என் மலர்
திருவண்ணாமலை
- வந்தவாசி வெங்கடாபுரத்தில் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த வெங்கடாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீகற்பக விநாயகர் கோவில் மற்றும் ஸ்ரீசுப்பிரமணியர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடந்தது.
இதையொட்டி சனிக்கிழமை கோயிலை ஒட்டி யாகசாலை அமைக்கப்பட்டு ஹோமங்கள், கணபதி பூஜை, அனுக்ஞை, வாஸ்துசாந்தி, கும்பலங்காரம், அஷ்டபந்தனம் சாற்றுதல் உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.
மகா கணபதி ஹோமம், மகா பூர்ணாஹூதி, கலசப் புறப்பாடு நடந்தது.
காலை 9 மணிக்கு மேல் 10-30 மணிக்குள் கோவில்களின் கோபுர கலசங்கள் மீது புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
பின்னர் மூலவர் சாமிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- பிளாஸ்டிக் கழிவை சாப்பிடும் விலங்குகளுக்கு ஆபத்து
- தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதை வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை மான்கள் உண்பதால் சமூக ஆர்வலர்கள் வேதனையாக தெரிவித்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் ஏராளமான மான்கள், குரங்குகள், காட்டு பன்றிகள், மயில்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன.
வன விலங்குகள் கிரிவலப்பாதையில் மக்கள் நடமாடும் பகுதிக்குள் வராத வகையில் கிரிவலப்பாதையில் வனப்பகுதியை சுற்றி இரும்பு வேலி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த இரும்பு வேலியின் அருகில் மான்கள் கூட்டம், கூட்டமாக வந்து பகல் நேரங்களில் வந்து நிற்கின்றன.
கிரிவலப்பாதையில் செல்பவர்களில் பெரும்பாலானோர் மான்கள் கூட்டத்தை கண்டதும் இயற்கைக்கு மாறாக அவற்றிற்கு உணவு வழங்குவதாக கையில் இருக்கும் பழங்கள், ரஸ்க், பன் உள்ளிட்ட தின்பண்ட பொருட்களை மான்களுக்கு வழங்கி வருகின்றனர்.
இதனால் சுயமாக வனப்பகுதியில் உள்ள செடி, கொடிகள், பழங்களை உண்டு வந்த மான்கள் தற்போது மக்கள் வழங்கும் உணவு பொருட்களுக்காக இரும்பு வேலியின் அருகில் வந்து நிற்கின்றன.
மக்கள் உணவு அளித்து பழகியதால் மான்களும் மக்களை கண்டு எந்தவித அச்சமும் இல்லாமல் மக்கள் ஏதாவது வாங்கி போடுவார்களா என்று பார்க்கின்றன. பொதுமக்களும் தற்போது மான்களும் உணவு வழங்குதாக நினைத்து பிளாஸ்டிக் கவரில் உள்ள உணவு பொருட்கள், பாக்கு மாட்டை தட்டுகளில் வைத்து உணவு பொருட்களை போடுகின்றனர்.
மேலும் சிலர் கிரிவலப்பாதையில் அன்னதானம் வழங்கிவிட்டு அங்குள்ள தேவையற்ற கழிவுகளை வனப்பகுதியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால் மான்கள் பிளாஸ்டிக் கழிவுகள், காகிதம் போன்றவற்றை சாப்பிடுகின்றன.
வனத்துறை அதிகாரிகள் தொடர்ந்து பகல் நேரங்களில் கிரிவலப்பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு மக்கள் வன விலங்குகளுக்கு தேவையற்ற உணவு பொருட்களை வழங்குவதை தடுக்க வேண்டும்.
மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு தேவையான பழ வகை செடிகள் அதிகளவில் கிரிவலப்பாதையில் உள்ள வனப்பகுதியில் வளர்க்க வேண்டும். தண்ணீர் வசதி அமைத்து தர வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு
- ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் ஆய்வு செய்தார்
திருவண்ணாமலை:
விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி நடைபெற உள்ளது. அப்போது திருவண்ணாமலையில் முக்கிய பகுதிகளில் இந்து அமைப்புகள் மற்றும் இளைஞர்கள் குழுக்கள் சார்பில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவார்கள்.
வழிபாடு செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 3 அல்லது 5-வது நாளில் ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.
திருவண்ணாமலையில் சமுத்திரம் காலனி அருகில் கடந்த 2018-ம் ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது பாட்டில்கள் வீசப்பட்டு கலவரம் ஏற்பட்டது.
அதனை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது எந்தவித பிரச்சனையும் ஏற்படாத வகையில் ஊர்வலம் நடைபெறும் முக்கிய பகுதிகளில் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.திருவண்ணாமலை தாலுகா அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலையில் தொடங்கி அண்ணா சிலை, காந்தி சிலை சந்திப்பு பகுதி, அருணாசலேஸ்வரர் ராஜகோபுரம் எதிர்புறம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அவர் கடந்த 2018-ம் ஆண்டு கலவரம் ஏற்பட்ட சமுத்திரம் காலனி அருகில் தண்டராம்பட்டு சாலையில் உள்ள அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் பார்வையிட்டார். அந்த பகுதியில் இந்த ஆண்டு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய போலீசாருக்கு அறிவுறுத்தினர்.
தொடர்ந்து அவர் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும் தாமரை குளம் வரை நேரில் சென்று பார்வையிட்டார்.
ஆய்வின் போது துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், தனிப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராஜிவ்காந்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் பஸ் சென்றது.
- சில வளைவுகளில் விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. இதனால் பயணிகள் மனதில் திக்..திக்... பயத்துடன் இருந்தனர்.
வந்தவாசி:
காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரிக்கு நேற்று இரவு சுமார் 12 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். காஞ்சிபுரம் பஸ் நிலையத்திலேயே கண்டக்டர் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் வழங்கினார். பின்னர் அவரே பஸ்சை ஓட்ட தொடங்கினார்.
காஞ்சிபுரத்திலிருந்து பஸ் மெதுவாக வந்து கொண்டிருந்தது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் பஸ் சென்றது. சில வளைவுகளில் விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. இதனால் பயணிகள் மனதில் திக்..திக்... பயத்துடன் இருந்தனர். டிக்கெட் கொடுத்தவரே பஸ்சை ஓட்டி வந்ததால் அதிலிருந்த பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதேபோன்று பஸ்சை ஓட்டி வந்தால் பெரும் விபத்து ஏற்படும் என பயணிகள் அச்சமடைந்தனர்.
நள்ளிரவு சுமார் 1.50 மணிக்கு வந்தவாசி கோட்டை மூலையில் பஸ் வந்தது. அப்போது பயணிகள் அனைவரும் பஸ்சை உடனடியாக நிறுத்த கோரி சத்தம் போட்டனர். அந்த இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது.
அப்போதுதான் அவர்களுக்கு பஸ்ஸை ஓட்டி வந்தது பஸ்சின் கண்டக்டர் என தெரியவந்தது.
மேலும் அந்த பஸ்சின் டிரைவர் குடிபோதையில் அதே பஸ்சில் ஒரு இருக்கையில் நிலை மறந்து தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதற்கு மேல் அந்த பஸ்சில் பயணம் செய்ய முடியாது. வேறு பஸ்சில் செல்கிறோம் எனக்கூறி பயணிகள் அனைவரும் கீழே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் நடுரோட்டில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பயணிகளை சமாதானம் செய்தனர்.
விசாரணையில் அரசு பஸ் டிரைவர் தரனேந்திரன் காஞ்சிபுரத்தில் மது குடித்தார். இதனால் சுயநினைவு நினைவை இழந்து பஸ்சில் இருக்கையில் தூங்கிவிட்டார்.
இதனால் கண்டக்டர் ஹோலிப் பேஸ் பஸ்சை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் குடிபோதையில் இருந்த டிரைவர் மற்றும் பஸ்சை ஓட்டி வந்த கண்டக்டரை போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.
பஸ் திண்டிவனம் போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதுகுறித்து திண்டிவனம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணிகளை போலீசார் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் வந்தவாசியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- காலை 9 மணி முதல் 2 மணி வரை நிறுத்தப்படுகிறது
- செயற்பொறியாளர் தகவல்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக சந்தவாசல், கண்ணமங்கலம், படவேடு, கேளூர், ஆத்துவாம்பாடி, ஏரிக்குப்பம், களம்பூர், வடமாதிமங்கலம், அய்யம்பேட்டை, சீனிவாசபுரம், கன்னிகாபுரம், முக்குறும்பை, பாலம்பாக்கம், கஸ்தம்பாடி, படவேடு, ராமநாதபுரம், அனந்தபுரம், ஒண்ணுபுரம், வண்ணாங்குளம், மேல்நகர், கொளத்தூர், குப்பம், வாழியூர், காளசமுத்திரம் மற்றும் அதைச்சுற்றி உள்ள கிராமங்களில் மின் விநியோகம் காலை 9மணி முதல் பகல் 2 மணி வரை நிறுத்தப்படும் என ஆரணி கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் ரவி தெரிவித்துள்ளார்.
- கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்தது
- ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்
போளூர்:
போளூரில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.
போளூர் பேரூராட்சியின் துணைத் தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் என் நரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக போளூர் அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.
யாதவர் பண்பாட்டு கழகம் சார்பில் உறியடி திருவிழா நடைபெற்றது இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை யாதவர் பண்பாட்டு கழக தலைவர் ஏழுமலை, செயலாளர் ஜி வெங்கடேசன், பொருளாளர் ஜி கிருஷ்ணன் மற்றும் உறுப்பினர்கள் செய்துள்ளனர்.
- கலெக்டர், எஸ்.பி. நேரில் ஆய்வு
- 7 குழு அமைத்து நடவடிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் தற்காலிக கொட்டகைகள், நடைபாதை கடைகள், நடைபாதை முழுவதையும் ஆக்கிரமிப்பு செய்து பக்தர்கள் பயன்படுத்த இயலாத நிலையினை ஏற்படுத்தியிருப்பது, கடைகளுக்கு முன்பாக இருக்கைகள் போடுதல், நடைபாதையினை நிரந்தர வாகனம் நிறுத்துமிடமாக பயன்படுத்தல் போன்ற ஆக்கிரமிப்புகளை ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களே தாமாக முன்வந்து அகற்றிட வேண்டும் என கால அவகாசம் கொடுத்து கலெக்டர் முருகேஷ் உத்தரவு விட்டு இருந்தார்.
கிரிவலப்பாதை
இதனை தொடர்ந்து அகற்றாத ஆக்கிரமிப்புகளை ஒட்டுமொத்தமாக நேற்று அகற்ற வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலை துறை மற்றும் காவல் துறை உள்ளிட்ட அரசு துறைகளை ஒருங்கிணைத்து குழுக்கள் அமைக்கப்பட்டது.
இக்குழுக்களில் தாசில்தார்கள், பொறியியல் பிரிவு நில அளவையர்கள், உதவியாளர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், காவலர்கள், ஆய்வாளர்கள், வருவாய் கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி சாலை பணியாளர்கள், அலுவலக உதவியாளர்கள், கிராம பணியாளர்கள் செயலாளர்கள், உதவியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்த 7 குழுக்களும் இணைந்து அருணாசலேசுவரர் திருக்கோயில் வளாகத்தினை சுற்றி அமைந்துள்ள ஆக்கிரமிப்புகள், கிரிவலப்பாதையில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.
கலெக்டர் ஆய்வு
அரசுக்கு செந்மான இடங்களில் ஆக்கிரமைப்புகள் உள்ளனவா, சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள கடை உரிமையாளர்களை நேரில் சந்தித்து கடையின் முகப்பில் மேற்கூரைகள் கூடுதலாக அமைக்ககூடாது, குப்பைகளை அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டியில் குப்பைகளை கொட்ட வேண்டும்.
மேலும் மின்விளக்கு கம்பங்கள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றிட வேண்டும் எனவும் ஒவ்வொரு மாதமும் கிரிவலப்பாதையில் சம்மந்தப்பட்ட துறைகளின் மூலம் ஏதேனும் ஆக்கிரமைப்புகள் உள்ளனவா என கண்காணிக்கப்படும் என கலெக்டர் முருகேஷ், தெரிவித்துள்ளார்.
மேலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பின்னர் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது எனவும் எச்சரிக்கை செய்யப்பட்டது.
ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியின் போதே கிரிவலப்பாதையில் உள்ள குப்பைகள் அகற்றும் பணியும் நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது போலீஸ் சூப்பிரண்டு கி.கார்த்திகேயன், திருக்கோயில் இணை ஆணையர் அசோக்குமார், திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், திருவண்ணாமலை நகராட்சி ஆணையர் முருகேசன், நெடுஞ்சாலை துறை உதவி கோட்டப்பொறயாளர் ரகுராமன், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- மாலை அணிவித்து மரியாதை
- காங்கிரசார் ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் விழா கீழ்பென்னாத்தூர் காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. கீழ்பென்னாத்தூர் சங்குமேடு பகுதியில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் திருஉருவப்படத்தினை அமைத்திருந்தனர்.
கீழ்பென்னாத்தூர் காங்கிரஸ் நகர தலைவர் செல்வம் ராஜீவ் காந்தியின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராஜன், கீழ்பென்னாத்தூர் ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்கள் நிர்வாகிகள் பாஷா, ராஜிவ்காந்தி, பாக்யராஜ், பரமசிவம், இளையராஜா, ஏழுமலை உட்பட ஒன்றிய, நகர நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டார்.
- சரியான முறையில் குடிநீர் வழங்கவில்லை என்று குற்றச்சாட்டு
- சீரமைக்கும் பணியை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா, கீழ்ப்புதுப்பாக்கம் கிராமத்தில் கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ. ஜோதி பங்கேற்ற சமயத்தில் பொதுமக்கள் கீழ்புதுப்பாக்கம் பஞ்சாயத்தில் 6 மாத காலமாக சீரான முறையில் குடிநீர் வழங்கவில்லை என புகார் தெரிவித்தனர்.
கூட்டத்திலேயே எம்.எல்.ஏ.ஒ. ஜோதியும் விரைவாக, சீரான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்தார்.
அதன்படி கீழ் புதுப்பாக்கம் பஞ்சாயத்திற்கு குடிநீர் வழங்கும் நீர் ஆதாரமுள்ள வட தண்டலம் செய்யாற்றில் அமைந்துள்ள குடிநீர் கிணறுகளை எம்.எல்.ஏ. ஜோதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சேதமடைந்த பைப் லைன்களை சீரமைக்கும் பணியை விரைவாக முடிக்க ஊராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் அரசு அலுவலர்களையும் அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது செய்யாறு ஒன்றிய குழு தலைவர் என். வி.பாபு, செய்யாறு நகர செயலாளர் வழக்கறிஞர் கே.விஸ்வநாதன், கவுன்சிலர் ஞானவேலு, மா.கி.வெங்கடேசன், ராம் ரவி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- மகாபாரத அக்னி வசந்த விழா நடந்தது
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு வீரகோவில் பகுதியில் திரவுபதியம்மன் கோவிலில் கடந்த வாரம் தொடங்கி மகாபாரத அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு தினமும் பிற்பகல் கோவில் வளாகத்தில் மகாபாரத சொற்பொழிவு நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு மகாபாரதக் கதையில் பீமனின் மகனான போத்ராஜா கல்யாணம் நடைபெற்றது. இதேபோல் நேற்று இரவில் திரவுபதியம்மன் கல்யாணம் நடைபெற்றது.
- மூலவருக்கு சிறப்பு அபிஷேகம்
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே உள்ள புதுப்பாளையம் செந்தில்முருகன் கோவிலில் நேற்று கிருத்திகை வழிபாடு நடைபெற்றது.
இதைமுன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமும், உற்சவர் வள்ளி தெய்வா னை சமேத சுப்பிரமணிய சுவாமி அலங்காரம் நடைபெற்றது
கிருத்திகை ஏராளமான முருக பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் தம்டகோடி மலையில் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கிருத்திகை முன்னிட்டு நேற்று இரவு தங்க ரத உற்சவம் நடைபெற்றது.
- டி.எஸ்.பி. எச்சரிக்கை
- விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்
செய்யாறு புதிய டிஎஸ்பி ஆக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள வெங்கடேசன் கூறியதாவது:-
செய்யாறு போலீஸ் உட்கோட்டத்தில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிப்பது தான் முதல் கடமையாக இருக்கும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை போலீசார்கள் ஈடுபடுவார்கள். கஞ்சா விற்பவர்கள், மணல் கடத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, மணல் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் அவர்களது சொத்துகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மணல் கடத்தல் குறித்து புகார் செய்தால் நானே களத்தில் இறங்கி பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன்.
பஸ் நிலையம், மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தேவையில்லாமல் நிற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செய்யாறு டவுன் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் இரவு நேர போலீசில் வந்து செய்வது அட்டவணை செய்து கண்காணிக்கப்படும். இவ்வாறு டிஎஸ்பி வெங்கடேசன் கூறினார்.






