என் மலர்
திருவள்ளூர்
- 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.
- அலங்கரிக்கப்பட்ட கன்னியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள கன்னியம்மன் கோவிலில் 36-ம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வந்த விழாவில் காலை, மாலை இரண்டு வேளையும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் மற்றும் அம்மன் கரகம் எடுத்து திருவீதி உலா புறப்பாடு விமரிசையாக நடைபெற்றது.
நேற்று மாலை 6 மணிக்கு பேரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிக்கொண்டு தீ மிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள்.
இந்த தீமிதி திருவிழாவில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர். அதை தொடர்ந்து வண்ண மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட கன்னியம்மன் மேளதாளம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை பேரம்பாக்கம் கிராம பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து இருந்தனர்.
- 15-வது வார்டு உறுப்பினர் பரிமளா அருண்குமார் பேசுகையில் தங்களது பகுதியில் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
- மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லாததால் மின் மோட்டார் மூலம் குழாயில் வரும் குடிநீர் குறைவாக வருகிறது.
பொன்னேரி:
மீஞ்சூர் பேரூராட்சி கவுன்சிலர் கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன் ராஜ் தலைமையில் துணைத் தலைவர் அலெக்சாண்டர், செயல் அலுவலர் வெற்றி யரசு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசுகையில், "தங்களது பகுதிகளில் மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும், வார்டுகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும்" என்பது உள்பட பல்வேறு திட்டங்களை குறித்து கோரிக்கையை முன் வைத்தனர்.
15-வது வார்டு உறுப்பினர் பரிமளா அருண்குமார் பேசுகையில் தங்களது பகுதியில் 700-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இல்லாததால் மின் மோட்டார் மூலம் குழாயில் வரும் குடிநீர் குறைவாக வருகிறது. தெருக்களில் பொது குடிநீர் குழாய் இல்லாததால் வீடுகளில் குடிநீர் குழாய் இணைப்பு இல்லாதவர்கள் தூரமாக நடந்து சென்று தண்ணீர் எடுத்துக் கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிய பகுதியாக காணப்படுவதால் கால்வாய் அமைத்து மழைநீரை அகற்ற முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதற்கு செயல் அலுவலர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில் வார்டு கவுன்சிலர்கள் அபூபக்கர், துரைவேல்பாண்டியன், சுகன்யா, சுமதி தமிழ் உதயன், கவிதா சங்கர் உள்பட பலர் கலந்து உள்ளனர்.
- தமிழ்செல்வியின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாததால் அவரது பெற்றோரான மணிகண்டன், பல்கிஸ் இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தவியாய் தவித்து வருகிறார்கள்.
- தமிழ்செல்வியிடம் ஒரு மாதத்துக்கு முன்பு மதன் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:
செங்குன்றம் பாடியநல்லூர் ஜோதிநகர் 8-வது தெருவில் வசித்து வருபவர் மதன். இவரது மனைவி தமிழ்செல்வி. இருவரும் 4 மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வந்தனர்.
கணவன்-மனைவிக்கு இடையே அவ்வப்போது பிரச்சினைகள் ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நேரங்களில் பெரியவர்கள் தலையிட்டு சமரசம் செய்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மாதம் 25-ந்தேதி தமிழ்செல்வி திடீரென மாயமானார். இதுபற்றி அறிந்ததும் தமிழ்செல்வியின் பெற்றோர் மணிகண்டன், பல்கிஸ் ஆகிய இருவரும் மகள் காணாமல் போனது தொடர்பாக செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து உதவி கமிஷனர் முருகேசன், இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தமிழ்செல்வியை கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அவரது கணவர் மதனை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.
அப்போது மதன், தமிழ்செல்வியை கடந்த 26-ந்தேதி ஆந்திர மாநில எல்லையில் உள்ள சுற்றுலா தலமான கோனே அருவி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு வைத்து எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்து தமிழ்செல்வியை கத்தியால் குத்தினேன். இதில் காயங்களுடன் தவித்த அவளை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டேன். அதன் பின்னர் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியாது என திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.
இதைக்கேட்டு போலீசார் ஆடிப்போனார்கள். உடனடியாக மதனை அழைத்துக் கொண்டு கோனே நீர்வீழ்ச்சி பகுதிக்கு விரைந்து சென்றனர்.
தமிழ்செல்வியை மலைப்பகுதியில் கத்தியால் குத்திய இடத்தை மதன் அடையாளம் காட்டினார். அவருடன் சென்றிருந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் அந்த பகுதி முழுவதும் தமிழ்செல்வியை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து செங்குன்றம் போலீசார் ஆந்திர மாநில போலீசாரின் உதவியையும் நாடினர். கோனே அருவி ஆந்திர மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்துக்குட்பட்ட நாராயண வனம் பகுதியில் அமைந்து உள்ளது. இதையடுத்து சித்தூர் மாவட்ட போலீசாரும், செங்குன்றம் போலீசுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளனர். இருப்பினும் மலைப்பகுதியில் காயங்களுடன் போராடிய தமிழ்செல்வி என்ன ஆனார்? என்பது தெரியவே இல்லை.
தமிழ்செல்வியை, மதன் கத்தியால் குத்தியதாக கூறி ஒரு மாதம் ஆகி விட்டது. இது தொடர்பாக மதன் மற்றும் அவரது நண்பர்கள் பந்தா, சந்தோஷ் மற்றும் 2 பேரிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
கோனே மலைப்பகுதியில் அம்மாநில வனத்துறையினர் பொறுத்தி உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது மலைப்பகுதிக்கு தமிழ்செல்வியும் மதனும் ஒன்றாக சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தன.
அதே நேரத்தில் திரும்பும் போது மதன் மட்டும் தனியாக வரும் காட்சிகளும் பதிவாகி உள்ளன. இது ஒன்றை வைத்தே மதன், மலைப்பகுதியில் தமிழ் செல்வியை விட்டு விட்டு வந்திருப்பதை போலீசார் உறுதி செய்திருக்கிறார்கள்.
மலைப்பகுதியில் காதல் மனைவியை கத்தியால் குத்தி போட்டு விட்டு தப்பி வந்த மதன் போலீசில் பிடிபட்டிருந்த போதிலும் இந்த வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது.
தமிழ்செல்வி மாயமானது செங்குன்றம் பகுதியாக இருந்த போதிலும் அவர் கத்தியால் குத்தப்பட்டிருப்பது ஆந்திர மாநில எல்லைக்குட்பட்ட பகுதியாகும். இதனால் இந்த வழக்கை ஆந்திர மாநில போலீசாரும் விசாரித்து வருகிறார்கள்.
கத்திக்குத்து காயங்களுடன் போராடிய தமிழ்செல்வி மலை பகுதியில் ஆழமான மறைவான புதர் மண்டிய பகுதிகளில் தவறி விழுந்திருக்கலாம் என்கிற சந்தேகமும் போலீசுக்கு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்செல்வியின் நிலை என்ன ஆனது? என்பது தெரியாததால் அவரது பெற்றோரான மணிகண்டன், பல்கிஸ் இருவரும் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தவியாய் தவித்து வருகிறார்கள். தமிழ்செல்வியிடம் ஒரு மாதத்துக்கு முன்பு மதன் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 23-ந்தேதி அன்று கடைசியாக எங்கள் மகளிடம் பேசினோம் என்று அவரது பெற்றோர் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
மகளுக்கு போன் செய்யும் போதெல்லாம் மதன் போனை வாங்கி முன்னுக்குப்பின் முரணாக பேசியதாகவும், தமிழ்செல்வியின் பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.
ஒரு மாதமாகியும் தங்களது மகள் பற்றி எந்த தகவலும் தெரியாத நிலையில் தமிழ்செல்வியின் பெற்றோர் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்துள்ளனர். இதையடுத்து இந்த வழக்கின் வேகத்தை செங்குன்றம் போலீசார் மேலும் தீவிரப்படுத்தி உள்ளனர்.
- எர்ணாவூர், மாகாளி அம்மன் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவொற்றியூர்:
எர்ணாவூர், மாகாளி அம்மன் நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் பிரகாஷ். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தேவி. இவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்களுக்கு நேற்று நள்ளிரவு மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி தீவைத்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. இதற்குள் 2 மோட்டார் சைக்கிள்களும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர்.
- பூந்தமல்லி கிளை சிறையில் இந்த மாதத்தில் தொடர்ந்து 2-வது முறை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர். எண்ணூரை சேர்ந்த கார்த்திகேயன். இவர்கள் இருவரும் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சூப்பிரண்டு முத்துராமன் மற்றும் அதிகாரிகள் சிறையில் உள்ள கைதிகளின் அறையை திடீரென ஆய்வு செய்தனர்.
அப்போது பாஸ்கர் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் அடைக்கப்பட்டு இருந்த அறையில் உள்ள கழிவறையில் செல்போன், சார்ஜர், சிம்கார்டு மற்றும் செல்போன் பேட்டரி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மொத்தம் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து பூந்தமல்லி போலீசில் புகார் செய்யப்பட்டது. சிறையில் உள்ள கைதிகளுக்கு செல்போன் எப்படி கிடைத்தது? சிறையில் அவர்களுக்கு உதவியது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பூந்தமல்லி கிளை சிறையில் இந்த மாதத்தில் தொடர்ந்து 2-வது முறை செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஆவடி அருகே தனியார் நிறுவனத்தில் ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
- கொள்ளை குறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருநின்றவூர்:
ஆவடி அடுத்த பொத்தூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பிரசாத். இவர் பொத்தூர் பகுதியில் என்ஜினியரிங் ஒர்க்ஸ் என்ற கம்பெனி நடத்தி வருகிறார். இவரது தந்தை ரவிசங்கர் அதே கம்பெனியில் நேற்று இரவு தங்கி இருந்தார்.
இன்று அதிகாலை ரவிசங்கர் உள்ளே சென்று பார்த்த போது அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த விலை உயர்ந்த கேமரா மற்றும் ரூ.45 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் திருடி சென்று இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ரெட்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திக்.
- வழக்கம் போல் கார்த்திக் மது குடித்து வீட்டுக்கு வந்தார்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலவாக்கம் ரெட்டி தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (35). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சங்கீதா.
கார்த்திக்கிற்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் அவரை மனைவி கண்டித்துள்ளார். ஆனாலும் கார்த்தி தனது போக்கை கைவிடவில்லை.
இந்த நிலையில் வழக்கம் போல் கார்த்திக் மது குடித்து வீட்டுக்கு வந்தார். இதை மனைவி சங்கீதா கண்டித்தார். இதில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனம் உடைந்த கார்த்திக் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரிக்கரை முழுவதும் மீன்கள் செத்து கரை ஒதுங்கி காணப்படுகின்றன.
- நோய் தொற்று பரவும் முன்பு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருத்தணி:
திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட ஜோதி நகர் பகுதியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த சில நாட்களாக ஏராளமான மீன்கள் இறந்து வருகிறது.
இதனால் ஏரிக்கரை முழுவதும் மீன்கள் செத்து கரை ஒதுங்கி காணப்படுகின்றன. அவை அப்புறப்படுத்தப்படாததால் ஏரிப்பகுதி முழுவதும் பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. மீன்கள் இறப்புக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
நோய் தொற்று பரவும் முன்பு ஏரியில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஏரியில் உள்ள மீன்கள் கடந்த சில நாட்களாக இறந்து வருகின்றன. இதனால் ஏரி முழுவதும் மீன்கள் இறந்து மிதக்கின்றன. பயங்கர துர்நாற்றம் வீசுகிறது. இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றனர்.
- பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
- போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஆவடி:
ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பூந்தமல்லி டிரங்க் சாலையில் போரூர் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை நடைபெறும் சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணிக்காக தற்போதுள்ள போக்குவரத்து முறையில் பூந்தமல்லி பைபாஸ் பகுதியில் 1-08-2022 முதல் 15-09-2022 வரையில் தற்காலிகமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்கள் தற்போது பூந்தமல்லிக்கு முன்பாக சென்னை வெளிவட்ட சாலை வழியாக இடதுபுறம் திரும்பிச் செல்லும் வாகனங்கள் வழக்கமான சென்னை வெளிவட்ட சாலையின் சர்வீஸ் ரோட்டில் இடதுபுறம் திரும்பி செல்கின்றன. அவ்வாறான வாகனங்கள் மட்டும் வழக்கமாக இடதுபுறம் திரும்பும் இடத்தில் திரும்பாமல் மெயின் ரோட்டிலேயே அங்கிருந்து சுமார் 200 மீட்டர் தாண்டி சென்று 2 வெளிவட்ட சாலை பாலங்களுக்கு இடையில் உள்ள சாலை வழியாக இடது புறமாக செல்லவேண்டும்.
அதேபோல் சென்னை வெளிவட்ட சாலையில் வண்டலூரில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தற்போது பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் இடதுபுறம் திரும்பி சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையை அடைந்து பூந்தமல்லி நோக்கி செல்கின்றன. அந்த வாகனங்கள் அனைத்தும் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகில் சென்னை வெளிவட்ட சாலை பாலத்திலிருந்து இடதுபுறம் திரும்பாமல் சென்னை வெளிவட்ட சாலையிலேயே நேராகச் சென்று கோலப்பஞ்சேரி சுங்கச்சாவடிக்கு முன்பு வலதுபுறம் 'யு டர்ன்' போட்டு திரும்பி சென்னை வெளிவட்ட சாலையிலேயே பூந்தமல்லி பைபாஸ் பகுதி வரை வந்து பின்னர் பெங்களூரு-சென்னை நெடுஞ்சாலையில் இணைந்து சென்று சேர வேண்டிய இடங்களுக்கு சென்றடையலாம்.
மேற்படி பணியினை விரைந்து முடிக்க இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் 15-வது வட்ட பூபதி, குபேந்திரன், நடராஜன், துலுக்காணம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பல்வேறு இடங்களில் பா.ம. க. கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பொன்னேரி:
மணலி புதுநகரில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி 15-வது வட்ட பா. ம.க. பொதுக்குழு கூட்டம், வட்டச்செயலாளர் கார்த்திக் ராம் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கே.ஏ. ரமேஷ் கலந்துகொண்டு கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பசுமைத் தாயகம் நாள், பா.ம.க. வின் 34-ம் ஆண்டு தொடக்கம், வன்னியர் சங்கத்தின் 43-ம் ஆண்டு ஆகியவை முப்பெரும் விழாவாக வடக்கு மாவட்டம் சார்பில் 2022 ஆண்டு முழுவதும் கொண்டாடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. பின்னர் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. போதைப்பொருளுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மேற்கொண்டு வரும் அறப்போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வருகின்ற 30-ந்தேதி ஒருங்கிணைந்த மாவட்ட வருவாய் அலுவலகங்கள் முன்பாக நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கலந்து கொள்வது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் 15-வது வட்ட பூபதி, குபேந்திரன், நடராஜன், துலுக்காணம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் பா.ம. க. கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
- மூலவர் வீரராகவரை 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
- கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.
திருவள்ளூரில் உள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் அமாவாசை தினங்களில் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு செல்வது வழக்கம்.
இன்று ஆடி அமாவாசை என்பதால் நேற்று இரவே சென்னை, காஞ்சீபுரம், மற்றும் பல்வேறு மாவட்டங்கள், ஆந்திர மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் திருவள்ளூரில் குவிந்தனர். அவர்கள் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதியில் தங்கி இருந்தனர். இன்று அதிகாலை 4 மணிக்கு வீரராகவர்கோவில் நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க திரளான பக்தர்கள் வந்தனர்.
அவர்கள் கோவில் குளக்கரை அருகேயும், காக்களூர் பாதாளவிநாயகர் கோவில் அருகேயும் புரோகிதர்கள் மூலம் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் அவர்கள் வீரராகவர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகாலை முதல் நிரம்பி வழிந்ததால் மூலவர் வீரராகவரை சுமார் 2 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும் ரூ.250 கட்டணத்தில் சிறப்பு தரிசனமும் அனுமதிக்கப்பட்டது.
கோவிலுக்குள் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பெரும்பாலான பக்தர்கள் கோவில் நுழைவாயிலில் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டு சென்றனர்.
திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி, சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தார்.
- வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த காக்களூர் பைபாஸ் சாலையில் டாஸ்மாக் மதுபானக்கடை உள்ளது. இங்கு நேற்று மாலை திருவள்ளூரை சேர்ந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டில் வாங்க சென்றார்.
அப்போது அங்கு இருந்த விற்பனையாளர் மதுபாட்டிலுக்கு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 வசூலித்தார். இதனை வாலிபர் தட்டிக்கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனை அந்த வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த மதுக்கடை விற்பனையாளர், திடீரென அந்த வாலிபரை சரமாரியாக தாக்கினார். இருவரும் மதுக்கடை முன்பு கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை கண்டு மதுபாட்டில் வாங்க வந்த குடிமகன்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த தாக்குதலில் வாலிபருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து அவர் திருவள்ளூர் தாலுக்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






