என் மலர்
வழிபாடு
ஆடிப்பூர விழா: திருத்தணியில் காவடி, அலகுகுத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
- மூலவருக்கு தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டது.
- சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர்.
திருத்தணி கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா இன்று நடைபெற்றது.
இதையொட்டி மூலவருக்கு அதிகாலை, 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து, தங்க கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
ஆடிப்பூரத்தையொட்டி சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக்கோவிலில் குவிந்தனர். இதனால் பக்தர்கள் பொதுவழியில் மூலவரை தரிசிக்க சுமார் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் உடல் முழுவதும், அலகு குத்தியும், காவடிகள் மற்றும் பால்குடம் எடுத்தும் தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர்.
வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பஸ், கார்களில் படையெடுத்து வந்ததால் திருத்தணி நகரம் முழுவதும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டது. மலைக்கோவில் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. திருத்தணி டி.எஸ்.பி., விக்னேஷ் உத்தரவின் பேரில், திருத்தணி இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில்போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.