என் மலர்
திருவண்ணாமலை
- பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம்
- நாளை பஞ்ச மூர்த்திகள் வீதி உலா
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளான இன்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர், விநாயகர் மாடவீதிகளில் உலா வந்தனர்.
தொடர்ந்து இரவு பஞ்ச மூர்த்திகள் வெள்ளி, இந்திர விமானங்களில் வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து நாளை 3-ம் நாள் பூத வாகனத்தில் சாமி வீதி உலாவும் இரவு வெள்ளி அன்ன வாகனம் சிம்ம வாகனத்தில் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெற உள்ளன.
- பக்தர்கள் ஏராளமானோர் நெய் காணிக்கை செய்து வருகின்றனர்
- டிசம்பர் 6-ம் தேதி மகா தீபம் ஏற்றப்படுகிறது
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழாவில் தீபம் ஏற்ற பயன்படுத்த கோவில் நிர்வாகத்தின் சார்பில் ஆவின் நெய் 4,500 கிலோ கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
டிசம்பர் 6-ம் தேதி அன்று 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலை மீது ஏற்றப்படும் தீபத்திற்கு தொடர்ந்து 11 நாட்கள் இந்த நெய் பயன்படுத்தப்படும்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆயிரம் கிலோ கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்று வகையில் கோவிலில் நெய் காணிக்கையை செய்து வருகின்றனர்.
- நாற்று நட்டும் போராட்டம்
- வாகனங்கள் செல்ல முடியாமல் அவதியடைவதாக புகார்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஊராட்சியில் பெருமாள்பேட்டை, துரிஞ்சாபுரம் கிராமங்கள் செண்பகத்தோப்பு அணை செல்லும் வழியில் வனத்துறை சாலையில் உள்ளது.
இந்த சாலை வனத்து றையினர் கட்டுப்பாட்டில் உள்ளதால் குண்டும் குழியுமாக தண்ணீர் ஆங்காங்கே தேங்கி போக்குவரத்து செல்ல முடியாத நிலையில் உள்ளது.
இங்கு வரும் அரசு பஸ்கள் இயக்கப்பட வில்லை. ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று கமண்டல நதி பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் படவேடு பகுதியில் வரும் அனைத்து வாகனங்கள் செல்ல முடியாமல் அவதிப்பட்டன.
இது குறித்து தகவலறிந்த சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ், படவேடு கிராம நிர்வாக அலுவலர் மகாலிங்கம், சந்தவாசல் போலீசார் விரைந்து வந்து சமரசம் செய்தனர். அதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இச்சம்பவம் காரணமாக படவேடு பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.முன்னதாக சேறும் சகதியுமாக உள்ள செண்பகத்தோப்பு அணை செல்லும் சாலையில் அப்பகுதி பெண்கள் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 3 கால யாக பூஜைகள் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு, அடுத்த புதுப்பட்டி, கிராமத்தில் கூழ் மாரியம்மன், விநாயகர், முருகர், சிவன், நவகிரக, கோவில் புதிதாக கட்டப்பட்டு பஞ்ச வர்ணம் பூசி இதன்மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவிலின் முன்பு யாகசாலை அமைக்கப்பட்டு 108 கலசம் வைத்து ஆனந்த் ஷர்மா, அய்யர் குழுவினர் பல்வேறு நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசத்தை வைத்து, 3 கால யாக பூஜைகள் செய்தனர்.
பின்னர் புனித நீர் கலசத்தை மேளதாளம் முழங்க கோவிலை சுற்றி வந்து கோவில் விமான கோபுரத்தின் மீது உள்ள கலசத்தில் நீரை ஊற்றினார்கள். பின்னர் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர். பின்னர் சூரிய பகவானுக்கு கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினர். சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர் பொதுமக்கள், செய்து இருந்தனர்.
- 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை
- நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் அடுத்த ஜமீன் கூடலூர் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா தனபால் தலைமை தாங்கினார். கால்நடை டாக்டர்கள் ஆர்.ஆனந்தன் ஏ.ராஜ்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பஞ்சமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர் எம்.அனுராதா சுகுமார் விழிப்புணர்வு சிறப்பு முகாமினை தொடங்கிவைத்தார்.
இந்த முகாமில் 300 மாடுகள் 200 ஆடுகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு கால்நடை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
மேலும் நோய் அறிகுறிகள் சிகிச்சை முறைகள் மற்றும் நோய் தடுப்பு முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.
இந்த முகாமில் கால்நடை பராமரிப்பு துறை உதவியாளர்கள் சுப்பிரமணி செல்வி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் கால்நடை ஆய்வாளர் விஜயா நன்றி கூறினார்.
- ஏலகிரிக்கு சுற்றுலா சென்ற போது மர்ம கும்பல் கைவரிசை
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த இரும்பேடு ஹரிஹரன் நகர் ராஜீவ் காந்தி பகுதியை சேர்ந்தவர் மனோகரன். இவர் பட்டு சேலை உற்பத்தி செய்து வருகிறார்.
இவரது மனைவி வசந்தி. இவர்கள் குடும்பத்துடன் நேற்று அதிகாலை திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரிக்கு சுற்றுலா சென்றனர்.
சுற்றுலா முடிந்து மாலை மனோகரன் தனது குடும்பத்துடன் வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தது.
பின்னர் பீரோவில் இருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம், வெள்ளி பொருட்கள் மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
இதனையடுத்து மனோகரன் ஆரணி தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் திருவண்ணாமலை கைரேகை நிபுணர்களை வரவழைத்து ரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலை உற்பத்தியாளர் வீட்டில் பட்ட பகலில் கொள்ளை போன சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று டிரைவர்கள் பஸ்களை எடுக்க வந்தனர்.
- அவசரமாக பஸ்சை எடுத்துச் சென்றதால் மைதான காம்பவுண்ட் சுவர் மீது பஸ் உரசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆரணி:
ஆரணி அருகே படவேடு பஸ் நிறுத்தம் எதிரே பாட்டு கச்சேரி மைதானம் உள்ளது. இங்கு தனியார் பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5-க்கும் மேற்பட்ட பஸ்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தது.
சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்று (திங்கட்கிழமை) டிரைவர்கள் பஸ்களை எடுக்க வந்தனர். அப்போது ஆற்காடு பகுதியை சேர்ந்த தனியார் கல்லூரி பஸ் அங்கு இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் அக்கம் பக்கத்தில் விசாரித்தார்.
அப்போது அங்கிருந்தவர்கள் கடந்த 26-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்கு பஸ்சை மர்ம நபர் ஒருவர் எடுத்துச் சென்றதாகவும், அப்போது அங்கிருந்தவர்கள் விடுமுறை நாளில் ஏன் பஸ்சை எடுக்கிறீர்கள் என கேட்டதற்கு சர்வீஸ் செய்ய கொண்டு போகிறேன் எனக் கூறியுள்ளார்.
அவசரமாக பஸ்சை எடுத்துச் சென்றதால் மைதான காம்பவுண்ட் சுவர் மீது பஸ் உரசி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சந்தவாசல் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பஸ்சில் பொருத்தப்பட்டிருந்த ஜி.பி.ஆர்.எஸ். கருவி பழுது அடைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது.
கல்லூரிக்கு செல்ல வந்த மாணவர்கள் வேறு பஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பணம் பறிமுதல்
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம்அ டுத்த ஹரி ஹரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.ஜி.ஆர். (வயது28). இவர் நேற்று முன்தினம் அப்துல்லாபுரம் கிராமம் மின்வாரியம் அருகே எதிரில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு ஒரு வாலிபர் திடீரென பிளேடை காட்டி மிரட்டி எம்ஜிஆர் சட்டை பையில் இருந்த 500 ரூபாய் எடுத்து ஓடினார்.
எம்ஜிஆர் கூச்சல் போடவே அங்கிருந்த பொதுமக்கள் வாலிபரை மடக்கி பிடித்து தூசி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.விசாரணையில் பிடிபட்ட வாலிபர் காஞ்சிபுரம் மேற்கு பகுதி பல்லவன் தெருவை சேர்ந்த தாமோதரன் 19 என்பது தெரியவந்தது.இதையடுத்து அவரிடம் இருந்த 500 ரூபாயை பறிமுதல் செய்து போலீசார் வழக்கு பதிவு செய்து
தாமோதரனை கைது செய்தனர்.
- தொழில் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது
- 236 பேர் தேர்வு
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் கிராமப்புற திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சி அளிக்கும் இளைஞர் திறன் திருவிழா நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனம், பாஸ்கரன், ஊராட்சி மன்ற தலைவர் அருள் தேவி செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முன்னதாக மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் உதவி திட்ட அலுவலர் பெருமாள் வரவேற்றார்.
இந்நிகழ்ச்சியில் 236 இளைஞர்களை வேலை வாய்ப்புடன் கூடிய தொழில் திறன் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டு அதற்கான சான்றிதழ் வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு வழங்கினார்.
வெம்பாக்கம் கார்த்திகேயன் எஸ் எஸ் குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் வட்டார இயக்க மேலாளர் பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.
- புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க மனுக்கள் வழங்கினர்
- திரளான இளைஞர்கள், பெண்கள் மனுக்கள் அளித்தனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பகுதியில் உள்ள இந்து ஆரம்பப்பள்ளி முற்றிலும் இடிக்கப்பட்டது. இதனால் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கல், திருத்தம் சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவல கத்தில் நடைபெற்றது.
கண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பொற்கொடியிடம் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க மனுக்கள் வழங்கினர்.
கிராம உதவியாளர் ஞானவேல் உள்பட பலர் உடனிருந்தனர். இதேபோல் கண்ணமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் பகுதி (1) வாக்காளர் சேர்ப்பு சிறப்பு முகாமில் திரளான இளைஞர்கள், பெண்கள் மனுக்கள் அளித்தனர்.
- இருதயம், நுரையீரல், மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்றனர்
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
வந்தவாசி:
வந்தவாசியில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. வந்தவாசி அடுத்த கீழ் கொடுங்காளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை வந்தவாசி ரோட்டரி சங்கம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இணைந்து நடத்தினர்.
முன்னாள் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் டாக்டர் எஸ் குமார் முன்னிலை வகித்தார். மருத்துவர்கள் சக்தி குணவேல், கீதாஞ்சலி, சாயங்கா ஸ்ரீ, அடங்கிய மருத்துவ குழுவினர் முகாமிற்கு வந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர்.
இந்த முகாமில், இருதயம், நுரையீரல், மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட சிறப்பு மருத்துவர்கள் பங்கு பெற்று சிகிச்சை அளித்தனர். கீழ் கொடுங்காளூர் சுற்றியுள்ள மருதாடு,கீழ்ப்பாக்கம், சாலவேடு, கொட்டை, மாமண்டூர், இரும்பேடு ஆகிய கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பங்கு பெற்று சிகிச்சை பெற்றனர். ரோட்டரி உறுப்பினர்கள் கார்வண்ணன், குணா, நித்தியா, வெங்கடேசன், பாலசுந்தர், கோபி மற்றும் ராஜசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.
- தீயணைப்பு வீரர்கள்
- குளித்தபோது மணலில் சிக்கினான்
ஆரணி:
ஆரணி அடுத்த அரையாளம் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மணிகண்டன் (வயது15), 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்களுடன் சேர்ந்து நேற்று தச்சூர் செய்யாறு ஆற்றுப்பகுதியில் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது மணிகண்டன் திடீரென தண்ணீரில் மூழ்கினார். நீண்ட நேர மாகியும் வெளியே வராததால் நண்பர்கள் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து தேடியுள்ளனர்.
இதுகுறித்து ஆரணி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேர தேடுதலுக்கு பிறகு மணலில் சிக்கி இருந்த மணிகண்டனை பொதுமக்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






