என் மலர்
திருவள்ளூர்
- நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்
- ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
திருவள்ளூர்:
சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்தாக மின்சார ரெயில் சேவை உள்ளது. இதில் சென்னை சென்ட்ரல்- திருவள்ளூர், அரக்கோணம், திருத்தணி மார்க்கத்தில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இதில் பயணம்செய்து வருகிறார்கள்.
பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரெயில் நிலையங்களில் பயணிகள் வசதி போதுமான அளவு இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருகிறது. பல ரெயில் நிலையங்களில் பயணிகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சுரங்க நடைபாதை மற்றும் நடைபாதைகளுக்கு செல்ல நடைமேம்பாலம் இல்லை.
இதேபோல் திருவள்ளூரை அடுத்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திலும் ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்கு சென்று வர நடை மேம்பாலமோ சுரங்கப்பாதையோ கிடையாது. பயணிகளும், அவ்வழியே செல்லும் பொதுமக்களும் தண்டவாளத்தை கடந்துதான் சென்று வருகின்றனர்.
தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இந்த இடத்தில் சுரங்க நடைபாதை மற்றும் நடை மேம்பாலம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் ரெயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

இதற்கிடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் ரெயில் மோதி பலியான சம்பவத்தால் அதிர்ந்து போன பொதுமக்கள் இந்த நிலைக்கு ரெயில்வே துறையின் மெத்தனப்போக்கே காரணம் என்று கூறி மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தின் தண்டவாளத்தை பொதுமக்கள் கடந்து செல்வதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெயில்வே நிர்வாகம் புதிய ஏற்பாடு செய்துள்ளது.
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில் வரும்போது போகும்போதும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. விரைவு வண்டி ரெயில் நிலையத்தை கடக்கும்போது எச்சரிக்கை ஒலி எழுப்பப்படுகிறது. ரெயில்கள் வரும்போது பொதுமக்கள் தண்டவாளத்தை கடக்காத வண்ணம் இந்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரெயில்வே போலீசாரும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தற்காலிக ஏற்பாடு செய்த போதிலும், மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்தால் மட்டுமே நிரந்த தீர்வு ஏற்படும்.
- ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர்.
திருநின்றவூர்:
ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை கட்டுப்படுத்த போலீசார் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவுடிகளின் வீடுகளுக்கு போலீசார் நேரடியாக சென்று சோதனை நடத்தி அவர்களது நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய இருப்பிடம் குறித்து ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில் ஆவடி பகுதியில் 1100 ரவுடிகளின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் சங்கர் வெளியிட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஆவடி காவல் ஆணையரகத்தில் ரவுடிகளை கண்காணிக்க தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ரவுடிகள் அதிகம் வசிக்கும் பகுதிகளை கண்டறிந்து அவர்கள் கண்காணிப்பு வளையத்திற்குள் வைக்கப்பட்டு உள்ளனர். இதுவரை சுமார் 1,100 ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப்பட்டு 980 வீடுகள் மற்றும் தங்குமிடங்கள் சோதனையிடப்பட்டது. இதில் கத்தி, கஞ்சா உள்ளிட்ட சட்ட விரோத பொருட்கள் கைப்பற்றப்பட்டு உள்ளன.
சுமார் 287 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 431 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 107 பேர் மீதான பிடியாணைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் 479 ரவுடிகளிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டுள்ளது. 141 ரவுடிகள், 46 திருட்டு மற்றும் வழிப்பறி குற்றவாளிகள், 40 போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் 13 இதர முக்கிய குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் என சுமார் 240 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முக்கிய ரவுடிகள் மீதான வழக்குகளை கண்காணித்து, தலைமறைவான எதிரிகளை பிடிக்கவும் அவர்களை நீதிமன்ற விசாரணையின்போது தொடர்ந்து ஆஜர்படுத்தி வழக்கை விரைந்து முடிக்கவும், தண்டனை பெற்று தரவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து குற்றங்களில் ஈடுபட்டு வரும் பிணையில் உள்ள ரவுடிகளின் பிணைகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தொழில் அதிபர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி மாமுல் வசூலிக்கும் ரவுடிகளின் மீது மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவ்வாறு அவர்கள் பெற்ற பணத்தில் அவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களின் பெயர்களில் வாங்கப்பட்ட அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ரவுடிகளின் மீதான நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த துரைராஜ் மோட்டார் சைக்கிளோடு நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
- விபத்து குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள திருக்கண்டலம் ஊராட்சி, மடவிளாகம் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 62). கூலித் தொழிலாளி. இவர் பெரியபாளையம் அருகே உள்ள ஏனம்பாக்கத்தில் நடைபெற்ற உறவினர் நிகழ்ச்சியில் கலந்து விட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் உள்ள அம்பேத்கர் நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த துரைராஜ், மோட்டார் சைக்கிளோடு நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் துரைராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சென்னை ராஜீவ் காந்திஅரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்.
- பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தினர் தாலுகா அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எரிபொருள் படி ரூ. 2500 வழங்க வேண்டும். 1.1.2004 வருடத்துக்கு பிறகு பணிக்கு வந்தவர்களுக்கு பழைய முறையிலான ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும். சி.பி.எஸ். திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும், இறந்து போனவர்களுக்கும் அவர்களிடம் பிடித்தம் செய்த தொகையை வழங்க வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் லாலாஜி, பொருளாளர் முனிவேல், துணைத் தலைவர் கருணாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகம் முன் வருவாய் கிராம உதவியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் குணசேகர், சுரேஷ்குமார், பொன்னேரி வட்ட தலைவர் ரவிக்குமார், வட்ட செயலாளர் குமாரசாமி, வட்ட பொருளாளர் சுகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கார்த்திக் மோட்டார் சைக்கிளை வாட்டர் வாஷ் செய்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது.
- தண்ணீரின் வேகத்தில் அந்த எந்திரத்தின் முன்பகுதி கார்த்திக்கின் மார்பில் வேகமாக மோதியது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(32), மெக்கானிக்கான இவர் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் இருசக்கர வாகனங்கள் பழுது பார்ப்பது மற்றும் வாட்டர் வாஷ் செய்யும் கடை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கார்த்திக் மோட்டார் சைக்கிளை வாட்டர் வாஷ் செய்தபோது திடீரென மின்சாரம் தாக்கியது. இதையடுத்து அவர் அந்த எந்திரத்தை கீழே வீசினார். இதில் தண்ணீரின் வேகத்தில் அந்த எந்திரத்தின் முன்பகுதி கார்த்திக்கின் மார்பில் வேகமாக மோதியது. இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே கார்த்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன.
- நகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. வீடுகள், வணிக வளாகம், அரசு கட்டடங்கள் என, 12 ஆயிரத்து 724 சொத்து வரி விதிக்கப்பட்ட கட்டடங்கள் உள்ளது. சொத்து வரியாக ஆண்டுக்கு ரூ.8 கோடியே 21 லட்சத்து 77 ஆயிரம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் காலிமனை வரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், பாதாள சாக்கடை, வாடகை உள்ளிட்ட வகையில், நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ. 11 கோடியே 38 லட்சத்து 87 ஆயிரம் வரி வசூலாக வேண்டும். இதில் வசூலாகும் தொகையில், 50 சதவீதம், நகராட்சி ஊழியர்களின் சம்பளம், மின் கட்டணம், அலுவலகம், வாகனங்களின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு செலவாகிறது. மீதம் உள்ள தொகை மட்டுமே நகர வளர்ச்சிக்கு செலவிடப்படுகிறது. இந்த நிலையில் நகராட்சியில் உள்ள சுமார் 800 கடைகள், வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்துவதில்லை.
இதையடுத்து நகராட்சி வருவாய் அலுவலர் கருமாரியப்பன், பொறியாளர் நடராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜூ தலைமையிலான நகராட்சி ஊழியர்கள், கடைகள் தோறும் சென்று தொழில் வரி செலுத்துவதற்கான விண்ணப்பத்தினை விநியோகம் செய்தனர். வருகிற 30-ந்தேதிக்குள் சொத்துவரி செலுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுரேந்திர ஷா கூறியதாவது:-
திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம், 2 ஆயிரத்து 914 தொழில் நிறுவனங்கள் உள்ளன. இதில்1,245 தொழில் நிறுவனங்கள் மட்டுமே தொழில் வரி செலுத்தி வருகின்றன. மீதம் உள்ள 1,669 தொழில் நிறுவனங்கள், கடைகள் தொழில் வரி செலுத்தாமல் உள்ளனர்.
பொதுமக்களிடம் சொத்து வரி, குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் என, வசூலாகும் நிதியில் தான் நகராட்சியில் நலத்திட்ட பணிகள் செய்யப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்கள் தொழில் வரி செலுத்தாததால், நகராட்சிக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், மக்கள் நலத்திட்ட பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது.
எனவே, நகராட்சியில் உள்ள, வணிக நிறுவனங்கள், கடைகள் வருகிற 30-ந் தேதிக்குள் தொழில் வரி செலுத்த வேண்டும். தவறும்பட்சத்தில், அபராதம் விதிக்கப்படுவதுடன், வணிக நிறுவனங்களுக்கு 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- திருவள்ளூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதிகபட்சமாக தாமரைப்பாக்கத்தில் 7 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போல் திருவள்ளூர், சோழவரம், கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு பகுதியில் மழை வெளுத்து வாங்கியது.
மாவட்டத்தில் மற்ற இடங்களில் பெய்த மழை (மி.மீட்டரில்) வருமாறு:-
கும்மிடிப்பூண்டி-22
பள்ளிப்பட்டு-10
ஆர்.கே.பேட்டை-7
சோழவரம்-35.40
செங்குன்றம்-29
பொன்னேரி-14
ஜமீன்கொரட்டூர்-6.60
பூந்தமல்லி-15.30
திருவாலங்காடு-22
திருத்தணி-5
பூண்டி-17
திருவள்ளூர்-32
ஊத்துக்கோட்டை-9
ஆவடி-25.
- கடந்த 3 நாட்களாக நீடிக்கும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர்:
சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மி.கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி குடிநீர் ஏரிகளில் மொத்தம் 8895 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. இது மொத்த கொள்ளவில் 75 சதவீதம் ஆகும்.
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டிவருகிறது. இன்று காலையும் கனமழை கொட்டியது. கடந்த 3 நாட்களாக நீடிக்கும் பலத்த மழை காரணமாக குடிநீர் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
புழல் ஏரிக்கு இன்று காலை நிலவரப்படி 525 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. இதில் 2755 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. 189 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 1080 மி.கனஅடி. இதில் 692மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 197 கனஅடி தண்ணீர் வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மி.கனஅடி. இதில் 3138 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு இன்று காலை நீர்வரத்து 451 கனஅடியாக அதிகரித்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த உயரமான 24 அடியில் 22 அடியை நீர்மட்டம் மீண்டும் எட்டி உள்ளது. தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மழை நீடித்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறக்க வாய்ப்பு உள்ளது. தற்போது ஏரியில் இருந்து 162 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3231 மி.கனஅடி. இதில் 1874 மி.கனஅடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 210 கனஅடி தண்ணீர் வருகிறது. 68 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மி.கனஅடியில் 436மி.கனஅடிதண்ணீர் உள்ளது. ஏரிக்கு 20 கனஅடி தண்ணீர் வருகிறது.10 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- சரியான நேரத்தில் புகை வருவதை கண்ட பயணிகள் ரெயிலை நிறுத்தி மின்சார வினியோகத்தை துண்டித்தனர்.
- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரலுக்கு புறப்பட்டு சென்றது.
ஆவடி:
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு வந்தது. அந்த ரெயில் இன்று காலை 8 மணியளவில் ஆவடி அருகே வரும் போது ஏ.சி. பெட்டியில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த பயணிகள் அபாய சங்கிலியை இழுத்த னர்.
ரெயில் நெமிலிச்சேரி நிலையத்தில் நிறுத்தப் பட்டது. தொழில் நுட்ப பணியாளர்கள் உடனே அந்த பெட்டிக்குள் சென்று மின்சார வினியோகத்தை துண்டித்தனர்.
இதற்கிடையே பெட்டி யில் இருந்து புகை வந்ததை பார்த்த பயணிகள் ரெயில் நின்றதும் இறங்கி ஓடி னார்கள். அதிர்ச்சியில் உறைந்த பயணிகள் தப்பி ஓடும் வகையில் உடமை களை இறக்கினார்கள். ஏ.சி. பெட்டிக்கு வரக்கூடிய மின்சாரத்தில் ஏற்பட்ட கோளாறால் புகை ஏற்பட்ட தாக கூறப்படுகிறது.
சரியான நேரத்தில் புகை வருவதை கண்ட பயணிகள் ரெயிலை நிறுத்தி மின்சார வினியோகத்தை துண்டித் தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்ட்ரலுக்கு புறப்பட்டு சென்றது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
- வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் கடந்த 19-ந் தேதி தண்டவாளத்தை கடக்க முயன்ற தந்தை-2 மகள்கள் மின்சார ரெயில் மோதி பலியானார்கள். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ரெயில் நிலையத்தில் முடிக்கப்படாத சுரங்கநடைபாதை பணி மற்றும் மேம்பாலப்பணியே இந்த விபத்து ஏற்பட காரணம் என்று கூறி பொதுமக்கள் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்தநிலையில் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் 3 பேர் பலியான இடத்தில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறை மற்றும் ரெயில்வே துறை அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் பிரபு சங்கரிடம் கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப்பாதை பணிகள் குறித்து சரமாரியாக குற்றம் சாட்டினர்.
இதைத்தொடர்ந்து கலெக்டர் பிரபு சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஏற்கனவே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள சுரங்கப்பாதை பணிகள் முழுமையாக செய்வதற்கு நில எடுப்பு சம்பந்தமான அறிவுரைகள் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெயில்வே நிர்வாகத்திற்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேம்பால பணிகள், ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் காவலர் ஒருவர் நியமிக்கப்படுவார்.
இதேபோல் மாவட்டத்தில் அனைத்து ரெயில் நிலையங்களிலும் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடைகள் உயிரிழப்புகளை தடுக்கும் வண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். சுரங்கப்பாதை அமைப்பதற்கு தனிநபரிடம் இருந்து நிலத்தை கையகப்படுத்துவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. சுரங்கப்பாதை பணிகளுக்கு அதற்கான நில உரிமையாளரிடம் கலந்தாலோசித்து வருகிற 6 மாதத்திற்குள் சுரங்கப்பாதை பணிகள் முடிவடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர்கள் செல்வ நம்பி, கணேசன், ரெயில்வே துறை கோட்ட பொறியாளர் ஜம்ஷீர், உதவி கோட்ட பொறியாளர் சரவணன் பவன், திருவள்ளூர் தாசில்தார் சுரேஷ் குமார் உடன் இருந்தனர்.
- சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலியானார்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் வாகன போக்குவரத்து நாளுக்கு, நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் என்பது அன்றாட நிகழ்வாக உள்ளது. குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாத ஒரு செயலாக மாறிவிட்டது.
இந்நிலையில், சாலையை அகலப்படுத்த நெடுஞ்சாலை துறை பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதில், ஒரு பகுதியாக பெரியபாளையம்-சென்னை நெடுஞ்சாலையில் பெரியபாளையம் கிரகப்பிரவேசம் நகர் அருகே சிறு பாலம் ஒன்று ரூ.80 லட்சம் செலவில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணி 80 சதவிகிதம் முடிந்து உள்ளது. ஆனால், மீதி உள்ள பணிகள் நடைபெறவில்லை. இதனால் இப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துகளும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலியானார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார். இவ்வாறு இப்பகுதியில் வாகன விபத்து என்பது அன்றாட நிகழ்வாக உள்ளது. எனவே, இப்பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இப்பணி நடைபெறாததால் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இப்பகுதியை கடக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாக வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இப்பாலபணியை முடித்து போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
- கைதானவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
- போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்குன்றம்:
சென்னை,எருக்கஞ்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யா என்கிற செழியன் (வயது 52) ரவுடி. இவர் வடபெரும்பாக்கம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் அவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வட பெரும்பாக்கத்தில் இருந்து மாதவரம் சின்ன ரவுண்டானா வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
செங்குன்றம் அருகே வந்தபோது மழை பெய்தது. இதையடுத்து செழியன் வண்டியை நிறுத்திவிட்டு சாலையோரம் ஒதுங்கி நின்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் செழியனை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.
இதில் தலை, கழுத்து, கையில் பலத்த காயம் அடைந்த செழியன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய செழியனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செழியன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் ராஜாராபர்ட் , இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே இன்று அதிகாலை செழியன் கொலை தொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த சதீஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தந்தை கொலைக்கு பழிதீர்க்க 22 ஆண்டுகள் காத்திருந்து சதீஷ்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து செழியனை தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.
கடந்த 2001- ஆண்டு ரவுடியாக வலம் வந்த செழியன் எருக்கஞ்சேரியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கொலை செய்தார். இந்த கொலையில் கைதான செழியன் பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் பிரபாகரனின் தம்பியான பாபு என்பவரையும் வெட்டிக் கொன்றார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.
இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னர் செழியன் பின்னர் குற்றச் செயலில் ஈடுபடாமல் வட பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்து உள்ளார்.
இதனை அறிந்த ஏற்கனவே கொலையுண்ட பிரபாகரனின் மகனான சதீஷ்குமார் எப்படியாவது தந்தை கொலைக்கு பழிதீர்க்க செழியனை தீர்த்துகட்ட திட்டமிட்டார். நேற்று இரவு வேலை முடிந்து செழியன் வந்ததை நோட்ட மிட்ட சதீஷ்குமார் மழைக்கு அவர் ஒதுங்கி நின்றபோது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
கைதானவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொலைக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு உதவியவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






