என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Secretary suspended"

    • அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு செய்ததால் நடவடிக்கை
    • கலெக்டர் உத்தரவு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த சோமாசிபாடி ஊராட்சி தலைவராக ஏழுமலை உள்ளார்.

    ஊராட்சி செயலாளராக சங்கர் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதை கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப் சிங் ஆய்வு செய்தார்.

    அப்போது அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு பணி நடந்து வருவதால், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளும் கணக்கெடுப்பில் சேர்க்கப்பட்டுள்ளார்களா? என்று அவர் ஆய்வு செய்தார். ஆய்வின் போது உதவி திட்ட அலுவலர் மகாலட்சுமி, ஒன்றிய ஆணையாளர் பரிமேலழகன், ஒன்றிய பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

    அப்போது தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் லஞ்சம் கேட்பதாகவும், தகுதியான பலர் சேர்க்கப்படவில்லை எனவும், கணக்கெடுப்பு பட்டியலில் சோமாசிபாடியில் உள்ள பெரும்பாலான மக்களை சேர்க்கவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் கூடுதல் கலெக்டரின் வாகனத்தை நிறுத்தி புகார் அளித்தனர்.

    மேலும் பஞ்சாயத்தில் பல்வேறு பணிகளும் தொடங்கப்படவில்லை எனவும் ஆய்வின் போது தெரியவந்தது. பணியிடை நீக்கம் இதுகுறித்து கூடுதல் கலெக்டர் வீர்பிரதாப் சிங் கலெக்டர் முருகேசிடம் அறிக்கை அளித்தார்.

    அதன்பேரில் ஊராட்சி செயலாளர் சங்கரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.

    மேலும் ஊராட்சி தலைவர் ஏழுமலையின் காசோலை அதிகாரத்தை பறித்தும், மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

    ×