என் மலர்
உள்ளூர் செய்திகள்

கவிழ்ந்த லாரியை படத்தில் காணலாம்.
திருவள்ளூர் அருகே லாரி கவிழ்ந்ததில் கிரானைட் கற்களில் சிக்கி தொழிலாளி பலி
- லாரியில் அமர்ந்து பயணம் செய்த தொழிலாளி ஆஷிக், விஜய், அஸ்பத் ஆகியோர் மீது கற்கள் சரிந்து விழுந்தன.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருந்து கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு திருவள்ளூர் நோக்கி மினிலாரி வந்தது. அதில் ஆந்திராவை சேர்ந்த விஜய், அஸ்பத், ரஹீம், ஆஷிக்(வயது20), மற்றும் ஒப்பந்ததாரர் சீனிவாசன் ஆகியோர் பயணம் செய்தனர்.திருவண்ணாமலையை சேர்ந்த டிரைவர் மோகன் லாரியை ஓட்டினார்.
திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் சத்திரம் அருகே வந்தபோது எதிரே வந்த பஸ்மீது மோதாமல் இருக்க லாரியை டிரைவர் மோகன் திருப்பினார்.
இதில் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. லாரியில் அமர்ந்து பயணம் செய்த தொழிலாளி ஆஷிக், விஜய், அஸ்பத் ஆகியோர் மீது கற்கள் சரிந்து விழுந்தன. இதில் பலத்த காயம் அடைந்த ஆஷிக் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும் திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். லாரிக்கு அடியில் கற்களில் சிக்கிய விஜய், அஸ்பத் ஆகியோரை உயிருடன் மீட்டனர். பலத்த காயம் அடைந்த அவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
பலியான ஆஷிக் உடல் பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர்அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இகுறித்து குறித்து மணவாளநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.