என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால் மனம் உடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை குடித்து விட்டு, 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்தார்.
    • மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயும், குழந்தையும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம் துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவசங்கரி (24). இவரது கணவர் நவீன்குமார் குடித்து விட்டு வந்து அடிக்கடி சண்டை போடுவது வழக்கம்.

    இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி கணவர் நவீன் குமார் குடிபோதையில் மனைவி சிவசங்கரியிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த சிவசங்கரி பூச்சி மருந்தை குடித்து விட்டு, 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்தார். இதில் மயக்கம் அடைந்த நிலையில் இருந்த சிவசங்கரியையும், குழந்தையையும் அருகில் உள்ளவர்கள் உதவியுடன் பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தாயும் குழந்தையும் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் தாய் சிவசங்கரி சிகிச்சை பலனின்றி நேற்று மாலை பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டனர்.
    • அரசு பேருந்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது இரண்டு பைகளில் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் ஆரம்பாக்கம் போலீசார் தீவிர சோதனை மேற் கொண்டனர்.

    அப்போது அவ்வழியாக நெல்லூரில் இருந்து சென்னைக்கு செல்லும் தமிழக அரசு பேருந்தை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அப்போது இரண்டு பைகளில் 25 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாசாணம் (35), பழைய தாராபுரம் ரோடு பழனிபரத் குமார் (28) ஆகியோர் கஞ்சா கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்து ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து எளாவூர் சோதனை சாவடி வழியாக கஞ்சா கடத்துவது வாடிக்கையாக உள்ளதால் கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு சவாலாக உள்ளது.

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது.
    • ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள குஞ்சலம் கிராமத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் துணை மின் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மின்சாதன பொருட்கள் அங்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கடந்த ஜூலை 31-ம் தேதி 2 டன் எடையுள்ள ரூ.1 கோடி மதிப்புள்ள பித்தளை வயர் திருடப்பட்டு இருப்தாக மின்வாரிய பொறியாளர் கிருஷ்ண குமார் பென்னலூர்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் குற்ற தடுப்பு பிரிவை சேர்ந்த ராவ்பகதூர், லோகநாதன், செல்வராஜ் ஆகியோருடன் கூடிய சிறப்பு படை அமைக்கப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி சில நாட்களுக்கு முன் அரக்கோணம் பஜார் தெருவைச் சேர்ந்த ரத்தினசாமி (42), பெரியசாமி (42) ஆகியோரை கைது செய்தனர்.

    மேலும் இந்த திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட அரக்கோணம் காவனூர் காலனி பெரிய தெருவை சேர்ந்த சசி (43), வினோத்குமார் (32), சாம் ஜெபதுரை (32) வின்சன்ட் பிரைட் (34), செய்யூர் காலனி மாதா கோவில் தெருவை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (25), சின்னத் தெருவை சேர்ந்த திருமலை (25), திருத்தணி இருளர் காலனி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த பாலாஜி (18), மோகன் (21), ராசு (17) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களை ஊத்துக்கோட்டையில் உள்ள குற்றவியல் மற்றும் உரிமையியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    • மீஞ்சூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு கல்வெட்டுக்கள் அமைத்து மழைநீர் வெளியேற வழி செய்ய வேண்டும்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பேரூராட்சி கூட்டம் தலைவர் ருக்குமணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் அலெஸ்சாண்டர், செயல் அலுவலர் வெற்றி அரசு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது, பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு கல்வெட்டுக்கள் அமைத்து மழைநீர் வெளியேற வழி செய்ய வேண்டும், தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதில் வார்டு கவுன்சிலர்கள், ரஜினி, குமாரி புகழேந்தி, சங்கீதா சேகர், நக்கீரன், கவிதா சங்கர்,அபு பக்கர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு அதிகம் நடைபெற்றது.
    • தொடுகாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஈக்காடு, காக்களூர், திருவள்ளூர் நகரம், மப்பேடு பன்னூர், புல்லரம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தன. தனியாக செல்லும் பெண்களை குறி வைத்து நகை பறிப்பு அதிகம் நடைபெற்றது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் மப்பேடு இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தொடுகாடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை நிறுத்தி இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

    அவர்கள், காக்களூர் பகுதியை சேர்ந்த ராஜ்கமல் (27) ,மேல கொண்டையூர் கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் (36) என்பதும், இருவரும் மப்பேடு, பன்னூர், புல்லரம்பாக்கம், ஈக்காடு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெண்கள் மற்றும் தனியாக செல்பவர்களிடம் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.
    • மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு பிரச்சார பிரிவு சார்பில் பழவேற்காடு, மீஞ்சூர், பொன்னேரி பகுதிகளில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

    மாவட்ட துணைத்தலைவர் டாக்டர் சோமு ராஜசேகர், மாவட்ட நிர்வாகிகள் பரந்தாமன், திவாகர், விஜயா, வெங்கட், பொன் பிரகாஷ், பிரகாஷ் சர்மா, வினோத் ரெட்டி, ஒன்றிய தலைவர் ராஜ்குமார், ஒன்றிய பொதுச் செயலாளர் முத்து, பிரச்சார பிரிவு ஒன்றிய தலைவர் மகேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    மீஞ்சூர் பஜார் வீதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் டாக்டர் சோமு. ராஜ சேகரன் சிறப்புரையாற்றினார். நகர தலைவர் சிவராஜ், பொதுச்செயலாளர் மணிகண்டன், சதீஷ், பொருளாளர் விஜயகுமார், மாவட்ட செயலாளர் பரந்தாமன், பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் வினோத் ரெட்டி, வர்ணன், துணைத் தலைவர் ஆன்மீக பிரிவு தலைவர் பிரகாஷ், துணைத் தலைவர் தினகரன், மாவட்ட துணை தலைவர் திவாகர், ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் பிஜேபி குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்னேரியில் சோமு ராஜசேகர் ஏற்பாட்டில் நடைபெற்ற கூட்டத்தில் நகர பொதுச் செயலாளர்கள் ராஜு சத்தியமூர்த்தி, சங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஆதிகேசவன், சண்முகம், நாகமணி, ராமர்,மற்றும் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

    • கடந்த ஒரு மாதமாக கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.
    • பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த மெதூர் துணை மின் நிலையத்தில் இருந்து ஆவூர், கோளூர், அண்ணா மலைச்சேரி எடக்குப்பம், இழுபாக்கம், பனப்பாக்கம் திருப்பாலைவனம், பழவேற்காடு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக இந்த கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் தொடரும் மின்வெட்டால் கிராமமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவும் ஆவூர், அண்ணா மலைச்சேரி, மெதூர் உள்ளிட்ட பகுதியில் நேற்று மாலையும் மின்தடை ஏற்பட்டது. பின்னர் இரவு வரை மின்சப்ளை வழங்கப்படவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த கிராமமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் ஆவூர் ஊராட்சி மன்றத்தலைவர் டில்லி பாபு தலைமையில் மெதூர் துணை மின் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    மேலும் அவர்கள் பழவேற்காடு- பொன்னேரி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருப்பாலைவனம் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து கிராமமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதன்பின்னர் இரவு 11 மணிக்கு மேல் அப்பகுதியில் மின்சப்ளை சீரானது.

    • சிவகுமார் ஆவடியில் உள்ள எச்.வி.எப். மத்திய அரசு தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
    • பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை, பணம் கொள்ளை போயிருந்ததை கண்டு சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த கோவில் பதாகை அசோக் நகரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 50). இவர் ஆவடியில் உள்ள எச்.வி.எப். மத்திய அரசு தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு வீட்டை பூட்டி விட்டு மூலக்கடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்றார். பின்னர் இன்று காலை வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

    உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்க பணம் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார்.

    போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கங்கையம்மன் நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மதுரவாயல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போரூர்:

    மதுரவாயல், கங்கையம்மன் நகர் பகுதியில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மதுரவாயல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதி 7வது தெருவில் உள்ள செல்போன் பழுது பார்க்கும் கடையை உடைத்து புகுந்த 4 மர்ம நபர்கள் அங்கிருந்து செல்போன்களை சுருட்டிக் கொண்டு வெளியே வந்தனர். இதை கண்ட ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் குணசேகரன் அவர்களை விரட்டி சென்று ஒருவனை மட்டும் மடக்கி பிடித்தார். மற்ற 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். விசாரணையில் பிடிபட்ட வாலிபர் ராயப்பேட்டையை சேர்ந்த சித்தார்த் (19) என்பது தெரியவந்தது. அவனிடம் தப்பி ஓடிய கூட்டாளிகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் செல்போன் கடை நடத்தி வருபவர் டில்லி கணேஷ்.
    • கடை உரிமையாளர் டில்லிகணேஷ், ஊழியர்கள் கடத்தப்பட்டது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தா

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மணவாளநகரில் செல்போன் கடை நடத்தி வருபவர் டில்லி கணேஷ். இவரது கடையில் முகம்மது இப்ராஹிம், சாந்தகுமார் ஆகிய 2 பேரும் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இரவு கடையை மூடிவிட்டு சாவியை உரிமையாளரிடம் கொடுப்பதற்காக இருவரும் அப்பகுதி வழியாக நடந்து சென்றனர்.

    அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 6 பேர் கும்பல் திடீரென சாந்த குமார் மற்றும் முகம்மது இப்ராஹிம் ஆகிய இருவரையும் வழிமறித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் வலுக்கட்டாயமாக மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி சென்று திருவள்ளூர் என்.ஜி.ஓ. காலனியில் உள்ள பூங்காவில் அமரவைத்தனர். மேலும் செல்போன் கடை உரிமையாளர் டில்லி கணேசிடம் செல்போனில் பேசி ஊழியர்களை விடுவிக்க ரூ.20 ஆயிரம் பணம் தரவேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர் டில்லிகணேஷ், ஊழியர்கள் கடத்தப்பட்டது குறித்து திருவள்ளூர் டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், போலீஸ்காரர்கள் சிலம்பரசன், இளையவேல், மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடத்தல் கும்பலை சேர்ந்த 6 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.மேலும் கடை ஊழியர்கள் முகம்மது இப்ராகிம், சாந்த குமார் ஆகிய 2 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

    விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது பெரிய குப்பம் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ஆகாஷ்(23), அன்சார் ஷெரிப் (23), உதயா(22), பூங்கா நகர் பகுதியைச் சேர்ந்த பிராங்க்ளின் (19), பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆகாஷ் (19), மோகன் (26) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 2 மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் ஆகாஷ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 6 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் பெரியபாளையம் பஜார் வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கொடுத்த தகவலின்படி குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையம் போலீசாருக்கு தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் போதைப்பொருட்கள் மோட்டார் சைக்கிளில் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீசார் பெரியபாளையம் பஜார் வீதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகத்துக்கு இடமான வகையில் பெரிய மூட்டையுடன் வந்த மோட் டார் சைக்கிளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தி வந்திருப்பது தெரிந்தது.

    மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கொடுத்த தகவலின்படி குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 2.50 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக புது குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்டர் பவுடர் ராஜ், பெரியபாளையம் பளையகாரர் தெருவை சேர்ந்த சவுகத் அலி, தண்டலம் அருகே உள்ள பருத்தி மேனிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜீவ் காந்தி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    மின்கட்டண உயர்வை கண்டித்து பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பொன்னேரி:

    மின்கட்டண உயர்வை கண்டித்து பொன்னேரியில் புரட்சி பாரதம் கட்சியின் வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட தலைவர் ராஜா தலைமை தாங்கினார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மின்கட்டண உயர்வுக்கு எதிராக கோஷமிட்டபடி பொன்னேரி அம்பேத்கர் சிலை வரை ஊர்வலமாக சென்றனர். இதில் புரட்சி பாரதம் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×