என் மலர்
திருவண்ணாமலை
- வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை
- போலீசார் விசாரணை
வெம்பாக்கம்:
வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த தொழிலாளியின் 14 வயதுடைய மகள் அதே பகுதியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் மாணவி கடந்த 11-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் மாணவியின் தாயார் தூசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மாணவியின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
பின்னர் விசாரணையில் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாயமான மாணவி என்பது தெரிய வந்தது. மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராணுவ வீரர்களின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 2019-ம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த 40 இந்திய ராணுவவீரர்களின் திருஉருவ படங்கள் கீழ்பென்னாத்தூர் பஸ் நிலையம் அருகில் மலர்களால் அலங்கரித்து வைத்திருந்தனர்.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சிறுநாத்தூர் கிராமத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் தமிழரசன் அகல்தீபம் ஏற்றி வைத்தார்.
கீழ்பென்னாத்தூர் உயிரிழந்த ராணுவவீரர்களின் உருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
பா.ஜ.க. நகர தலைவர் விஜயகுமார், ஒன்றிய பொதுச்செயலாளர் திருமலை, விஜியகுமார், வணிகர் சங்க நிர்வாகிகள் ராஜேந்திர பிரசாத், மாயாண்டி, ரவிச்சந்திரன், ஆட்டோ ஒட்டுனர் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் ஆறுமுகம், சரவணன், அரசு, ராகுல், பொதுமக்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செய்து, மவுன அஞ்சலி செலுத்தி வணங்கினார்கள்.
- ஆரணி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்
- அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் உள்ள ஆரணி ஒன்றிய கவுன்சிலர்கள் சாதாரண கூட்டம் ஒன்றிய குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடைபெற்றது.
இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி அனைவரையும் வரவேற்றார். துணை தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மேலும் இதில் எஸ்.வி.நகரம் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கவிதாபாபு பேசியாதாவது:-
எங்கள் எஸ்.வி.நகரம் கிராமத்தில் குடிநீர் பிரச்சினை அதிகளவில் உள்ளன. அடிக்கடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாறுவதால் யாரிடம் பிரச்சனை கூறுவது என்று தெரியவில்லை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பிரச்சனைகள் தீர்க்க வட்டார வளர்ச்சி அலுவலகம் நடவடிக்கை எடுக்காததை வன்மையாக கண்டிக்கின்றேன்.
எங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர். அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளோம் இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து ஒன்றிய துணை சேர்மன் ராஜேந்திரன் பேசியதாவது:-
பஞ்சாயத்து ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சிறிய அளவில் கூட மதிப்பில்லை ஆகையால் வட்டார வளர்ச்சி நிதியில் ஒதுக்கபட்ட ரூ.8 லட்சத்து 88 ஆயிரம் ஓதுக்கபட்ட 453 நெம்பர் கொண்ட தீர்மானத்தை நிராகரித்து ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் கையொழுதிட்ட வேண்டும் என்று தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றி அனைத்து கவுன்சிலர்களும் கையொழுத்திட்டு தீர்மானத்தை நிராகரித்தனர். பஞ்சாயத்துக்கு ஒதுக்கிய நிதியை ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றி தீர்மானத்தை நிராகரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் அனைத்து தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றபட்டது. இதில் மற்ற அரசு துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.
- 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
- தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர். இந்த 4 ஏடிஎம் மையங்களில் இருந்தும் ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
தமிழகத்தையே உலுக்கிய இந்த கொள்ளை தொடர்பாக, வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் ஆந்திரா மற்றும் அரியானா மாநிலங்களுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், திருவண்ணாமலையில் இரவு நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடாத 6 காவல்துறையினரை மாவட்ட ஆயுதப் படைக்கு பணியிட மாற்றம் செய்து வடக்கு மண்டல ஐஜி கண்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
- பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது
- ஏராளமானோர் தரிசனம்
கண்ணமங்கலம்:
சந்தவாசல் அருகே உள்ள துரிஞ்சிக்குப்பம் கிராமத்தில் மேற்கு குளக்கரையில் 500 ஆண்டு கால திரவுபதியம்மன் கோயில் அவ்வூரில் உள்ள பொதுமக்கள் மற்றும் ஆலய திருப்பணி குழுவினர் சார்பில் சீரமைத்து கட்டி உள்ளனர். இக்கோயிலின் மகாகும்பாபிசேக விழா கடந்த 10-ந்தேதி காலை சிறப்பாக நடைபெற்றது.
இந்த விழாவில் மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சேகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயசுதா, போளூர் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெருமாள், உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீர்த்தப்பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
கும்பாபிஷேகத்தையும் யாகபூஜைகளையும் போளூர் கைலாசநாதர் கோயில் கிருத்திகானந்த சிவாச்சாரியார், சென்னை சந்திரசேகர சிவாச்சாரியார், கைலாஷ், மணிகண்ட சிவாச்சாரியார் மற்றும் குழுவினர் நடத்தி வைத்தனர்.
- சிறப்பு அபிஷேகம் நடந்தது
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வந்தவாசி:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ஜப்திகாரணி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகாம்பாள் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதை தொடர்ந்து கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் மகாலட்சுமி ஹோமங்கள் நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி வேத மந்திரங்கள் முழங்க மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அந்தப் புனித நீரை பக்தர்களுக்கு தெளிக்கப்பட்டது இதைத் தொடர்ந்து ஸ்ரீ ரேணுகாம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் மங்கள மேள வாதியுங்கள் மகா தீபாதரணை காண்பிக்கப்பட்டது.
இந்த சிறப்பு மிக்க மகா கும்பாபிஷேகத்திற்கான திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ரேணுகாம்பாள் தரிசனம் செய்து சென்றனர்.
- வழி கேட்பதுபோல் துணிகரம்
- போலீசார் விசாரணை
திருவண்ணாமலை:
வாணாபுரம் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சோலை சேகரன் என்பவரின் மகன் நாதஸ்டிமுருகன் (வயது 27). இவர் தனக்கு சொந்தமான காரை வேலூருக்கு சென்று பிறகு மீண்டும் ராமநாதபுரம் சென்று கொண்டிருந்தார்.
தச்சம்பட்டு அருகே சென்றபோது அங்குள்ள ஏரிக்கரை ஓரத்தில் நின்று இயற்கை உபாதையை கழிக்க இறங்கினார். அப்போது அவரது பின்னால் வந்த காரில் இருந்து இறங்கிய 4 பேர் கொண்ட கும்பல் திருவண்ணாமலைக்கு செல்ல வழி கேட்டுள்ளனர்.
அதற்கு நாதஸ்டிமுருகன் நீங்கள் வந்த வழியில் தான் செல்ல வேண்டும் என்று கூறினார். இதனையடுத்து திடீரென 4 பேரும் நாதஸ்டி முருகனை தாக்கி விட்டு அவர் ஓட்டி வந்த காரை கடத்திச் சென்றனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து தச்சம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபரை தாக்கி கார் கடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
- அகற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
- விபத்து ஏற்படும் அபாயம்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் பேரூராட்சி வாணக்கார தெரு மற்றும் புதிய சாலை பகுதியில் குளத்து மேட்டு தெரு தொடங்கும் இடங்களில் ஆழ்துளை போர்வேல் பம்புகள் உள்ளது.
கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் குளத்து மேட்டு தெரு தொடங்கும் இடத்தில் உள்ள ஆழ்துளை போர்வெல் பம்பு செயல்படாததால் மேலே தகர ஷீட்டு மூலம் மூடப்பட்டுள்ளது.
இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பயன்பாட்டுக்கு இல்லாத ஆழ்துளை போர்ெவல் பம்பை பாதுகாப்புடன் அகற்ற வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
- அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததால் நடவடிக்கை
- கலெக்டர் உத்தரவு
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோமாசிபாடி ஊராட்சி தலைவராக ஏழுமலை உள்ளார்.
ஊராட்சி செயலாளராக சங்கர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங் ஆய்வு செய்தார்.
அப்போது அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணி நடந்து வருவதால், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்று அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி திட்ட அலுவலர் மகாலட்சுமி, ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.
அப்போது தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் லஞ்சம் கேட்பதாகவும், தகுதியான பலர் சேர்க்கப்படவில்லை எனவும், கணக்கெடுப்பு பட்டியலில் சோமாசிபாடியில் உள்ள பெரும்பாலான மக்களை சேர்க்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கூடுதல் கலெக்டரின் வாகனத்தை நிறுத்தி புகார் அளித்தனர்.
மேலும் பஞ்சாயத்தில் பல்வேறு பணிகளும் தொடங்கப்படவில்லை எனவும் ஆய்வின் போது தெரியவந்தது. பணியிடை நீக்கம் இதுகுறித்து கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங் கலெக்டர் முருகேசிடம் அறிக்கை அளித்தார்.
அதன்பேரில் ஊராட்சி செயலாளர் சங்கரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
மேலும் ஊராட்சி தலைவர் ஏழுமலையின் காசோலை அதிகாரத்தை பறித்தும், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
- திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளையில் கைதேர்ந்த கும்பல் ஈடுபட்டுள்ளனர்.
- 9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை குறித்து வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏ.டி.எம். கொள்ளையில் துப்பு துலங்கப்பட்டுள்ளது. விரைவில் கொள்ளையர்கள் பிடிபடுவார்கள்.
கைதேர்ந்த கும்பல் இதில் ஈடுபட்டுள்ளனர். 4 ஏ.டி.எம்.களையும் சேர்த்து 2 மணி நேரத்தில் கொள்ளை சம்பவத்தை திருட்டு கும்பல் அரங்கேற்றியுள்ளது.
குறிப்பிட்ட வகையான ஏ.டி.எம்.களை தெரிந்து கொண்டு கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியுள்ளனர். அறிவியல் ரீதியான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கொள்ளை கும்பலை பிடிக்க விசாரணை செய்யப்பட்டு வருகிறது.
9 தனிப்படை போலீசார் கொள்ளை கும்பலை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை நடந்த ஏ.டி.எம்.களின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகள் மும்பையில் பெறப்பட்டுள்ளது. அவற்றை கொண்டு விசாரணை நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு ஈரோடு மாவட்டம் வழியாக வந்தது.
- ஜார்க்கண்ட் தொழிலாளர்களை ரெயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.
சேலம்:
தமிழ்நாடு, கேரளாவில் இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்களில் முன்பதிவு பெட்டிகளை உறிய டிக்கெட் இன்றி தொழிலாளர்கள் ஆக்கிரமித்து பயணிக்கின்றனர்.
இதனால், முறையாக முன்பதிவு டிக்கெட் எடுத்துச் செல்லும் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர். சமீபத்தில் சென்னையில் வட மாநிலம் சென்ற ரெயிலில் டிக்கெட் இன்றி முன்பதிவு பெட்டியில் பயணித்த வடமாநில தொழிலாளர்கள் 1000-க்கும் மேற்பட்டோரை ரெயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீசார் நடுவழியில் இறக்கி விட்டனர். அப்படியொரு சம்பவம் நேற்று சேலம் அருகே தின்னப்பட்டி ரெயில்வே நிலையத்தில் நடந்தது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் டாட்டா நகருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு ஈரோடு மாவட்டம் வழியாக வந்தது.
இந்த ரெயில், சேலம் ரெயில்வே நிலையத்துக்கு நேற்று பிற்பகல் 2.50 மணிக்கு வந்தடைந்தது. 5 நிமிடத்தில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது. அந்த நேரத்தில் ரெயிலின் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளான எஸ்-4, எஸ்-5 பெட்டிகளில் டிக்கெட் இன்றி ஏராளமான ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் பயணித்தனர்.
அதனால் டிக்கெட் முன்பதிவு செய்து பயணித்தவர்கள் போதிய இடவசதி இன்றி பெரும் அவதி அடைந்தனர். இது பற்றி சேலம் கோட்ட அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சேலம் ரெயில்வே கோட்ட ரெயில்வே பாதுகாப்பு படை உதவி கமிஷனர் ரதீஷ்பாபு தலைமையில் சேலம் ரெயில்வே நிலைய ஆர்பிஎப் இன்ஸ்பெக்டர் ஸ்மித், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் அந்த ரெயிலை தின்னப்பட்டியில் நிறுத்தி, ஜார்கண்ட் மாநில தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினர்.
2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இன்றியும், காத்திருப்போர் பட்டியல் டிக்கெட் வைத்துக் கொண்டும் பயணித்தது தெரியவந்தது. இதையடுத்து ஜார்க்கண்ட் தொழிலாளர்களை ரெயிலில் இருந்து கீழே இறக்கி விட்டனர். இதில், 25 பெண்கள், 90 ஆண்கள் என 112 பேர் ஆவார்கள்.
இவர்களை அடுத்து வரும் ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயிலில் ஏற்றி அனுப்பி வைக்க ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்தது. அதன்படி, மாலை 6.40 மணிக்கு தின்னப்பட்டி ரெயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ஜோலார்பேட்டை எக்ஸ்பிரசில் 112 பேரையும் ஏற்றி அனுப்பி வைத்தனர். இதனால், அந்த ரெயில் 4.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.
- ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
- கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், தேனிமலை பகுதியில் உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், போளூர் பஸ் நிலையம் எதிரே உள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையம், கலசப்பாக்கம் அண்ணாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள இண்டிகா ஏடிஎம் மையம் ஆகிய 4 இடங்களில் ஏடிஎம் மையங்களை உடைத்து மர்ம கும்பல் பணத்தை கொள்ளையடித்தனர்.
இந்த 4 இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் இருந்து ரூ.75 லட்சம் பணம் கொள்ளை போனது.
நள்ளிரவில் ஏடிஎம் மையங்களின் ஷட்டர்களை மூடி கியாஸ் வெல்டிங் மூலம் மிஷின்கள் உடைக்கப்பட்டுள்ளன. முன்னதாக அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை கியாஸ் வெல்டிங் மூலம் கும்பல் எரித்துள்ளனர். அதை தொடர்ந்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு ஏடிஎம் எந்திரங்களுக்கு தீ வைத்து சென்று விட்டனர்.
ஒரு ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க 13 நிமிடங்கள் மட்டுமே கொள்ளையர்கள் எடுத்துக் கொண்டுள்ளனர்.
போளூர் ஏ.டி.எம். மையம் அருகே உள்ள கேமராக்களை ஆய்வு செய்த போது அதிகாலை 3.50 மணிக்கு காரில் தொப்பி அணிந்தபடி 4 பேர் கும்பல் வந்ததும் அடுத்த 13 நிமிடத்தில் அவர்கள் கொள்ளையை முடித்து விட்டு திரும்பி சென்றதும் பதிவாகி உள்ளது.
அவர்கள் ஏடிஎம் கொள்ளையில் கைதேர்ந்தவர்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏடிஎம் மையங்களில் ஒரே நாளில் ஒரே விதமாக கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர வைத்துள்ளது.
கொள்ளை நடந்த ஏடிஎம் மையங்களை போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டுகள் கார்த்திகேயன், ராஜேஷ் கண்ணன், பாலகிருஷ்ணன் ஆகியோர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏடிஎம் எந்திரத்தை முழுமையாக கையாளத் தெரிந்தவர்கள் தான் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளை சம்பந்தமாக பல தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கும்பலை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக ஆந்திராவுக்கு கும்பல் தப்பி செல்ல வாய்ப்பு உள்ளது.
இதனை தொடர்ந்து ஆந்திர எல்லைகளில் போலீசார் நேற்று காலை முதல் விடிய விடிய சோதனை நடத்தினர். தொடர்ந்து சோதனை நீடித்து வருகிறது.
இதேபோல தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் போலீசார் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திரா கர்நாடக மாநில எல்லைகளில் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தங்கும் விடுதிகளிலும் போலீசார் சோதனை நடத்தினர்.
இது போன்ற கொள்ளையில் அனுபவம் வாய்ந்த அரியானா மாநிலத்தைச் சேர்ந்த கும்பல்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு தனிப்படையினர் அரியானாவுக்கு விரைந்துள்ளனர். கொள்ளையில் ஈடுபட்ட கும்பல்களின் செல்போன் எண்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அவர்கள் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கொள்ளை கும்பலை போலீசார் நெருங்கியுள்ளனர். இதேபோல் மற்றொரு தனிப்படை ஆந்திர மாநிலம் விஜயவாடாவுக்கு சென்றுள்ளனர். அவர்கள் அங்கு தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை கும்பல் ஏ.டி.எம். தொழில் நுட்பம் தெரிந்தவர்களுடன் கூட்டு சேர்ந்து கைவரிசை காட்டியுள்ளனர். அவர்கள் சோதனை சாவடிகள் வழியாக செல்லாமல் மாற்று வழியில் தப்பி சென்றுள்ளனர். கொள்ளை நடந்த 4 ஏ.டி.எம்.களும் ஒரே மாதிரியானவை.
ஏ.டி.எம்.களில் பல்வேறு மாடல்கள் உள்ளது. அதில் சில ஏ.டி.எம்.களில் வெல்டிங் வைத்து பணத்தை எடுக்கும் போது பணத்தில் தீ பற்றி விடும்.
ஒரு சில ஏ.டி.எம்.களில் பணம் உள்வாங்கி இருக்கும். அந்த ஏ.டி.எம்.களில் வெல்டிங் வைத்தால் பணத்தில் தீ பற்றாது. இதே பாணியில் தான் கொள்ளை கும்பல் இங்கு கைவரிசை காட்டியுள்ளனர்.
கொள்ளை கும்பலை பிடிக்க டி.ஜி.பி. சைலேந்திர பாபு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஐ.ஜி. கண்ணன் நேரடியாக களத்தில் இறங்கி கொள்ளை கும்பலை பிடிக்க விசாரணையை முடுக்கிவிட்டுள்ளார்.
இன்று திருவண்ணாமலையில் ஐ.ஜி. கண்ணன் தலைமையில் டி.ஐ.ஜி. முத்துசாமி, 3 எஸ்.பி.க்கள் தலைமையில் கொள்ளை கும்பலை பிடிப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு கொள்ளை கும்பல்கள் குறித்த பல்வேறு தகவல்கள் பரிமாறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
கொள்ளை சம்பவம் குறித்து அனைத்து மாநில டி.ஜி.பி.களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களும் ஆய்வு செய்து அந்தந்த மாநிலங்களில் சோதனையை முடுக்கிவிட்டுள்ளனர்.
இது தொடர்பாக டி.ஐ.ஜி முத்துசாமி கூறுகையில்:-
கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றார்.






