என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல்
- பேரண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம். இவர் தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறப்படுகிறது.
- அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
எல்லாபுரம் ஒன்றியம் பேரண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆபிரகாம் (62). இவர் தொண்டு நிறுவனம் நடத்துவதாக கூறப்படுகிறது. இவர் தற்போது பூண்டி ஒன்றியம் கட்சூரில் வசித்து வருகிறார். தமிழக அரசு வருடம்தோறும் சிறந்த தொண்டு நிறுவனங்களுக்கு பெரியார் விருது வழங்கி வருகிறது. இதற்கு தன் பெயரை பரிந்துரை செய்யுமாறு ஆபிரகாம் பேரண்டூர் கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் என்பவரை அணுகி உள்ளார். கட்சூரில் வசிக்கும் தங்களுக்கு நான் இருப்பிட, நன்னடத்தை மற்றும் இதர சான்றுகள் வழங்க முடியாது என்று கிராம நிர்வாக அலுவலர் சதீஷ் ஆபிரகாமிடம் கூறியதாக தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆபிரகாம் கிராம நிர்வாக அலுவலர் சதீஷை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து தாசில்தார் அருண்குமார் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன் விசாரணை நடத்தி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்த ஆபிரகாம் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.