என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • கடந்த 33 நாட்களில் உண்டியல் பணம் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 ரூபாய் பணமும், தங்கம் 1060 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தது.

    திருத்தணி:

    திருத்தணியில் உள்ள முருகன் கோவில் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து செல்கின்றனர்.

    பக்தர்கள் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம் செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் திருத்தணி கோவிலில் உள்ள உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டது.

    மலைக்கோவிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோவில் துணை ஆணையர், செயல் அலுவலர் விஜயா, கோயில் தக்கார் ஜெயப்பிரியா ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள் உண்டியல் பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் கடந்த 33 நாட்களில் உண்டியல் பணம் மூலம் ரூ.1 கோடியே 24 லட்சத்து 91 ஆயிரத்து 368 ரூபாய் பணமும், தங்கம் 1060 கிராமும், வெள்ளி 11 ஆயிரத்து 700 கிராமும் காணிக்கையாக கிடைத்தது.

    • கடந்த 25-ந் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி பின்னர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
    • யுவராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    திருநின்றவூர்:

    ஆவடியை அடுத்த முத்தாப்புதுபேட்டை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு திருவள்ளூரில் உள்ள தோழி ஒருவரது உறவினரான யுவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த 25-ந் தேதி பள்ளிக்குச் சென்ற மாணவி பின்னர் திரும்பி வரவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து முத்தா புதுப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில் யுவராஜ், மாணவியிடம் திருமண ஆசைகாட்டி அழைத்துச் சென்று பாலியல் தொல்லை செய்து இருப்பது தெரிந்தது.

    இந்த நிலையில் மாணவியை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். யுவராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

    • விலை உயர்ந்த மின் விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் ஒன்றியம் நாலூர் ஊராட்சிக்குட்பட்ட நாலூர் ஏரிக்கரை, நாலூர் மெயின் ரோட்டில் முக்கிய வீதிகளில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் இருந்த விலை உயர்ந்த மின் விளக்குகளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இதுகுறித்து ஊராட்சித் தலைவர் சுஜாதா ரகு மீஞ்சூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நவீன்குமார்-சிவசங்கர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • மனவேதனை அடைந்த சிவசங்கரி விஷம் குடித்தார். மேலும் விஷத்தை தனது 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்துவிட்டு மயக்கம் அடைந்தார்.

    பொன்னேரி:

    பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாபுரம், துர்கா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி சிவசங்கரி (வயது24). இவர்களது 11 மாத குழந்தை சர்வீன்குமார்.

    நவீன்குமார்-சிவசங்கர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 21-ந்தேதி நவீன் குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்து ரகளையில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதில் மனவேதனை அடைந்த சிவசங்கரி விஷம் குடித்தார். மேலும் விஷத்தை தனது 11 மாத கைக்குழந்தையான சர்வின் குமாருக்கும் கொடுத்துவிட்டு மயக்கம் அடைந்தார்.

    அக்கம் பக்கத்தினர் தாயையும், குழந்தையையும் மீட்டு சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கடந்த 25-ந்தேதி மாலை சிகிச்சை பலனின்றி சிவசங்கரி பரிதாபமாக இறந்தார். இதைத் தொடர்ந்து பிரேத பரிசோதனை முடிந்து நேற்று மதியம் அவரது உடலை வீட்டுக்கு கொண்டு வந்து இருந்தனர்.

    இதற்கிடையே சிவசங்கரியின் உடலை வீட்டுக்கு கொண்டுவருவதற்குள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சர்வீன் குமாரும் பரிதாபமாக இறந்தான்.

    இதைத்தொடர்ந்து தாய்-மகன் இருவருக்கும் ஒரே நேரத்தில் இறுதி சடங்கு செய்யப்பட்டு உடல் எரிக்கப்பட்டது. இச்சம்பவம் உறவினர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மீஞ்சூரை அடுத்த இலவம் பேடு பகுதியைச் சேர்ந்தவர் துரை.
    • துரையின் வீட்டில் இருந்த 50 பேன்சி புறாக்கள் திருடு போனது.

    பொன்னேரி:

    மீஞ்சூரை அடுத்த இலவம் பேடு பகுதியைச் சேர்ந்தவர் துரை. இவர் வீட்டில் ஏராளமான பேன்சி புறாக்கள் வளர்த்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு துரையின் வீட்டில் இருந்த 50 பேன்சி புறாக்கள் திருடு போனது. இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முரிச்சம்பேடு மேட்டு காலனி பகுதியைச் சேர்ந்த கஜேந்திரனை கைது செய்தனர். சம்பவத்தன்று புறாக்களை பிடித்து விற்பனை செய்வதற்காக சாக்குப்பையில் எடுத்து சென்றபோது அனைத்தும் மூச்சு விட முடியாமல் இறந்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.

    • 2 சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    பெரியபாளையம்:

    பெரியபாளையத்தில் இருந்து திருநின்றவூர் வழியாக கொரட்டூர் வரையில் மாநில நெடுஞ்சாலையில் வடமதுரை அருகே ரூ. 50 லட்சம் செலவில் 2 சிறு பாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனை திருவள்ளூர் கோட்ட பொறியாளர் விஸ்வநாதன் தலைமையில் உதவி கோட்ட பொறியாளர் தஸ்வின் பெர்னாண்டோ,உதவி பொறியாளர் பிரசாத்,சாலை ஆய்வாளர் கோபி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

    • பொன்னேரி அடுத்த சின்ன காவனம் சிவன் கோயில் தெருவில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.
    • தீயணைப்பு அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த சின்ன காவனம் சிவன் கோயில் தெருவில் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகில் தீயணைப்பு அலுவலர்களுக்கான குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இது தொடர்பாக பொன்னேரி ஆர்.டி.ஓ. காயத்ரி தலைமையில் வட்டாட்சியர் செல்வகுமார், தீயணைப்பு நிலைய அலுவலர் சம்பத் மற்றும் அப்பகுதி மக்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    • ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மனைவி எல்லம்மாள்.
    • ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.இவரது மனைவி எல்லம்மாள் (55). இவர் நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தார். அப்போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் வந்து முதியோர் உதவித்தொகை வாங்கித்தருவதாக கூறினார். மேலும் இதற்கு நகை அணிந்தபடி புகைப்படம் எடுக்க கூடாது என்று கூறி எல்லம்மாள் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கழற்றினார். பின்னர் எல்லம்மாளை தனது செல்போனில் இளம்பெண் படம் பிடித்தார். இதைத்தொடர்ந்து குடிக்க தண்ணீர் எடுத்து வரும்படி எல்லம்மாளிடம் அந்த இளம்பெண் தெரிவித்தார். அவர் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டின் உள்ளே சென்ற போது இளம் பெண் நகையுடன் தப்பி சென்று விட்டார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சிறுமி இலக்கியா, வீட்டின் அருகே தொட்டாரெட்டிகுப்பம் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.
    • பலத்த காயம் அடைந்த இலக்கியா சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள முக்கரம்பாக்கம் ஊராட்சி, திடீர் புரம், அன்னாவரம் காலனியை சேர்ந்தவர் பிரபு. இவரது மகள் இலக்கியா (வயது 5). சிறுமி இலக்கியா, வீட்டின் அருகே தொட்டாரெட்டிகுப்பம் சாலையில் விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது அந்த வழியாக சென்ற டிராக்டர் இலக்கியா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த இலக்கியா சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து ஊத்துக்கோட்டை இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் முகேஷ் (44). இவர் ஊத்துக்கோட்டை அருகே உள்ள பாலேஸ்வரம் கிராமத்தில் வாடகை வீட்டில் தங்கி தனியார் தொழிற்சாலையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். காலை நீண்ட நேரம் ஆகியும் அவர் வெளியே வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது முகேஷ் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.

    இதுகுறித்து ஊத்துக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மணவாளநகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ந்து இருந்து தெரியவந்தது.
    • கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த பாப்பரம்பாக்கம் கிராமத்தில் ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக மணவாள நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மணவாளநகர் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது ஒரு வீட்டில் கஞ்சா செடி வளர்ந்து இருந்து தெரியவந்தது.

    அந்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அமித் பண்டிராஜ், கவுதம் (26) ஆகிய இருவரும் கஞ்சா செடி வளர்த்தது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் கஞ்சா செடியை பறிமுதல் செய்தனர்.

    திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி தலைமையிலான போலீசார் திருவள்ளூரில் உள்ள பள்ளி அருகே கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

    அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கடம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக்கை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் கம்பெனி உள்ளது.
    • கடந்த 15 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் மூன்று முறை சப்- கலெக்டர் மகாபாரதி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் கார் தயாரிக்கும் கம்பெனி உள்ளது. இங்கு தொழிலாளர்கள் 178 பேர் வேலையில் இருந்து நீக்கப்பட்டனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி கடந்த 4 ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

    இருப்பினும் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்தினர் யாரையும் பணியில் அமர்த்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் பணியில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் தொழிற்சாலை அருகே அம்மன் கோவில் வாசல் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் குதித்தனர்.

    கடந்த 15 நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில் மூன்று முறை சப்- கலெக்டர் மகாபாரதி தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. தொழிலாளர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

    இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 51 ஆண்கள் 15 பெண்கள் உள்பட 66 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்கள் திருப்பாச்சூரில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    • இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடக்கிறது.
    • நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் இன்று முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை நவராத்திரி விழா நடைபெற உள்ளது.

    இதற்காக கோவிலுக்கு சொந்தமான கோவில் அருகே உள்ள ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் நவராத்திரி கொலு பொம்மைகளை விழா குழுவினர் அலங்கரித்து வருகின்றனர்.

    மேலும் நவராத்திரி விழா காலத்தில் உற்சவர் வீரராகவர் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக பல்வேறு கோலங்களில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதேபோல் ராஜா தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கொலு மண்டபத்தில் தினசரி பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சி மற்றும் பரதநாட்டியம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    ×