என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்ச்செல்வி திடீரென மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை நடத்தினர்.

    செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர், நேதாஜி நகரை சேர்ந்தவர் மதன். இவரது மனைவி தமிழ்ச் செல்வி (வயது19). இருவரும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    கடந்த ஜூன் மாதம் முதல் தமிழ்ச்செல்வி திடீரென மாயமானார். ஆனால் இதுபற்றி மதன் வெளியில் சொல்லவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த தமிழ்ச்செல்வியின் தாய் பல்கீஸ் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர், காதல் மனைவி தமிழ்ச்செல்வியை ஜூன் மாதம் 26-ந்தேதி ஆந்திர மாநிலம் புத்தூர் அருகே உள்ள கோனே அருவிக்கு அழைத்து சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட தகராறில் அவளை கத்தியால் குத்திவிட்டு தப்பி வந்துவிட்டதாகவும் திடுக் கிடும் தகவலை தெரிவித்தார்.

    இதைத்தொடர்ந்து செங்குன்றம் போலீசார் ஆந்திர மாநிலம் நாராயண வனம் போலீசாருடன் இணைந்து கோனே அருவி உள்ள வனப்பகுதியில் தேடுதலில் ஈடுபட்டனர். ஆனால் தமிழ்ச்செல்வி குறித்து எந்த தகவலும் தெரியாமல் இருந்தது.

    ஆனால் அங்குள்ள கண்காணிப்பு கேமிராவில் தமிழ்ச்செல்வியை மதன் அழைத்துச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

    இந்த நிலையில் கோனே அருவி பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து போலீசார் மீண்டும் நேற்று அந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்குள்ள காய்ந்த மரக்கிளை மற்றும் இலைகளால் மூடப்பட்டு கிடந்த இடத்தில் உடல் அழுகிய நிலையில் தமிழ்ச் செல்வி பிணமாக கிடந்தார்.

    போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தமிழ்ச் செல்வி மாயமான அன்று அணிந்து இருந்த உடையை வைத்து அவரது உடலை பெற்றோர் அடையாளம் காட்டினர்.

    இதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வி கொலை தொடர்பாக மதனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து இந்த கொலையை செய்து இருப்பது தெரிந்தது.

    கடந்த ஜூன் 26-ந்தேதி மதன், மனைவி தமிழ்ச் செல்வியை கோனே ஏரிக்கு அழைத்து செல்வது குறித்து ஏற்கனவே தனது நண்பர்கள் 2 பேருக்கு தெரிவித்து இருந்தார். அவர்கள் தனித் தனியாக முன்னதாகவே கோனே அருவி பகுதிக்கு வந்து உள்ளனர்.

    அருவி அருகே உள்ள வனப்பகுதியில் மதன், தமிழ்ச்செல்வி மற்றும் மதனின் நண்பர்கள் 2 பேர் ஆகியோர் சேர்ந்து இருந்த போது தகராறு ஏற்பட்டு உள்ளது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி தமிழ்ச்செல்வியை குத்தி கொலை செய்து உள்ளார். பின்னர் உடலை அங்கே போட்டுவிட்டு அதன் மேல் காய்ந்த மர இலைகள், கம்புகளை போட்டு விட்டு எதுவும் தெரியாதது போல் வந்து நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மதனின் நண்பர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதனும், தமிழ்ச்செல்வியும் தனியாக இருந்த போது மதனின் நண்பர்கள் எதற்காக அங்கு சென்றனர். என்றும் விசாரணை நடக்கிறது. பாலியல் ரீதியான பிரச்சினையால் தமிழ்ச்செல்வி தீர்த்து கட்டப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக விசாரணை நடக்கிறது. இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    தமிழ்ச்செல்வியின் உடல் கோனே அருவி அருகே வன பகுதியில் மீட்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அவரது கணவர் மதன் மற்றும் அவரது நண்பர்கள் 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது. தமிழ்ச்செல்வி இறந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆவதால் உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடலை பெற்றோர் அடையாளம் காட்டி உறுதிப்படுத்தினர்.

    இந்த கொலை திட்டமிட்டு செய்யப்பட்டு உள்ளது. ஏற்கனவே மதன் கத்தியை எடுத்துச் சென்று உள்ளார். இந்த கொலை தொடர்பாக நாராயண வனம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழ்ச்செல்வி மாயமானது தொடர்பாக அவரது பெற்றோர் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    காதல் மனைவியை அருவிக்கு சுற்றுலா அழைத்துச்சென்று கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கேரளாவுக்கு உரிய அனுமதியின்றி மாடுகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன.
    • எருமை மாடுகைளை திருவலாங்காட்டில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    ஆந்திராவில் இருந்து திருவள்ளூர் வழியாக கேரளாவுக்கு உரிய அனுமதியின்றி மாடுகள் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இதேபோல் ஏராளமான எருமை மாடுகள் ஒரே லாரியில் அடைத்து கொண்டு செல்லப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்களுக்கு தகவல் கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு 400 அடி பைபாஸ் சாலையில் ஆந்திராவில் இருந்து கேராள நோக்கி சென்ற லாரியை நிறுத்தி விலங்குகள் நல ஆர்வலர்கள் சோதனை செய்தனர்.

    அதில் உரிய அனுமதியின்றி ஏராளமான எருமைமாடுகள் கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரிந்தது. இதையடுத்து லாரியைதடுத்து நிறுத்தி அதில் இருந்த 32 மாடுகளை மீட்டனர். பின்னர் அவற்றை வெள்ளவேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    மீட்கப்பட்ட எருமை மாடுகைளை திருவலாங்காட்டில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக லாரியில் இருந்த கேரளாவை சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.
    • சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.

    திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று நடைபெற்றது.

    இதையொட்டி மூலவருக்கு அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

    ஆடிப்பூரத்தையொட்டி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.

    வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார்களில் படையெடுத்து வந்ததால் திருத்தணி நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மணலி புதுநகர் அருகே விச்சூரில் உள்ள தொழிற்பேட்டையில் முகப்பேரைச் சேர்ந்த கணேஷ்.
    • நேற்று இரவு இங்குள்ள குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

    மணலி புதுநகர் அருகே விச்சூரில் உள்ள தொழிற்பேட்டையில் முகப்பேரைச் சேர்ந்த கணேஷ் என்பவருக்கு சொந்தமான பெயிண்ட் தொழிற்சாலை உள்ளது.

    நேற்று இரவு இங்குள்ள குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த ஊழியர்கள் உடனடியாக அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென குடோன் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எறிந்தது. இதனால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமானது.

    தகவல் அறிந்ததும் மணலி தீயணைப்பு நிலைய அலுவலர் முருகானந்தம், தட்சிணாமூர்த்தி மற்றும் திருவொற்றியூர், அத்திப்பட்டு, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 5வாகனங்களில் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்த வந்தனர். அவர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.இந்த தீவித்தில் தொழிற்சாலையில் வைக்கப்பட்டிருந்த எந்திரங்கள், விலை உயர்ந்த பெயிண்ட், தின்னர் மற்றும் பல்வேறு மூலப்பொருட்கள் முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதன் மதிப்பு பலலட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது

    தீ விபத்துக்கான காரணம் குறித்து மணலி புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    • அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலை மற்றும் வளையல் மாலை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தன.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லியை அடுத்த குமணன்சாவடியில் பழமையான ஊத்துக்காட்டு எல்லையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த 22-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாளான நேற்று அம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் முகப்பு முதல் அம்மன் கருவறை வரை ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.2 ஆயிரம் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

    மேலும் ரூபாய் நோட்டுகளால் ஆன பண மாலை மற்றும் வளையல் மாலை அம்மனுக்கு அணிவிக்கப்பட்டு இருந்தன. விழாவை \யொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா பூவை ஞானம் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர். பூந்தமல்லி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • குழந்தையை வீசி சென்ற தாய் யார்? என்று தெரியவில்லை.

    திருத்தணி:

    திருத்தணி அடுத்த கனக்கமாசத்திரம் அருகே முத்து கொண்டாபுரம் பகுதியில் உள்ள கொசத்தலை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் ஒரு பையில் சுற்றப்பட்ட நிலையில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் பெண்குழந்தை தொப்புள் கொடியுடன் இறந்த நிலையில் இருந்தது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கனகம்மா சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு பரிசோதனைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குழந்தையை வீசி சென்ற தாய் யார்? என்று தெரியவில்லை. கள்ளக்காதில் பிறந்ததால் குழந்தையை கொன்று வீசினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள கலவை கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னை அண்ணாநகரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றார். இன்று காலை திரும்பி வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

    பீரோவில் இருந்த 10 பவுன் நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது. இதுகுறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவி தற்கொலை குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
    • மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்து உள்ளாரா? என்றும் விடுதியில் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோட்டை சேர்ந்த மாணவி சுமதி (வயது 19) என்பவர் விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.

    நேற்று மதியம் உணவு சாப்பிடுவதற்காக மாணவி சுமதி தனது தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். பின்னர் அவர் தனது அறைக்கு சென்றார்.

    நீண்ட நேரம் வரை அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவிகள் சென்று பார்த்தபோது அறையில் சுமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி சுமதி தற்கொலை செய்து இருப்பது பற்றி அறிந்ததும் சென்னையில் தங்கியிருந்த அவரது பெற்றோர் உடனடியாக கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் கல்லூரி முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அசம்பாவிதத்தை தடுக்க கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மாணவி தற்கொலை குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி உள்ளனர். அவரிடம் கடைசியாக பேசியவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    இன்று மாணவியுடன் விடுதி அறையில் ஒன்றாக தங்கியிருந்த மாணவிகள் மற்றும் அவரது நெருங்கிய தோழிகள், கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் என்று தெரிகிறது.

    மாணவி சுமதி நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

    இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் சுமதியை கல்லூரி விடுதியில் இருந்து வெளியேறி மேடவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி விடுதியில் இருந்து மாணவி விரைவில் வெளியேற வேண்டி இருந்தது.

    எனவே மாணவி சுமதி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்து உள்ளாரா? என்றும் விடுதியில் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த சோகம் அடங்குவதற்குள் திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் மற்றொரு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தார்.

    தற்போது நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து உள்ள சம்பவம் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    • கடந்த 26-ந் தேதி மாடவீதியில் உள்ள 5 கடைகள் நடத்தும் நபர்களிடமிருந்த கடை சாவிகள் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.
    • மாடவீதியிலிருக்கும் கடைகளின் மேற்கூரைகள் கோவில் நிர்வாகம் மூலம் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    திருத்தணி:

    திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலைமேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு பொது ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மலைக்கோவில் மேல் உள்ள மாடவீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் அங்காடி, விற்பனை நிலையம், தேங்காய் கடை, குளிர்பான கடை உள்ளிட்ட 5 கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் கோவில் கணக்கில் சேமிப்பு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை முருகன் கோவில் மாடவீதியை விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்காரணமாக கடந்த மாதம் நடைபெற்ற ஏலத்தில் மலைக்கோவில் மாடவீதியில் உள்ள 5 கடைகள் குறித்து அறிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி மாடவீதியில் உள்ள 5 கடைகள் நடத்தும் நபர்களிடமிருந்த கடை சாவிகள் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மாடவீதியிலிருக்கும் கடைகளின் மேற்கூரைகள் கோவில் நிர்வாகம் மூலம் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கோவில் அதிகாரியிடம் கேட்டபோது, திருத்தணி முருகன் கோவிலில் விசேஷ நாட்களில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி உலா வரும் மாடவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது. எனவே மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

    • சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்.
    • மீஞ்சூர் ரெயில் நிலைய வளாகத்தில் பொது நவீன கழிப்பறை.

    பொன்னேரி:

    சென்னை கும்மிடிப்பூண்டி மார்க்கமாக செல்லும் மின்சார ரெயில்களில் தினந்தோறும் நெல்லூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவொற்றியூர் எண்ணூர் வழியாக வேலைக்கு மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் பயணிகள் பல ஆயிரம் பேர் வந்து செல்கிறார்கள்.

    ரெயிலில் பயணம் செய்து வரும் பயணிகள் ரெயில் நிலையங்களில் அடிப்படை தேவைகள் குறித்து ரெயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் அத்திப்பட்டு புது நகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி ஆகிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு தேவையான, கழிப்பறை சி.சி.டி.வி. கேமரா, இருக்கை, பார்க்கிங் வசதி, டீஸ்டால், கேன்டீன், மற்றும் கொரோனா தொற்று பரவல் காலத்தில் நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் விடுவது, மீஞ்சூர் ரெயில் நிலைய வளாகத்தில் பொது நவீன கழிப்பறை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ரெயில் பயணிகள் சங்கத்தினர் துரை சந்திரசேகர் எம்.எல்.ஏ. தலைமையில் தென்னக ரெயில்வே பொது மேலாளர் மல்லையாவை சந்தித்து மனுவாக அளித்தனர்.

    மனுவை பெற்றுக் கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரு நிலைகளில் முதல் நிலையின் 3 அலகுகளில் தலா 210 விதம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும் 2-வது நிலையில் உள்ள இரு அலகுகளில் தலா 600 வீதம் 1200 என மொத்தம் நாளொன்றுக்கு 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அனல் மின் நிலைய 1-வது நிலையின் 2-வது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மீண்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • அப்பகுதி மக்கள் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரிடம் தகவல் தெரிவித்தனர்.
    • பயோமெட்ரிக் முறையில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சி மணலி புதுநகரில் கால்வாய் சாலை ஓரம் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 226 வீடுகள், 43 கடைகள் ஆகியவற்றை மாநகராட்சி கமிஷனர் உத்தரவின் பேரில் அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதனால் அப்பகுதி மக்கள் பொன்னேரி தொகுதி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் அப்பகுதியில் ஆய்வு செய்து குறைகளை கேட்டறிந்தார். மாற்று இடம் வழங்க அவரிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர் அதிகாரிகளிடம் இது குறித்து பேசி மாற்று இடம் வழங்க அவரிடம் நடவடிக்கை எடுப்பதாகவும் பயோமெட்ரிக் முறையில் குடும்பங்கள் பதிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

    இதில் மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் நக்கீரன் உதவி பொறியாளர் சோமசுந்தர்ராஜ் மாநகராட்சி 15-வது வார்டு உறுப்பினர் நந்தினி சண்முகம் மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

    ×