search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நர்சிங் மாணவி தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?- சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை
    X

    நர்சிங் மாணவி தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமா?- சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை

    • மாணவி தற்கொலை குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
    • மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்து உள்ளாரா? என்றும் விடுதியில் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த மாதிராவேடு பகுதியில் பெண்களுக்கான நர்சிங் கல்லூரி விடுதியுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு ஈரோட்டை சேர்ந்த மாணவி சுமதி (வயது 19) என்பவர் விடுதியில் தங்கி 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வந்தார்.

    நேற்று மதியம் உணவு சாப்பிடுவதற்காக மாணவி சுமதி தனது தோழிகளுடன் விடுதிக்கு வந்தார். பின்னர் அவர் தனது அறைக்கு சென்றார்.

    நீண்ட நேரம் வரை அவர் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த மற்ற மாணவிகள் சென்று பார்த்தபோது அறையில் சுமதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் திருவேற்காடு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மாணவி சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி சுமதி தற்கொலை செய்து இருப்பது பற்றி அறிந்ததும் சென்னையில் தங்கியிருந்த அவரது பெற்றோர் உடனடியாக கல்லூரிக்கு வந்தனர். அவர்கள் கல்லூரி முன்பு மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.

    இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. அசம்பாவிதத்தை தடுக்க கல்லூரி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    மாணவி தற்கொலை குறித்த விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. உடனடியாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    மாணவி பயன்படுத்திய செல்போனை கைப்பற்றி உள்ளனர். அவரிடம் கடைசியாக பேசியவர்கள் யார்-யார்? என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    இன்று மாணவியுடன் விடுதி அறையில் ஒன்றாக தங்கியிருந்த மாணவிகள் மற்றும் அவரது நெருங்கிய தோழிகள், கல்லூரி நிர்வாகிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர் என்று தெரிகிறது.

    மாணவி சுமதி நண்பர் ஒருவருடன் நெருங்கி பழகி வந்து உள்ளார். அவர் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தெரிகிறது.

    இதுபற்றி அறிந்த குடும்பத்தினர் சுமதியை கல்லூரி விடுதியில் இருந்து வெளியேறி மேடவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வருமாறு கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கல்லூரி விடுதியில் இருந்து மாணவி விரைவில் வெளியேற வேண்டி இருந்தது.

    எனவே மாணவி சுமதி காதல் விவகாரத்தில் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதம் ஏதாவது எழுதி வைத்து உள்ளாரா? என்றும் விடுதியில் ஆய்வு செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

    ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் பள்ளி விடுதியில் பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்தது. இந்த சோகம் அடங்குவதற்குள் திருவள்ளூர் அருகே பள்ளி விடுதியில் மற்றொரு பிளஸ்-2 மாணவி தற்கொலை செய்தார்.

    தற்போது நர்சிங் கல்லூரி மாணவி தற்கொலை செய்து உள்ள சம்பவம் அடுத்தடுத்து அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்குகள் அனைத்தையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

    Next Story
    ×