என் மலர்
திருவள்ளூர்
- கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த உயரம் 36.61 அடி ஆகும்.
- ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
ஊத்துக்கோட்டை:
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு நிறைவேற்றப்பட்டு வந்தது. இந்த 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.05 டி.எம்.சி. ஆகும். கோடை காலங்களில் இந்த ஏரிகள் வற்றும்போது சென்னையில் கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு வந்தது.
இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஊத்துக்கோட்டை அருகே உள்ள கண்ணன் கோட்டை மற்றும் தேர்வாய் கண்டிகை ஏரிகளை ஒன்றிணைத்து 1,486 ஏக்கரில் புதிய ஏரி கட்டுவதற்காக ரூ.380 கோடி நிதி ஒதுக்கினார்.
இந்த நிதியை கொண்டு 2013-ம் ஆண்டு நவம்பர் 14 -ந் தேதி நீர்த்தேக்கம் கட்டும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. பணிகள் முடிக்கப்பட்டு 2020-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நீர்த்தேக்கத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த உயரம் 36.61 அடி ஆகும். இந்த நீர்த்தேக்கத்தில் 500 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இதனால் இந்த ஏரியுடன் சேர்த்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் மொத்தம் 5 ஏரிகளின் கொள்ளளவு 11.505 டி.எம்.சி. ஆக உயர்ந்தது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சத்தியவேடு அருகே காடுகளில் உள்ள ஓடைகளின் நீர் மற்றும் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீரை கண்ணன் கோட்டை நீர்த்தேக்கத்தில் சேமித்து வைத்து தேவைப்படும்போது பூண்டி ஏரிக்கு திறந்து விடப்படும். இந்த நிலையில் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் கண்ணன் கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அவ்வப்போது பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கண்ணன் கோட்டை நீர்த்தேக்கம் முழுவதுமாக நிரம்பி வழிகிறது. உபரி நீர் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு வெளியேற்றப்படுகிறது. பருவமழை தொடங்குவதற்கு முன்பே கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து ஏரிக்கு நீர்வரத்தை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
- தாழ்வாக சென்ற மின் கம்பி மீது லாரி உரசியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது.
- தசரதன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் தசரதன் (வயது48). லாரி டிரைவர். இவர் வேலூரில் உள்ள குவாரியில் இருந்து மணல் ஏற்றிக் கொண்டு நாராயணபுரம் வந்தார்.
பின்னர் மணலை கொட்ட முயன்று டிப்பர் லாரியை இயக்கினார். அப்போது அந்த பகுதியில் தாழ்வாக சென்ற மின் கம்பி மீது லாரி உரசியது. இதில் லாரியில் மின்சாரம் பாய்ந்தது. தசரதன் மீதும் மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு உடனடியாக திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது வரும் வழியிலேயே டிரைவர் தசரதன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். விபத்து நடந்த அப்பகுதியில் பல இடங்களில் தாழ்வான மின்கம்பிகள் செல்வதாக தெரிகிறது. அதனை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- ஒரு வீட்டின் பின்புறம் இருந்த 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு மாடு தவறி விழுந்தது.
- துர்நாற்றம் வீசிய கழிவுநீர் தொட்டியில் இறங்கி கறவை மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
பொன்னேரி:
பொன்னேரி என். ஜி. ஓ. நகர், அவ்வை தெருவில் 2 மாடுகள் மேய்ச்சலுக்கு சென்றன.
அப்போது ஒரு வீட்டின் பின்புறம் இருந்த 15 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டிக்குள் ஒரு மாடு தவறி விழுந்தது.அதனால் வெளியேற முடியாமல் தவித்தது. இதனை கண்டு உடன் வந்த மற்றொரு மாடு தொடர்ந்து கத்தியபடி அதே பகுதியில் சுற்றி, சுற்றி வந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பொன்னேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
நிலைய அலுவலர் சம்பத் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கழிவுநீர் தொட்டியில் இறங்கி வெளியேற முடியாமல் தவித்த மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அதில் இருந்த கழிவு நீர் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் தேங்கி கிடந்ததால் பயங்கர துர்நாற்றம் வீசியது. இதனால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக தீயணைப்பு வீரர்கள் சில நிமிடங்களுக்கு மேல் கழிவு நீர் தொட்டியில் நிற்க முடியாமல் சிரமம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து சுமார் 5மணி நேரம் போராட்டத்திற்கு பின்னர் ஜே.சி.பி. எந்திரத்தின் உதவியுடன் கயிறு கட்டி மாட்டை பத்திரமாக உயிருடன் மீட்டனர். துர்நாற்றம் வீசிய கழிவுநீர் தொட்டியில் இறங்கி கறவை மாட்டை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்களை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
- 2 வாலிபர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.
- பலத்த காயம் அடைந்த முனுசாமி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
பெரியபாளையம்:
பெரியபாளையம் அருகே உள்ள குமரபேட்டை ஊராட்சி, அஞ்சாத்தம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை உள்ளது. இங்கு 2 வாலிபர்களுக்கு இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது. இதனை ராள்ளபாடி கிராமத்தை சேர்ந்த முனுசாமி (வயது31) என்பவர் தடுத்தார். இதில் முனுசாமிக்கு கத்திக்குத்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காவல்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ் மீது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பின்பக்கமாக மோதியது.
- விபத்தில் வசந்தராஜும், ஜெய்பீம் தாசும் படுகாயம் அடைந்தனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த பெரியகாவனத்தை சேர்ந்தவர் வசந்த ராஜ் (வயது 34). இவர் நண்பரான சின்னக்காவனம் பர்மா நகரை சேர்ந்த ஜெய் பீம் தாஸ் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் மெதூரில் இருந்து பொன்னேரி நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காவல்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற அரசு பஸ் மீது (எண்90சி) கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் பின்பக்கமாக மோதியது. இதில் வசந்தராஜும், ஜெய்பீம் தாசும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வசந்த ராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களிடம் வைத்திருந்த கணக்கில் வராத பணங்களை ஜன்னல் வழியாக அவசர அவசரமாக தூக்கி எறிந்தனர்.
- தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பூந்தமல்லி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அரசு அலுவலகங்களில் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குன்றத்தூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி லவக்குமார் தலைமையில் வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென தாசில்தார் அலுவலகத்திற்குள் நுழைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் உள்ளே வருவதை தெரிந்து கொண்ட ஊழியர்கள் தங்களிடம் வைத்திருந்த கணக்கில் வராத பணங்களை ஜன்னல் வழியாக அவசர அவசரமாக தூக்கி எறிந்தனர். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தூக்கி எறியப்பட்ட பணம் மற்றும் கணக்கில் வராத பணம் எவ்வளவு அலுவலக ஊழியர்களிடம் உள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
தொடர்ந்து நான்கு மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த சோதனையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்தெறிந்து கொண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.
- தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர்.
பூந்தமல்லி:
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் அருகே இன்று காலை அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் சாலையோர இரும்பு தடுப்புகளை உடைத்தெறிந்து கொண்டு அங்கிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கினார்கள்.
இதை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காரில் சிக்கியவர்களை மீட்டனர். அதில் மூன்று பேரை மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் விபத்தில் சிக்கியவர்கள் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு என்பதும், இருவரும் சகோதரர்கள் என்பதும் தெரிய வந்தது. அதிமுகவை சேர்ந்த இவர்கள் தொழிலதிபர்களாக இருந்து வரும் நிலையில் வேடந்தாங்கலில் இவர்களுக்கு சொந்தமான பொக்லைன், ஜேசிபி எந்திரங்கள் இயங்கி வருவதாகவும் அந்த வாகனம் பழுதடைந்ததால் இங்கிருந்து மெக்கானிக்கை அழைத்து சென்று வாகனத்தை சரி செய்துவிட்டு காரில் ஐந்து பேரும் வந்துள்ளனர்.
சம்பவ இடத்தில் கார் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ரமேஷ் பாபு, சுரேஷ் பாபு, சுதாகர் உள்ளிட்ட மூன்று பேர் இறந்து போனதும் உடன் வந்த வெங்கடேசன், ராஜவேலு ஆகிய இருவரும் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- லாரியில் அமர்ந்து பயணம் செய்த தொழிலாளி ஆஷிக், விஜய், அஸ்பத் ஆகியோர் மீது கற்கள் சரிந்து விழுந்தன.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி மினிலாரி வந்தது. அதில் ஆந்திராவை சேர்ந்த விஜய், அஸ்பத், ரஹீம், ஆஷிக்(வயது20), மற்றும் ஒப்பந்ததாரர் சீனிவாசன் ஆகியோர் பயணம் செய்தனர்.திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் மோகன் லாரியை ஓட்டினார்.
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சத்திரம் அருகே வந்தபோது எதிரே வந்த பஸ்மீது மோதாமல் இருக்க லாரியை டிரைவர் மோகன் திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியில் அமர்ந்து பயணம் செய்த தொழிலாளி ஆஷிக், விஜய், அஸ்பத் ஆகியோர் மீது கற்கள் சரிந்து விழுந்தன. இதில் பலத்த காயம் அடைந்த ஆஷிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். லாரிக்கு அடியில் கற்களில் சிக்கிய விஜய், அஸ்பத் ஆகியோரை உயிருடன் மீட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பலியான ஆஷிக் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர்அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இகுறித்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்சின் பின்பக்க டயர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெரியபாளையம்:
சென்னை, வள்ளலார் நகரில் இருந்து சிறுவாபுரி வழியாக பெரியபாளையம் நோக்கி மாநகர பஸ்(எண்547) சென்று கொண்டு இருந்தது.
சிறுவாபுரியில் உள்ள பழைய சினிமா தியேட்டர் அருகே சென்றபோது பஸ்சின் பின்பக்க டயர் ஒன்று பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் பஸ்சில் இருந்த தரைபலகை பெயர்ந்து ஓட்டை விழுந்தது.
டயர் வெடித்ததில் அதன் மேல் பகுதியில் அமைக்கப்பட்ட இருக்கைகளில் இருந்த பெண் உள்பட 4 பேர் தூக்கி வீசப்பட்டனர். இதில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய பெண்ணை மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
டயர் வெடித்ததில் பஸ்சில் இருந்த தரைப்பலகை பெயர்ந்து ஓட்டை விழுந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அதிர்ஷ்டவசமாக மற்ற பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை. இகுறித்து ஆரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு, வில்லியர் காலனியை சேர்ந்தவர் கோபி.
- பள்ளி மாணவர்களான அண்ணன்-தம்பி இருவரும் பாம்பு கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த ரெட்டம்பேடு, வில்லியர் காலனியை சேர்ந்தவர் கோபி (வயது 32), கூலித்தொழிலாளி.
இவர் கடந்த 11-ந்தேதி வேலைக்கு சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டின் அருகே நடந்து வந்தார். அப்போது அங்கிருந்த பாம்பு ஒன்று கோபியை கடித்து சென்று விட்டது. இதில் உடல்நிலை மோசமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி கோபி பரிதாபமாக இறந்தார். இதனால் அவரது குடும்பத்தினர் சோகம் அடைந்து உள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆரணி எஸ்.பி.கோவில் தெருவை சேர்ந்த பள்ளி மாணவர்களான அண்ணன்-தம்பி இருவரும் பாம்பு கடித்து இறந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- குப்பம்மாசத்திரம் பகுதியில் புரட்டாசி மாதம் 4-வது வாரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
- திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த குப்பம்மாசத்திரம் பகுதியில் புரட்டாசி மாதம் 4-வது வாரத்தை முன்னிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது.
அப்போது பாண்டூர் கன்னங்காரணி பகுதியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது நண்பர்கள் சியோன், அபி ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். சாமி ஊர்வலத்தில் வந்தவர்கள் அவர்களிடம் ஊர்வலம் செல்லும் வரை ஓரமாக இருக்குமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் இது கோஷ்டி மோதலாக மாறியது. ஆத்திரம் அடைந்த சாமி ஊர்வலத்தில் சென்ற குப்பம்மாசத்திரம் மேலகரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சுதாகர், ராஜ், கோபி, பிரபு, மணிகண்டன், குமார், இளங்கோ ஆகிய 8 பேரும் செல்வகுமார் தரப்பினரை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
பதிலுக்கு செல்வகுமார் மற்றும் அவரது உறவினர்களான கோபி, முகில், மாணிக்கராஜ், சீமோன், அபி, கில்லர் ஆகிய 7 பேரும் சேர்ந்து கோபி தரப்பினரை தாக்கினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் இரு தரப்பையும் சேர்ந்த 5 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் இரு தரப்பினரும் தனித்தனியாக திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். போலீசார் இது தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
- பேரண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம். இவர் தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறப்படுகிறது.
- அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எல்லாபுரம் ஒன்றியம் பேரண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (62). இவர் தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது பூண்டி ஒன்றியம் கட்சூரில் வசித்து வருகிறார். தமிழக அரசு வருடம்தோறும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு பெரியார் விருது வழங்கி வருகிறது. இதற்கு தன் பெயரை பரிந்துரை செய்யுமாறு ஆபிரகாம் பேரண்டூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் என்பவரை அணுகி உள்ளார். கட்சூரில் வசிக்கும் தங்களுக்கு நான் இருப்பிட, நன்னடத்தை மற்றும் இதர சான்றுகள் வழங்க முடியாது என்று கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆபிரகாமிடம் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆபிரகாம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தாசில்தார் அருண்குமார் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் விசாரணை நடத்தி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.






