8.4 கிலோ போலியாக நகை வைத்து பணத்தை கையாடல் செய்துள்ளார்.

    செய்யார் துணை பதிவாளர் கமலக்கண்ணன் சென்னையில் உள்ள வணிக குற்ற புலனாய்வு பிரிவில் அளித்த புகாரின் பேரில் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் மேலாளர் லிங்கப்பா, காசாளர் ஜெகதீசன், கிளார்க் சரவணன், நகை மதிப்பீட்டாளர் மோகன் ஆகிய 4 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.

    மேலும் ஆரணி நகர வங்கியின் கூட்டுறவு நிர்வாக தலைவர் அ.தி.மு.க.வை சேர்ந்த நகர செயலாளர் அசோக்குமார் துணை தலைவர் ஏ.ஜி.ஆனந்த் ஆகிய 2 பேரிடம் கூட்டுறவு சங்க அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு கடந்த 11.03.22 அன்று நகர கூட்டுறவு வங்கி மேலாளர் லிங்கப்பா மற்றும் கூட்டுறவு சங்க தலைவர் அசோக்குமார் உள்ளிட்ட 4 பேரை வணிக குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.

    இதனையடுத்து புதிய ஆரணி கூட்டுறவு வங்கி தலைவராக ஏ.ஜி.ஆனந்த் என்பவர் நியமிக்கபட்டார்.

    இதனை தொடர்ந்து ஆரணி நகர கூட்டுறவு சங்கத்தில் கையாடல் மற்றும் ஊழல் செய்தது நிரூபணம் ஆனதால் ஆரணி கூட்டுறவு சங்க நிர்வாக குழுவை கலைத்து திருவண்ணாமலை மாவட்ட இணை பதிவாளர் நடராஜன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது.
    • ரோகித் சர்மா நாளைய 20 ஓவர் போட்டியில் இடம்பெறுவாரா? என்பது உறுதியில்லை.

    சவுத்தம்டன்:

    இந்தியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 378 ரன் இலக்கை எட்டி பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது.

    கடந்த ஆண்டு கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்ட இந்த போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடத்தப்பட்டது. இந்த வெற்றி மூலம் 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    அடுத்து இரு அணிகள் இடையே மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி சவுத்தம்டனில் நாளை (7-ந் தேதி) நடக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா கொரோனா பாதிப்பு காரணமாக டெஸ்டில் விளையாடவில்லை.

    அதில் இருந்து குணமடைந்து விட்டாலும் நாளைய 20 ஓவர் போட்டியில் இடம்பெறுவாரா? என்பது உறுதியில்லை. அவர் ஆடாமல் போனால் ஹர்த்திக்பாண்ட்யா தலைமை தாங்கலாம். ஏற்கனவே அவர் அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கு கேப்டன் பொறுப்பை ஏற்று இருந்தார்.

    2 ஆட்டத்திலும் வென்று தொடரை கைப்பற்றி இருந்தார்.

    டெஸ்டில் ஏற்பட்ட மோசமான தோல்வியில் இருந்து மீண்டு இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், சஞ்சு சாம்சன், புவனேஷ்வர் குமார், சாஹல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். டெஸ்டில் ஆடிய விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், ஆகியோர் முதல் ஆட்டத்தில் விளையாடவில்லை.

    பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி சொந்த மண்ணில் விளையாடுவது கூடுதல் பலமாகும். ஜேசன் ராய், மொய்ன்அலி, லிவிங்ஸ்டோன், டேவிட் மலான், சாம்கரண் போன்ற சிறந்த வீரர்கள் இந்த அணியில் உள்ளனர்.

    இரு அணிகள் இடையே கடந்த ஆண்டு மார்ச் மாதம் சொந்த மண்ணில் நடந்த 20 ஓவர் தொடரை இந்தியா 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகளும் நாளை மோதுவது 20 ஓவர் போட்டின் 20-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 19 ஆட்டத்தில் இந்தியா 10-ல், இங்கிலாந்து 9-ல் வெற்றி பெற்றுள்ளன.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்குகிறது. சோனிடென் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    • 40 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது
    • 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த கலசப்பாக்கம் அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்ப கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஹைதராபாத் பிரபல முன்னணி தனியார் நிறுவனமான விதை உற்பத்தி மற்றும் இயற்கை உரங்கள் பூச்சிக்கல்லு மருந்துகள் தயாரிக்கும் நிறுவனமான மகா அக்சயா சீட்ஸ் சார்பில் நேற்று நேர்முக வளாக தேர்வு நடத்தப்பட்டது.

    இதில் இறுதி ஆண்டு படிக்கும் சுமார் 100 மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வில் உடனடியாக 40 பேருக்கு பணி நியமன ஆணையை ஹைதராபாத் மகா அக்ஷயா சீட்ஸ் நிறுவன அதிகாரிகள் வழங்கினார்/

    அப்போது அரவிந்தர் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் கிருஷ்ணவேணி உடன் இருந்தனர்.

    • டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி செய்த பணியாளர்களுக்கு ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் ஊதியம்
    • ஒன்றிய குழு கூட்டத்தில் தகவல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் கலசபாக்கம் ஒன்றியத்தில் வளர்ச்சிப்பணிகள் குறித்து மற்றும் செய்த பணிகளைப் பற்றியும் பேசப்பட்டது. அப்போது கிட்டாம்பாளையம் ஊராட்சியில் புதிய சிமெண்ட் சாலை அமைத்தல், ஆதமங்கலம் புதூர் ஊராட்சியில் உள்ள தென்னன்ட தெருவில் பக்க கால்வாய் அமைக்கும் பணி, கடலாடி ஊராட்சியில் ஆற்றங்கரையில் இருந்து புதுப்பேட்டை பகுதிக்கு புதிய பைப்லைன் 428 மீட்டர் தூரம் பைப்லைன் அமைத்தல் பணி, லாடவரம் ஊராட்சியில் மயான பாதையில் சிறு பாலம் அமைத்தல்.

    எர்ணாமங்கலம் ஊராட்சியில் பானாம்பட்டு ஏ.டி.சி திட்டத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல் பணி, எலத்தூர் ஊராட்சியில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி.

    கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கிராம ஊராட்சிகளுக்கு புதிய குடிசை வீடுகள் கட்ட கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணி செய்த பணியாளர்களுக்கு ரூ.9 லட்சத்து 90 ஆயிரம் ஊதியம் வழங்கப்பட்டது.

    கூட்டத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் தலைமை தாங்கி பேசினார்.

    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வேலு, வட்டார வளர்ச்சி (கி.ஊ) அலுவலர் கோவிந்தராஜுலு, மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் அனைவரும் உடனிருந்தனர்.

    ×