search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காஞ்சிபுரம்-புதுச்சேரிக்கு திக்.. திக்... பயணம்: போதையில் டிரைவர் தூங்கியதால் அரசு பஸ்சை தடுமாறி ஓட்டிவந்த கண்டக்டர்
    X

    பயணிகள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    காஞ்சிபுரம்-புதுச்சேரிக்கு திக்.. திக்... பயணம்: போதையில் டிரைவர் தூங்கியதால் அரசு பஸ்சை தடுமாறி ஓட்டிவந்த கண்டக்டர்

    • திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் பஸ் சென்றது.
    • சில வளைவுகளில் விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. இதனால் பயணிகள் மனதில் திக்..திக்... பயத்துடன் இருந்தனர்.

    வந்தவாசி:

    காஞ்சிபுரத்திலிருந்து புதுச்சேரிக்கு நேற்று இரவு சுமார் 12 மணிக்கு அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. இதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். காஞ்சிபுரம் பஸ் நிலையத்திலேயே கண்டக்டர் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் வழங்கினார். பின்னர் அவரே பஸ்சை ஓட்ட தொடங்கினார்.

    காஞ்சிபுரத்திலிருந்து பஸ் மெதுவாக வந்து கொண்டிருந்தது.

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வந்தபோது தடுமாற்றத்துடன் பஸ் சென்றது. சில வளைவுகளில் விபத்து ஏற்படுத்துவது போல் சென்றது. இதனால் பயணிகள் மனதில் திக்..திக்... பயத்துடன் இருந்தனர். டிக்கெட் கொடுத்தவரே பஸ்சை ஓட்டி வந்ததால் அதிலிருந்த பயணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதேபோன்று பஸ்சை ஓட்டி வந்தால் பெரும் விபத்து ஏற்படும் என பயணிகள் அச்சமடைந்தனர்.

    நள்ளிரவு சுமார் 1.50 மணிக்கு வந்தவாசி கோட்டை மூலையில் பஸ் வந்தது. அப்போது பயணிகள் அனைவரும் பஸ்சை உடனடியாக நிறுத்த கோரி சத்தம் போட்டனர். அந்த இடத்தில் பஸ் நிறுத்தப்பட்டது.

    அப்போதுதான் அவர்களுக்கு பஸ்ஸை ஓட்டி வந்தது பஸ்சின் கண்டக்டர் என தெரியவந்தது.

    மேலும் அந்த பஸ்சின் டிரைவர் குடிபோதையில் அதே பஸ்சில் ஒரு இருக்கையில் நிலை மறந்து தூங்கிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கு மேல் அந்த பஸ்சில் பயணம் செய்ய முடியாது. வேறு பஸ்சில் செல்கிறோம் எனக்கூறி பயணிகள் அனைவரும் கீழே இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் நடுரோட்டில் பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பயணிகளை சமாதானம் செய்தனர்.

    விசாரணையில் அரசு பஸ் டிரைவர் தரனேந்திரன் காஞ்சிபுரத்தில் மது குடித்தார். இதனால் சுயநினைவு நினைவை இழந்து பஸ்சில் இருக்கையில் தூங்கிவிட்டார்.

    இதனால் கண்டக்டர் ஹோலிப் பேஸ் பஸ்சை ஓட்டி வந்தது தெரியவந்தது. மேலும் குடிபோதையில் இருந்த டிரைவர் மற்றும் பஸ்சை ஓட்டி வந்த கண்டக்டரை போலீசார் கடுமையாக எச்சரித்தனர்.

    பஸ் திண்டிவனம் போக்குவரத்து பணிமனைக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதுகுறித்து திண்டிவனம் போக்குவரத்து பணிமனைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னால் வந்த மற்றொரு பஸ்சில் பயணிகளை போலீசார் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் வந்தவாசியில் நேற்று இரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×