என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காலை 8 மணி வரை எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு கடும் பனிப்பொழிவு நிலவியது.
    • திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் ரெயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்து வந்த நிலையில் இன்று காலை கடும் பனிப்பொழிவுவானது நிலவியது.

    இதில் திருவள்ளூர் ஈக்காடு, புள்ளரம்பாக்கம், திருப்பாச்சூர், கனகம்மாசத்திரம், வேப்பம்பட்டு, அரண்வாயில், மணவாளநகர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

    மேலும் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காலை முதலே நிலவும் கடும் பனிமூட்டத்தால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வாகனங்களில் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர்.

    மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருப்புப் பாதையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டதால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு ரெயில்கள் மெதுவாக செல்வதால் திருவள்ளூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் தாமதமாக செல்கின்றன.

    மேலும் திருவள்ளூர் மார்க்கமாக வரும் அனைத்து விரைவு ரெயில்களும் காலதாமதமாக வருவதாகவும் ரெயில்வே துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் சென்னை சென்ட்ரலில் இருந்து மைசூர் நோக்கிச் சென்ற அதிவேக வந்தே பாரத் ரெயிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டு மெதுவாகச் சென்றது குறிப்பிடத்தக்கது.

    • காயமடைந்த இருவரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
    • இருவரும் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    திருத்தணி:

    திருத்தணி ஒன்றியம் கிருஷ்ணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரத்குமார் (வயது 38). இவர் தன் வீட்டின் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, எதிரே அதே கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு (32) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளில் மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது.

    இதனால் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டு பின்னர் உருட்டு கட்டையால் தாக்கி கொண்டனர். காயமடைந்த இருவரும் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். பின்னர் இது குறித்து இருவரும் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • ஆண்டுதோறும் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
    • சுனாமி தினமான இன்று வங்க கடலோரம் அமைந்துள்ள வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த, பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் 2004-ம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட சுனாமியால் பலர் உயிர் இழந்தனர். ஏராளமான பொருட்சேதம் ஏற்பட்டது.

    இப்பகுதி மக்கள் ஆண்டுதோறும் சுனாமி தினத்தை அனுசரிக்கும் வகையில் நினைவு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன்படி சுனாமி தினமான இன்று வங்க கடலோரம் அமைந்துள்ள வைரவன்குப்பம் மீனவ கிராம கடலோரப் பகுதியில் இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் கிராம மக்கள் கலந்து கொண்டு பால்குடம் ஏந்தி வந்து கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர் தூவி மௌன நிலையில் நின்று கண்ணீர் மல்க பால் குடத்தை கடலில் கரைத்து அஞ்சலி செலுத்தினர்.

    • போலீசார் திருவள்ளூர் அடுத்த காக்களூர், ராமாபுரம், பூங்கா நகர் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • காக்களூர் ஏரிக்கரை அருகே சென்றபோது அங்கு இருந்த நபர் தான் வைத்திருந்த கோணிப்பையுடன் போலீசார் வருவதை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிண்டு பா.சீபாஸ் கல்யாண் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா மற்றும் திருவள்ளூர் தாலுகா இன்ஸ்பெக்டர் கமலஹாசன் மற்றும் போலீசார் திருவள்ளூர் அடுத்த காக்களூர், ராமாபுரம், பூங்கா நகர் போன்ற பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    காக்களூர் ஏரிக்கரை அருகே சென்றபோது அங்கு இருந்த நபர் தான் வைத்திருந்த கோணிப்பையுடன் போலீசார் வருவதை கண்டதும் ஓட்டம் பிடித்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது கோணிப்பையில் 95 மது பாட்டில்கள், 65 பீர் பாட்டில்களும் இருந்து தெரிய வந்தது.

    அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விற்பனை செய்ய முயன்றதாக அவரை கைது செய்தனர். அவர் புதுக்கோட்டை மாவட்டம் காத்தக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த பிரவீன் ராஜ் (29) என்பவர் ஆவார்.

    • ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பொன்னேரி அடுத்த பஞ்சட்டியில் உள்ள அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரெயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் செல்லியம்மன் கோயில் அருகே முட்புதரில் 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த இருப்பதாக மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பொன்னேரி அடுத்த பஞ்சட்டியில் உள்ள அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • தேவாலய வளாகத்தில் இயேசு பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது.
    • கிறிஸ்துமஸ் மரம், உட்பட பல்வேறு புதுவகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இரவு முழுவதும் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

    தேவாலய வளாகத்தில் இயேசு பிறப்பை பிரதிபலிக்கும் வகையில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கிறிஸ்துமஸ் மரம், உட்பட பல்வேறு புதுவகையான அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது.

    விதவிதமான வடிவங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து கிறிஸ்து பிறப்பை வரவேற்கும் பாடல்களை ஒலித்தனர். 12 மணி அளவில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது.

    கடந்த 2 வருடங்களாக கொரோனா வைரஸால் உலகமே சிரமப்பட்டதால் பிறக்க இருக்கும் 2023 புத்தாண்டு முதல் இது போன்ற வைரஸ் தொற்றுகளால் உருவாக்கும் நோய்கள் வராமல் மக்கள் நலமுடன் வாழ இவ்வாலயத்தில் பிரார்த்தனைகள் செய்யப்பட்டது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தம் புது ஆடை அணிந்து மிகவும் மகிழ்ச்சியுடன் முழு மனதுடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டதை அடுத்து அனைத்து கிறிஸ்தவ மக்களும் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

    • ரெயில்களில் கேட்பாரற்று இருந்த 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது.
    • ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ரேசன் அரிசி ரெயில் மூலம் ஆந்திர மாநிலத்திற்கு கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை காவல்துறை இயக்குநர் அபாஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவுப்படி, குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீஸ் சூப்பிரண்டு கீதா மேற்பார்வையில், குற்றப் புலனாய்வுத் துறை, குடிமை துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தீப் ஆகியோர் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    அவர்கள் 3-வது நடைமேடையில் வந்து செல்லும் ஆந்திர மாநிலம், சூளுர் பேட்டை ரெயில்களில் சோதனை செய்தனர்.

    அப்போது ரெயில்களில் கேட்பாரற்று இருந்த 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகளில் மொத்தம் 3,500 கிலோ ரேசன் அரிசி இருந்தது. அதனை பறிமுதல் செய்தனர். மேலும் ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து திருவள்ளூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு 1,400 கன அடியாக குறைக்கப்பட்டது.
    • கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்தவில்லை.

    ஊத்துக்கோட்டை:

    கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திரா அரசு வருடம் தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி., ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி. தண்ணீரை நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறந்து விட வேண்டும்.

    கடந்த நவம்பர் 28-ந் தேதி கண்டலேறு அணையில் இருந்து முதலில் 2 ஆயிரத்து 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாண்டாஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு 1,400 கன அடியாக குறைக்கப்பட்டது.

    வழக்கமாக ஆந்திரா விவசாயிகள் கிருஷ்ணா கால்வாய் நீரை பயன்படுத்துவார்கள். இதன் காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 300 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் அங்குள்ள விவசாயிகள் கிருஷ்ணா நீரை பயன்படுத்தவில்லை. இதனால் பூண்டிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை வினாடிக்கு 533 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

    பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 34.49 அடியாகவும் தண்ணீர் இருப்பு 2.979 டி.எம்.சி.யாகவும் உள்ளது. ஏரிக்கு மழை நீர் மற்றும் கிருஷ்ணா நீர்வரத்து 1,235 கன அடியாக இருந்தது.

    பூண்டி ஏரியில் இருந்து புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் வழியாக 650 கன அடியும், சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாய் வழியாக 38 கன அடியும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    • பணத்தகராறில் மகமுதாவின் சகோதரர்களான அக்பர் பாஷா, முகமது ரபி, பர்கத் ஆகிய 3 பேரும் சேர்ந்து அசோன் செரீப்பை தாக்கினர்.
    • திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக்பர் பாஷா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் விக்னேஸ்வரா நகரை சேர்ந்தவர் அசோன் செரீப். சமையல் வேலை செய்து வருகிறார். இவரிடம் திருவள்ளூர் முகமது அலி தெருவை சேர்ந்த மகமுதா என்பவர் ரூ.60 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவர் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இது தொடர்பான தகராறில் மகமுதாவின் சகோதரர்களான அக்பர் பாஷா, முகமது ரபி, பர்கத் ஆகிய 3 பேரும் சேர்ந்து அசோன் செரீப்பை தாக்கினர்.

    இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அக்பர் பாஷா உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    • டிரைவர் துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
    • சென்னை- திருவனந்தபுரம், சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு பகுதியில் இன்று மாலை தண்டவாளத்தில் உயரழுத்த மின் கம்பி அறுந்து விழுந்தது. அப்போது அந்த வழியாக கோவை நோக்கி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தது. தண்டவாளத்தில் மின்கம்பி விழுந்ததை கவனித்த டிரைவர், துரிதமாக செயல்பட்டு ரெயிலை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    மின் கம்பி அறுந்து விழுந்த தகவல் ரெயில்வே அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் செல்லக்கூடிய மின்சார ரெயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. சென்னை- திருவனந்தபுரம், சென்னை- பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மின்கம்பியை சரிசெய்யும் பணியில் ரெயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.
    • 6 கிலோ 39 கிராம் வெள்ளியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது.

    இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கே.சித்ராதேவி, கோயில் நிர்வாக அதிகாரி சோ.செந்தில்குமார் மற்றும் பக்தர்கள் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. ரூ.53 லட்சத்து 33 ஆயிரத்து 781 ரொக்கம், 7 கிராம் 500 மில்லி கிராம் தங்கம், 6 கிலோ 39 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

    • வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியது.
    • திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் புகுந்ததால் சுமார் 20 கிராமங்களில் சேதம் ஏற்பட்டது.

    ஊத்துக்கோட்டை:

    திருப்பதி மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணி அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் மதகுகள் வழியாக ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

    இந்த தண்ணீர் ராமகிரி, சுருட்டபள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பாலேஸ்வரம், காரணி, மங்கலம், ஆரணி, புதுவயல், பொன்னேரி வழியாக பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

    இந்த ஆறு ஆந்திராவில் 20 கிலோமீட்டர் தூரத்துக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 60 கிலோமீட்டர் தூரத்துக்கும் பாய்கிறது. பிச்சாட்டூர் அணையின் உயரம் 31 அடி ஆகும். இதில் 1.893 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம்.

    வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டஸ் புயல் காரணமாக பலத்த மழை பெய்ததால் பிச்சாட்டூர் அணை முழுவதுமாக நிரம்பியது.

    அணையின் பாதுகாப்பு கருதி கடந்த 9-ந் தேதி உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 8 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் ஆரணி ஆற்று கரையோர கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளம் புகுந்ததால் சுமார் 20 கிராமங்களில் சேதம் ஏற்பட்டது.

    வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதி மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகள், சமுதாயக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் பாலாறு கோட்ட பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் முத்தையா தலைமையில் அதிகாரிகள் ஜெயக்குமாரி, வெற்றிவேலன், ஜெயகுரு, பாலசுந்தரம், கண்ணன், சரவணன், புவனேஸ்வரி ஆகியோர் அடங்கிய குழு நேற்று பிச்சாட்டூர் அணையை பார்வையிட்டு ஆய்வு செய்தது.

    தண்ணீர் வரத்து, இருப்பு, திறப்பு விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டனர். சமீபத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மதகுகள் நன்றாக செயல்படுகின்றனவா என்று ஆராய்ந்தனர்.

    அணைக்கு நீர்வரத்து அதிகமாகி உபரி நீர் திறக்கும்போது ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்படுகிறது. வெள்ளம் சேதத்தை தடுக்க ஒரே அடியாக அல்லாமல் படிப்படியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஆந்திரா பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டனர்.

    ×