search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தையை கொன்றவரை 22 ஆண்டு காத்திருந்து பழி தீர்த்த மகன் கைது
    X

    தந்தையை கொன்றவரை 22 ஆண்டு காத்திருந்து பழி தீர்த்த மகன் கைது

    • கைதானவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    சென்னை,எருக்கஞ்சேரி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் செய்யா என்கிற செழியன் (வயது 52) ரவுடி. இவர் வடபெரும்பாக்கம் அருகே உள்ள தனியார் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு 8 மணியளவில் அவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வட பெரும்பாக்கத்தில் இருந்து மாதவரம் சின்ன ரவுண்டானா வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    செங்குன்றம் அருகே வந்தபோது மழை பெய்தது. இதையடுத்து செழியன் வண்டியை நிறுத்திவிட்டு சாலையோரம் ஒதுங்கி நின்றார். அப்போது பின்தொடர்ந்து வந்த 6 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் செழியனை சுற்றி வளைத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த செழியன் அவர்களிடம் இருந்து தப்பி செல்ல முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட, ஓட விரட்டி சரமாரியாக வெட்டினர்.

    இதில் தலை, கழுத்து, கையில் பலத்த காயம் அடைந்த செழியன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து உயிருக்கு போராடினார். உடனே கொலை வெறி கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியே சென்றவர்கள் உயிருக்கு போராடிய செழியனை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செழியன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து செங்குன்றம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி கமிஷனர் ராஜாராபர்ட் , இன்ஸ்பெக்டர் சாய்கணேஷ் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    இதற்கிடையே இன்று அதிகாலை செழியன் கொலை தொடர்பாக கொடுங்கையூரை சேர்ந்த சதீஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தந்தை கொலைக்கு பழிதீர்க்க 22 ஆண்டுகள் காத்திருந்து சதீஷ்குமார் கூட்டாளிகளுடன் சேர்ந்து செழியனை தீர்த்து கட்டி இருப்பது தெரியவந்தது.

    கடந்த 2001- ஆண்டு ரவுடியாக வலம் வந்த செழியன் எருக்கஞ்சேரியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை கொலை செய்தார். இந்த கொலையில் கைதான செழியன் பின்னர் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் பிரபாகரனின் தம்பியான பாபு என்பவரையும் வெட்டிக் கொன்றார். இந்த கொலை வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.

    இதையடுத்து ஜெயிலில் இருந்து வெளியே வந்த பின்னர் செழியன் பின்னர் குற்றச் செயலில் ஈடுபடாமல் வட பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்து உள்ளார்.

    இதனை அறிந்த ஏற்கனவே கொலையுண்ட பிரபாகரனின் மகனான சதீஷ்குமார் எப்படியாவது தந்தை கொலைக்கு பழிதீர்க்க செழியனை தீர்த்துகட்ட திட்டமிட்டார். நேற்று இரவு வேலை முடிந்து செழியன் வந்ததை நோட்ட மிட்ட சதீஷ்குமார் மழைக்கு அவர் ஒதுங்கி நின்றபோது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்து இருப்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

    கைதானவர்களிடம் இருந்து 3 கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொலைக்கு வேறுஏதேனும் காரணம் உள்ளதா? கொலைக்கு உதவியவர்கள் யார்? யார்? என்பது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×